தனியாருக்கு தாரை வார்ப்பது சாதியக் கட்டுமானத்தைப் பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும்
முத்து காந்திமதி

எவ்வளவு அழகாக ஒரு விஷயம் மடைமாற்றம் செய்யப்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்தப் பேச்சைக் குறிப்பிடலாம். இதற்கான காரணங்களைப் பட்டியலிடும் முன் நேரடியாகப் பார்த்த செய்தி ஒன்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிபவர் அவர். அவரது இரண்டு தங்கைகளும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். இம்மூவரின் தந்தை தூய்மைப் பணியாளர் - அரசங்கப் பணியாளர். அரசாங்கப் பணியாளர் என்று இதைத் தனிப்பட குறிப்பிடக்காரணம் பணிப் பாதுகாப்பு, வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு, ஒரு முறை அடிப்படை சம்பளம் திருத்தியமைப்பு, வருடத்திற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு உள்ளிட்ட இன்ன பிற அரசாங்க ஊழியர்களுக்குக் கிடைக்கும் அத்தனை உரிமைகளும் அவருக்கும் கிடைக்கும்.
அன்பின் நண்பர்களே... நாங்கள் வலியுறுத்துவதும் இதைத்தான். முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்களாக தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதைத்தான். பணியை முறைப்படுத்த வலியுறுத்துகிறோமே அன்றி ஒரு குறிப்பிட்ட சாதியினர் இந்தத் தொழிலைச் செய்வதை அல்ல. இரண்டிற்கும் அதாவது பணி நிரந்தத்திற்கும் - தனிப்பட ஒரு சாதியினர் இந்தத் தொழிலைச் செய்வதை உறுதிப்படுத்துவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு.
நிற்க... மேலே குறிப்பிட்ட செய்திக்கு வருவோம். ஒரு வீட்டில் மூன்று குழந்தைகளை உயர்கல்வி வரை படிங்க வைக்க ஆகும் செலவு எவ்வளவு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதைச் செய்வதற்கும் ஓரளவுக்கு நிலையான பொருளாதாரத்தில் அந்தக் குடும்பம் வாழ்வதற்கும் காரணம், அவரது அரசுப்பணி (நிரந்தர வேலை) என்பது இப்போது வெளிப்படையாகத் தெரியும் செய்தி.
இவ்வாறான நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம், தானாகவே அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறி இருக்கும். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைத்தான் மேலே பார்த்த உதாரணம் சொல்கிறது. இது கற்பனை செய்தி அல்ல நண்பர்களே... என்னால் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த முடியும். அவ்வாறு செய்வது நாகரீகம் அல்ல என்பதால் அதனைத் தவிர்க்கிறேன். மற்றொன்று, இதைப் போன்ற நூறு நூறு உதாரணங்களை உங்கள் அருகிலும் காண முடியும். உங்களுக்கு நன்குதெரிந்த யாரையாவது குறிப்பிட்டு, 'அவங்க பசங்க இப்ப முன்னேறிட்டாங்க. இந்த வேலைக்கு எல்லாம் வர மாட்டாங்க' என்று சொல்வதை காது படக் கேட்டிருப்பீர்கள். (அதாவது கேட்பதற்கு காதிருந்தால்...)
மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்துவது நிலையான வேலை மற்றும் பொருளாதாரம் இவற்றைத் தான். இதனை ஒரு தனியார் நிறுவனம் எவ்வாறு தரும்? ஏற்கனவே வாங்கிக் கொண்டு இருக்கும் சம்பளத்தையும் குறைத்து விட்டுத்தான் நிறுவனம் வேலைக்கே எடுக்கிறது. பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற தொழிலாளர் நலன்களைப் பற்றிப் பேச ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா இங்கு? "சொல்வதைக் கேட்டு வேலை செய்வதாக இருந்தால் இரு; இல்லையா வெளியே போ" - என்பதாகத்தான் அந்த நிறுவனம் (ஏறத்தாழ எல்லா தனியார் நிறுவனங்களும்) நடத்தும். அவ்வாறு இருந்தால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வளவு பெரிய சிக்கலுக்குத் தள்ளப்படும்?
நிலையான வருமானம் உள்ள இடத்தில் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி இயல்பாக இருக்கும். அன்றாடப் பாடுகளுக்கே போராடும் போது, குழந்தைகளின் கல்வி எத்தனை தூரம் பாதிக்கப்படும்? அடுத்த கட்டமாக அவர்களது வளர்ச்சி இருக்குமா? இதற்கான பதிலை மனசாட்சியுடன் கூறிவிட்டு நகருங்கள் நண்பர்களே...
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் போராட்டம் நடத்தப்பட்டது. பாருங்கள்... பணி நிரந்தரம் என்பது எங்கு இருக்கிறது? நேர் எதிராக தனியார்மயம் என்பது எங்கு இருக்கிறது? ஏற்கனவே உள்ள மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் தானே உள்ளன? அப்போது என்ன செய்தீர்கள் என்று கேட்பீர்களேயானால், 'ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் சரியில்லை என்று தானே உங்களைக் கொண்டு வந்தோம்? அதே தவறினை நீங்களும் செய்வதற்கு அல்ல' என்றும் 'அதனை மாற்றுவோம் என்று தானே வாக்குறுதி அளித்தீர்கள்?' என்றும் மக்கள் கேட்பது எவ்விதம் தவறாகும்?
இன்னும் சொல்லப்போனால் தூய்மைப் பணியாளர்களுக்கு தனிப்பட்ட சம்பள விகிதத்தை அரசு அறிவிக்க வேண்டும். முறையான பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். நல்ல சம்பளம் + நிலையான வேலை என்று வரும்போது அனைத்து தரப்பினரும் சாதி பேதம் இன்றி பணிக்கு வருவார்கள்.
இல்லையெனில், தூய்மைப்படுத்தும் பணியை கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரமயமாக்கி விட்டு, தற்போது பணியில் உள்ளவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். அவ்வாறன்றி பணியை தனியாருக்கு தாரை வார்ப்பது மேலும் கடுமையான உழைப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் அதன் வழி சாதியக் கட்டுமானத்தைப் பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும்.
மக்களின் உணர்வுகளை மட்டும் தூண்டும் வெற்று முழக்கங்களால் ஒரு சுக்கிற்கும் பயன் இல்லை.
- முத்து காந்திமதி
https://www.facebook.com/100070182697647/posts/1113725810976832/?rdid=8D4N5Ln7B7hdWYUy
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு