நேற்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நாளை

தீக்கதிர்

நேற்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நாளை

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் இருக்கும் ஒரு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த மாவட்ட  நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து முஸ்லிம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகிய பொழுது உத்தரப்பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறப்பட்டது. உயர் நீதிமன்றம் முஸ்லிம்களின் வாதத்தை நிராகரித்துவிட மின்னல் வேகத்தில் யோகி அரசாங்கம் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டது. பாபர் மசூதிக்கு அடுத்த படியாக ஞானவாபி மசூதியும் மதுராவில் உள்ள  ஈத்கா மசூதியும் சங் பரிவாரத்தின் இலக்கு. இந்த  இலக்கை அடைய தெரிந்தோ தெரியாமலோ நீதி மன்றங்களின் தீர்ப்புகள் சங் பரிவாரத்துக்கு சாதக மாக அமைந்துள்ளன. 1991ம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தையும் அதன் பின்னணியையும் நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது. தேர்தல்கள் நெருங்கும் பொழுது சங் பரிவாரத்தின் மதவெறி நகர்வுகள் மேலும் மேலும் மதப் பிளவை கூர்மைப்படுத்துகின்றன.

1991 சட்டம் என்ன சொல்கிறது?

ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என 1990ம் ஆண்டு அன்றைய பா.ஜ.க. தலைவர்  அத்வானி ரத யாத்திரை கிளம்பினார். இந்த ரத யாத்திரை அன்றைய வி.பி.சிங் அரசாங்கம் அமலாக்க முயன்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை சிதைக்கவே நடத்தப்பட்டது என்பது வரலாற்று உண்மை. அத்வானியின் ரத யாத்திரை ரத்த யாத்திரையாக மாறி  இந்து-முஸ்லிம் கலவரங்கள் நிகழ்ந்தன. ரத யாத்திரை யை அன்றைய முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் பீகாரில் தடுத்து அத்வானியை கைது செய்தார்.  இதன் விளைவாக வி.பி.சிங் ஆட்சியை பாஜக கவிழ்த்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ராஜீவ் காந்தி படுகொலை பின்னணியில் காங்கிரஸ் ஆட்சி நரசிம்மராவ் தலைமையில் அமைந்தது. எனினும் ராமர் கோவில் பிரச்சாரத்தை மும்முரமாக சங் பரி வாரத்தினர் முன்னெடுத்து வந்தனர். இதனால் 1991-ஆம் ஆண்டு நரசிம்மராவ் அரசாங்கம் மதச்சார்பற்ற சக்திகளின் நிர்ப்பந்தம் காரணமாக “வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991” ஐ இயற்றியது.  இந்த சட்டத்தின் 4(1)-வது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

“ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மை 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி என்னவாக இருந்ததோ  அதே தன்மை தொடர்ந்து இருக்கும்.” ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மை அதே மதத்தின்  வேறு பிரிவுக்கோ அல்லது வேறு ஒரு மதத்தின் தன்மைக்கோ மாற்றக்கூடாது எனவும் இந்த சட்டம்  சொல்கிறது. உதாரணத்துக்கு மசூதியாக இருந்தால்  அது கோவிலாக மாற்றப்படக்கூடாது என்பது மட்டு மல்ல; ஒரு மசூதியின் தன்மை ஷியா பிரிவுக்கு சொந்த மாக இருந்தால் அது சன்னி பிரிவு மசூதியாக மாற்றப் படக்கூடாது எனவும் இந்த சட்டம் சொல்கிறது. மேலும் ஏற்கெனவே வழிபாட்டுத் தலங்களின் தன்மை குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் ஏதாவது இருந்தால் அந்த வழக்கு வழிபாட்டுத் தலத்தின் தன்மை 1947 ஆகஸ்டு 15-ம் தேதிக்கு பிந்தையது எனில் அந்த வழக்கு செல்லாது எனவும் இந்த சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்திலிருந்து பாபர் மசூதி-ராம ஜென்ம கோவில் பிரச்சனைக்கு மட்டும் விதி விலக்கு தரப்பட்டது. அந்த பிரச்சனைக்கு தீர்ப்பு தரப் பட்டதும் ராமர் கோவில் தொடக்க விழா ஜனவரி 22-ம் தேதியன்று ஆன்மீக  விழாவாக இல்லாமல் அரசியல் நிகழ்வாக நடத்தப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.  சங் பரிவாரத்தினர் பாபர் மசூதி இடிப்புடன் நிற்கப்போவது இல்லை என மதச்சார்பற்ற சக்திகள்  தொடர்ந்து எச்சரித்து வந்தன.  1991 சட்டத்தை வளைத்தும் நீதிமன்றங்களின் மூலமும் நூற்றுக்கண க்கான மசூதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம். இந்த வழியை பயன்படுத்துவதன் மூலம் பரவலான விமர்சனங்களை தவிர்க்க இயலும்  என்பது அவர்களது கணக்கு. அது சாத்தியப்படா விட்டால் வன்முறையை கை கொள்ள அவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை கூறத் தேவை இல்லை. ஞான வாபி மசூதியின் ஒரு பகுதியில் பூஜை நடத்த அனுமதி பெற்றவர்கள் தங்களது இலக்கு மசூதி முழுவதை யுமே கோவிலாக மாற்றுவதுதான் என பகிரங்க மாகவே அறிவித்துள்ளனர். தீர்ப்புகளை அளித்த நீதிமன்றங்கள் குறிப்பாக உச்ச நீதிமன்றம் இந்த ஆபத்தை உணர்ந்ததா என்பது தெரியவில்லை.

[ கோவில்களை அழித்த  இந்து மன்னர்கள்

தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு ஞானவாபி மசூதி யிலோ அல்லது அதன் அடியிலோ கோவில் இருந்ததா என்பதை நீதிமன்றத்தின் ஆணையை தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வு செய்தது. சுமார் 850 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில் மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்தது என்று தொல்லியல் துறை குறிப்பிட்டது. இதற்காக இவ்வளவு பெரிய அறிக்கையும் ஆய்வும் தேவை யில்லை. ஏனெனில் ஞானவாபி மசூதிக்கு முன்பு  அங்கு கோவில் இருந்தது என்பதை பல வரலாற்றாசிரி யர்களும் ஏற்றுக்கொண்ட ஒன்று. இந்தியாவின் நீண்ட  வரலாற்றில் போர்களின் பொழுதும் ஏனைய  முரண்பாடுகளின் விளைவாகவும் வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின. இஸ்லாமிய மன்னர்கள் மட்டுமே கோவில்களை அழித்ததாக சங்  பரிவாரத்தினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். பவுத்த/ சமண மற்றும் இந்து கோவில்களை அழித்த இந்து மன்னர்களும் உண்டு என்பது வரலாற்று உண்மை: கி.பி.835ல் பாண்டிய மன்னன் சிறீ மாரா சிறீ வல்லபா இலங்கை மீது படையெடுத்து முதல்  சேனா மன்னனை தோற்கடித்தபொழுது அனுராதா புரம் அழிக்கப்பட்டது; அங்கிருந்த பவுத்த கோவில் தாக்கப்பட்டு தங்கத்தாலான புத்தர் சிலையை அகற்றி பாண்டிய நாடு கொண்டு வரப்பட்டது. பத்தாவது நூற்றாண்டில் இராஷ்ட்ரகுடா அரசனான மூன்றாவது இந்திரன் தனது பரம எதிரியான பிரதியாரா அரசனை தோற்கடித்த பொழுது களப்பிரியாவிலிருந்த அவரின் கோவிலை அழித்தார்; அதனை பெருமையாக பதிவும் செய்தார்.

1017ம் ஆண்டு இராஜேந்திர சோழன் படையெடுப் பின் பொழுது அபயகிரியில் இருந்த புத்தர்  சிலை  கொள்ளை அடிக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது. 11ம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட ஹர்ஷா எனும் மன்னன் கோவில்கள் கொள்ளை அடிக்கவும் அழிக்கவும் தனியாக ஒரு அமைச்சரையே நியமித்தார். அவர் காலத்தில் குஜராத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சமணக் கோவில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. சாளுக்கிய மன்னர்கள் மீது பல்லவர்களும் பின்னர் சோழர்களும் படையெடுத்து தோற்கடித்த பொழுது அவர்களின் தலை நகரங்களான வாதாபியும் கல்யாணியும் எரிக்கப்பட்டன. அவற்றில்  கோவில் களும் அடங்கும். சாளுக்கியர்களின் கோவிலில் இருந்த வாயிற்காப்போன் சிலையையும் மேலும் பல கடவுள் சிலைகளையும் சோழ மன்னர் அகற்றி கொண்டுவந்து தான் கட்டிய கோவிலில் வைத்தார்.  முஸ்லிம் மன்னர்கள் இங்கு வருவதற்கு முன்பே வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. முஸ்லிம் மன்னர்கள் வருகைக்கு பின்னரும் கோவில்கள் மீது இந்து மன்னர்களின் தாக்குதல்கள் தொடர்ந்தன.    கி.பி.1460ல் ஒரிசா அரசன் கபிலேந்திரா தமிழகத்தின் மீது படையெடுத்த பொழுது காவிரி டெல்டா பகுதியில் இருந்த பல சைவ மற்றும் வைணவக் கோவில்களை முற்றிலுமாக அழித்தார்.  கி.பி. 1579ம் ஆண்டு முரஹாரிராவ் எனும் ஒரு இசுலாமிய சுல்தானின் தளபதி அஹோபிலம் கோவிலை போரின் பொழுது அழித்தது மட்டுமல்ல; வைடூரியத்தாலான விக்கிரகத்தை கைப்பற்றி தனது சுல்தானுக்கு சமர்ப்பித்தார். முரஹாரிராவ் ஒரு மராட்டிய பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்து மன்னர்கள் வழிபாட்டுத் தலங்களை அழித்த பட்டியல் நீளமானது.

கோவில்களை பாதுகாத்த முஸ்லிம் மன்னர்களும், மசூதிகளை கட்டிய இந்து மன்னர்களும்

இந்து கோவில்கள் முஸ்லிம் மன்னர்களால் தாக்கப்பட்ட வரலாற்று உதாரணங்கள் இருப்பது போலவே கோவில்களை பாதுகாத்த முஸ்லிம் மன்னர்களின் உதாரணங்களும் ஏராளம் உண்டு. அதே போல மசூதிகளை கட்டிய இந்து மன்னர்களும் உண்டு. அக்பர் பேரரசர் தனக்கு கீழ் பணிபுரிந்த இராஜபுத்திர தளபதிகள் தம்முடைய கடவுள்களின் கோவில்களை கட்டிக்கொள்வதற்கு அனுமதி மட்டுமல்ல பொருளுதவியும் செய்தார். 1590- 1735ம் ஆண்டுகளுக்கிடையே பூரி ஜெகநாதர் கோவிலில் விழா நடக்கும் பொழுதெல்லாம் முகலாய  மன்னனின் “மன்சப்தார்” எனும் அதிகாரிகள் எவ்வித அசம்பாவிதமும் நடக்காதவாறு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தினர். திப்பு சுல்தான் தன் ஆட்சி காலத்தில் 151 கோவில் களை பராமரித்தார் என கர்நாடக அரசின் கெசட் பதிவு சொல்கிறது.  அவுரங்கசீப்பின் சகோதரர் தாராகேசு இந்து மதத்தை காதலித்தார் எனில் மிகை அல்ல. இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து பெர்சிய மொழியில் நூலை எழுதினார்.  விஜயநகர மன்னர்கள் முஸ்லிம்களுக்கு மசூதிகளை கட்டிக்கொடுத்தனர். வைணவத்தில் ஆழமான பற்றுடைய கிருஷ்ண தேவராயர் தனது மகளை ஒரு பாமினி இஸ்லாமிய இளவரசனுக்கு மணமுடித்தார். மராட்டிய வீரர் சிவாஜியின் படையில் இருந்த 1,60,000 வீரர்களில் 60,000 பேர் முஸ்லிம்கள். அவரது  மெய்காப்பாளர் பெயர் மவுல்வி பஷீர்கான்! இந்தியாவின் மத்திய காலத்தில் இந்து மதத்துக் கும் இஸ்லாத்துக்கும் இடையே முரண்பாடுகள் மட்டு மல்ல; ஏராளமான ஒற்றுமைகளும் இருந்தன. போர் காலங்களில் வழிபாட்டுத் தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் போர் முடிந்த பின்னர் கோவில்களும் மசூதிகளும் மன்னர்களால் பராமரிக்கப்படுவதும் வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் மாறிய  வழிபாட்டு தலங்கள்

தமிழ்நாட்டில் பல பவுத்த சமண கோவில்கள் சைவ, வைணவ கோவில்களாக மாற்றப்பட்டன. கி.பி. 640ல் காஞ்சிக்கு வந்த யுவான்சுவாங் அங்கு நூறு  புத்தர் கோவில்கள் இருந்தன என குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தர் கோவில்கள் பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சமணக் கோவில்களாகவும் சமணத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சைவ அல்லது வைணவக் கோவில்களாகவும் மாற்றப்பட்டன. காஞ்சியில் உள்ள  கச்சீஸ்வரர் கோவில்/ காமாட்சி அம்மன் கோவில்/ உலகநாதர் கோவில் போன்றவை முதலில் பவுத்த அல்லது சமண கோவில்களாக இருந்தன என தி.அ. அனந்தநாத நயினார்.(திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன சமய சித்தாந்தமும்) மற்றும் மயிலை சீனி வெங்கடசாமி (பவுத்தமும் தமிழும் நூல்) ஆகிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பவுத்தர்கள் மற்றும் சமணர்கள் மீது சைவத்திற்கும் வைணவத்திற்கும் இருந்த வெறுப்பு அதிர்ச்சி அளிக்கக்கூடியது.

தொண்டரடி ஆழ்வார் கூறுகிறார்:

*“சமணர் மற்றும் சாக்கியர் தலையை ஆங்கே அறுப்பதே 

கருமம் கண்டாய் அரங்க மாநகர் உளனே”*

சம்பந்தர் கீழ்க்கண்டவாறு பவுத்தர்களையும் சமணர்களையும் சாடுகிறார்:

“புத்தரும் புந்தியில்லாத சமணரும்

பொய்ம்மொழியல்லாமல்

மெய்த்தவம் பேசிடமாட்டார்”*

கூன் பாண்டியர் சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறிய பொழுது ஏராளமான சமண கோவில்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின.  கோவில்களாக இருந்த மசூதிகள் மீண்டும் கோவில்களாக மாற்றப்பட வேண்டும் எனில் கோவில்களாக மாறிய பவுத்த சமண வழிபாட்டுத் தலங்களும் மீட்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தால் என்ன ஆகும்? இந்திய வரலாறு நெடுகிலும் மதங்களிடையே முரண்பாடுகளும் ஒற்றுமைகளும் மாறி மாறி இருந்தன.  நவீன நாகரிக இந்திய சமூ கத்தில் கடந்தகால முரண்பாடுகள் பிரதிபலிக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே 1991ம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப் பட்டது. இந்தியா நவீன சுதந்தர நாடாக மாறிய 15.07.1947 எனும் வரையறையும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த சட்டத்தை சிதைக்க சங் பரிவாரம் முயல்வதும் நீதிமன்றங்கள் அதற்கு துணை போவதும் மிகவும் ஆபத்தான ஒன்று! இந்த ஆபத்தை தடுக்க 2024ல் பாஜக தோற்கடிக்கப்படுவது மிக அவசியம்.

(அன்வ‌ர் உசேன்)

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு