அரசின் தேர் வடம் அதிகாரிகள் கையில்!

அறம் இணைய இதழ்

அரசின் தேர் வடம் அதிகாரிகள் கையில்!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்  பொறுப்பிலேயே அனைத்தையும் ஒப்படைத்து விடுகிறார் முதல்வர் ஸ்டாலின்! இதனால், ‘அதிகாரிகள் வைத்தது தான் சட்டம்’ என்றாகிவிட்டது, தமிழக நிலைமை! அதிகாரிகள் ராஜ்ஜியத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், சக அமைச்சர்களே புழுங்கி தவிக்கிறார்கள்! முழு விபரமாவது;

ஒரு ஆட்சியின் தலைவராக இருந்து, அதிகாரிகளை வழி நடத்துபவரைத் தான் நாம் ‘முதலமைச்சர்’ என்கிறோம்! ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்! அதிகாரிகள் வழிகாட்டலில் தான் முதல்வரே நடக்கிறார். இதனால் அரசு ஊழியர்கள் பிரச்சினைகள், சக அமைச்சர்கள் எதிர் நோக்கும் சவால்கள், மக்கள் தரப்பின் கோரிக்கைகள் என எதற்குமே முடிவு எடுக்க முடியாமல் முதல்வரை சுற்றியுள்ள அதிகாரிகள் முட்டுக் கட்டை போட்டுவிடுகிறார்கள்!

தமிழக ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகளை பொறுத்த வரை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிற்கு அவர்கள் சென்றுவிட்டனர். அந்த வகையில் பாஜக அரசின் அனைத்து அழுத்தங்களுக்கும் அவர்கள் நேர்பட முகம் கொடுக்கும் நிலையில், மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றித் தரும் ஆட்சியாக திமுக ஆட்சியை மாற்றிவிட்டனர்.

திணிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை!

கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையே சகல நிலைகளிலும் இங்கே அமல்படுத்தப்பட்டு வருகிறது! பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக் கழகம் வரையில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதில் தமிழகம் இந்திய அளவில் முன்னணியில் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, ”தமிழ் நாட்டிற்கு என்று தனித்துவமிக்க கல்விக் கொள்கை உருவாக்கப்படும்” என ஸ்டாலின் சொன்னார். ஆட்சிக்கு வந்த பிறகு அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை.

தமிழகத்திற்கு தனித்துவமான கொள்கைகளை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன் முதல்வரின் அன்றைய முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரன், ‘தேசிய கல்விக் கொள்கையையே மாநிலக் கல்விக் கொள்கையாக ஏற்று எழுதித் தரச் சொல்லி’ நிர்பந்தம் தந்ததால், வெளியே வந்து இதனை அம்பலப்படுத்தினார். அப்போது அந்தக் குழுவிலே தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான ஐந்து செல்வாக்கான பார்ப்பனர்கள் செயல்பட்டதையும் அவர் வெளிப்படுத்தினார். இதன் பிறகே ஜவஹர் நேசனை அழைத்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ‘தனக்கு அந்த குழு உருவாக்கத்தில் சம்பந்தமில்லை’ என்றும், ‘உதயசந்திரனே அனைத்தையும் என்னைக் கலந்து ஆலோசிக்காமல் செய்ததாகவும்’ கூறி, வருத்தப்பட்டதோடு, முதல்வரிடமும் சென்று கடுமையாக வாதாடினார். இதன் விளைவே உதயசந்திரன் நிதித் துறை செயலாளராக மாற்றப்பட்டார். ஆன போதிலும், அவர் தான் தற்போதும் அதிகாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்.

உயர்த்தப்பட்ட சொத்து வரி!

மத்திய அரசு நிர்பந்ததம் தந்தது என்று சொல்லி, தமிழகத்தில் 150 சதவிகித சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதானது மக்களிடையே கடுமையான திருப்தியையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது. எதிர்கட்சியாக இருந்த போது சிறிய அளவில் சொத்து வரி ஏற்றப்பட்டதற்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ஸ்டாலின். ஆனால், தற்போதோ 150 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதற்கு, ”இப்படி உயர்த்தாவிட்டால், உள்ளாட்சிகளுக்கு தரும் நிதியை தரமாட்டோம் என்றது மத்திய அரசு. ஆகவே ஏற்றினோம்” எனக் கூறுகிறார்.

உள்ளாட்சிகளுக்கு நிதி தர வேண்டியது மத்திய அரசின் தார்மீக கடமை. அதைத் தருவதற்கு மாநில அரசுக்கு அது கண்டிஷன் போடுமானால், அதை அரசியல் ரீதியாக மறுத்து, மக்கள் நலன் சார்ந்து முடிவு எடுத்து செயல்படுவதே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் தலைவர் ஆளுமைத் திறனுக்கு அடையாளமாகும். ‘படிப்படியாக மட்டுமே சொத்து வரியை உயர்த்துவேன்’ எனக் கூறி, 25 சதவிகிதம் ஏற்றி இருக்க வேண்டும். ஆனால், ‘உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு நிதியை தராமல் போய்விடும்’ என அதிகாரிகள் தந்த அழுத்தத்தால், சொத்து வரியை அதிகாரிகள் விரும்பியபடி ஏற்றிக் கொள்ள அனுமதித்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதே போலத் தான் நில ஒருங்கிணைப்பு மசோதாவை கொண்டு வந்து நல்ல நீர்பாசனமுள்ள, பசுமையான விவசாய நிலங்களை எல்லாம் எடுத்து தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்பேட்டைகள் உருவாக்கத்திற்கு தந்து கொண்டிருக்கிறார். இதனால், தமிழகம் முழுமையும் பல்வேறு இடங்களில் பரந்தூர் தொடங்கி செய்யாறு போன்ற பல இடங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்று அமல்படுத்துவதால், இரு சக்கர வகனங்கள் தொடங்கி கார், வேன், ஆட்டோ, லாரி ..என எல்லாவற்றுக்கும் பத்து மடங்கு அபராத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைக் கவசம் அணியாத சிறு தவறுகளுக்கு கூட ரூபாய் ஆயிரம் அபராதம் கட்டுவதால் மக்கள் கடும் மனவேதனையில் உழல்கின்றனர்.

இது மட்டுமின்றி, முதல்வரின் பொறுப்பில் உள்ளதாகச் சொல்லப்படும் காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என சேந்தேகப்படும் அளவில், அதில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட அதிகாரிகளின் கை ஓங்கியுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவன் அவர்களே, ”தமிழகத்தின் காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா?” என பகிரங்கமாக பொதுமேடையில் பேசியுள்ளார்!

மதிக்கப்படாத மருத்துவர்கள் போராட்டம்!

இதன் உச்சமாக சுகாதாரத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் சுதந்திரமாக செயல்பட முடியாதவாறு முதல்வ அலுவலக முதன்மை அதிகாரி உமாநாத் முட்டுக் கட்டை போட்டு வருகிறார். சம்பள உயர்வு கேட்டு போராடும் மருத்துவர்கள் கலைஞர் 2009 ஆம் ஆண்டு மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்தி போட்ட ஜி.ஒ 354 ஐ அமல்படுத்தச் சொல்லித் தான் கேட்கின்றனர். ‘பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமலும், மற்ற மாநிலங்களில் உள்ளதைவிடவும் குறைவாக இருக்கும் மருத்துவர்களின் நியாயமான சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி’ அமைச்சர் மா.சு. முதல்வரிடம் கேட்டால், முதல்வர் உமாநாத்தை கைக் காட்டுகிறார். உமாநாத்தோ, ”சாத்தியமே இல்லை” என்கிறார். இதே கோரிக்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்ணன் முதல்வரை சந்தித்து கேட்டதற்கு, முதல்வர் உமாநாத்தை அழைத்து கே.பாலகிருஷ்ணனிடம் பேச வைத்துள்ளார். ஆக, முதல்வரால் சுயாதீனமாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இதனால், அரசுக்கு தான் சகல தரப்பிலும் கெட்ட பெயர் நாளும், பொழுதுமாக வளர்ந்து கொண்டுள்ளது.

ஊழலுக்கு பேர் போன உமாநாத் ஐ.ஏ.எஸ்!

இன்றைய முதல்வரின் முதன்மைச் செயலாளராக உள்ள உமாநாத் தான் அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத் துறையை சூறையாடிப் பணம் ஈட்டிய அன்றைய அமைச்சர் விஜயபாஸ்கரின் வலது கரமாக இருந்து செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அன்றைய தினம் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸின் சேர்மனாக இருந்து மாத்திரை, மருந்து கொள்முதல் ஊழலில் சம்பந்தப்பட்டதாக வருமான வரித்துறை ரெய்டுக்கு உள்ளானாவர்.

இந்த உமாநாத் தான் மற்றொரு விவகாரத்திலும் மா.சுப்பிரமணியத்திற்கு முட்டுக் கட்டை போட்டு சுகாதாரத் துறையையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது மருத்துவ கல்வி இயக்குனர் பொறுப்பில் யாருமே நியமிக்கபடாமல் உள்ளதால் 37 மருத்துவ கல்லூரிகளின் செயல்பாடுகளும், அதைச் சார்ந்த பெரிய அரசு மருத்துவமனைகளின் இயக்கமும் தடைபட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டனர் ஐவர். அவர்கள் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் பாலாஜி, தஞ்சாவூர் மருத்துவ கலூரியின் பாலாஜி நாதன், விருது நகர் மருத்துவ கல்லூரி இயக்குனர் சங்குமணி, திருப்பூர் மருத்துவ கல்லூரி டீன் முருகேசன், திண்டுக்கல் மருத்துவ கல்லூரி டீன் ஆகியோர் அடங்குவர்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் தேர்வு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் பாலாஜி. ‘மருத்துவ துறையில் நேர்மையாளர், திறமையாளர்’ என பெயரெடுத்தவர். ஆனால், உமாநாத்தோ, தஞ்சை பாலாஜி நாதனைத் தான் நியமிக்க வேண்டும்’ என கறாராக உள்ளார். ஆனால், ‘அவர் மீது பல ஊழல் புகார்கள், கெட்ட பெயர் இருப்பதால் மா.சு.மறுக்கிறார். இந்த அக்கப்போர் முதல்வரிடம் சென்றது. முதல்வர் இந்த விவகாரத்தையே கிடப்பில் போட்டுவிட்டார். இதனால், மருத்துவ கல்வி இயக்கமான DME வளாகமே ஸ்தம்பித்துள்ளது.

இப்படியாக பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ, உள்வாங்கி முடிவு எடுக்கவோ முடியாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதால், இறுதியில் அதிகாரிகள் இழுத்தபடி தான் அரசின் தேர் வடம் திசைமாறிப் பயணிக்கிறது. ‘அதிகாரிகளே இறுதி முடிவு எடுக்க முடியும், முதல்வரோ, அமைச்சர்களோ எதுவும் செய்ய முடியாது’ என்ற நிலைமையில், அரசு நிர்வாகம் இருப்பது தமிழகம் முன்பின் அறியாத புதிய நிலவரமாகும். இதனால் மிக மூத்த அமைச்சர் துரைமுருகனே மிகவும் மன உளைச்சலில் உள்ளார் என சொல்லப்படுகிறது!

அதிமுக ஆட்சி காலத்தில் ஊழலில் கொடி கட்டிப் பறந்த அதிகாரிகள் அனைவரும் இந்த ஆட்சியில் சொகுசான இடங்களில் பதவி அமர்த்தப்பட்டதால், தேர்தலின் போது, ”ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களை தண்டிப்போம்” என ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை அவராலேயே காப்பாற்ற முடியவில்லை!

முதல் அமைச்சர் அதிகாரத்தை கோட்டையில் உள்ள மும்மூர்த்திகளான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதயசந்திரன், உமாநாத், முருகானந்தம் ஆகியோர் தான் அனுபவித்து வருகின்றனர் என்பதே மற்ற அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டத்தில் பேசுபடு பொருளாக உள்ளது. ‘அதிகாரிகளே அனைத்தையும் தீர்மானிப்பார்கள்’ என்றால், தேர்தல் நடத்தி மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த ஜனநாயக செயல்பாட்டிற்கு முற்றிலும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.

சாவித்திரி கண்ணன்

- அறம் இணைய இதழ்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு