நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை: நாட்டின் மக்களின் உரிமைகளைப் பறித்து ஒடுக்கும் அரசு மறுகட்டமைப்பின் வன்முறை!

துரை. சண்முகம்

நாடாளுமன்ற தொகுதி  மறு வரையறை:    நாட்டின் மக்களின் உரிமைகளைப் பறித்து       ஒடுக்கும்  அரசு மறுகட்டமைப்பின் வன்முறை!

நாடாளுமன்ற தொகுதிகளின் மறு வரையறை சட்ட திருத்தம் என்பது மக்கள் தொகை அடிப்படைகளின் பெயரில் சிறுகச் சிறுக மக்களின் பிரதிநிதித்துவம்/ பெயரளவிற்கான மக்கள் பிரதிநிதித்துவ அரசு என்னும் கோட்பாட்டையே வெட்டிச் சுருக்குவதும் ஆகும். இதன் தொடக்கம் தற்போது தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தை குறைப்பது எனும் தாக்குதலும் இதன் உட்பொருளாக இந்தியா ஒரு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுத்து 
ஒற்றை ஆளும் வர்க்க இந்தியா 
என்பதை நிறுவிக் கொள்வதற்கான எத்தனிப்பும் ஆகும்.

இதன் வழி குறிப்பிட்ட பிரதிநிதித்துவத்தை வட மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டிக் கொள்வது என்பது அம்மாநில மக்களின் பிரதிநிதித்துவம் எனும் பெயரில் இந்திய ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட ஒற்றை இந்திய சந்தை இதனை ஒட்டிய அரசியல் பண்பாட்டு ஒரு படித்தான மறு கட்டமைப்பின் 
பகுதியாகவும் இருக்கிறது. 

இதை ஜனநாயக மறுப்பாக அடாவடியாக செய்வதற்கான இந்துத்துவ வடிவிலான ஆளும் வர்க்க குண்டாந் தடியாக பாஜக அரசு முன் நிற்கிறது. 

புதிய பொருளாதாரக் கொள்கை காட் டங்கல் ஒப்பந்தங்கள் மூலம் அதன் பாதிப்புகளின் மூலம் இந்திய மக்களிடம் வெறுக்கப்பட்டது காங்கிரஸ் அரசு. ஆகவே தனது ஆளும் வர்க்க சேவையை கைராட்டை வேகத்தில் சுத்த விரும்பியது காங்கிரஸ். கால தவணையில் மெல்ல மெல்ல செய்வது ஆளும் வர்க்கத்தின் வேகத்திற்கு உவப்பாக இல்லை.

இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா லீலைகளுடன் அனுமார் வேகத்தில் ஆளும் வர்க்கத்திற்கு அவசியப்பட்டு இருக்கும் வாகனம் ஆர் .எஸ். எஸ்-பா.ஜ.க. ஏற்கனவே அதன் இந்து இந்தி இந்தியா எனும் ஒரு படித்தான ஒடுக்குமுறை சித்தாந்தம் ஆளும் வர்க்கத்தின் அடிப்படைக்கு இயற்கை கூட்டாளியாக இருக்கிறது.

இப்போது அதன் நிதி மூலதன வேட்கைக்கு ஏற்றவாறு பழைய முதலாளித்துவ ஜனநாயக வகைப்பட்ட அனைத்தையும் படிப்படியாக ரத்து செய்வது, 
ஒன்று குவிக்கப்படும் மூலதன ஆதிக்கத்திற்கான அரசியல் சமூகத் தளங்களை உருவாக்குவது எனும் அடிப்படையில் அரசியல் பொருளாதார மறுக்கட்டமைப்பு வேலையின் பகுதிகளாக இந்திய குடியுரிமை திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்று பாசிச அரசு கட்டமைப்பிற்கான அதன் முழுமைக்கான வேலைகள் நடக்கிறது.

நேரடியான தேர்தலையே ரத்து செய்து விடும் பாசிச ஆட்சிக்கு மாறாக இந்திய பெரு முதலாளிகள் குறிப்பாக அம்பானி அதானி வேதாந்தா போன்றவர்களின், அந்நிய மூலதனங்களின், நிதி மூலதன ஆதிக்கத்திற்கான பிறவி கூலிப்படை பாஜகவை  முன் தள்ளி இந்திய ஆளும் வர்க்கம் 
தேர்தலையும் பாசிச கட்டமைப்பின் ஒரு பகுதியாக மறுக்கட்டமைப்பு செய்கிறது. 

தொடரும் மறு வரையறைகள் அனைத்தும் போலி ஜனநாயகத்தையும் ரத்து செய்யும் பாசிசமயமாக்கலின் 
அதற்கான "அரசமைப்பின்" மறு கட்டுமானத்தை முன் அறிவிக்கிறது. 

இந்த நிதி மூலதன தேவைக்கு உடன்பட்ட சமரசக் கட்சிகளே இங்கு எதிர்க்கட்சிகளாகவும் இருக்கிறது. இவர்கள் பாஜக எனும் கட்சியின் முகத்தை மட்டும் அதாவது ஏவி விடப்படும் இந்துத்துவ  மேலாதிக்க இன மத வடிவிலான பகுதியை மட்டும் எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இதன் அடிப்படையான இந்திய ஆளும் வர்க்க நிதி மூலதன பாசிசத்தை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளும் பிரிவாகவும் இருக்கிறார்கள். வார்த்தையில் கட்சிகளாக எதிர்த்துக்கொண்டு வர்கத்தில் ஒன்றுகலக்கும் அல்லது தங்களுக்கான ஒடுக்கு முறை வாய்ப்பைக் கோரும் அடிப்படையில் முரண்பாடற்ற சக்திகளாக இருக்கிறார்கள். 

மேலும் மேலும் இந்திய மக்களை குறிப்பாக பல்வேறு தேசிய இன மக்களின் உரிமைகளை பறித்து ஒடுக்கி 
மூலதன ஆளும் வர்க்க ஒற்றை இந்தியாவுக்கு அடிமைப்படுத்தும் வகையிலான பாசிச அரசு கட்டமைப்பே ஒன்று உருவாகி வருகிறது. 

இந்த முழுமையின் புரிதலில் மாற்று திட்டத்துடன் பாட்டாளி வர்க்க அரசியலைச் சார்ந்து இயங்காமல் இதை வெற்றி கொள்ள இயலாது. பாசிசத்தை எதிர்ப்பதற்கு கூட தலைமை தாங்கும் அளவுக்கு தகுதியற்றதாக இங்குள்ள முதலாளித்துவக் கட்சிகள் இன்றைய நிலையில் சமரசம் ஆகி கிடக்கின்றன. எனவே அவர்கள் தலைமையின் பின்னே இந்த பொறுப்பை ஒப்படைக்க அடிப்படையில்லை. 

இப்போது நிலவும் தேர்தல் கட்டமைப்பே அரசு பாசிசமயமாவதற்கான கருவியாக மாறிக் கிடக்கிறது.
நாடாளுமன்றமும் சட்டமன்றமும் பெரு முதலாளிகளின் கயிறாடு பாவையாக தேங்கி நிற்கிறது. 

எவ்வளவு கடினமானாலும் தாமதமானாலும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அரசியல் ரீதியாக திரட்டும் வேலைகளை செய்வது ஒன்றே விடிவுக்கு வழி. 

வடக்கு தெற்கு எனும் வாதத்தை வர்க்க கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டதாக தேசியவாதம் பேசுவது ஆளும் வர்க்கத்தின் 
நோக்கத்திற்கே சிதைந்து அடங்கும். இது அப்பட்டமான ஆளும்வர்க்க இந்தியாவின் ஒடுக்குமுறை என குறிப்பாக அரசியலை முன்னெடுப்பது எதிர்ப்பான அடிப்படை சக்திகளை ஒன்றிணைக்க உதவும். 

பாஜக எனும் ஆளும் வர்க்க அடியாள் தெற்கை மட்டும் சுரண்டவில்லை உரிமைகளை மறுக்கவில்லை வடக்கில் வாழும் உழைக்கும் மக்களையும் அடக்கி ஆளுகிறது. நொய்டாவில் உரிமைகளுக்காக எழுந்து போராடும் தொழிலாளர்களை வேட்டையாடுகிறது. டெல்லியில் விவசாயிகளை சுட்டுக் கொன்றது. ஒடிசாவில் காடு மலை வளங்களை சுரண்டும் வேதாந்தாவிற்கு எதிராக போராடும் பழங்குடி மக்களை கொல்கிறது.

எனவே மாநில உரிமைகள் என்பதும் தென்னகத்து உரிமைகள் என்பதும் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் இருந்து 
மக்களை அணி திரட்டும் நோக்கில் இருப்பதே , பாசிச பாஜக எதிர்ப்பிலும் உறுதியான சமூக சக்திகளை அரசியல் படுத்தவும் அணி திரட்டவும் வழி அமைக்கும்.

         - துரை. சண்முகம்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0EV3FdDRttsRt1G4UmYpSLtKeT3kRdQL1uwEUAiWP85N6WPGvBZSQJ3KuMyeiAsiFl&id=100080904177819&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு