லெனின் குறித்து வாத்ஸ்லாவ் வரோவ்ஸ்க்கி
கனகு கனகராஜ்

சோசலிச சோவியத்தின் புரட்சிகரத் தலைவர்களிலொருவரான வாத்ஸ்லாவ் வரோவ்ஸ்க்கி யின்
மாமேதை லெனின் குறித்த எழுத்திலிருந்து...
" வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திடீர் மாற்றங்கள் நிகழும் மாண்புமிக்க காலகட்டங்கள், அந்தக் காலத்தின் உணர்வையே உருட்டித் திரட்டிய ஒரு வடிவத்தைப் போன்ற மனிதர்களைத் தோற்றுவிக்கின்றன. போராடி முன்னேறி வாழும் - உரிமையை வென்று கைப்பற்றிக்கொள்ளும் - புதிய, வருங்கால, உயரிய தத்துவத்தின் குவிமுனைகளாகவும், அதை எடுத்துச் செல்பவர்களாகவும் அந்த மனிதர்கள் விளங்குகிறார்கள்.
நமது காலக்கட்டத்தில், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிஸத்துக்கு மாறும் இந்தத் திருப்பத்தில் இத்தகைய மனிதராகத் திகழ்கிறார் விளாதீமிர் இல்யீச் உல்யானொவ்-லெனின்.
அவர் ஒரு கற்பனை மரம் போன்றவர். அது தனது வலிமை மிக்க வேர்களை ருஷ்யாவின் உழைப்பாளி மக்களிடையே ஆழச் செலுத்தியுள்ளது.
அதன் உச்சிக்கிளை முகில்களுக்கு அப்பாலுள்ள தெளிந்த வானத்தில் சென்றிருக்கிறது. ஆயிரமாண்டுகளாக மனிதகுலம் திரட்டிச் சேர்த்துள்ள விஞ்ஞான, பண்பாட்டுச் செல்வங்கள் அங்கே செறிந்திருக்கின்றன...
அவரது பெயர் ருஷ்யாவிலோ ஐரோப்பாவிலோ மட்டும் அல்ல, உலகம் முழுவதிலுமே தொழிலாளி வர்க்க விடுதலையின் சின்னமாக விளங்குகிறது என்றால் ஆச்சரியமில்லை. உலகின் உழைப்பாளி மக்களது கோடிக்கணக்கான பார்வைகளும், எண்ணங்களும், உணர்ச்சிகளும், கிரெம்ளினின் எந்த மூலையில் கோடானுகோடி மக்களின் இந்த எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒரு தனி மனிதரானவர் தனது அறிவாலும், விருப்ப ஆற்றலாலும் மக்கள் திரளின் போராட்ட கோஷங்களாக, வலிமை மிக்க இயக்கங்களின் வழிகாட்டும் தாரகமந்திரமாக மாற்றுகிறாரோ அந்த மூலையை நோக்கியே செல்கின்றன.
இந்த மனிதருக்குள் எத்தகைய சக்தி மறைந்திருக்க வேண்டும், அவரைத் தங்களது நம்பகமான தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு அருமையாக, மதித்து நேசித்திருக்க வேண்டும் மிகப் பெரிய சிந்தனை, வலிமை மிக்க விருப்ப ஆற்றல், மாபெரும் உணர்ச்சி ஆகியவை ஒரு மனிதரிடம் இதை விட முழுமையாக ஒன்று சேர்ந்திருப்பதைக் கற்பனை செய்வது கடினம். விளாதீமிர் இல்யீச் ஒரே பாறையிலிருந்து, ஒரு சிறு பிளவு கூட இன்றி, முற்றாகச் செதுக்கி உருவாக்கப்பட்ட சிற்பம் போன்றவர். "
- கனகு கனகராஜ்