இந்துத்துவாவிற்கு அடிபணிந்து கந்தூரி விழாவை தடுக்கும் திமுக அரசு
சாவித்திரி கண்ணன்

’ஒன்னுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது…’
என திகைத்து போயுள்ளனர் தமிழக மக்கள்!
திமுகவின் நிலைபாடும், ஆட்சி நிர்வாகத்தின் நிலைபாடும் முற்றிலும் வேறாக உள்ளது என்றால், தமிழ்நாட்டை ஆட்சி செய்வது யார்?
தோழர் சு.வெங்கடேசன் கூறி இருப்பதில் பெருமளவு உடன்படுகிறேன்.
திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை குறித்து, நூறு ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கி உறுதிப்படுத்தியுள்ளன.
திருப்பரங்குன்றத்து மக்களாலோ,
இந்து அறநிலையத்துறையாலோ,
தர்கா நிர்வாகத்தாலோ
உரிமை சம்பந்தமான பிரச்சனை எதுவும் எழுப்பப்படவில்லை.
தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது?
வருவாய்த்துறை எந்த அடிப்படையில் இதில் தலையிட்டது?
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று இந்துத்துவாவினரே கேள்வி எழுப்பி, போலி வாட்ஸ் அப் செய்திகளை உருவாக்கி, பொது சமூகத்தில் பரப்பியது குறித்து துளி அளவேனும் காவல்துறை தலையீடு செய்ததா?
வெறுப்பு பிரசாரம் தங்கு தடையின்றி பரப்பப்படும் போது காவல்துறையிடமிருந்து ஒரு நடவடிக்கையும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆனால், அரசு நிர்வாகமும், காவல்துறையும் தீடீரென்று வழமையான கந்தூரி விழாவை தடுக்கிறார்கள்!
வழக்கு போடுகிறார்கள்.
’ஏற்கனவே விழா நடந்துள்ளது’ என்பதை நிருபிக்க சொல்கிறார்கள். ..! பிறகு நீதிமன்றத்திற்கு விவகாரம் செல்ல ஒத்துழைக்கிறார்கள்.
இதெல்லாம் ஏன்?
நீதிமன்றம், ’’மலை மேலுள்ள மசூதியை குறித்து ஆக்கிரமிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’’ என கேட்கிறது..?
அதற்கு, ’’அது ஆக்கிரமிப்பு இல்லை’’ என அரசு தரப்பில் தெளிவான விளக்கம் இல்லை!
’’விலங்குகள் பலி இடுவதில் என்ன நடவடிக்கை என்ன?’’ என்கிறது கோர்ட்.
’’மைலார்ட் அது வழமையாக நடப்பது தான் நடவடிக்கைக்கு உட்பட்டதில்லை’’ என்று சொல்ல வேண்டிய அரசு தரப்பு, ’’200 பேர் மீது வழக்கு பதிந்தோம்’’ என்கிறது.
எனில், ஜனவரி 27 ஆம் தேதி அதிமுக, காங்., சிபிஎம், சிபிஐ, தேமுதிக, விசிக, மநீம, மமக, ஐயூஎம் எல் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்களுடன் திமுக தலைவர்களும் இணைந்து திருப்பரங்குன்றம் மலையில் இது வரை இருந்து வந்துள்ள வழிபாட்டு மரபுகள் என்ன என்பதையும், பிரச்சனையை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும், காவல் ஆணையருக்கும் மனு அளித்தது ஏன்…?
மத நல்லிணக்கத்தை உருவாக்க பாடுபடும் வழக்கறிஞர்கள் வாஞ்சி நாதன் உள்ளிட்டவர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் தடை போடும் ஆட்சியாளர்கள், இந்துத்துவர்களின் செயல்திட்டத்தை நிர்வாக அனுசரணையுடன் கோர்ட் வழியே நிறைவேற்றித் தருகிறார்கள்!
திமுகவின் நிலைபாடும், ஆட்சி நிர்வாகத்தின் நிலைபாடும் முற்றிலும் வேறாக உள்ளது என்றால், தமிழ்நாட்டை ஆட்சி செய்வது யார்? மாவட்ட நிர்வாகத்தை வழி நடத்தியது யார்?
கூட்டணி தர்மத்திற்காக, ’’இது முழுக்க மாவட்ட நிர்வாகத்தின் தோல்வி’’ என சுருக்கிச் சொல்கிறார் தோழர் சு.வெங்கடேசன்.
இல்லை, உண்மையில் மாநில நிர்வாகத்தின் தோல்வியே..!
- சாவித்திரி கண்ணன் (முகநூலில்)
https://www.facebook.com/share/p/1ACL7tBv8x/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு