செந்தில்பாலாஜி விவகாரத்தில் தீராத சந்தேகங்கள்!

அறம் இணைய இதழ்

செந்தில்பாலாஜி விவகாரத்தில் தீராத சந்தேகங்கள்!

ஒரு விசாரணை  அனுமதிக்கே அமலாக்கத் துறைக்கு ஒருமாத நீதிமன்றப் போராட்டம் நிர்பந்திக்கப்பட்டது ஏன்? இந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட பேரங்கள் என்ன..? பழைய வழக்கிற்காக மட்டும் விசாரணையா? டாஸ்மாக் கொள்ளை விவகாரமும் உள்ளதா..? செந்தில் பாலாஜி தம்பியை விட்டுப் பிடிப்பது ஏன்?

இன்றைக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழங்கி இருக்கும் தீர்ப்பு யாரும் எதிர்பாராததல்ல. இந்த நியாயத்தை சொல்ல பெரிய திறமையோ, சட்ட அறிவோ அவசியமில்லை.

கடத்தப்பட்டு, கண் காணாத இடத்தில் வைத்திருக்கப்படும் நபரை கண்டுபிடித்துக் கொடுக்க போடப்படுவது தான் ஆட்கொணர்வு மனு. அனைவரும் அறிய மருத்துவமானியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ஒருவருக்காக ஆட்கொணர்வு மனுவை போட்டு நீதிமன்றத்தை ஒருமாதகாலம் அலைக்கழித்தது இவர்களாகத் தான் இருக்கும்.

இதுவே, சாதாரண மனிதன் இந்த மாதிரி நீதிமன்றங்களின் நேரத்தை விரையமாக்கும் ஒரு வழக்கை போட்டிருந்தால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, கடும் எச்சரிக்கையும் தரப்பட்டிருக்கலாம்.

2020 ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட ‘சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் இந்தியா’ அறிக்கையின்படி, இந்திய சிறைகளில் மொத்தமுள்ள 4,88,511 சிறைக் கைதிகளில் 3,71,848 பேர் விசாரணைக் கைதிகள்! அதுவும் ஆண்டுக்கணக்கில் குற்றம் நிருபிக்கபடாமல் சிறையில் வாடுபவர்கள்! இந்த தகவல் சொல்வது என்னவென்றால், இங்கு ஏழைகளுக்கு நியாயமான நீதி கிடைப்பதில்லை. அதுவே, அதிகார பலம், பணபலம் இருக்கும் ஒருவர் என்றால், எத்தகைய குற்றத்தையும் செய்துவிட்டு, காவல்துறை, விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் அனைத்தின் நேரத்தையும் வீணடிக்கலாம். மக்களில் ஒரு பிரிவை தனக்கு அனுதாபமாக பேசவும் வைக்கலாம்!

செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள்!

எல்லோருக்கும் தெரிந்த ஒரு நியாயத்தை கேள்விக்கு உள்ளாக்கி, ஒரு மாதமாக நீதிமான்களையே குழம்ப வைத்து, ஒன்றுக்கு இரண்டு நீதிபதிகளை வைத்து, அதுவும் போதாமல் மூன்றாவது நீதிபதியை நியமித்து, இதற்கிடையில் உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு.. இந்தியாவிலேயே அதிகமாக கட்டணம் வசூலிக்கும் வக்கீல்களை வைத்து கோடிக் கோடியாய் பணத்தை இறைத்து..அவர்களால் செய்ய முடிந்தது ஒருமாத காலகட்ட தாமதம். இதற்குள் செய்ய வேண்டியவை செய்யப்பட்டு இருக்கலாம். பேரங்கள் நாட்ந்து முடிந்திருக்கலாம்!

ப.சிதம்பரம் சிறைக்கு போனார். மணீஸ் சிசோடியா சிறைக்கு போனார்! இந்த இருவர் விஷயத்திலும் ஒரு உண்மையான எதிர்மறை அரசியல் உள்ளது. ஆனால்., செந்தில் பாலாஜி விவகாரத்தில் அப்படி ஒன்று இருக்கிறதா..?

பாஜகவிற்கு எதிரான அரசியலில் செந்தில் பாலாஜிக்கும், திமுகவிற்கும் ஒரு உறுதிபாடான அரசியல் இருந்திருக்குமானால் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்ல தயங்கி இருக்கமாட்டார். சிறை வாழ்க்கையை அரசியல் பயணத்தின் ஒரு அம்சமாக பாவித்திருப்பார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்ட போது அஞ்சவில்லை. சமீபகால உதாரணமாகச் சொல்வதென்றால், ஈழப் பிரச்சினையில் வைகோ, பழ.நெடுமாறன்.. போன்றவர்கள் சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை. இது தான் குற்றம் செய்து சிறைக்கு போகுபவர்களுக்கும், கொள்கைக்காக சிறைக்கு போகுபவர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகும்.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் பாஜக அரசு சீரியசாக இருப்பதாக நான் நம்பவில்லை. சீரியசாக இருந்திருப்பார்களேயானால், இந்த இரண்டேகால் வருடத்தில் அவர் டாஸ்மாக்கில் அடித்த பகாசூரப் பகல் கொள்ளை குறித்து கண்டும், காணாமல் அமைதியாக இருக்கமாட்டார்கள்! அதுவும் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் நாட்கணக்கில் ரெய்டு நடத்தியும் இது தெரியவில்லையா..? இத்தனை ரெய்டும் அந்த வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய ஒரு சாதாரணமான குற்றத்திற்காகத் தானா..? அந்த மிகக் குறைவான தொகையை கண்டெடுக்கத் தானா அதைவிட அதிக செலவில் பெரும் படை, பட்டாளங்களுடன் சென்று ரெய்டுகள் நடந்தன! டாஸ்மாக்கிற்கு வாகன சர்வீஸ் செய்பவர் இடத்திலும் ரெய்டுகள் நடந்தனவே! என்னாச்சு?

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததில் இருந்து டாஸ்மாக் சரக்குகள் டாஸ்மாக் குடோவுனுக்கு செல்லாமல் நேரடியாக பார்களுக்கும், கடைகளுக்கும் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டு கலால்வரி அரசுக்கு செலுத்தாமல் முழுப்பணமும் ஸ்வாகா செய்யப்படுவது பற்றி இங்கு ஊடகங்கள் வேண்டுமானால் வாய் திறக்காமல் போகலாம். ஆனால், சாதாரண குடிமகனுக்கு கூட இது தெரியுமே! மேலும், டாஸ்மாக் பார்களில் கள்ளமது கரூர் கம்பெனியால் சப்ளை செய்யப்பட்டு, அதன் மூலம் ஆறு மனித உயிர்கள் பலியானது சாதாரணக் குற்றமா? அதை எல்லாம் கண்டும், காணாமல் போகுமளவுக்கு மத்திய ஆட்சியாளர்கள் பெருந்தன்மை நிறைந்தவர்களா..?

செந்தில் பாலாஜியை விசாரிக்க நிர்பந்திப்பவர்கள் அவர் தம்பி அசோக்குமாரை ஏன் நெருங்கவில்லை? ஏன் பிடிவாராண்டுக்கு முயற்சிக்கவில்லை? மீண்டும், மீண்டும் வாய்தா வாங்க முடிகிறதே அவரால்! அவர் டெல்லியில் பாஜக அதிகார மையங்களோடு லாபி செய்து கொண்டிருப்பதால் தானே விட்டு வைத்துள்ளனர்.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் அவர் உடல் நிலை குறித்த உண்மையை எய்ம்ஸ் மருத்துவ குழு கொண்டு பரீசோதிப்பதாகச் சொன்ன அமலாக்கத் துறை அதை நிறைவேற்றவில்லை. அதனால் தான் தற்போது தனக்கும் நெஞ்சில் அடைப்பு இருக்கிறது என்கிறார் அவர் தம்பி அசோக்குமார்.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறையின் டார்கெட் டாஸ்மாக்க்கில் கொள்ளையடிக்கும் பல்லாயிரம் கோடிப் பணமாக இருப்பதற்கே வாய்ப்பு உள்ளது. ஏனெனில், டெல்லியில் ஆத்மி ஆட்சியில் மதுவை வீட்டிற்கே சப்ளை செய்வது குறித்தும், 24 மணி நேர பார் குறித்துமான டெண்டர்கள் பேசப்பட்டதை வைத்தே கைது செய்தனர். இதில் தான் மணீஸ் சிசோடியா கைதானார்! இத்தனைக்கும் அது மக்கள் எதிர்ப்பால் நடைமுறைப்படுத்தப்படாமல் வாபஸ் பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க விடப்பட்டார் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா! அதற்கு பிரதியுபகாரமாகத் தான் சந்திரசேகரராவ் மோடியை எதிர்ப்பது போல பாவனை காட்டினாலும், மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தையும் அப்படியே மாநிலத்தில் பாஜக அரசுக்கு நிறைவேற்றித் தருகிறார். இதனால் தான் ராகுல்காந்தி சந்திரசேகராவை இயக்கும் ரிமோட் மோடியின் கைகளில் இருக்கிறது என கிண்டல் அடித்தார்.

அது தான் இங்கும் நடக்க உள்ளது! ஏற்கனவே பாஜக அரசின் தேசியக் கல்வி கொள்கை, நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம், வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதங்கள் விதிக்கும் மோட்டார் வாகன சட்டம், அதானி தமிழகத்தில் கால்பரப்பிக் கொள்வதற்கு தோதாக பழவேற்காடு துறைமுகம் தொடங்கி எட்டு வழிச்சாலை நிறைவேற்றம் வரை ஒத்துக் போகும் அணுகுமுறை… என திமுக அரசு பாஜகவிற்கு செய்யும் சேவைகள் இன்னும் அதிகரிக்கலாம்.

இவை வெளியில் தெரியாமல் இருக்க பாஜக எதிர்ப்பு நாடகங்கள் தொடர்ந்து வீரியமாக அரங்கேறலாம். இவற்றை எல்லாம் பார்த்தாலும், உணர்ந்தாலும் வெளியே சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் உள்ளுக்குள் மனம் புழுங்கலாம். இது தான் இன்றைய யதார்த்தம். உண்மைகளை உரைத்தேன்! மக்கள் விழிப்புணர்வு கொள்ளட்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

aramonline.in /14232/senthil-balaji-court-case-ed/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு