எனது பார்வையில் திமுக ஆட்சியும் அமைச்சர்களின் செயல்பாடுகளும்
சாவித்திரி கண்ணன்
கொத்தடிமை அதிமுக ஆட்சிக்கு மாற்றாக பாஜகவை எதிர்க்கும் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க என்று 2021- ல் ஸ்டாலின் பேசிய போது, அதை அப்போது நம்பியவர்களில் நானும் ஒருவன்.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் நாட்டிற்கு மிகப் பெரிய நல்ல காலம் ஆரம்பித்துள்ளது என்று நம்பிய லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், ஆறு மாசத்திற்குள்ளேயே ஸ்டாலின் அவர்களின் நிர்வாகச் செயலின்மை, எல்லாமே அதிகாரிகள் தான் முடிவெடுக்கிறார் என்பதை செகட்ரியேரியட் வட்டாரம் மூலம் அறிய வந்த போது அதிர்ந்தேன்.
அடுத்ததாக அதிமுக ஆட்சியில் ஊழலில் திளைத்த முக்கியமான 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியலை அறப்போர் இயக்கம் வெளியிட்டு, அவர்களை விலக்கி வைத்தால் தான் திமுக நல்லாட்சி தருவது சாத்தியமாகும் என்றது. ஆனால், அந்த கடைந்தெடுத்த ஊழல் அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் தந்தார், ஸ்டாலின். அதிமுகவில் இருந்து தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரை கட்சியில் சேர்த்துக் கொண்டே இருந்தார்.
2021- 2026 வரையிலான திமுக ஆட்சி என்பது திகட்டத், திகட்ட ஊழல் செய்த ஆட்சியாகும். தித்திக்கும் பொய்களை எத்திக்கும் விதைத்த ஆட்சியாகும்!
உயர்கல்வித் துறையில் உச்சபட்ச ஊழலை அரங்கேற்றினார் பொன்முடி.
நெடுஞ்சாலைத் துறையிலும், பொதுப் பணித் துறையிலும் நிகரற்ற ஊழலை அரங்கேற்றினார் எ.வ.வேலு.
பள்ளிக் கல்வித் துறைக்குள் யோகா வகுப்புகள், ஆன்மீக வகுப்புகள், நற்சிந்தனைகளை போதிக்கும் பேச்சுகள் என தமிழகம் முழுமையும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சங்கி அமைப்புகளும், பேச்சாளர்களும் பள்ளிக் கல்வித் துறைக்குள் ஊடுறுவதை அனுமதித்தார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அதன் உச்சமாக கல்வித் தொலைக் காட்சியின் சி.இ.ஒவாக ரங்கராஜ் பாண்டேயின் பார்ட்னர் முரளியை நியமித்த போது பொங்கி எழுந்து அறத்தில் அம்பலப்படுத்தினேன். அந்த பதிவை ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளே டாக் செய்து அன்பில் மகேஷ்க்கு அனுப்பி இதற்காகவா ஆட்சிக்கு வந்தோம் என கொந்தளித்தனர்! அதன் பிறகு தான் அது கைவிடப்பட்டது. இந்த அளவுக்கு பள்ளிக் கல்வித் துறையில் இந்துவவாதிகள் பள்ளிக் கல்வித் துறையில் ஊடுருவ அனுமதிக்கவில்லை என்ற யதார்த்தையும் நாம் புறந்தள்ள முடியாது.
அதே போல அற நலத் துறையை அந்தணர் நலத் துறையாகவே முழுக்க மாற்றி, அர்சகர்களை போஷிப்பதையே அறமாகக் கொண்டு செயல்பட்ட ஒரே ஆட்சி இந்த திமுக ஆட்சி தான்! சேகர் பாபு பொறுப்பேற்ற இந்து அற நிலையத் துறையானது திமுக ஆட்சியில் உயர் நிதிமன்றம் வழங்கிய உன்னத தீர்ப்பான ’’கோவில் குட முழக்குகளை தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் சம அளவில் பயன்படுத்தி நடத்தவும்’’ என்ற தீர்ப்பை பார்ப்பனர்கள் நலம் கருதி இன்று வரை ஒரு கோவிலில் கூட நடைமுறைப் படுத்தாமல் ஆயிரக்கணக்கான கோவில்களில் பார்ப்பன அர்ச்சகர்களை மட்டுமே வைத்து நடத்தி வருவதை கண்ட பிறகு தான் எனக்கு முற்றிலும் இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கை சரிந்தது.
மூத்த அமைச்சரான துரைமுருகனாவது சற்று நிதானமாக செயல்படுவார் என நம்பினால், அவரோ விவசாயமே வீழ்ந்துபடும் அளவுக்கு கல் குவாரிகளையும், மண் குவாரிகளையும் அதிமமாக்கி, நாடு பார்த்திராத இயற்கை வளச் சுரண்டலை நடத்தினார்.
செந்தில் பாலாஜியோ டாஸ்மாக்கில் அரசு கஜானாவிற்கே வராமல் மூன்றில் ஒரு பங்கு சரக்குகளை சொகுசு பார்களுக்கு அனுப்பி தலைமை குடும்பத்தின் கஜானாவில் கொண்டு சேர்த்தார். மின்சாரத் துறை கட்டணங்களை ஷாக் அடிக்கும்படி வரலாறு காணாத வகையில் உயர்த்தினார்.
பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியைப் பற்றி மதுரை மக்களிடம் கேட்டால் சொல்கிறார்கள். ’’ஐயோ, அந்த ஆள் பாக்தாத் கொள்ளையன்’’ என்கிறார்கள் ‘’ஐந்தே ஆண்டில் இவர் அடித்த கொள்ளை மலைப்பை தருகிறது’’ என்கிறார்கள்.
அமைச்சர் கே.என். நேருவோ கேட்கவே வேண்டாம். திருச்சி சாம்ராஜ்ஜியத்தின் சிற்றரசர். உள்ளாட்சித் துறையில் ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது.
வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்.
தங்கமான அமைச்சர் என்று நம்பிய தங்கம் தென்னரசும் தன்னளவில் அடிக்க முடிந்ததை எல்லாம் அடித்துச் சுருட்டினார். கொடுமை!
மகத்தான மனிதர் என்று நான் நம்பியவர் மா.சுப்பிரமணியன். சென்னை மேயராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர். அவரும் சுகாதாரத் துறையில் சுதந்திரமாக செயல்படமுடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில், மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து போராடும்படியான பெரும் கெட்ட பெயரைத் தான் சம்பாதித்தார்.
ராஜ கண்ணப்பனோ பால் வளத்துறையை பாழ்படும் துறையாக்கிவிட்டார். கதர் கிராமத் தொழில்களை கையறு நிலைக்கு தள்ளிவிட்டார்.
’சாதித்துக் காட்டுவார்’ என நான் நம்பிய எஸ்.எஸ்.சிவசங்கரோ, போக்குவரத்துத் துறையை போக்கற்ற வழித் தடத்தில் அழைத்துச் சென்று தனியார் மயமாக்கி வருகிறார்.
ராம பக்தரான சங்கி ரகுபதியோ, சட்டத் துறை அமைச்சகத்தில் சட்டாம்பிள்ளையாக வலம் வந்து உளறிக் கொட்டி வந்தார்.
சிறப்பாக செயல்பட்ட பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனிடம் இருந்து நிதித் துறை பறிக்கப்பட்டு தகவல் தொழில் நுட்பத் துறை தரப்பட்ட போதிலும், அதிலும் அவருக்கு பேர் கிடைத்து விடக் கூடாது என்பதால், போதிய நிதி ஒதுக்காமல் அவரை சோர்வடைய வைத்துள்ளனர்.
த.மோ.அனபரசனோ ஊரகத் தொழில்துறையை ஊழல் தொழில் புரியும் துறையாக புரிந்து வைத்திருக்கிறார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனோ செய்தித் துறையை பென் நிறுவனத்தின் கைகளில் தாரை வார்த்து விட்டார். தமிழ் வளர்ச்சிக்கு உதவாமல் தமிழ் தளர்ச்சிக்கு செயல்படுகிறார்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ’கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வதே தன் பிறவிப் பயன்’ எனப் பேரழிவுகளுக்கு துணை போகிறார். தஞ்சை மாவட்டத்தை மீத்தேன் தயாரிக்க தாரை வார்க்க காய் நகர்த்துகிறார்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசனோ ’தொழிலாளர் நலத்தை பலி கொடுப்பது தான் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும்’ என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ளார். தமிழகத்தில் தற்போது பல துறைகளில் 12 மணி நேர வேலை அமலாவதற்கு காரணகர்த்தாவாக உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்களையும் சிரமேற் கொண்டு செயல்படுத்துகிறார்.
முதன் முறை எம்.எல்.ஏ, அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சர், அடுத்து உடனே துண முதல்வர் என ஜெட் வேகத்தில் உச்சம் தொட்டு அடுத்த முதல்வராக காத்திருக்கும் உதயநிதியோ, ஆரம்பத்திலேயே டெல்லி சென்று மோடியின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டதோடு, அவரை வைத்தே இரண்டு சிறப்பு நிகழ்வுகளையும் நடத்தி, நான் உங்களுக்கும் செல்லப் பிள்ளை தான் என உணர்த்திவிட்டார். இன்னும் கூட அரசு நிர்வாக இயந்திரத்தின் அரிச்சுவடியைக் கூட அறிந்திராமல் அடுத்த முதல்வருக்கு தயாராக உள்ளார்.
எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்ளேயே, ’’ஐயோ சாமி போதுமய்யா, ஸ்டாலின். எடப்பாடி ஆட்சி எவ்வளவோ தேவலாம் போல இருக்கே’’ என பல தளங்களிலும் மக்கள் பேசத் தலைப்பட்டனர். அந்தப் பேச்சு அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வலுப்பட்டது.
இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட திமுக ஐ.டிவிங்கும், திமுகவின் ஊடக நண்பர்கள் படையும் ஸ்டாலின் ஏதோ பொற்கால ஆட்சி தருவது போல மீண்டும், மீண்டும் கதைகளை கட்டமைத்தனர். விளம்பரங்களால் ஜிகினா காட்டினர்.
உண்மையில் இந்த ஆட்சியில் மிக மோசமான பெர்பாமன்ஸ் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் தான். நிர்வாகத்தில் ஆல்மோஸ்ட் பெயில் மார்க் தான். அதற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து நாளும், பொழுதும் அரங்கேறிய கற்பழிப்புகளும், கொலை, கொள்ளைகளுமே சாட்சி. காவல் துறையை கையாளத் தெரியாத – கையாலாகாத - ஒரு முதலமைச்சர் தான் நான் என்பதை மீண்டும், மீண்டும் நிருபித்தார் திரு. ஸ்டாலின்.
இதனால் தான் திமுக தான் வெற்றி பெறுவதற்கு பாஜக என்ற பூச்சாண்டியை மட்டுமே நம்பியுள்ளது. இது டெல்லிக்கும், தமிழ் நாட்டிற்குமான தேர்தல் எனத் திமுக கட்டமைப்பதெல்லாம் தன் ஆட்சி குறித்த பலவீனங்களை மறைப்பதற்குத் தான்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/share/p/1DTAKyGsHq/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு