இலங்கையில் கால் பதித்த ஸ்டார்லிங்க் : செயற்கைக் கோள் இணைய சேவை இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியம்?

BBC News தமிழ்

இலங்கையில் கால் பதித்த ஸ்டார்லிங்க் : செயற்கைக் கோள் இணைய சேவை இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியம்?

பூட்டான் மற்றும் வங்கதேசத்துக்குப் பிறகு, தெற்காசியாவில் ஸ்டார்லிங்க் இணையம் தொடங்கப்பட்ட மூன்றாவது நாடாக இலங்கை உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸில் ஸ்டார்லிங்க் இலங்கையில் கால் பதிப்பதை அறிவித்தார்.

ஸ்டார்லிங்க் விரைவில் இந்தியாவிற்கும் வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்லிங்க் தனது சேவைகளை இங்கு தொடங்க இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக, செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சில காலத்திற்கு முன்பு, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஸ்டார்லிங்க் தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தன.

தொலைதூரப் பகுதிகளிலும் அதிவேக இணையத்தை வழங்குவதற்காக, புவி வட்டபாதையின் குறைந்த உயரத்தில் (LEO) வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் இணைய சேவை தான் ஸ்டார்லிங்க் .

ஆனால் நமக்குப் பழக்கமான தொலை தொடர்பு பிராட்பேண்ட் நெட்வொர்க்குகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது, இந்தியாவிற்கு வருவதால் பயனர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

ஸ்டார்லிங்க் என்றால் என்ன?


ஸ்பேஸ்எக்ஸ் பல ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையைத் தொடங்க முயற்சித்து வருகிறது.


படக்குறிப்பு, ஈலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் பல ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையைத் தொடங்க முயற்சித்து வருகிறது.
ஸ்டார்லிங்க் என்பது இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களின் வலையமைப்பு. இந்த சேவை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

அதன் வலைத்தளத்தின்படி , "ஸ்டார்லிங்க் என்பது உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கைக்கோள் விண்மீன் தொகுப்பு.

இது ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங், வீடியோ அழைப்புகள் மற்றும் பலவற்றைச் செய்யக்கூடிய பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க, புவி வட்டபாதையின் குறைந்த உயரத்தைப் பயன்படுத்துகிறது" என தெரியவருகிறது.

இந்த சேவை 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது, ​​இந்த தொலைத்தொடர்பு திட்டத்தின் கீழ், சுமார் 8 ஆயிரம் சிறிய செயற்கைக்கோள்கள் பூமியின் 'கீழ் சுற்றுப்பாதையில்' உள்ளன.

இந்த செயற்கைக்கோள்கள் பொதுவாக பூமியின் மேற்பரப்பிலிருந்து 200-2000 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுகின்றன.

2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்டார்லிங்கில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 4.6 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருந்தனர்.

யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸுக்குப் பிறகு இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் உள்ளது.

செயற்கைக்கோள் இணையம் எவ்வாறு செயல்படுகிறது?

பயனரின் சாதனத்திலிருந்து விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு சிக்னல்களை அனுப்புவதன் மூலம் இந்த செயற்கைக்கோள் இணையம் செயல்படுகிறது.

இது இணையத்துடன் இணைக்கப்பட்டு, நிலத்தில் அமைந்துள்ள நிலையத்திற்கு தரவை அனுப்புகிறது.

நிலத்தில் உள்ள நிலையம் இந்தத் தரவை செயற்கைக்கோள் வழியாக பயனரின் டிஷுக்கு திருப்பி அனுப்பி, இணைப்பை நிறைவு செய்கிறது .

செயற்கைக்கோள் இணையம் இப்போது செயல்பாட்டில் இல்லை என்பதல்ல இதன் பொருள்.

ஆனால் அது உயர் பூமி சுற்றுப்பாதையில் (HEO) இருக்கும் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துகிறது. இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் மேற்பரப்பிலிருந்து 30 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் சுழல்கின்றன.

"இந்த செயல்முறைக்கு எந்த ஃபைபர் ஆப்டிக் கேபிளோ அல்லது கோபுரமோ தேவையில்லை. ஸ்டார்லிங்க் இணையத்தைப் பயன்படுத்த, ஒரு செயற்கைக்கோள் ஆண்டெனா தேவை.

மடிக்கணினியுடன் இணைக்கும் ஒரு சிறிய கண்காணிப்பு மென்பொருளை வாங்க வேண்டும். ஆண்டெனா மேலே செல்லும் பல்வேறு செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கிறது, இதன் மூலம் நீங்கள் இணையத்தைப் பெறுவீர்கள்" என்று ஸ்டார்லிங்க் இணையத்தைப் பயன்படுத்துவதில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் அறிவியல் நிபுணர் பல்லவ் பாக்லா.

ஸ்டார்லிங்க் இந்தியாவிற்கு வந்தால் என்ன நடக்கும்?

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டும் என்கிறது ஒரு அறிக்கை.


இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஸ்டார்லிங்குடன் தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்தன.

ஆனால், ஸ்டார்லிங்கின் உபகரணங்களை இந்திய சந்தையில் கிடைக்கச் செய்வது தொடர்பானவை தான் இந்த ஒப்பந்தங்கள்.

இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் , சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான காந்தர் உடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது .

இதன்படி, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க முயற்சித்து வருகிறது, ஆனால் இன்னும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, அது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய பயனர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

தற்போது, இணையத்தை ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், டிஜிட்டல் சந்தாதாரர் இணைப்புகள் (DSL), அல்லது செல்லுலார் கோபுரங்கள் மூலம் இந்திய பயனர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மாறாக, ஸ்டார்லிங் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம், பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு இல்லாத தொலைதூர மற்றும் மலையிலுள்ள பகுதிகளிலும் அதிவேக இணையத்தை வழங்க முடியும் என்று பல்லவ் பாக்லா பதில் கூறுகிறார்.

"4ஜி மற்றும் 5ஜி கோபுரங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், அவற்றை நிறுவ முடியாத இடங்களில், ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை அமைக்க முடியாத இடங்களில், இந்த செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார் .

தொலைதூரங்களில் உள்ள முகாம்களிலும் இணைய இணைப்பு கிடைக்கும் என்பதால், இது நமது ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அவரது பார்வையில், ஸ்டார்லிங், ஃபைபர் ஆப்டிக் இணையத்தைவிட மேம்பட்ட வேகத்தை வழங்க முடியாது. மேலும், இதன் விலை அதிகமாக இருக்கும். அதனால், இது சாதாரண மக்களிடையே பிரபலமடைய வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

"இந்தியாவில் இணையம் மிகவும் மலிவானது. தொலைதூரப் பகுதிகளில் வேலை செய்ய வேண்டிய ராணுவம், கடற்படை, தொழில்துறை போன்றவற்றில் ஸ்டார்லிங்கின் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு விலையுயர்ந்த சேவை, எனவே ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவையில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று பல்லவ் பாக்லா கூறுகிறார்.

அதைச் சுற்றியுள்ள கவலைகள் யாவை ?



கடந்த மாதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஸ்டார்லிங்க் இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்த்து ஒரு அறிக்கையை வெளியிட்டது .

ஸ்பேஸ்எக்ஸ் உடனான ஒப்பந்தத்தை ஒரு ரகசியம் என்று கூறிய அந்தக் கட்சி, அது ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்றும், இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பை வெளிநாட்டு கைகளுக்கு ஒப்படைப்பது கடுமையான பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தும் என்றும் கூறியது.

இருப்பினும், பல்லவ் பாக்லா இந்தக் கருத்தை நிராகரிக்கிறார்.

"ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் இப்போது கூட உங்கள் வானத்தில் பறந்து செல்கின்றன. அவற்றைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை. வளங்களைப் பொறுத்தவரை, ஸ்டார்லிங்கிற்கு உரிமம் வழங்கப்படுகிறது. அந்த உரிமத்தை திரும்பப் பெறலாம், அல்லது புதுப்பிக்காமல் இருக்கலாம். அது இந்தியாவின் கைகளில் உள்ளது," என்றும் பல்லவ் பாக்லா கூறுகிறார்

இருப்பினும், செயற்கைக்கோள் இணைய சேவை தொடர்பான பிற கவலைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"இப்போது ஸ்டார்லிங்க் விண்வெளியில் சுமார் எட்டாயிரம் செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கையை 12 முதல் 15 ஆயிரமாக அதிகரிக்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், விண்வெளி கழிவுகளுக்கு என்ன நடக்கும்? இவ்வளவு செயற்கைக்கோள்கள் இருந்தால், விண்வெளியில் மோதல் ஏற்பட்டால் என்ன நடக்கும்? அப்போது என்ன நடக்கும்?

நமது சந்திரயான்-3 ஏவப்படவிருந்தபோது, ​​ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அது கடந்து செல்ல வேண்டிய பகுதி வழியாகச் சென்றதால், நமது ராக்கெட் ஒரு நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது. இதுபோன்ற பிரச்னைகள் எழும்" என்று அவர் விளக்குகிறார்.


சில காலத்திற்கு முன்பு , ஸ்பேஸ்எக்ஸ் ஏவிய செயற்கைக்கோள்கள் சூரிய புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் சுழன்று கொண்டிருந்த செயற்கோள்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில் செயற்கைக்கோள் இணைய

சேவை எவ்வாறு செயல்படும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

"சூரியன் தீவிரமான கதிர்வீச்சை வெளியிடும் நேரங்களில், ​​புயல் வந்து அது கதிர்வீச்சு பூமியை நோக்கி இழுக்கும்போது, ​​அதன் வழியில் வரும் அனைத்தும் கருகிவிடும். இது ஒரு சாதாரண விஷயம்.

ஆம், ஸ்டார்லிங்கின் சில செயற்கைக்கோள்கள் கருகிவிட்டன.

ஆனால் அவர்களிடம் பல செயற்கைக்கோள்கள் இருப்பதால் அனைத்தும் கருகிவிட முடியாது.

சேதமடைந்த செயற்கைக்கோள்களுக்குப் பதிலாக அவர்கள் புதிய செயற்கைக்கோள்களை அனுப்புகிறார்கள்.

அதனால்தான் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பறக்கிறது, இதன் மூலம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன," என்று பல்லவ் பாக்லா பதில் அளித்தார்.

சைபர் பாதுகாப்பைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவால் என்று கூறிய அவர், ஆனால் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது உன்னிப்பாக ஆராயப்பட்டது என்றும், நமது பாதுகாப்பு நிறுவனங்கள் இதைப் பாதுகாப்பானதாகக் கருதியுள்ளன என்றும் தெரிவித்தார்.

அதன் அதிக விலையை அவர் கவலைக்குரிய முக்கிய காரணமாகக் கருதுகிறார்.

மேலும், "இது மிகவும் விலையுயர்ந்த சேவை. ஆனால் இணையம் இல்லாத இடங்களில், இதற்காக நீங்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பீர்கள்," என்று அவர் கூறுகிறார்.

-- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyxp5pdpv8o

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு