‘தொழுகையா?, அபராதம் 5 லட்சம்’ – யோகி கெடுபிடி!
அறம் இணைய இதழ்
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மாநிலங்களில் எல்லாம் இஸ்லாமிய மக்களை நிம்மதி இழக்கச் செய்வது என்பதை ஒரு அஜந்தாவாகவே செய்து வருகிறது! சகிப்புத் தன்மைக்கு பேர் போன மகான்கள் பலர் தோன்றிய இந்தியாவை சண்டைக் காடாக்க துடிக்கின்றனர் என்பதற்கான அத்தாட்சிகளே கீழ் காணும் சம்பவங்களாகும்.
வட இந்திய ஆங்கில ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
இந்தியா முழுமையும் புனித மிக்க ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் பேரார்வத்துடன் தராவீஹ் தொழுகை என்ற பெயரில் குர் ஆனில் உள்ள முக்கிய வாசகங்கள் சிலவற்றை வாசித்து தொழுவதை பாராம்பரிய வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சாதாரண நாட்களில் தொழுவதற்கு ஆர்வம் காட்டாத முஸ்லீம்கள் கூட ரம்ஜான் மாத தராவிஹ் தொழுகையில் ஆர்வம் காட்டுவார்கள்! ரம்ஜான் மாதத்தில் தொழுது, இறைவனின் அருள் பெற்று நன்மை அடைய வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் இயல்பாகும்.
இதைப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், மார்கழி மாதம் இந்துக்கள் எப்படி இறைவனுக்கு பஜனை போன்றவற்றை செய்து பக்தி பாடல்கள் பாடுவார்களோ.., புரட்டாசி மாதத்தில் எப்படி அசைவம் தவிர்த்து விரதம் இருப்பார்களோ.., அது போலத் தான் இதுவும். ஆனால், இது மிக அமைதியாக நடக்கும்.
உத்திரபிரதேசத்தில் மொராதாபாத் என்றொரு நகரத்தின் லாஜ்பத் நகரில் ஜாகீர் ஹுசேன் என்பவர் தன் வீட்டில் இந்த தாராவிஹ் தொழுகையை தனக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சுமார் 30 பேரை அழைத்து செய்துள்ளார்.
”இந்த வீட்டிற்கு ஏன் இவ்வளவு முஸ்லீம்கள் வருகிறார்கள்..?” என்ற கடுப்புடன் விசாரித்த ராஷ்டிரிய பஜ்ரங் தள் ஆட்கள் தொழுகை நடக்கும் உள் வீட்டிற்குள் அத்துமீறிச் சென்று செல்போனில் படம் பிடித்து, தங்கள் ஆட்கள் மத்தியில் ஷேர் செய்து பரப்பி கலகம் செய்துள்ளனர். ”இதென்ன தேவையில்லாத கூட்டம்” என மிரட்டி உள்ளனர்!
ஒரு வீட்டிற்குள் இறைவனை தொழுபவர்கள் ஒன்று சேர்ந்து குரான் வாசித்து, தொழுது கலைந்து போய்விடுகின்றனர். இதை அந்த வீட்டிற்கு அக்கம், பக்கம் உள்ளவர்களோ, எதிரில் வசிப்பவர்களோ யாரும் தவறாக பேசவில்லை. எண்ணவுமில்லை. ஆனால், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து, ”இந்த மாதிரியான கலாச்சாரத்தை எல்லாம் நாங்க அனுமதிக்கமாட்டோம்” என கூட்டமாக வந்து கத்தியுள்ளனர்.
உள்ளே தொழுகையில் ஈடுபட்டு உள்ளவர்களால் பதில் சொல்ல இயலாத நிலையில் மேன்மேலும் சவுண்டுவிட்டு கத்தி கூப்பாடு போட்டு உள்ளனர். இறுதியில் வீட்டில் உள்ளே இருந்து ஒருவர் வந்து ”இன்னும் அரை மணி நேரம் நாங்கள் தொழ வேண்டும். தயவு செய்து அமைதியாக இருங்கள்” என வேண்டியுள்ளார்.
உடனே கோபப்பட்ட பஜ்ரங் தள் அமைப்பினர், ”நாங்க இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு பயம் வரலையா?” என்று போலீஸில் புகார் தந்து, எப்.ஐ.ஆர் போடும்படி தூண்டியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீஸ், ”வீட்டுக்குள் அமைதியாகத் தொழுகை நடக்கிறது. இதில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் வரவில்லையே’’ எனக் கூறியுள்ளனர். அந்த வீட்டின் எதிரில் சிறு பெட்டிக் கடை வைத்திருக்கும் ஒரு இந்துவிடம் விசாரித்ததில், ”அவங்க வீட்டுக்குள்ள அவங்க சாமி கும்பிடுறத நாம எப்படி குத்தம் சொல்ல முடியும்’’னு கேட்டு இருக்கார்! ‘ஆகவே, அக்கம்,பக்கம் உள்ளவர்கள் யாரும் இதற்கு சற்றும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை’ என்பதை அடுத்து அங்கிருந்து சென்றுவிட்டனர் போலீசார்.
இதையடுத்து அடுத்த நாளும் அது போல தொழுகை நடப்பதைக் கண்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பஜ்ரங் தள்ளின் ரோசன் சக்சேனா என்பவர், ”போலீஸ் எப்.ஐ.ஆர் போடவில்லை என்றால், நாங்கள் போராட்டம் அறிவிப்போம்” என மிரட்டினார்.
இதற்கிடையே ஆளும் பாஜகவின் முக்கியஸ்தர்கள் சிலரும் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, அழுத்தம் தந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் அதிகாரி ஹேமராஜ் மீனா வீட்டின் உரிமையாளர் ஜாகீர் உசேனை அழைத்து, ”பிரச்சினை பெரிதாகிக் கொண்டு போகிறது. ஆகவே, நீங்க உங்க உறவினர், நண்பர்களை அழைத்து தொழுகை நடத்தக் கூடாது” எனக் கூறியுள்ளார்.
”கூட்டாக தொழுகை செய்வது பெரும் மன நிறைவை தரக் கூடியது. மேலும், சிலர் இல்லத்தில் இந்த சிறிய இடம் கூட இல்லாத நிலை உள்ளது. ஆகவே தான் ஒன்றுகூடி செய்தோம்” என பணிவுடன் கூறியுள்ளார், ஜாகீர் உசேன்.
”இல்லை, நிலைமை எல்லை மீறி போவதால், ‘நான் இனி கூட்டுத் தொழுகை நடத்த மாட்டேன்’ என எழுத்துபூர்வமாக எழுதி தாங்க” என கேட்கவும், அவரும் மனம் நொந்து, ‘பிரச்சினையை வளர்க்க வேண்டாம்’ என சொன்னபடி எழுதி தந்து அமைதியாகிவிட்டார்.
ஆக, எல்லாம் இணக்கமாக முடிந்தது. இஸ்லாமியத் தரப்பில் முழுமையாக விட்டுக் கொடுத்துவிட்டனர் என நிம்மதியாக போலீஸ் அதிகாரி சென்றுவிட்டார். விஷயம் இத்துடன் முடிந்துவிட்டால், அது யோகி ஆதித்திய நாத் ஆட்சிக்கு பெருமை சேர்க்குமா?
‘என்னாச்சு..? அந்த முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே’ என ஆளும் தரப்பு அழுத்தம் கொடுத்ததில், தற்போது வீட்டிற்குள் தொழுகை செய்த காரணத்திற்காக அமைதியை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது தலா ஐந்து லட்சம் ரூபாய் பிணைப்பத்திரம் கட்ட நோட்டிஸ் தரப்பட்டு உள்ளது.
”தராவீஹ் தொழுகையில் அமைதியின்மை என்ற பேச்சு எங்கிருந்து வந்தது? வீட்டிற்குள் நமாஸ் செய்யும் பாரம்பரியம் புதியதாக இருந்தாலும் சரி அல்லது பழையதாக இருந்தாலும் சரி, இதில் ராஷ்டிரிய பஜ்ரங் தளத்திற்கு என்ன எதிர்ப்பு?” என பி.பிசி நிருபர் பஜ்ரங்தள்ளின் ரோஷன் சக்சேனாவிடம் கேட்டதற்கு, அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
”அவரவர் விருப்பப்படி அவரவர் இறைவனை தொழ முடியாதா?” என பி.பி.சி நிருபர் எஸ்.எஸ்.பி ஹேமராஜ் மீனாவிடம் கேட்ட போது,
“அது மசூதி அல்ல. அது ஒரு வீடு. வீட்டில் அப்பகுதி மக்கள் அனைவரையும் கூட்டி நமாஸ் செய்வீர்களா என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு இந்து குடும்பம் வீட்டில் இது போன்ற ஜக்ராத்தா (இரவு முழுவதும் நடக்கும் பூஜை) நடத்தினால், அங்கேயும் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பீர்களா? என பி.பி.சி நிருபர் கேட்கிறார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த எஸ்.எஸ்.பி மீனா,”ஜக்ராத்தா வேறு, வழிபடுவது வேறு. இந்து-முஸ்லிம் பாரம்பரியத்தை ஒன்றாக்குவீர்களா?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்.
இதன் மூலம், ‘இந்துக்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதி’ என்ற பார்வையை பாஜக ஆட்சியின் போலீஸ் வெளிப்படுத்தி உள்ளதாகத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இதே போலத் தான் டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமான ஹரியானாவின் குருகிராமில் இஸ்லாமியர்கள் அதிகம், இங்கு பணியாற்றும் பல்வேறு வெளிமாநிலத் முஸ்லீம் தொழிலாளர்கள் பல வருடங்களாக தம் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை பொதுவெளியில் நடத்தி வந்தனர். ரோட்டோரமாக ஷாமியானா போட்டோ, ஒரு பார்க்கிலோ நடத்துவார்கள். இல்லை பார்க்கிங் இடத்தில் கூட நடத்திவிட்டு அமைதியாக கலைந்து செல்வார்கள்.
இந்தப்படியாக குருகிராமில் போதுமான மசூதிகளும் இல்லாமையால் அவர்களுக்கு அதன் மாநகராட்சியால் 126 இடங்களில் தொழுகைக்கான அனுமதி வழங்கப்பட்டு பல காலமாக நடந்து கொண்டிருந்தது. ஹரியானாவில் பாஜக ஆட்சி வந்ததும் நிலைமைகள் மாறின! எதற்கு இந்த தொழுகை நியுசென்ஸ் என விமர்சித்தனர் இந்துத்துவா அமைப்புகள்! அப்புறம் கூட்டாகச் சேர்ந்து போய் தடுத்தனர். காவல்துறையில் புகார் கொடுத்தனர். மேலிடத்து அழுத்தங்கள் நிகழ்ந்தன. இதனால், தொழுகைக்கான இடங்கள் 126 ல் இருந்து 37 ஆகி, பிறகு 18 ஆகி கடைசியில் எட்டாகி கடைசியில் எதுவும் இல்லை என்றானது! மீறித் தொழுதவர்கள் மீது வழக்குகள் பதிவாகின! கைதுகள் நடந்தன!
இந்த இடைப்பட்ட காலங்களில் இஸ்லாமியர் தொழுகை நடக்கும் இடங்களில் இந்துக்கள் கூடி அதிரடி பஜனைகளை அரங்கேற்றுவதும் நடந்தன!
ஹரியானாவின் முதல்வரான மனோகர்லால் கட்டார், ”பொது இடங்களில் தொழுகை ஏற்புடையதல்ல” என பத்திரிகைகளுக்கு பகிரங்கமாக பேட்டியும் தந்தார்!
ஆக, இஸ்லாமியர்களின் அமைதியான தொழுகையைக் கூட அங்கீகரிக்கும் மனம் நமக்கு இல்லை என்றால், நம் மனதில் இறைவன் எப்படி குடிகொள்வான்? அவர்களின் தொழுகையை சகிக்கவொண்ணாத செயலாக பார்க்கும் மனோபாவம் வளர்தெடுக்கபடுமானால், அது நல்லதல்ல!
இந்த வெறுப்பு என்பது நெருப்பு போல! இன்று இஸ்லாமியர்களை எரிக்கும் நெருப்பு உங்கள் நெருங்கிய சுற்றத்தின் மீதும் தாவும்! ஏன் உங்களுக்கே உங்கள் மீது வெறுப்பு தலை தூக்கவும் வாய்ப்புள்ளது!
அஹிம்சைக்கு பேர் போன காந்தி தேசத்தை அமைதியின்மைக்கு கொண்டு செல்வதா? இப்படி எல்லாம் நடந்தால் அந்நிய நாட்டார் நம்மை என்ன நினைப்பார்கள்? இம்சை எண்ணங்களை தவிர்த்து, இணக்கத்திற்கு வித்திடுவதே இன்றைய தேசத்தின் முக்கிய தேவையாகும்.
சாவித்திரி கண்ணன்