இனி இவை தொழிலாளர் சட்டங்கள் அல்ல! முதலாளி நலச் சட்டங்கள்!
ஜனசக்தி
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் செயல்படுத்தப்படுவதாக நவம்பர் 21-ல் ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் கொண்டுவந்திருப்பது ஆகச்சிறந்த முன்னேற்றம் என்றும், தொழிலாளர்களுக்கு வாரி வழங்கி விட்டதாகவும், பொய்யும் புனை சுருட்டும் அரை உண்மைகளுமாக அரசு விளம்பரம் செய்கிறது.
ஓநாயை ஆடு என்கிறார்கள், ஆட்டை ஓநாய் என்கிறார்கள்.
150 ஆண்டு காலம் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டு, முதலாளிகளுக்குச் சாதகமான அம்சங்களை எல்லாம் சேர்த்திருக்கிறார்கள். அவை தொழிலாளர்களுக்கு நன்மை தரும் என்று விளம்பரம் செய்வது தான், சங்கிகளின் அபாயகரமான அரசியல்!
அவர்கள் கூறுகிற பொய்களையும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மோடி அரசின் கூற்று: அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் தொழிற்சாலைகளில் கதவடைப்பு, ஆட்குறைப்பு, ஆலை மூடல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை முதலாளி செய்ய வேண்டுமானால், அரசு அனுமதி பெற வேண்டும் என்று இருந்தது. இப்போது அதை 300க்கு மேல் என்று மாற்றி விட்டார்கள். அதாவது 299 தொழிலாளி வரை உள்ள தொழிற்சாலைகள் தமது விருப்பம் போல ஆலையை மூடலாம் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பி விடலாம்.
நூறு தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான உறவு நிலையை நிர்ணயிக்கிற நிலையாணைச் சட்டம் இதுவரை இருந்தது. இப்போது இதையும் 300க்கு மேல் உள்ள தொழிற்சாலை என்று மாற்றிவிட்டார்கள். எனவே எந்த வரையறையும் இன்றி முதலாளிகள் தொழிலாளர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
இப்போது வரை 20 தொழிலாளர்களுக்கும் அதிகமாக வேலை பார்த்தால் அது தொழிற்சாலை என்று இருந்தது. இப்போது அதை 40 என்று உயர்த்தி இருக்கிறார்கள். 40 வரை தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. ஒரே தொழிற்சாலையை இரண்டு, மூன்றாக பிரித்து ஆவணங்களை பதிவு செய்து கொண்டால், அவற்றுக்கெல்லாம் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது.
ஆக மொத்தத்தில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இந்தச் சட்டங்கள் பொருந்தாது என்பதுதான் உண்மை நிலை. உதாரணத்திற்கு தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில் சுமார் 2 கோடி பேர் பணிபுரிகிறார்கள். இதுவரையில் அவர்கள் அனைவருக்கும் சட்டங்கள் பொருந்தும். புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் மூலம், ஏறத்தாழ ஒன்றரைக் கோடி தொழிலாளர்கள் இந்த சட்ட வரையறையிலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்கள். எஞ்சிய 50 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த சட்டங்கள் பொருந்தும்.
முதலாளி தொழிலாளி உறவு இருந்து, அங்கு உற்பத்தியோ அல்லது சேவையோ நிகழுமாயின் அது தொழிற்சாலை தான் என்று ஏற்கனவே உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. ஆனால் ஆன்மிகம் தொடர்பான அல்லது மத சம்பந்தமான நிறுவனங்கள் நடத்தும் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்று இச்சட்டம் சொல்கிறது. அதாவது ஒரு டிரஸ்ட் போல பதிவு செய்து கொண்டு, தினமும் மதியம் அன்னதானம் வழங்கினால், அந்த டிரஸ்டின் தொழிற்சாலைக்கு, தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது!
இதுவும் போதாது என்று புதிய சட்டத்தின் படி, எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை அல்லது தொழில் துறைக்கு இந்தச் சட்டங்கள் பொருந்தாது என ஒன்றிய அரசோ, மாநில அரசோ அறிவிக்க முடியும்.
மோடி அரசின் கூற்று: தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்தால் நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்று பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்கிறோம்!.
குறித்த கால வேலை நியமனம் (ஃபிக்ஸட் டேர்ம் எம்பிளாய்மெண்ட்- எஃப்டிஇ) என்ற முறையில் பணி நியமனம் செய்தால் கடிதம் தர வேண்டும். அந்தக் கடிதத்திலேயே எப்போது அவர்களது பணி நியமனம் முடியும் என்பதும் இருக்கும்.
சில வாரங்கள், சில மாதங்களுக்குக்கூட பணி வழங்கி உத்தரவு தரலாம். அதிகபட்சமாக 2 ஆண்டு வரை அவர்களுக்கு வேலை உண்டு.
அந்தக் காலம் முடிந்தவுடன் வேலை தானாகவே பறிபோய்விடும். தனக்கு வேலை தர வேண்டும் என்று கேட்க அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
அது மட்டுமின்றி, அந்தக் குறித்த காலத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் 15 நாட்களுக்கு முன்பு தகவல் சொல்லி அவர்களை வேலையை விட்டு நிறுத்தி விடலாம். குறித்த காலம் வரை வேலை தர வேண்டும் என்று கேட்கும் உரிமை கூட அவர்களுக்கு கிடையாது.
மோடி அரசின் கூற்று: ஐந்து ஆண்டுகள் பணி புரிந்தால் தான் பணிக்கொடை (கிராஜுவிட்டி) என்பதை மாற்றி ஓராண்டு பணிபுரிந்தாலே பணிக்கொடை என்று கொண்டு வந்திருக்கிறோம்.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தால் தான் இப்போதும் பணிக்கொடை உண்டு.
இரண்டு ஆண்டுகளுக்குள் பணிபுரியும் எஃப்டிஇ தொழிலாளர்களுக்கு தான் ஓராண்டு முடித்தால் பணிக்கொடை உண்டு.
பணிக்கொடை என்பது 30, 40 ஆண்டுகள் பணிபுரிந்து, பணி முடிந்து ஓய்வு பெறும் போது வெறும் கையோடு செல்லக்கூடாது, முதிய வயதில் பணம் இல்லாமல் சிறுமை பட்டுவிடக் கூடாது என்பதற்காக தரப்படுவது தான் பணிக்கொடை. அவர் கடைசியாக வாங்கிய மாத சம்பளத்தில் ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளம் என்ற முறையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.
ஆனால் ஓராண்டு முடிந்தவுடன் அன்றைக்கு வாங்கிய சம்பளத்தில் 15 நாள் சம்பளத்தை கொடுத்து விட்டால், முதிய வயதில் அவருக்கு என்ன தொகை கிடைக்கும்? பணிக்கொடையின் நோக்கத்தையே இவர்கள் சிதைக்கிறார்கள்.
மோடி அரசின் கூற்று: எல்லோருக்கும் ஊதியத்தை உத்தரவாதப்படுத்தி இருக்கிறோம்!
இதுவரையில் ஊதியம் வழங்கும் சட்டத்தின்படி பாதுகாப்பு இருந்தது. மாத ஊதியத்தை வழங்காவிட்டால் வழக்கு தொடுத்து வழங்க மறுத்த ஊதியத்தைப் போல பத்து மடங்கை தொழிலாளி பெற முடியும்.
இப்போது, மாத ஊதியத்துக்கு பதிலாக, ஒவ்வொரு நாள் முடிவிலும் தரப்படும் தினக்கூலி, வாரம் முடிந்ததும் தரப்படும் வாரக் கூலி, 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் அரை மாத ஊதியம் என்றெல்லாம் பிரித்திருக்கிறார்கள். அதாவது தொழிலாளியை மணிக்கணக்கில், நாள் கணக்கில் வாடகைக்கு எடுப்பது போல பணிபுரிய செய்யலாம் என முதலாளிகளுக்கு சலுகை செய்யப்படுகிறது.
தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சேர்ந்து தொழிற்சங்கம் வைத்து, அதன் மூலம் கோரிக்கை எழுப்பி, கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் போராடி, குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒப்பந்தம் மூலமாக ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. புதிய சட்டம் இதற்கான சாத்தியக்கூறுகளை கைகழுவி விடுகிறது!
மோடி அரசின் கூற்று: எல்லோருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தி இருக்கிறோம். இனி ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியத்தை, முதலாளிகள் வழங்கவோ மாநில அரசுகள் நிர்ணயிக்கவோ கூடாது!
ஏற்கனவே குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமலில் இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் எண்பதுக்கும் மேற்பட்ட தொழில்களில் குறைந்தபட்ச ஊதியம் உண்டு. ஆனால் அவற்றை வழங்காத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை
குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவாதம் எதுவும் இந்தச் சட்டத்திலும் இல்லை.
புதிய சட்டத்தொகுப்பு அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியம் என்று எதையும் நிர்ணயிக்கவில்லை.
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள முதலாளிகள் ஏற்கனவே வழங்கி வந்த ஊதியத்தை வழங்க முடியாது என்று அறிவித்திருக்கிறார்கள்.
மோடி அரசின் கூற்று: மொத்த தொழிலாளர்களில் 51% பேர் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தை, முதலாளிகள் அங்கீகரிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறோம்!!
தொழிற்சங்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலை அரசு மறைக்கிறது.
இதுவரையில் தொழிற்சங்க பதிவுச் சான்றிதழை அரசு அதிகாரிகள் ரத்து செய்ய முடியாது. ஆனால் புதிய சட்டத்தில் தொழிற்சங்கப் பதிவை ரத்து செய்து தொழிற்சங்கத்தை முடக்க அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது
எந்த நேரத்திலும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் பேரோ அல்லது 100 பேரோ சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லை என்றால் பதிவை ரத்து செய்யலாம்.
தொழிற்சங்க நிர்வாகிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வெளி ஆட்கள் இருக்க முடியும்.
தொழிற்சங்கம் தேர்ந்தெடுத்த தலைவர் அல்லது செயலாளரை, அந்தப் பொறுப்பில் இருந்து தீர்ப்பாயம் விலக்க முடியும். குறிப்பிட்ட காலத்துக்கு எந்த தொழிற்சங்கத்திலும் அவர் பொறுப்பு வகிக்கத் தகுதியற்றவர் என்று அறிவிக்க முடியும்.
மோடி அரசின் கூற்று: பெண்களுக்கு அதிகாரம் வழங்கி, சமத்துவத்தை உறுதிப்படுத்தி இருக்கிறோம்!
சுரங்கங்கள், ரசாயன தொழிற்சாலைகள் உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் பெண்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு இருந்த தடையை விலக்கி, இனி பெண்களையும் ஈடுபடுத்தலாம் என்று சொல்லி இருப்பது தான் இவர்களது “பெண்ணுரிமை”!
இதற்கு அந்தப் பெண்ணின் ஒப்புதல் பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக சொல்வதுதான் வேடிக்கை. பணிபுரிய வேண்டும் என்று முதலாளி நிர்பந்தித்தால், அதனை ஏற்க முடியாது என்று அந்தப் பெண்ணால் மறுக்க இயலாது. மறுத்தால் வேலை பறிபோய்விடும்.
மோடி அரசின் கூற்று: 20 தொழிலாளர்கள் பணிபுரிந்தால் தான் காண்ட்ராக்ட் என்பதை 50 தொழிலாளர்கள் என்று மாற்றியிருக்கிறோம்.
இதில் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? இதற்கு முன்பு 20 தொழிலாளர்களைக் கொண்ட காண்ட்ராக்டர் தொழிற்சாலை துறையில் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதைப்போலவே 20 பேருக்கும் மேற்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்களை எடுக்கும் தொழிற்சாலை முதலாளியும் தனது நிர்வாகத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தற்போது 49 தொழிலாளர்களை வைத்திருந்தாலும், அந்த கான்ட்ராக்டரும், தொழிற்சாலை முதலாளியும் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இதனால் தலா 49 தொழிலாளர்களை வைத்திருக்கிற நான்கு காண்ட்ராக்டர்களிடம் பணியை ஒப்படைத்தால், அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ளாமலேயே 200 பேர் வேலை செய்யும் தொழிற்சாலையை காண்ட்ராக்ட் தொழிலாளர்களைக் கொண்டு இயக்க முடியும்!
காண்ட்ராக்ட் தொழிலாளர்களுடைய பணி நிலைமைகளைப் பற்றி பேசவும், விவாதிக்கவும், தீர்வு காணவும் இதுவரை ஒப்பந்தத் தொழிலாளர் ஆலோசனை வாரியம் என்ற முத்தரப்பு அமைப்பு இருந்தது. இப்போது அது கலைக்கப்பட்டு விட்டது.
மோடி அரசின் கூற்று: ஒரு தொழிற் தகராறில் தீர்வு காண முடியவில்லை என்றால் 90 நாட்களில் தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்து இருக்கிறோம்!
ஒரு தொழிற்தகராறு எழுந்தால், தொழிலாளர் துறை அலுவலர்கள் இருதரப்பையும் அழைத்துப் பேசி இணக்கப்படுத்தி, ஒப்பந்தங்கள் மூலம் தீர்வு கண்ட முறை காலாவதியாகிறது.
தொழிலாளர்கள் தமது கோரிக்கையை ஆன்லைன் மூலம் தொழிலாளர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அவர் அதை முதலாளிக்கு ஆன்லைனில் அனுப்பி பதில் கேட்பார். முதலாளி தனது எதிர்மனுவையும் ஆன்லைனிலேயே அனுப்புவார். முகத்துக்கு நேராக அமர்ந்து பேசும் முறை உருக்குலைக்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டில், 12 நகரங்களில் மொத்தம் 18 தொழிலாளர் நீதிமன்றங்கள் உள்ளன. இனிமேல் தொழிலாளர் நீதிமன்றங்கள் இருக்காது. அதற்கு பதிலாக மாநில மையத்தில் ஒரு தீர்ப்பாயம் இருக்கும். அதில் நீதித் துறையில் இருந்து ஒருவரும் நிர்வாகத் துறையிலிருந்து ஒருவரும் ஆக இரண்டு முதன்மை அதிகாரிகள் இருப்பார்கள். அங்குதான் வழக்கு நடத்தப்படும்.
இப்போது உள்ளதைப் போன்று சாட்சிகளை அழைத்து விசாரிக்கும் முறை இருக்காது. ஆவணங்களை பரிசீலித்து தீர்ப்பு வழங்கப்படும். இது என்ன விளைவுகளை உருவாக்கப் போகிறது என்பதை நடைமுறையில்தான் தெரிந்து கொள்ள முடியும்.
மோடி அரசின் கூற்று: வேலை நிறுத்த உரிமையை நாங்கள் பறிக்கவில்லை!
இதுவரையில் பொதுப் பயன்பாட்டுக்கான அத்தியாவசியமான தொழில்களில் மட்டுமே 14 நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்த நோட்டீஸ் தர வேண்டும் என்று இருந்தது. இப்போது எந்த தொழிலானாலும் வேலை நிறுத்த முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும்.
தொழிலாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்தாலும் கூட அது வேலை நிறுத்தம் என்று கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
மோடி அரசின் கூற்று: அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே இஎஸ்ஐ மருத்துவ வசதி, பிராவிடண்ட் பண்ட் எல்லாம் இருந்தன. இப்போது அது அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுத்திருக்கிறோம்!
தொழிலாளர்கள் தமது சம்பளத்தில் 12 சதவீதமும் அதற்கு இணையான தொகையை முதலாளிகளும் தொழிலாளர்கள் பெயரில் பிராவிடண்ட் பண்டாக மாதந்தோறும் செலுத்தினார்கள். அறுபது வயதில் அவர் ஓய்வு பெறும் போது, அத்தனை ஆண்டுக்கான வட்டியோடு சேர்த்து அவருக்கு தொகை கிடைக்கும்.
இப்போது அந்த 12 சதவீதத்தை 10% என குறைத்து விட்டார்கள். இதனால் அவர் இறுதியில் பெறும் பணம் குறையும். முதலாளிக்கு இரண்டு சதவீதம் பணம் செலுத்த வேண்டிய கடமை நீக்கப்படுகிறது.
ஆனால் இதை பிராவிடண்ட் ஃபண்ட் பிடித்தம் குறைவதால் வீட்டுக்கு கூடுதலாக சம்பளத் தொகையை கொண்டு செல்ல முடியும் என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.
தொழிலகங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, தானும் பணம் செலுத்தி முதலாளி பிராவிடண்ட் பண்ட் கட்டுகிறார். அமைப்பு சாராத தொழிலாளிக்கு யார் பணம் கட்டுவார்கள்? இதைப் பற்றி ஒரு விளக்கமும் இல்லை.
அதேபோலத்தான் இஎஸ்ஐ-யும். முதலாளியும் தொழிலாளியும் சேர்ந்து மாதாமாதம் பணம் கட்ட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு யார் கட்டுவார்? இதைப் பற்றியும் விளக்கம் இல்லை.
போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள். அதேநேரத்தில் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்கள் வழங்கி வந்த உரிமைகளையும் பறிக்கிறார்கள்.
மோடி அரசின் கூற்று: கிக் ஒர்க்கர் உள்ளிட்ட அமைப்பு சாராத தொழிலாளர்களையும், நாங்கள் இந்த சட்டத்துக்குள் கொண்டு வந்திருக்கிறோம்!
ஏற்கனவே மிகப் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உள்ளது. தமிழ்நாட்டுக்குத் தனி சட்டப்படி கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளது. இங்கு 18 நல வாரியங்கள் உள்ளன.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் நல வரியாக வசூலிக்கப்பட்டு இருப்பில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு இந்த வாரியங்கள் வழங்கி வருகின்றன.
புதிய சட்டப்படி இந்த நிதி அனைத்தும் ஒன்றிய அரசுக்கு சொந்தமானதாகும். அது மட்டுமின்றி இந்த வாரியங்களில் ஒன்றிய அரசின் அதிகாரி இணைக்கப்பட வேண்டும்.
புதிய சட்டப்படி வழங்கப்படும் நலத்திட்டங்களைத்தான் மாநிலங்களில் அமலாக்க வேண்டும். ஆனால் அதைவிட அதிக நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளன. அவற்றை இனி செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிதாக எதையும் இந்த சட்டம் கொடுக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருப்பதை அது எடுத்துக் கொள்கிறது.
மோடி அரசின் கூற்று: பிரிட்டிஷ்காரன் காலத்து அடிமைச் சட்டங்களை மாற்றி நவீன கட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்!
விடுதலை பெற்ற இந்தியர்களுக்கு பிரிட்டிஷ்காரன் தந்ததை விட அதிக நலன்களை கொடுத்தால் அதைப் பாராட்டலாம். ஆனால் பிரிட்டிஷ்காரன் கொடுத்த உரிமைகளைக்கூட பறித்துக் பறித்துக்கொள்கிற படுகேவலம் இங்கு அரங்கேறுகிறது.
- ஜனசக்தி
https://www.janasakthi.in/these-are-no-longer-labor-laws-these-are-employer-welfare-laws/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு