எது வளர்ச்சி? யாருக்கு வளர்ச்சி?

துரை. சண்முகம்

எது வளர்ச்சி? யாருக்கு வளர்ச்சி?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட உடனேயே திமுகவும் அதன் ஆதரவு வட்டமும் விதவிதமாக  புலம்பல் புலம்புகிறார்கள். தமிழ்நாட்டு உடைய வளர்ச்சியே போச்சி!! முன்னேற்றமே தடைப்பட்டு போச்சு! என்று ஈசல் படைகள் போல கருத்துருவாக்கமும் செய்கிறார்கள். 

  பாலம் வேண்டாம்! விமானம் வேண்டாம்! என்று யாரும் பொதுவாக பேசவில்லை. இதெல்லாம் யாருக்கு பயன்படுகிறது ? எந்த வர்க்கம் கொழிக்கிறது? எந்த மாற்று மேம்பட்ட வளர்ச்சியும் இல்லாமல் 

இருக்கிற விவசாயத்தையும் அழித்துவிட்டு எந்த வர்க்கம் அழிக்கப்படுகிறது? என்பதை தொடர்பு படுத்தி வாதிக்க வேண்டிய விசயம் இது.

சோசலிச ரஷ்யாவை சுற்றிப் பார்க்கப் போன கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மேலும் சிலர் அவர்கள் தான் கண்ட காட்சியில் ஒன்றாக, " ரஷ்யாவின் கிராமங்கள் எங்கும் குட்டி குட்டி விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதெல்லாம் எதற்கு ? யாருக்கு? என்று கேட்டேன். இதெல்லாம் கிராமத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு அவர்களின் தேவைக்கு நகரங்களுக்கு சுமந்து செல்வதற்கு! என்று சொன்னபோது வியந்து போனேன்! விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை உள்ள அரசா? என்று" எனது வியந்து சொல்வார்கள். 

நீங்கள் என்ன அப்படிப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காகவா  திட்டங்களை திட்டுகிறீர்கள்.

நாட்டின் சுய சார்புக்கு தன்னை வருத்தி பாடுபடும் விவசாயிகள் விளைவித்து தரும் நெல்மணிகளை பாதுகாக்க ஒரு கட்டிடம் கட்டவே யோக்கியதை இல்லாத நீங்கள் பொதுவாக வளர்ச்சி என்று பேசுவதற்கு வெட்கமாக இல்லையா?

https://www.facebook.com/story.php?story_fbid=1097265909646871&id=100080904177819&rdid=KP856CcNtplBtcie

==============================

படிக்கவும்: பரந்தூர்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவின் லாபவெறிக்கும் போர்வெறிக்கும் பலியிடும் திமுக அரசு

ஒரு 30 , 35 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் ஓட்டு கேட்க தெருவுக்கு வரும் வேட்பாளர்கள்," நான் விவசாயி வீட்டு பிள்ளை! உங்கள் வீட்டுப் பிள்ளை! விவசாயம் செழிக்க எனக்கு வாக்களியுங்கள்!" என்று பிரச்சாரம் செய்வது உண்டு. 

இப்போது அந்தப் பேச்சுக்கே இடமில்லை! எல்லாமே கார்ப்பரேட் வீட்டு பிள்ளைகள்தான்.

முதலாளிகளின் தொழில் முதலீடுகளுக்கு முறை வாசல் செய்து இரை வாங்கிக் கொள்ளும் 

அரசியல்வாதிகள் முறை முடிந்து விட்டது. இப்போது ஒவ்வொரு ஓட்டுக் கட்சியிலும் பெரும் தலைவர்களே ஒரு கார்ப்பரேட் முதலாளி வர்க்கமாக வளர்ந்து விட்டார்கள். கடல் கடந்த சொத்துகள் தீவுகள் கல்லூரி கொண்டான்! காற்றாலை கொண்டான்! மூலதனம் கொண்டான் எனும் பேரரசுகளாக வளர்ந்து விட்டார்கள். 

புதிய துறைமுகங்கள் விமான நிலையங்கள் கட்டுமானங்களுக்கு பின்னே இவர்கள் குவிக்கும் சொத்துகளும் வருகிறது. 

அப்படித்தான் பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் பின்னே அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் வளம் கொழிக்கும் விளைநிலக் கொள்ளையும் நடந்திருக்கிறது. 

அந்தத் திட்டம் ரத்தான உடன் ஊரான் கண்ணை வந்து கசக்கி ஐயையோ நாடே அழிகிறது! என அழுகாச்சி காவியம் பாடுகிறார்கள்

இந்தத் திட்டம் ரத்து ஆனாலும் கார்ப்பரேட்டுகளோடு சமரசமாக வேறு ஒரு இடத்தில் ஏர்போர்ட் வரத்தான் போகிறது. இருந்தாலும் ஏற்கனவே விளைநிலத்தை பிளாட் போட நினைத்த முதலீட்டு கனவில் மண் விழுந்து விட்டது. இது ஒரு பிரிவு ஆதாயங்களுக்கு விழுந்த அடியாக வலிக்காதது போலவே நடிக்க முடியாமல் வெளிப்படுகிறது. 

இதோ பாருங்கள்.. ஆந்திராவுக்கு ரெண்டு ஏர்போர்ட் வரப்போகிறது! என்று தொடர் செய்தி வெளியிட்டு, ஏதோ காலையில் எழுந்தவுடன் இந்த நாட்டு தொழிலாளியும் விவசாயியும் ஏரோப்ளேன் பிடித்துதான் வேலைக்கு போகும் வாய்ப்பு பறிபோய் விட்டது போல மக்களை உசுப்பேத்த பார்க்கிறது ஒரு பிரிவு. 

எந்த அரசியல்வாதியாக இருந்தாலும், இந்த நாடு விவசாய நாடு! உழவுக்கு பின்னால்தான் உலகு என திருக்குறளை திறக்காத வாயே இல்லை.

ஆனால் இவர்கள் மேற்கொள்வதோ விவசாய அழிப்பு திட்டங்கள் விளைநிலங்களுக்கு கீழே எடுக்கும் எரிவாயு எண்ணை எடுக்கும் கார்ப்பரேட் நலன்கள் 

நில ஒருங்கிணைப்புச் சட்டம் எனும் பெயரில் நிலப் பறிப்பு இயக்கம் நடத்துபவர்கள் இந்த கார்ப்பரேட் அரசியல்வாதிகள். 

அரசு எதையெதையோ தொழிலாக செய்கிறது. சாராயம் கூட விற்கிறது. விவசாயம் செய்தால் என்ன? சிறு குறு விவசாயிகள் போக கைவிடப்படும் விளைநிலங்களை அரசே வாங்கி கூட்டுப்பண்ணை அடிப்படையில் பெருவீத விவசாய திட்டங்களை செய்து விவசாய தொழிலாளர்களுக்கான பணி அளிப்பது உட்பட அனைத்தையும் செய்ய முடியும். 

உடனே இது சோசலிச அரசா? என்று கேட்க வேண்டாம். முதலாளித்து வகைக்கு உட்பட்ட அளவில் கூட அரசு விவசாயத் தொழிலை நடத்துவதற்கு திட்டம் வகுக்க முடியும். ஆனால் வேறு தேவைகளுக்காக நிலங்களை பறிக்க நினைக்கும் கார்ப்பரேட்டுகளும் அந்நிய மூலதனங்களும் இதை அனுமதிக்காது.

ஆகையால்தான் நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவசாய பிரச்சனைகளை தீர்க்காமல் விளைநிலத்தை விட்டு விவசாயிகளே ஓடும் படி விவசாயத்தையே தீர்க்கும் வேலைகள் நடக்கிறது. அவ்வாறு இருக்கும் விளை நிலங்களிலும் பணப்பயிர் தேவையை ஏற்படுத்தி ஏற்றுமதி சார்ந்த விவசாயத்தை நடத்த விரும்புகிறது. 

உணவு உற்பத்தி என்பதை நாட்டின் சுய சார்பு எனும் அடிப்படையில் திட்டம் வகுக்காமல் பெருமுதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்த மண்ணைக் கட்டி பின்னே இழுத்துச் செல்ல விரும்புகிறது. 

இதற்கான உழு படை கருவிகளாக கார்ப்பரேட் கால்களை தொழுது நிற்கும் அரசுகள்.

சுய சார்பும் நாட்டுப்பற்றும் ஏன் சுயமரியாதையும் இல்லாத இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் 

பிற உழைக்கும் மக்களுக்கான எதிரிகள் என்பதைப் போல விவசாய வர்க்கத்தின் எதிரிகளாகவும் நம் முன்னே வளர்ந்து நிற்கிறார்கள்.

களை பறிக்காமல் 

விளைச்சல் இல்லை!

மக்களுக்கு எதிரான கட்சிகளை 

களையெடுக்காமலும்

 இனி விவசாயிகளுக்கு 

வாழ்க்கை இல்லை!

https://www.facebook.com/100080904177819/posts/1097682829605179/?rdid=8sZdP2ADYbDQbxC5

===============================

"எங்கள் விளைநிலத்திலும் நீர் பிடிப்பு பகுதியாக இருக்கக்கூடிய ஏரி தாங்கலை அழித்தும் விமான நிலையம் கட்ட வேண்டாம்!" என்று தான் மக்கள் போராடுகிறார்கள்.

இதற்கு மதிப்பளித்து மாற்று வழிமுறைகளை யோசிப்பதுதான் சரியானது.

நவீன அறிவியல் வசதிகள் கட்டுமானங்களே கூடாது என்பது அல்ல மக்களது  எண்ணம். இந்த நவீன கட்டுமானங்கள் எல்லாம் யாரை அழித்து ! யாருக்காக? நடக்கிறது என்பதுதான் பேசப்பட வேண்டிய முக்கியமான அரசியல். 

இந்த உண்மையை மறுத்து திரித்து விதவிதமாக கதை கட்டுகிறார்கள் கார்ப்பரேட் நலன் விரும்பிகள். 

முதலாளிகளின் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அராஜக உற்பத்தி முறை அனைத்து பகுதி உழைப்பு சக்திகளையும் நகரத்தை நோக்கி தள்ளுகிறது. 

குறைந்தபட்ச ஊதியம் குடும்பம் நடத்த தேவையான வாழ்வாதாரம் எதுவுமே இல்லாமல் அற்ப கூலிக்கு மிகை உழைப்பை சுரண்டும் முதலாளித்து லாபத்தை மக்களுக்கான வேலை வாய்ப்பு வளர்ச்சி என்று ஏய்க்கிறார்கள் இந்த தேச விரோதிகள்.

இந்த நாட்டில் அதிகபட்ச பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் இடத்தில் இருப்பது விவசாயம். 

அதை பழைய முறையில் இல்லாமல் நவீன விவசாய முறை விவசாயக் கருவிகள் வேலை பாணி மாற்றம் போன்றவற்றை உருவாக்கம் செய்தால் இன்னும் அந்த வேலையை பலருக்குமானதாக எளிமைப்படுத்த முடியும்.

உண்மையில் சிறு குறு ஏழை விவசாயிகளுக்குதான் விவசாயம் சுமையாக இருக்கிறது. 

பல அரசியல்வாதிகள் சுயத்தம்பட்டமாக பேட்டியே கொடுக்கிறார்கள். என்னிடம் ஆயிரம் ஏக்கர் நிலம் அந்த ரகம் போடுகிறேன் இந்த ரகம் போடுகிறேன் பால்பண்ணை வைத்திருக்கிறேன் தென்னந்தோப்பு இருக்கிறது என்றெல்லாம். அப்படியானால் பெரும் முதலாளிகளால் விவசாயம் செய்ய முடிகிறது. பரம்பரையாக விவசாய உழைப்பில் ஈடுபட்டவர்களால் முடியவில்லை. 

இதில் உள்ள முரண்பாடு விவசாயம் என்பது இல்லை, இதை இனி யாரால் செய்ய முடியும் எந்த வர்க்கப் பின்னணியின் கீழ் விளைநிலங்கள் தள்ளப்படுகிறது என்பதுதான் அறிய வேண்டிய விசயம்.

தொழிலாளர் வளர்ச்சியை உள்ளடக்காத எந்த தொழில் வளர்ச்சியும் மக்களை ஏமாற்றும் கபட நாடகம்தான்.

இன்றைக்கு தூய்மை பணியாளர்களுக்கு ஒரு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கூட தர வக்கில்லாத இந்த முதலாளித்துவம்தான் வேலை வாய்ப்பு நவீன வளர்ச்சி என்று ஊரை ஏய்கிறது!

இதையும் பேசுங்கப்பா

 தனியார்மய தாசர்களா!

https://www.facebook.com/100080904177819/posts/1097702706269858/?rdid=YIE3ci2OpCkpwW0m

துரை. சண்முகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு