இந்தியா - சீனாவை சேர விடமாட்டேன்.. பிளானோடு இந்தியா வரும் அமெரிக்காவின் புதிய தூதர்!

Oneindia Tamil

இந்தியா - சீனாவை சேர விடமாட்டேன்.. பிளானோடு இந்தியா வரும் அமெரிக்காவின் புதிய தூதர்!

வாஷிங்டன்: ‛‛இந்தியா - அமெரிக்கா வரி விதிப்பு விவகாரத்தில் டீல் முடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. வரும் வாரங்களில் இருநாடுகள் இடையேயான பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். சீனாவை ஒப்பிடும்போது இந்தியா, அமெரிக்காவுடன் தான் நெருக்கமாக உள்ளது. இதனால் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்கி நம் பக்கம் இழுப்பதே என் முதன்மை கடமையாக இருக்கும்'' என்று இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்புடன் நெருக்கமான இவர் விரைவில் இந்தியா வர உள்ளார். இந்நிலையில் தான் அவரது திட்டம் பற்றி அமெரிக்காவின் செனட் கூட்டத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனை நம் நாடு கண்டித்தது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாடு சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. இதனை டிரம்ப் விரும்பவில்லை.

இந்தியா, சீனாவுடன் கைகோர்க்கும்போது ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை அடக்க முடியாது என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் இப்போது டிரம்ப் நம் நாட்டை விமர்சிப்பதை படிப்படியாக குறைத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடி என் நண்பர். சிறந்த பிரதமர். அமெரிக்கா - இந்தியா இடையே நல்ல உறவு உள்ளது. விரைவில் பிரதமர் மோடியுடன் பேசுவேன் என்று கூறி உள்ளார்.

இதற்கிடையே தான் அமெரிக்காவுக்கான இந்திய தூதரை டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்தார். அவரது பெயர் செர்ஜியோ கோர். இவர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கையை பெற்றவர்களில் ஒருவர். செர்ஜியோ கோர் தற்போது வெள்ளை மாளிகையின் தனி இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவரை நம் நாட்டுக்கான தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

விரைவில் நம் நாட்டுக்கான தூதராக அவர் வர உள்ளார். அமெரிக்காவின் செனட் குழு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் அவர் இந்தியாவுக்கான தூதராக வருவார். இந்நிலையில் தான் செனட் குழு கூட்டத்தில் அவர் பேசிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளது. செர்ஜியோ கோர், இந்தியா - அமெரிக்கா உறவு மற்றும் வர்த்தக பிரச்சனை பற்றி பேசி உள்ளார். இதுபற்றி செர்ஜியோ கோர் கூறியதாவது:

இந்தியா - அமெரிக்கா இடையேயான வரி விதிப்பு விவகாரத்தில் டீலை முடிக்கும் நேரம் வெகுதொலைவில் இல்லை. வரும் வாரங்களில் இருநாடுகள் இடையேயான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா - அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் அமெரிக்கா - இந்தியா உறவு மூலாபாய விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவை ஒப்பிடும்போது இந்தியா அமெரிக்காவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது.

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதில் இந்தியாவும் கவலை கொண்டுள்ளது. சீனாவின் விரிவாக்கம் இந்திய எல்லையை தாண்டி பரவுகிறது. அமெரிக்கா எப்போதும் நட்பு நாடு என்ற முறையில் இந்தியாவை வலுப்படுத்தும்.

அதேபோல் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்கி நம் பக்கம் இழுப்பதே என் முதன்மை கடமையாக இருக்கும். ஏனென்றால், சீனாவை ஒப்பிடும்போது அமெரிக்காவுடன் அதிக பொதுவான விஷயங்களை இந்தியா கொண்டுள்ளது. இதில் இருநாடுகள் இடையே தனிப்பட்ட உறவுகள் இல்லை என்று நினைக்கிறேன் இதனை நான் கொண்டு வருவேன். இந்த விஷயத்தில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்'' என்றார்.

https://tamil.oneindia.com/news/washington/my-top-priority-is-pulled-india-into-our-side-and-away-from-china-says-sergio-gor-who-is-new-us-en-734935.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு