நவீன அறிவியல் கருவிகளை பயன்படுத்துவது குறித்து
துரை.சண்முகம்
நவீன உற்பத்தி கருவிகள் நவீன கண்டுபிடிப்புகள் போன்றவற்றை முதலாளித்துவ சகாப்தம் படைக்கிறது. அதன் மூலம் தனக்கு எதிரான தொழிலாளர் வர்க்க சக்திகளை அடக்கி ஆள்வதாக ஒரு பகுதியை மட்டும் சிலர் சொல்கிறார்கள். நீங்கள் அதுவே சிதறிக்கிடக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு சக்திகளை ஒன்று குவிக்கும் கருவியாகவும் மாறிவிடுகிறது.
சமூக வலைத்தளங்கள் அதன் பயன்பாடுகளை எப்போதும் எதிர்மறை அம்சத்திலும் இளைஞர்கள் கெட்டு விட்டார்கள்! என்பது மாதிரியாக மட்டுமே கணிக்கிறார்கள் சிலர். ஆனால் நடப்பில் அது சமூகத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பதுடன்
சிதறிய உழைப்புச் சந்தையில் பிரிந்து கிடக்கும் பரவலான தொழிலாளர் வர்க்கத்தை நவீன வேலை நேரத்திற்கு உட்பட்டு இணைக்கும் சக்தியாகவும் பங்காற்றுகிறது.
இன்னும் பழைய வகையில் பிரச்சாரம் செய்வது மட்டும்தான் புரட்சிகர உள்ளடக்கம் உடையது என்று நம்பிக்கிடப் போரையும் புதிய தொழில்நுட்பம் நெம்பி தள்ளுகிறது தன் பக்கம்.
பல்வேறு அரசியல் பிரச்சார குழுக்கள் இணையதள குழுக்களை நொடிப்பொழுதில் எங்கிருந்தோ திரட்டிக் கொள்ளும் அளவுக்கு அதன் பங்களிப்பும் இருக்கிறது.
எங்கோ ஒரு மூலையில் ஒரு பகுதியின் நிகழ்ச்சியை பலரது பார்வைக்கான ஒரு முழுமையாக்கி விடுகிறது.
தொழிலாளர் வர்க்க புரட்சியை எந்த தொழில்நுட்ப புரட்சியாலும் தடுக்க முடியாது. கூடுதலாக அதுவே முதலாளித்துவத்தை வீழ்த்தும் தனக்குத்தானே சவக்குழி தோண்டிக் கொள்ளும் ஆயுதமாகவும் மாறிவிடுகிறது.
அப்படிப்பட்ட நேரத்தில் மொத்த ஜனநாயக ஒப்பனைகளையும் கலைத்து விட்டு முதலாளித்துவம் அலைவரிசைகளையே ஆஃப் செய்து விடுகிறது. மந்திர டப்பியிலிருந்து புறப்பட்ட சாத்தானை அடைக்க முடியாத மந்திரவாதியைப் போல தவிக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கூர்மையுடன் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது நிச்சயம் அந்தக் கருத்து பௌதீக சக்திக்கான பலபடித்தான
வேலைகளைச் செய்கிறது.
சமூகத்தின் பொது எதிர்ப்பு மனநிலையை இதன் மூலம் அறிந்து கொள்ளும் ஆளும் வர்க்கம் அதற்கேற்ப தற்காலிக
நடைமுறைகளை கையாண்டும் கொள்கிறது.
எனது தனிப்பட்ட அனுபவத்தில் கூட "நீ எல்லாம் ஒரு ஆளா?" என்று பொருள்படுத்த தக்கது அல்ல என வேட்டிமைத்தனம் காட்டிக் கொண்டே, சமூக ஊடகங்களில் நமது கருத்து பகிரப்படும் இடங்களில் எல்லாம் போய் அரசியல் அம்மணக்கட்டைகள் குறுக்கும் நெடுக்குமாக உருள்வதையும் பார்க்கிறேன்.
முகநூல் கருத்துதானே இது போய் என்ன செய்து விடும்? என வர்க்க கண்ணோட்ட எதிரிகள் தங்கள் வாதப்படி சும்மா இருப்பதில்லை!
கருத்தின் சாரம் தாங்காமல் புழுக்கள் நெளிகின்றன. அவதூறு அவதாரங்கள் எடுக்கின்றன.
ஏன்?
கருத்து பௌதீக சக்தியாக மாறும்
எனும் அறிவியலை அனைவரும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் ஆளும் வர்க்கத்திற்கும் மக்களை கீழ்ப்படிய வைக்க கருத்து முதல் வாதம் தேவைப்படுகிறது.
மக்களை ஒடுக்குவதற்கு பொருள்முதல்வாத அடிப்படையில் செயல்படுகிறது.
வெள்ளக்காரன் ரயில விட்டான் நாடு கெட்டு போச்சு மேல் வரப்பு கீழ்வரப்பு இல்லாம எல்லா சனமும் ஒண்ணா போவுது! என சாதிய மனநிலைகள் புழுங்கியது.
அதைப்போல புதிய கண்டுபிடிப்புகள் செயலிகள் செல்கள் போன்ற முதலாளித்துவ வரவுகளை பார்த்து இளைஞர்கள் கெட்டு விட்டார்கள் என புலம்புவதில் பயனில்லை.
கருவி கண்டுபிடிப்பு வருகையை யாரும் தடுக்க முடியாது. இவைகளால் நாடு கெட்டுப் போச்சு என புலம்பவும் தேவையில்லை.
கையாள்வதற்கான மாற்று சிந்தனையை தருவதற்கு மக்களை தொடர்பு கொள்வதற்கு சரக்கு நம்மிடம் உள்ளதா? என்பதும் ஒரு கேள்வி!
கெட்டுப்போன அரசியல் சூழல்தான் கருவி வழியே நமக்கு வெளிப்படுகிறது . கருவிகள் எப்போதும் போல் ஆளும் வர்க்க கருத்தால் வழி நடத்தப்படுகிறது.
ஆளும் வர்க்கத்தை எதிர்க்கின்ற போராட்டத்தில் இந்தக் கருவிகளையும் உழைக்கும் வர்க்கத்துக்கான அரசியலுக்கு
பயன்படுத்தும் வழிமுறைகளில் தேர்ச்சி பெறுவதுதான் முக்கியம்.
நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்பதை எவ்வாறு உணர்வது?
அவ்வாறு சரியாக கையாளப்படும் போது உங்கள் செயல்களை செயலிகள் முடக்கும்!
ஆமாம்! நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டதை அறியும் அறிகுறிகளில் அதுவும் ஒன்று!
- துரை.சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு