SIR பெயரில் குடியுரிமை நீக்கம்தான் நடக்கிறது

the hardline

SIR பெயரில் குடியுரிமை நீக்கம்தான் நடக்கிறது

SIR நடவடிக்கை குறித்து அவர் தி வயர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ...

கேள்வி: தேர்தல் ஆணையம், SIR - சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறையின் மூன்றாம் கட்டத்தில் 6 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து உங்களது கருத்து என்ன?

பரகலா பிரபாகர்: முதல் இரண்டு கட்டங்களிலும் 5.83 கோடி வாக்காளர்கள் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நீக்கப்பட்டனர். மூன்றாம் கட்ட வரைவுப்பட்டியலின்படி பார்த்தால் 6.15 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எல்லாம் சேர்ந்து 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது நமது ஜனத்தொகை வளர்கிறதா? சுருங்குகிறதா? நமது மக்கள்தொகை வளர்ந்துகொண்டிருக்கும் பட்சத்தில், வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யவேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களும் அதிகரிக்கவே செய்வார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வயதுவந்தவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற பட்டியல் நம்மிடம் இருக்கிறது. நூறு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தேர்தல் ஆணையத்தின் பட்டியல் 99 பெயர்களைச் சேர்த்திருந்தால் அதைச் சின்ன விடுபடல் அல்லது தவறு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் 70 பெயர்கள்தான் இருக்கிறதென்றால், அது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

    18 வயது வந்தவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கான ஜனநாயகம் நம்முடையது. சாதி, மதம், மொழி, பிராந்தியம், பாலினம் என எந்தப் பேதமும் வாக்களிப்பதற்குத் தடையான அம்சம் அல்ல. நீங்கள் வரிகட்டுபவராக இருக்க வேண்டியதில்லை. சொத்துகள் வைத்திருக்கும் தகுதி என எந்த முன்நிபந்தனைகளும் இல்லாத வாக்களிப்பு உரிமை அது. அதனால் வயதுவந்தோர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டியது அவசியமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்பின்னணியில்தான் 100ல் 30 பெயர்கள் நீக்கப்படும்போது, 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இதுவரை நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மிகத் தெளிவான வெளிப்படையான விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் தரவேண்டும்.

ஐதராபாத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் சபர் இன்ஸ்டிட்யூட், வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவது தொடர்பில் விரிவான ஆய்வொன்றைச் செய்துள்ளது. அதன்படி 2023ல் வாக்களித்தவர்களில் 89 சதவீதம் பேர் தற்போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்படியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்? என்ற கேள்வி வருகிறது.

கேள்வி: தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கேரளத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. மம்தா பானர்ஜியின் தொகுதியில் 50 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டன. இது சாதாரண எண்ணிக்கை அல்ல. முதலில் அதிகாரிகளின் திறமையின்மையால் இப்படி நடக்கிறது என்று நினைக்கப்பட்டது. ஆனால், பீகார் அனுபவத்தில் தொடங்கி கேரளம் வரை பார்க்கும்போது இந்தப் பெயர் நீக்கப்படும் விவகாரத்தில் ஒரு போக்கைக் காணமுடிகிறது.

மேற்கு வங்காளத்தில் 93 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 97 லட்சம் பேர். கேரளத்தில் 24 லட்சம் பேர். குஜராத்தில் 77 லட்சம் பேர். இந்தப் போக்கில் யார் யாரெல்லாம் அதிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் நீக்கப்பட்டவர்கள் தலித்கள், பழங்குடிகள். மூன்றாம் நிலையில் வருபவர்கள் தினக்கூலிகள், படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள். பெண்களும் அதிகளவில் நீக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கான உரிமையைக் கோரிப்பெறுவதற்கு வலுவற்றவர்கள்.

    இதில் திட்டவட்டமாக ஒரு போக்கு தெரிகிறது. ஒரு கட்சி ஆட்சியில் இருப்பதற்கோ, இல்லாமல் ஆக்குவதற்கோ ஆன திட்டமென்று மட்டும் இதை நாம் எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடாது. அதைவிட ஆழமான செயல்திட்டமொன்று உள்ளதாகவே நான் சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறையைப் பார்க்கிறேன்.

இன்னும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கவில்லை. இமாச்சலப் பிரதேசத்திலும் அசாமிலும் பாக்கி உள்ளது. நாகலாந்து மற்றும் மணிப்பூரிலிருந்து இன்னும் வாக்காளர் வரைவுப் பட்டியல் வரவேண்டியுள்ளது.

மொத்த சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறையும் முடியும்போது, வாக்குரிமை உள்ளவர்கள், வாக்குரிமை இல்லாதவர்கள் என இரண்டு பெரிய பிரிவினர் உருவாகியிருப்பார்கள். வாக்குரிமை இல்லாதவர்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி ஆட்சியாளர்களிடம் போய் புகார் சொன்னால் யார் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவார்கள் சொல்லுங்கள். அவர்கள் தாராள மனத்துடன் இருந்தால் செய்யலாமே தவிர உரிமைத்துவத்துடன் இருக்காது.

குடியுரிமை கொடுக்கும் அனுகூலங்கள் எல்லாவற்றையும் குறிப்பிட்ட மக்களிடமிருந்து பறிக்கும் செயல்திட்டம் இது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு அமலாக்கத்துக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறை பெரிய எதிர்ப்பேதுமின்றி வெறுமனே வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் அறிமுகமானதால் யாரும் அதை எதிர்க்கவில்லை.

    எதிர்க்கட்சியினரும் இதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. என்னுடைய வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களா? எனது வெற்றி பாதிக்குமா? என்பதற்கு மேல் அவர்களுக்குப் பார்வை இல்லை.

கேள்வி: சாவர்க்கர், கோல்வாக்கர் கருத்துகளுக்கேற்ப இரண்டுவிதமான குடிமக்களாக இந்தியர்களைப் பிரிக்கும் நடவடிக்கையா இது?

பரகலா பிரபாகர்: நிச்சயமாக. அப்படிப்பட்ட நடவடிக்கைதான். தேசிய அரசுகள் உருவாகத் தொடங்கிய காலத்திலிருந்தே பண்பாடு, மொழி, நாகரிகம் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பகுப்புகள் உண்டு.

இந்தியாவின் எல்லைக்குள் இருப்பவர்கள் எல்லோரும் இந்தியர்கள் என்பதுதான் இதுவரை நமது நிலை. ஆனால், இந்தியா இந்துக்களுக்கானது என்ற மனப்போக்கு நிலவிவந்தது. அது இப்போது மேலோங்கி வருகிறது.

அசாமில் முதலமைச்சர் வெளிப்படையாகவே மியா முஸ்லிம்களை வெளியேற்ற இயலும் என்கிறார்.

    ஜெர்மனியில் யூதர்களைக் கொல்வதன் மூலம் இல்லாமலாக்கினார்கள். இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொல்ல முடியாததால் அவர்களது உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவர்களது குடியுரிமையைப் பறிக்கும் நடவடிக்கை இது. இரத்தமே சிந்தாமல் அரசியல்ரீதியாக நடத்தப்படும் இனப்படுகொலை இது.

கேள்வி: சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறை குறித்து வெளிப்படையான பதில்களும் கிடைப்பதில்லை. எதற்காகப் பெயர்கள் நீக்கப்பட்டன என்ற விவரங்களையே சொல்வதற்கு மறுக்கின்றனர். தி டெலிகிராப் இன் முன்னாள் ஆசிரியர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. காக்ரோச் ஜனதா கட்சி போன்ற அமைப்புகள் எங்களது அடுத்த போராட்டம் தேர்தல் ஆணையத்தை எதிர்த்துத்தான் என்று சொல்கின்றனவே...

பரகலா பிரபாகர்: தேர்தல் தேதி அறிவிப்பு முதல் எத்தனை கட்டங்களாகத் தேர்தலை நடத்துவதென்று முடிவுசெய்வது வரை என்ன அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதே ரகசியமாக உள்ளது. வாக்குச் சாவடியின் சிசிடிவி பதிவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. வாக்குச் சாவடியை மேற்பார்வை செய்யும் அதிகாரியின் டைரியை நம்மால் பார்க்கமுடியாது.

தற்போதைய தேர்தல் ஆணையத்தை முழுமையாகக் கலைத்து, புதிய அமைப்பொன்றை உருவாக்குவதன் வாயிலாகவே நியாயமானதும் நீதியான முறையிலும் தேர்தலை நடத்தமுடியும்.

தற்போதுவரை நீக்கப்பட்ட 12 கோடி பெயர்களில் பலர் இறந்திருக்கலாம். ஆனால், இடம் மாறியவர்கள் முன்பு இருந்த இடத்திலிருந்த வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதும், இடம்மாறிய இடங்களின் வாக்காளர் பட்டியலில் ஏற்றப்பட வேண்டியதும் அவசியம். ஆனால், அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள்.

விளிம்பு நிலை மக்களில் 90 சதவீதம் பேருக்குத் தங்களது வாக்குரிமை பறிபோனதே தெரியாது. வாக்குப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் சாலைக்கு வந்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

https://thehardline.in/sir-it-is-effectively-a-revocation-of-citizenship-time-for-mass-agitation-against-eci-on-sir-interview-with-parakala-prabhakar/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு