நீலம் எனில் விசம் என்பதை நிரூபித்த கோசலை!

திருப்பூர் குணா

நீலம் எனில் விசம் என்பதை நிரூபித்த கோசலை!

அடியாட்களுக்கு ஒருபோதும் விளைவுகள் குறித்த கவலைகள் இல்லை. அவர்கள் வெகுமதிகளுக்கு விலைபோனவர்கள். ஆனால் ஏவுகிறவர்களுக்கு நோக்கமிருக்கிறது.

குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்க செய்தவர்களுக்கு நோக்கம் ஒன்றுதான். அது ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்களின் மூளையிலும் இரத்த நாளங்களிலும் சாதிவெறி சாக்கடையை கலக்கச்செய்வது: தலித் மக்களை எதிரிகளாய் பாவிப்பது; சாதிவாரி பிளவுகளை எல்லா மட்டத்திலும் உருவாக்குவது. மொத்தத்தில் மக்களை ஒன்றிணைய விடாமல் செய்து ஆளும்வர்க்கங்களைப் பாதுகாப்பது.

கோசலைக்கும் இதுதான் நோக்கம்.

கதை இதுதான். 'கம்யூனிஸ்டுகள் தியாகம் கூட செய்வார்கள். ஆனால் சாதிவெறியோடுதான் இருப்பார்கள். காரணம், ஆதிக்க சாதியினர்தான் கம்யூனிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் எல்லாரும் ஆதிக்க சாதியினர். ஆதிக்க சாதியினர் கம்யூனிஸ்டுகளாக மாறினாலும் கூட சாதிவெறி போகாது. என்கிற நிலையில் உழைக்கும் மக்களாக இருந்துவிட்டால் மட்டும் சாதிவெறி போகவா போகிறது? எனவே, உழைக்கும் மக்கள் ஒற்றுமை என்றபேரில் தலித்துகள் கம்யூனிஸ்டுகளோடும் சேரக்கூடாது; வேறு சாதி மக்களோடும் ஒன்றிணையவேக் கூடாது; மக்கள் ஒற்றுமை கூடவே கூடாது!' என்பதுதான் கோசலையின் அரசியல்.

இது இந்த நூலின் ஆசிரியர் என சொல்லிக்கொள்கிற தமிழ் பிரபாவின் புதிய முன்வைப்பல்ல. அல்லது இதே அரசியலை தொடர்ந்து பரப்பிவரும் இயக்குநர் ரஞ்சித் மற்றும் அவரது நீலம் பவுண்டேசனின் கண்டுபிடிப்புமல்ல. இது இந்தியாவில் உழைக்கும் மக்கள் ஒற்றுமை உருவாகாமல் தடுக்க அமெரிக்க ஃபோர்டு பவுண்டேஷன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்வைத்த அரத பழசு. பவுண்டேஷனின் அரசியல்தான் 1980களில் முன்னெடுக்கப்பட்ட தலித் கலைவிழா, அதன் தொடர்ச்சியான பழங்குடி மற்றும் தலித் அடையாள அரசியல்.

அந்த அமெரிக்க பவுண்டேஷனின் இன்றைய அரசியல் அடியாட்கள்தான் ரஞ்சித், தமிழ் பிரபா, நீலம் பவுண்டேஷன் அனைவரும். அடியாட்களுக்கு ஒருபோதும் விளைவுகள் குறித்த கவலைகள் இல்லை. அவர்கள் வெகுமதிகளுக்கு விலைபோனவர்கள். கோசலை ஒரு ப்ராஜெக்ட். தலித் மக்களை அடையாள அரசியலுக்குள் இருத்தி வைக்கும் ப்ராஜெக்ட்.

இந்த பராஜெக்ட்டுக்காக இவர்கள் செய்த ஒரே வேலை அலங்கார வேலன் X சாம்பவமூர்த்தி மற்றும் கோசலை X மல்லிகா என்கிற இரண்டு எதிரெதிர் கதாபாத்திரங்களை உருவாக்கியதுதான். அலங்காரவேலன் தலித் அல்லாதவராக இருப்பதால் சாதிவெறியோடு இருக்கிறார், ஆணாதிக்கவாதியாக இருக்கிறார், பாலியல் மோகியாக இருக்கிறார். சாம்பவமூர்த்தி தலித்தாக இருப்பதால் கருணை, கண்ணியமென பிறவி குணங்களுடன் இருக்கிறார்.

அதேபோல்தான் கோசலையும். கோசலைதான் மையப்பாத்திரம். முதுகு ஊனமென இரக்கம் தேடுவதற்காகவே உருவாக்கப்பட்ட பாத்திரம். ஆனாலும் அவர் தலித் அல்லாதவர். அவரது செயல்பாடுகள் அனைத்தும் தன்னை காயப்படுத்தியவர்களை வெற்றிக்கொள்வதற்கானதாகவே இருக்கும். அதாவது ஆத்மார்த்தமாக இருக்காது. ஆனால் மல்லிகா தலித். ஆகவே, தலித்துகளுக்கான பிறவி நற்குணங்களோடு இயல்பாகவும் ஆத்மார்த்தமாகவும் இருப்பார்.

எல்லாம் பிறவியிலேயே வரவேண்டும் என்பது நூல் கூறும் நியதி!

முதலில் அலங்கார வேலன் என்பது தோழர் சிங்காரவேலரை இழிவுபடுத்துவதாக பலரும் கருதிக்கொள்கிறார்கள். நூல் சிங்காரவேலர் மட்டுமல்ல, சங்கரய்யா, நல்லக்கண்ணு என எல்லா மூத்த தோழர்களையும்தான் பொதுமைப்படுத்தி தாக்குகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏஐடியூசியும் பேர் சொல்லியே அடையாளப்படுத்தப்படுகிறது. அதனாலென்ன யாருக்கும் உறைக்கப்போவதில்லை.

ஆதிக்கசாதி வெறியர்கள் தலித் மக்களின் குடிநீரில் மலத்தை கலந்தார்கள். அடையாள அரசியல் அடியாட்கள் அவர்களின் மூளையில் விசத்தை திணிக்கிறார்கள். எதிர்வினைகள் என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

- திருப்பூர் குணா

(முகநூலில்) 

https://www.facebook.com/100007850371727/posts/pfbid02wCodub1XVw3pGsGRuEAPsquz2chwmz2ahTNjQzNyVs1MkT4jWiNyuvvkDbp1T1Q1l/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு