மஹுவா மொய்த்ரா பதவிப் பறிப்பு பின்னணி என்ன?
அறம் இணைய இதழ்
ஓர் இனக்குழு தமது ரகசியத் திட்டங்களால் ஒரு நாட்டை ஆள்வதை, ‘டீப் ஸ்டேட்’ (Deep State) என்பர். அத்தகைய ‘டீப் ஸ்டேட்’டாக இந்தியா உருமாறி வருகிறதா..? ஒரு முன்னாள் காதலியை பழி வாங்க காதலன் செய்த சதிச் செயலில் பாஜக அரசு பங்கெடுத்ததை என்னென்பது? இதன் பின்னணியை தெளிவாக பார்ப்போம்;
திரிணமூல் காங்கிரஸ் எம்.பியான மஹுவா மொய்த்ரா மக்களவையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக துணிச்சலான பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் பெரும்பாலான கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு எதிராக மொய்த்ரா தர்மசங்கடமான – காத்திரமான – கேள்விகளை எழுப்பினார். சமீபத்தில் இது போன்ற கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா இரண்டு கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது!
கருத்து வேறுபட்டு பிரிந்து சென்று, மொய்த்ராவை பழி வாங்கத் துடித்த மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் என்பவர் தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தார்! இவரது குற்றச்சாடையே ஆதாரமாக்கி, பாஜக எம்.பி நிஷாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
இந்த நிஷிகாந்த் துபே என்பவரே அடிப்படையில் ஒரு குற்றப் பின்னணி உள்ளவர் தான்! லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக டெல்லி போலீசில் இவர் மீது 2015 ஆம் ஆண்டே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் படிக்காத படிப்புக்கு பட்டம் பெற்ற தகிடுத்ததங்கள் குறித்த புகார்களும் உள்ளன!
உண்மையில் மொய்த்ரா ஹிராந்ததனிடமிருந்து ஸ்கார்ப்பும், சில உதட்டுச் சாய பொருட்களும் பெற்றுள்ளார். அதை மொய்த்ராவே பகிரங்கப்படுத்தி உள்ளார். சாதாரணமாக இது போன்றவற்றை தருவதும், பெறுவதும் எங்கும் நடப்பதே!
அதே சமயம் மொய்த்ரா ரூபாய் இரண்டு கோடி பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இது வரை பாஜக வெளிப்படுத்தவில்லை. வங்கி இருப்பில் செலுத்தியதாகவோ அல்லது ரொக்கமாக பெற்ற வகையில் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ நிருபிக்கவில்லை. பெறப்பட்ட நாள், இடம் அதற்கான சாட்சி அல்லது தரவுகள் எதையும் சொல்லவில்லை! முன்னாள் காதலன் சுமத்திய குற்றச்சாட்டு எப்படி போதுமானதாகும்?
நடப்பு நாடாளுமன்றத்தின் வாழ்நாள், ஒன்று அல்லது இரண்டு கூட்டத் தொடருடன் முடிவடைய இருக்கும் நிலையில், இப் பதவிப் பறிப்பு என்பது, பாஜகவின் பதட்டத்தையே காட்டுகிறது. மொய்த்ராவின் பதவியைப் பறித்ததில் நடந்த விசாரணை முறை, அதாவது ஒரு பெண்ணின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை நக்கலாக விசாரித்த விதம், நாடாளுமன்றத்தில் இதை நேர்மையாக விவாதிக்க மறுத்து காட்டிய பிடிவாதம் ஆகியவை அனைவரையுமே கொந்தளிக்க வைத்தது! விசாரணை என்ற பெயரில் தன்னை இழிவுபடுத்திய செயல்திட்டமே அரங்கேறியது என மஹிவா மொய்த்ரா குமுறினார்!
ஜார்கண்ட் மாநிலம் கோடா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான நிஷிகாந்த் தூபே, ஒரு குற்றச்சாட்டை மொய்த்ரா மீது சுமத்தினார். இந்த தூபே மொய்த்ரா மீது சுமத்திய குற்றச்சாட்டு, துபாயை இருப்பிடமாகக் கொண்ட ஹிரானந்தானி குழுமத்தின் தலைவரான தர்ஷன் ஹிரானந்தானி என்பவருடையது.
நாடாளுமன்ற இணைய தளத்தின் மூலமாக, கேள்விகள் கேட்கும் பொருட்டு, மொய்த்ராவின் மின்னஞ்சல் முகவரியையும், அதன் கடவுச் சொல்லையும் இவர் பெற்றுக் கொண்டதாகவும், அதற்காக, மொய்த்ராவிற்கு இவர் பரிசுப் பொருள்கள் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தூபே சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, இவை உண்மையில்லை என ஹிரானந்தானி குழுமத்தின் கண்டன அறிக்கை வெளியானது. எனினும், மக்களவையின் தலைவர், தூபேயின் குற்றச்சாட்டுகளை கைவிடாமல், அறக் குழுவுக்கு அனுப்பி வைத்து ஆட்டத்தை ஆரம்பித்தார்.
அதற்காகவே அறக் குழு காத்திருந்தது போலத் தெரிகிறது. அது தூபேயின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை தரவுகள் உள்ளனவா என கேள்விக்கே உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டது.
இதன் பிறகு தான் ஹிரானந்தானியின் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால், அதில் தெளிவில்லை. அவரை நிர்பந்தித்து அல்லது பிளாக் மெயில் செய்து இப்படி ஒரு குற்றச்சாட்டு வாங்கப்பட்டதா..? என்ற அளவுக்கு அதில் முரண்கள்! முதலில் ஒரு மாதிரியும், பின்பு வேறொரு மாதிரியும் இரட்டை நிலைப்பாடு உடையதாக இவரது வாக்குமூலம் உள்ளது.!
தர்ஷன் ஹிரானந்தானியை நேரில் குறுக்கு விசாரணை செய்யக் கூட அழைக்காதது ஆச்சரியகரமானது. மேலும் அக்குழு, மஹுவா மொய்த்ராவின் தரப்பு விளக்கத்தை கேட்க மறுத்ததோடு, கட்ட பஞ்சாயத்து முறையில் அவமானப்படுத்தியது. எவ்வித தரவுகளுமின்றி, சம்பந்தமில்லாமல் ஏதேதோவெல்லாம் எழுதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை உடனடியாக ஏற்று மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்!
எப்படி என்றால், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் விஜய் சோன்கர் 500 பக்க அறிக்கையை அவசரகதியில் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, திரிணமூல் எம்பிக்கள் “500 பக்க அறிக்கையை படிக்க குறைந்தபட்சம் 3 நாட்கள் அவகாசம் வேண்டும். அதன் பிறகு விவாதிக்கலாம்’’ என்றனர். இதை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. இந்த விவாதத்தின் போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கேட்டதற்கு அவைத் தலைவர் மறுத்ததோடு ” நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்களவையில் கருத்துகளை எடுத்துரைக்க முடியாது. இதற்கு நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை” என்றார். இதனை ஆட்சேபித்து சபையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இவர்களின் அவசரம் மொய்த்ரா இன்னும் சபையில் இருந்தால் 2024 தேர்தலுக்கு முன்னதாக இன்னும் மோடியின் முகத்திரையை நாடாளுமன்றத்தில் கிழித்து தொங்கவிடலாம். எனவே, விரைவில் விசாரணை என்ற பெயரில் ஒரு சடங்கை நடத்தி விரைந்து தீர்ப்பும் வழங்கிவிட்டதையே நிருபிக்கிறது!
மஹுவா மொய்த்ரா தொடர்பான இவ்விசாரணையில், அரசும், நாடாளுமன்றமும், அறக் குழுவும் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செயல்பட்டதை, ‘தி பிரிண்ட்’ இதழின் ஆசிரியரான சேகர் குப்தாவுமே கூட உறுதிபடுத்தியுள்ளார்.
இந்து தேசிய வாதத்தின் பெயரால், பெருநிறுவன முதலாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் கைகோத்து நாட்டைச் சீரழிப்பதை, மொய்த்ரா உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியதைப் போல வேறு எந்த எம்.பியும் செய்யவில்லை! மோடி- அதானி இருவருக்குமான தொடர்பை, கேள்விக்குள்ளாக்கும் எவரையும் பாஜக விட்டுவைக்காது என்பதற்கு இந்த நடவடிக்கையை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்!.
நாடாளுமன்றத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, மோடி- அதானி தொடர்பை அம்பலப்படுத்தியதே மொய்த்ரா செய்த ‘குற்றம்’. துல்லியமான கேள்விகளாலும், கூர்மையான வாதங்களாலும், மோடியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய மொய்த்ராவை, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவதூறுகளாலும், பொய்க் குற்றச்சாட்டுகளாலும் சிறுமைப்படுத்தியது நினைவிருக்கலாம். மோடிக்கு எதிரான குரல்களை, பாஜகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையே இச்செயல் காட்டுகிறது.
நாடாளுமன்றத்துக்குள்ளேயே பகுஜன் சமாஜ்வாதிக் கட்சியின் டேனிஷ் அலி மீது, மத வெறுப்பை பகிரங்கமாக கக்கி, அச்சுறுத்திய பாஜகவின் உறுப்பினரான ரமேஷ் பிதூரி மீது அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களுமே நடவடிக்கை கோரினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் கடைசி வரை எடுக்கப்படவில்லை.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. நெறி முறைகள் குழு முழுமையாக விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக அறிக்கை அளித்துள்ளது” என தொடர்ச்சியாக கூறி வந்த மொய்த்ரா தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடி எம்.பி பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது ‘சட்டவிரோதம்’ என்று மனுவில் குறிப்பிட்டு நீதி கேட்டுள்ளார்.
அவர் லஞ்சம் வாங்கி இருக்கும் பட்சத்தில் இப்படி உச்ச நீதிமன்றத்தை நாடும் துணிவு அவருக்கு எப்படி ஏற்பட முடியும். லஞ்சம் வாங்கியது உண்மை எனில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கப்படுத்தும் வண்ணம் நீதிமன்றத்தில் வெளியிடட்டும் மத்திய பாஜக அரசு.
ஒரு காதலனின் விரும்பத்தாகாத நடவடிக்கைகளால் அவனிடம் இருந்து விலகி அரசியலில் புகழ் பெறுகிறாள் ஒரு பெண்! அவளது வளர்ச்சியை பொறுக்காத முன்னாள் காதலன் நடத்திய பழி வாங்கும் படலத்தில், ஆளும் அரசியல் கட்சி நுழைந்து தனது அஜந்தாவை கச்சிதமாக முடித்துக் கொண்டது! இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டுமா பாஜக அரசு..என்பதே அனைவரின் ஆதங்கமாகும்!
டிசம்பர் 15-ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய மனுவை அவரச வழக்காக எடுத்து அதற்குள் விசாரிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். அதன்படி நாளை விசாரித்தால் தான் உண்டு! பார்க்கலாம். என்ன நடக்கப் போகிறது என்பதை!
கட்டுரையாளர்கள்;
சாவித்திரி கண்ணன் & முனைவர் தயாநிதி
அறம் இணைய இதழ்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு