பாஜகவும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!

அறம் இணைய இதழ்

பாஜகவும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!

அரசியலில் எதிர் துருவங்களானாலும் பாஜகவும், திமுகவும் தொழில் முறை ரகசிய கூட்டாளிகள் என்பதற்கு மூன்றரை வருட திமுக ஆட்சியில் நடைபெற்ற ஒவ்வொரு நகர்வுகளும்  சாட்சியாகின்றன. சி.பி.எம் மாநில மாநாட்டில், ”அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதா?” என கே.பாலகிருஷ்ணன் பேசியதன் பின்னணி குறித்த அலசல்;

தமிழகத்தின் முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் வெளிப்படையாக பாஜகவின் ஆதரவு நிலையில் செயல்பட்ட விதத்தில், ”பாஜகவின் கொத்தடிமைகள்” என விமர்சிக்கப்பட்டனர். இதனால், தமிழகத்தின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் திமுகவை ஆதரித்தனர். ஆட்சி பீடத்திலும் அமர்த்தி அழகு பார்த்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது. தேசத்தின் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து பசியாறும் கார்ப்பரேட்களின் கோரப் பசிக்கு தீனி போடத்தக்க சட்டங்களையும், சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் சட்டங்களையும் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்துவதும், அதை மாநில திமுக அரசு பெயர்களை மட்டும் மாற்றி, அப்பட்டமாக தமிழக மக்களிடம் திணித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

வரலாறு காணாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தின் விவசாய நிலங்களும், நீர் நிலைகளும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகிக்கும் ஒரே மாநில அரசு இந்தியாவில் திமுக அரசு மட்டுமே. நாளும், பொழுதும் மாநகர விரிவாக்கத்தை மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அமல்படுத்தி இயற்கை வளங்களை விழுங்கி வருகிறது.

ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசு;

பாதிக்கப்பட்ட மக்கள் போரட்டங்கள் நடத்தி தங்கள் குரலை வெளிப்படுத்துவதுவதையும், பாதிக்கப்பட்ட எளியோருக்காக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதையும் இது வரை எந்த ஆட்சியாளர்களும் தடை செய்ததில்லை. ஆனால், இன்றைய திமுக அரசின் காவல்துறை மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து கைது செய்து வருகிறது.

குறிப்பாக  முஸ்லீம்களை அழித்தொழித்த ‘குஜராத் கலவரம்’ தொடர்பாக ‘பி.பி.சி எடுத்த ஆவணப்படத்தை எங்கும் திரையிட்டு காட்டக் கூடாது’ என கறார் காட்டி, மீறுவோர்களை கைது செய்து தன் மோடி விசுவாசத்தை காட்டியது திமுக அரசு.

கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதியை கற்பழித்துக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்காரனான பள்ளி நிர்வாகிக்கு எதிராக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் அறிவித்த ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளை ஊரிலிருந்து புறப்படும் போதே முன் கூட்டியே கைது செய்தது.

வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மாபாதகனை இன்று வரை பாதுகாத்து வருகிறது திமுக அரசு.

அண்ணா நகரில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளியை காப்பாற்ற  உச்ச நீதிமன்றம் வரை சென்று அவமானப்பட்டது திமுக அரசு.

தற்போது அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவரை அந்த வளாகத்திற்குள்ளேயே நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்த ஞானசேகரனுக்கு ஆதரவாக இருந்தவர்களை கைது செய்ய மறுத்து வருகிறது திமுக அரசின் போலீஸ். இந்த அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கே அனுமதி மறுத்து த.வெ.க, பாமக, பாஜக மகளிர் அணியினர் என தொடர்ந்து கைது செய்கிறது திமுக அரசு.

தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை ஒட்டிய பேரணிக்கு கூட அனுமதி மறுத்து அதிர்ச்சி தந்துள்ளது திமுக அரசு. இது போன்ற ஒரு கசப்பான அனுபவத்தை இதற்கு முன் கம்யூனிஸ்டுகள் சந்தித்ததில்லை. இதன் தொடர்ச்சியாகத் தான் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ”தமிழகத்தில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை உள்ளதா?’’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதே போல அதானி ஊழல்கள் மீது நடவடிக்கை கோரி நாளை ஜனவரி 5 ஆம் தேதி அறப்போர் இயக்கம் அறிவித்த போராட்டத்திற்கு  அராஜகமாக அனுமதி மறுத்துள்ளது திமுக அரசின் காவல் துறை.

இந்த ஆட்சியில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய விசிக தலைவர் திருமாவளவன், ”தமிழ் நாட்டு காவல்துறையை இயக்குவது முதல்வர் ஸ்டாலினா? மத்திய அமைச்சர் அமித்ஷா வா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

”ஊழல் அதிமுகவினரை தண்டிப்போம்” எனச் சொல்லி அரியணை ஏறிய திமுக அரசு அந்த ஊழல்களுக்கு துணை போன அனைத்து,ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை பரிசளித்து தற்போது தங்கள் ஊழல்களுக்கு பக்காவாக பயன்படுத்தி வருகிறது.

சென்ற ஆட்சியில் ஊழல்களில் ஊறித் திளைத்த அமைச்சர்கள் யார் மீதும்  கடுகளவும் நடவடிக்கைகள் இல்லை. காரணம், தங்கள் ஆட்சியில் அவர்களை விஞ்சும் வகையில் ஊழல்களை செய்து மக்கள் வரிப்பணத்தையும், பொதுச் சொத்துக்களையும் இன்றைய ஆட்சியாளர்கள் சூறையாடி வருகிறார்கள்.

பாஜகவும், திமுகவும் கள்ளக் கூட்டாளிகளே;

மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்களுக்கு இவற்றை எல்லாம் சற்றும் அச்சமின்றி செய்யும் துணிச்சல் எப்படி சாத்தியமாகிறது…? என்பதை கூர்ந்து அவதானித்தால், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதாக நாடகமாடி, திரைமறைவில் ஒத்திசைந்து செயல்படுகின்றனர் என்பதே சர்வ சத்திய நிஜமாகும்.

செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால், கடைசி வரை அவர் டாஸ்மாக்கில் செய்து வந்த மிக பிரம்மாண்ட ஊழல்களை பற்றியோ, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட ஏறாளமான இடங்களில் நடந்த ரெய்டுகளில் கிடைக்கப்பெற்றதைக் குறித்தோ மூச்சு விடவில்லை மத்திய பாஜக அரசு. இதனால், அவர் விடுதலை பெற்று மீண்டும் அமைச்சராக வாய்ப்பானது.

அதே போல ஊழல் மன்னன் பொன்முடிக்கு கிடைத்த சிறை தண்டனையை அசால்ட்டாக நிறுத்தி வைத்து, மீண்டும் அமைச்சராக வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளனர். ஆனால், டெல்லி ஆம் ஆத்மி தலைவர்களை பாஜக இப்படியா கையாள்கிறது..?

2019 ஆம் ஆண்டு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் பிடிபட்ட துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோரை உடனே  நடவடிக்கை எடுத்து கைது செய்து  தண்டிக்காமல் இத்தனை ஆண்டுகளாக விட்டுவைத்து மீண்டும் அமைச்சராகவும், மீண்டும் எம்.பியாகவும் வாய்ப்பு தந்தது ஏன்?

அதுவும் துரைமுருகன் நீர்வளத் துறை, சுரங்கங்கள் துறைகளில் வரலாறு காணாத இயற்கை வளச் சுரண்டல்கள் நடத்துவது தொடர்பாக இன்று வரை பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தற்போது நடந்து வரும் ரெய்டுக்கு பிறகும் துரைமுருகன் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி தண்டிப்பார்களா…? என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாகும்.

மோடியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டே ஒவ்வொரு முக்கிய விழாவிற்கும் அவரை அழைத்து கெளரவித்து புளகாங்கிதப்படுவதே ஸ்டாலின், மற்றும் உதய நிதி ஸ்டாலினின் வழக்கமாகும். தமிழகத்தில் ஒரு அறிவிக்கப்படாத அதிகர மையமாக முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இயங்குவது தொடர்பாக பஜகவினர் இது வரை கேள்வியே எழுப்பியதில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டில் சமூக நீதியை வெற்றுச் சவாலாக பேசி வருகின்ற திராவிட மாடலாக சொல்லப்படும் ஆட்சியில் தற்போது அமைச்சர்களே சாதியின் பரம்பரை பெருமைகளை பேசிக் கொண்டிருப்பதும் , தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக அரங்கேறி வருவதும், துணை முதல்வரே ஆன்மீக மடங்களை சேர்ந்த மூன்று பிராமண ஜீயர்களை வீட்டுக்கு வரவழைத்து பாத பூஜை செய்வதையும் பார்க்கும் போது, இவர்கள் பயணிப்பது பாஜகவின் சனாதனப் பாதை என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்களா.. தமிழக மக்கள்?

மோடியின் நண்பர் அதானிக்காக பழவேற்காட்டில் துறைமுகம் அமைக்க மீனவர்களின் எதிர்ப்பை மீறி பல ஆயிரம் ஏக்கரை தூக்கி கொடுத்ததோடு, அதானியிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி மக்களிடம் மின் கட்டணக் கொள்ளை நிகழ்த்தும்  ஆட்சி தான் திமுக ஆட்சியாகும்.

மத்திய அரசின் போக்குவரத்து வாகனச் சட்டங்களை தமிழகத்தில் விசுவாசமாக அமல்படுத்தி நாளும்,பொழுதும் சிறு தவறுகளை செய்கின்ற வாகன ஓட்டிகளிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் அபராதம் என்ற பெயரில் பகீர் கொள்ளை நடக்கிறது. மக்கள் தினமும் வயிறு எரிந்து சாபங்கள் விட்டுக் கொண்டுள்ளனர்.

பாசிச பாஜகவை எதிர்க்கிறோம்ங்கிற போர்வையை போர்த்திக்கிட்டு, அரசு பள்ளிகளில் ஏற்கனவே தேசிய கல்வித் திட்டத்தின் கூறுகளுக்கு அருமையான தமிழ் தலைப்பிட்டு எண்ணும்,எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேசன்… என சூழ்ச்சியாக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை கலகலக்கச் செய்து வருவதைப் போலவே தேசிய கல்விக் கொள்கையில் உள்ள TWINING என்ற திட்டப்படி தான் தனியார் பள்ளி முதலாளிகளை அரசு பள்ளிகளுக்குள் சூதானமாக இறக்குகிறது திமுக அரசு.

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை அராஜக வழியில் பந்தலை பிரித்துப் போட்டும், நள்ளிரவில் வீடு நுழைந்து கைது செய்தும் ஒடுக்கியதோடு, தற்போது வரை சாம்சங் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுத்து வருகிறது ஸ்டாலின் அரசு.

மத்திய பாஜக அரசின் விவசாய நிலங்களை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் கொள்கைக்கு சாதகமாக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை சட்டசபையில் விவாதங்களின்றி அதிரடியாக அமல்படுத்திய ஆட்சி தான் திமுக ஆட்சி.

கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு விவசாயிகளிடமிருந்து பறித்த நிலங்களின் பட்டியல்;

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம், நாகபட்டினம், தேனி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உட்பட 11 மாவட்டங்களில் 13,500 ஏக்கர்!

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலங்கள்

மதுரை மாவட்டம் திருமங்களத்தில் இருந்து செங்கோட்டை புளியரை வரை நான்கு வழிச்சாலைக்காக  2,800 ஏக்கர் நிலங்கள்!

திருவள்ளுர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திராவின் சித்தூர் வரையிலான மத்திய அரசின் ஆறு வழிச்சாலைக்காக 1,200 ஏக்கர் நிலங்கள்.

பரந்தூரில் விமான நிலையம் என 5,500 ஏக்கர் நிலம் பறிப்பு, பல்லாயிரக்கணக்கில் மக்களை வெளியேற்ற நடவடிக்கை.

திருவண்ணாமலை மேல்மாவிலோ 3,500 ஏக்கர் நிலம் செயல்படாத செயல்படாத சிப்காட்டிற்காக பறிப்பு.

நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கம் என 12,125 ஏக்கர் நிலங்கள் பறிப்பு.

தற்போது அரிட்டாபட்டி துவங்கி அழகர் மலை வரை 5,000 ஏக்கரில் மதுரையின் வளங்களை அழிக்கும் சுரங்க முயற்சிக்கு அனைத்து மட்டத்திலும் இசைவு தந்து, ஒத்துழைத்த திமுக அரசு மக்களின் அடங்கா கோபத்தையடுத்து பின்வாங்கியுள்ளது.

ஆக, தற்போதைய திமுக அரசின் அனைத்து ஊழல்களையும்  வெறுமே ரெய்டுகள் நடத்தி அறிந்து கொண்டு, பேரம் பேசி கமுக்கமாக மறைத்து விடுகிறது மத்திய பாஜக அரசு.

எனவே, பாஜகவும், திமுகவும் தொழில் முறை ரகசியக் கூட்டாளிகளே! இந்த கள்ள உறவு மக்களை கழுத்தறுப்பதற்கானது. ‘பாஜகவை  பலவீனப்படுத்த வேண்டும்’ என்றால், அதற்கு பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் ‘திருட்டுக் கூட்டாளி திமுகவை அம்பலபடுத்தினால்’ மட்டுமே சாத்தியமாகும்.

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/20345/bjp-dmk-illegal-relationship/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு