இந்தியாவின் பொது உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை அதானி–லீப் இந்தியா கைப்பற்றுவதை தடுத்து நிறுத்துக!

CPIM Tamilnadu

இந்தியாவின் பொது உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை அதானி–லீப் இந்தியா கைப்பற்றுவதை தடுத்து நிறுத்துக!

உணவுக் கழகம் (FCI) மேற்கொண்டு வரும் தானியக் கிடங்கு (Silo) நவீனமயமாக்கல் திட்டத்தில் அதானி–லீப் இந்தியா இரட்டையாதிக்கம் உருவாகியிருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ள நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) அறிக்கை, இந்தியாவின் பொது உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை கார்ப்பரேட் மயமாக்கும் ஆபத்தான முயற்சியை அம்பலப்படுத்தியுள்ளது.

அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் மற்றும் லீப் இந்தியா ஃபுட் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், ரூ.16,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 134 தானியக் கிடங்கு ஒப்பந்தங்களில் 110 ஒப்பந்தங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தானிய சேமிப்பு வலையமைப்பின் பெரும்பகுதி இந்நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது.

இந்த கிடங்குகளில் சேமிக்கப்படவுள்ள மொத்த 60 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களில், சுமார் 46.5 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை இந்த இரு நிறுவனங்களே கட்டுப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய ஏகபோக நிலையைத் தடுக்கவே FCI முதலில் “ஏகபோக எதிர்ப்பு” (Anti-Monopoly) விதியை முன்மொழிந்திருந்தது.

அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன்ஸ் லிமிடெட்டின் ஒரு பகுதியாக உள்ள அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், இந்தத் திட்டத்தின் கீழ் தானியக் கிடங்குகளை விநியோக மையங்களுடன் இணைக்கும் தனியார் ரயில்வே வலையமைப்பையும் அமைத்து வருகிறது. இதன் மூலம் கொள்முதல், சேமிப்பு, போக்குவரத்து, ஏற்றுமதி என முழு விநியோகச் சங்கிலியையும் அதானி குழுமம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு FCI திட்டம் வழிவகுக்கும்.

இந்தத் திட்டத்தின் ஒப்பந்த அமைப்பில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட்டதோடு, FCI முன்மொழிந்திருந்த “ஏகபோக எதிர்ப்பு” விதியும் நீக்கப்பட்டதாக இந்த அம்பலப்படுத்தல் தெரிவிக்கிறது. “வலுவான நிதி ஆதாரங்கள் கொண்ட நிறுவனங்களுக்கு” சாதகமாக அமையும்படி, நீதி ஆயோக் (NITI Aayog) மற்றும் பொருளாதார விவகாரத் துறை (Department of Economic Affairs) தலையீட்டின் விளைவாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் அவற்றை தோற்கடித்த பின்னரும், இந்திய வேளாண்மையை மறைமுகமாக கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சிதான் இது என்பது தெளிவாகிறது.

விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உத்தரவாதம் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் ஒன்றிய அரசு, அதே நேரத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான பொது விநியோக அமைப்பை பலவீனப்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பே ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறது.

சிபிஐ(எம்), தானியக் கிடங்கு திட்டத்தில் “ஏகபோக எதிர்ப்பு” விதியை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பொது முதலீடுகள் FCI-யின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்; தனியார் ஏகபோக நிறுவனங்களிடம் அதை ஒப்படைக்கக் கூடாது.

பெரு முதலாளி நிறுவனங்களின் கட்டுப்பாடு குவிவதற்கு வழிவகுத்த பொதுத்–தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டுக் குழு (PPP Appraisal Committee) மற்றும் அரசின் பல்வேறு அமைச்சகங்களின் பங்கை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) அமைக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

CPIM Tamilnadu

https://www.facebook.com/TNCPIM/posts/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/1506958130809074/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு