கல்வி அமைச்சர் தான் முதல் குற்றவாளி!

அறம் இணைய இதழ்

கல்வி அமைச்சர் தான் முதல் குற்றவாளி!

யோகா பயிற்சி, தியானப் பயிற்சி, உடற்கல்வி ..என பல வழிகளில் அரசு பள்ளிக்குள் சனாதன சக்திகள் கடந்த ஓராண்டாக நுழைந்த வண்ணம் இருக்கின்றனர் என ஆசிரியர்கள் சொல்லி வந்த போது அலட்சியம் காட்டப்பட்டது. இன்று கண்ணொளி இல்லா ஆசிரியரின் துணிச்சலால் உருவான காணொளி அம்பலப்பத்திவிட்டது;

அசோக் நகர் அரசு பள்ளியில் ஆதிக்க சக்திகள் நடத்திய சம்பவம் வெளியில் தெரிய வந்ததால் இவ்வளவு பரபரப்பு!

கடந்த ஓராண்டாகவே இது போல தமிழகம் முழுக்க பல பள்ளிகளில் சில அமைப்பினர் கல்வித் துறை அனுப்பியதாக யோகா பெயரிலும், உடற்பயிற்சி பெயரிலும் உள் நுழைந்து கேட்பாரற்ற வகையில் செயல்படுகின்றனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

ஆன்மீகத்திற்கோ, யோகாவிற்கோ நான் எதிரானவன் இல்லை.அதற்கென தனி பள்ளிகள் நடத்துங்கள். மகிழ்ச்சி. தேவைப்படுவோ வந்து கற்கக்கட்டுமே!

‘’புத்தகப் படிப்பு மட்டும் போதாது, மத்தகப் படிப்பு வேண்டும்’’

‘’இதையெல்லாம் உணர மறுத்ததால் தான், பேச தயங்குவதால் தான் இந்த நாடு நாசமாகப் போனது.’’

‘’இந்த நாட்டில் 67,000 குருகுலங்கள் இருந்தன. அவை அழிக்கப்பட்டன’’

‘’3,25,000 குருகுலங்கள் இருந்ததன. அவையும் அழிக்கப்பட்டன.’’

ஒரு மந்திரத்தை சொன்னால், நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை சொன்னால் நோய் பறந்து போகும். ஒரு மந்திரத்தை சொன்னால் காற்றில் பறந்து போக முடியும்….என ஒலைச் சுவடியில் எழுதி வைத்ததை எல்லாம் பிரிட்டிஷார் அழித்து விட்டனர்….!

– பரம்பொருள் அமைப்பின் விஷ்ணு பேசியதின் சில துளிகளே இவை!

எவ்வளவு பொய்கள்… எவ்வளவு வன்மம்… எவ்வளவு விஷமத்தனம்…!

இது சனாதனத்தின் குரல், இது சதிக் கூட்டத்தின் குரல்!

இது ஆன்மீகக் குரல் அல்ல, அழித்தொழிப்பு அரசியலின் குரல்.

இது கல்வி கூடத்திற்குள் ஒலிக்கிறதென்றால், இதைவிட பெரிய ஆபத்து தமிழகத்திற்கு இல்லை.

தங்களை திராவிட மாடல் என்றும், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் என்றும், சமூக நீதியின் காவலர்கள் என்றும் பேசிக் கொண்டே, பேசியவற்றுக்கு முற்றிலும் எதிராக தொடர்ந்து செயல்படுவதற்கும் ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். இது தற்போதைய திமுகவுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது. உண்மையில் அதிமுக ஆடசியில் சனாதன சக்திகளுக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவர்களை மாதிரி சனாதனிகளிடம் இருந்து எளிய மக்களை காப்பாற்றி, கல்வி அளித்தவர்கள் ஆங்கிலேயர்கள். சூத்திரனான சம்பூகன் மந்திரங்கள் ஓதி தவம் செய்து கொண்டிருந்த போது அவனை கொன்றவன் ராமன். ”பிராமணர்களைத் தவிர, பிறர் மந்திரம் ஓதக் கூடாது, தவம் செய்யக் கூடாது’’ என சொல்லிய சமூகம் எதுவோ, அந்த சமூகத்தின் பிரதிநிதி தான் இந்த விஷ்ணு என்பதை நாம் மறுக்க முடியாது.

இப்ப கூட குருகுலக் கல்விக் கூடம் ஆரம்பித்து சொல்லிக் கொடுங்களேன், மாணவர்கள் வரும் பட்சத்தில். அரசு பள்ளி மாணவச் செல்வங்களை குழப்ப வேண்டாமே!

முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்து தெளிவில்லாத விளக்கம் தந்துள்ளார்.

அன்பில் மகேஷ் நிலைமையை சமாளிக்க பள்ளிக்கு நேரடி விசிட் செய்து, விஷ்ணுவை எதிர்த்து கேட்ட ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி உள்ளார். இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் ..என ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த விஷ்ணு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை அவரது அலுவலகத்திலேயே சந்தித்து தான் இது போல நிகழ்ச்சிகள் நடந்த வாய்ப்பு கேட்டுள்ளார். இந்த  போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வந்துவிட்டன.

இதற்கு அடுத்த கட்டமாக கல்வி அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஆக, இதில் அமைச்சர் தான் முதல் குற்றவாளி. இந்த கல்வி அமைச்சர் தான் கல்வி தொலைக்காட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே சிபாரிசில் மணிகண்ட பூபதி என்ற காவி நபரை சி.இ.ஓ வாக நியமித்தவர்- அதுவும், தகுதியான திராவிட இயக்க பத்திரிகையாளர்களின் விண்ணப்பங்களை எல்லாம் நிராகரித்துவிட்டு! அதை அப்போது அறம் இணைய தளம் தான் அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தியது.

தற்போது, தானே அனுமதித்த ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்திய ஆசிரியரை, தானே தேடி வந்து சால்வை அணிவித்து கவுரவித்ததன் மூலம்  தன்னையும், தங்கள் அரசின் கவுரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார் அமைச்சர். இப்படி இரட்டை வேட கபட நாடகத்தை  இன்னும் எத்தனை நாள் தான் தொடர்வார்களோ.., இந்த ஆட்சியாளர்கள்..! அதற்குள் தமிழகம் எத்தனை ஆபத்துகளை அனுபவிக்கப் போகிறதோ..!

விரும்பத்தகாத  மிகப் பெரிய மாற்றங்கள் – அதாவது ஏமாற்றங்கள் -இந்த திமுக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்போடு தமிழ்நாட்டில் நடந்து கொண்டுள்ளன… என்பதை நான் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறேன்…இப்போதாவது இடதுசாரி கட்சிகள், திராவிட இயக்கங்கள் திமுக அரசின் நம்பிக்கை துரோகத்தை கண்டிக்க முன் வர வேண்டும். வராவிட்டால் காலம் உங்களையும் சேர்த்தே தண்டித்துவிடும்.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/19070/education-minister-anbil-culprit/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு