பாசிச ஆட்சியமைப்பில் தேர்தலில் மட்டும் ஜனநாயகம் நீடிக்குமா?? திருப்பி அழைக்கும் உரிமையற்ற தேர்தல் ஜனநாயகமே அல்ல! தேர்தல் சீர்திருத்தம் - ஜனநாயகத்திற்காகப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

பாசிச ஆட்சியமைப்பில் தேர்தலில் மட்டும் ஜனநாயகம் நீடிக்குமா??  திருப்பி அழைக்கும் உரிமையற்ற   தேர்தல் ஜனநாயகமே அல்ல!  தேர்தல் சீர்திருத்தம் -  ஜனநாயகத்திற்காகப் போராடுவோம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 23 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ளது. 

திமுக - காங்கிரசு அணி, அதிமுக - பாஜக அணி, நாதக, சசிகலா - ராமதாஸ் அணி மற்றும் தவெக ஆகிய ஐந்து அணிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. 

இதில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?? பாசிச ஆட்சியமைப்பின் கீழ் தேர்தலில் மட்டும் ஜனநாயகம் நீடிக்குமா?? இந்த தேர்தல்களில் உண்மையாகவே ஜனநாயகம் உள்ளதா?? என்பது குறித்து வாதிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

ஒரு புறம் மத்திய அரசு பாசிச அரசு என்று வாதம் வைக்கப்படுகிறது; மறுபுறம் அதன் ஏவல் அமைப்பாக மாறியுள்ள தேர்தல் ஆணையத்தின் கீழ் நடக்கும் தேர்தல் மட்டும் ஜனநாயகமானது; அதில் வாக்களிப்பது சரியானது என்றும் வாதம் வைக்கப்படுகிறது. 

ஏன் இந்த முரண்பாடான அணுகுமுறை?? 

பாசிசத்தை நாம் மார்க்சிய அடிப்படையில் புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, தேர்தல் பங்கேற்பு புறக்கணிப்பு குறித்த மார்க்சிய அடிப்படைகளையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதுமே இதற்கு காரணம் ஆகும். 

தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு முதலில் அந்த தேர்தல் ஜனநாயகபூர்வமானதா என பார்ப்பது அடிப்படை. மக்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத தேர்தலில் மக்களை வாக்களிக்க சொல்வதில் பயன் உண்டா?? என்பது பற்றி நாம் வாதிக்கவும் சிந்திக்கவும் வேண்டும். 

இங்கு நடக்கும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் மக்களுக்கு எவ்வித அதிகாரமோ, ஜனநாயகமோ இல்லை என்பதே எதார்த்தம். குறைந்தபட்சம் முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போன்ற திருப்பி அழைக்கும் உரிமை கூட மக்களுக்கு இங்கில்லை. 

SIR மற்றும் தொகுதி மறுசீரமைப்பு சட்டம் மூலம் தேர்தல் முறையே பாசிசமயமாக்கப்பட்டுள்ளது. 

எனவே, நடப்பில் உள்ள ஜனநாயகமற்ற பாசிச தேர்தல் முறையை ஜனநாயகப்படுத்தக் கோருவதும், மக்களை அதன்பால் திரட்டுவதும் நமது முதல் கடமையாகிறது. 

பாசிச ஆட்சியமைப்பின் கீழ், தேர்தல் மட்டும் ஜனநாயகமாக நடக்கும் எனக் கருதுவது எதார்த்தம் அல்ல. மார்க்சியமும் அல்ல. இந்த பாசிச முறையை ஜனநாயகப்படுத்தாமல், வாக்களிப்பது என்பது பாசிசத்தை பலப்படுத்தவே அவை உதவும்; அவ்வாறுதான் உதவியும் வருகின்றது.

கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் பங்கேற்பது / புறக்கணிப்பது குறித்த மார்க்சிய அடிப்படைகள் : 

1) நாம் இன்று பாசிச கட்டத்தை எதிர்கொண்டு வருகிறோம். பாராளுமன்றம், சட்டமன்றம், தேர்தல் ஆணையம், தேர்தல் முறை, நீதி மன்றம், காவல் துறை, சிறைத்துறை உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தும் பாசிசமயமாக்கப்பட்டு வருகிறது. 

லெனின் காலத்தில் பாசிசம் என்பது கருத்தியல் தளத்தில்தான் இருந்தது. ஆட்சி முறையாக பரிணமிக்கவில்லை. லெனின் மறைவுக்குப் பிறகு, ஸ்டாலின் மாவோ காலத்தில் பழைய காலனிய முறையில் பாசிசம் எழுந்தது. தற்போது புதிய காலனிய வகைப்பட்ட கொடூரமான நயவஞ்சகமான பாசிச முறைகள் எழுகின்றன. இதையும் கணக்கில் கொண்டுதான் பாராளுமன்ற பங்கேற்பு புறக்கணிப்பு செயல்தந்திரங்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். 

அதாவது பாசிச எதிர்ப்பின் ஒரு பகுதியாகத்தான் பாராளுமன்ற பங்கேற்பு, புறக்கணிப்பு விசயங்களை அணுகவேண்டும். 

2) பாராளுமன்ற அல்லது சட்டமன்ற பங்கேற்பு மற்றும் புறக்கணிப்பு என்பது செயல்தந்திரமே (tactics). யுத்த தந்திரம் (Strategy) அல்ல. 

எனவே நிரந்தர பங்கேற்பு என்பது வலது விலகல். நிரந்தர புறக்கணிப்பு என்பது இடது விலகல். 

3) ஆகவே, தேர்தலில் நிரந்தர பங்கேற்பு, நிரந்தர புறக்கணிப்பு இரண்டுமே தவறானது. காரணம் அவை இரண்டுமே யுத்த தந்திரமாகிவிடுகின்றன. 

4) பாட்டாளி வர்க்க சகாப்தம் துவங்கிவிட்டதால் பாராளுமன்றம் வரலாற்று ரீதியில் காலாவதியாகிவிட்டது. இருப்பினும் அதைக் கொண்டு பங்கேற்பு, புறக்கணிப்பு பிரச்சினைகளை நாம் அணுகக் கூடாது. அது அரசியல் வழியில் அதாவது நடைமுறையில் காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதைப் பொறுத்தே (அதாவது மக்களுக்கு பாராளுமன்ற நம்பிக்கை உள்ளதா, இல்லையா என்பதைப் பொறுத்து) நாம் செயல்தந்திரம் வகுத்துக் கொள்ள வேண்டும். 

5) முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாராளுமன்றத்தைப் போலவே, இந்தியா போன்ற மறைமுக அல்லது புதிய காலனிய வகைப்பட்ட நாடுகளில் உள்ள பாராளுமன்றத்தை கணிப்பது மிகவும் தவறு. முதலாளித்துவ நாடுகளில் நிலவும் ஜனநாயகப் பூர்வமான தேர்தல் முறைகள் கூட ஓப்பீட்டளவில் இங்கு இல்லை. 

6) சட்டபூர்வப் போராட்டம், சட்டவிரோதப் போராட்டம் இரண்டையும் இணைப்பது பற்றிய விசயமும், பாராளுமன்ற பங்கேற்பு - புறக்கணிப்பு குறித்த விசயமும் வெவ்வேறானது. இரண்டையும் இணைத்து புரிந்து கொள்ளக் கூடாது. 

7) கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பங்கேற்பது என்பது நேரடியாக பங்கேற்பதாகும். இன்னொரு முதலாளித்துவக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதோ, அதன் தயவில் நிற்பதோ, அதற்கு வால் பிடிப்பதோ பங்கேற்பு ஆகாது. கட்சி பங்கேற்பது என்பது ஒரு பாராளுமன்ற குழு உருவாக்கப்பட்டு அது மட்டுமே பங்கேற்கும். ஒட்டு மொத்த கட்சியும் அல்ல. கட்சி அழைத்தால் அக்குழு பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

8) கட்சி பங்கேற்பது எனில் அது செயல்பூர்வமான பங்கேற்பாக (Active participation) இருக்க வேண்டும். புறக்கணிப்பு எனில் அதுவும் செயல்பூர்வமான புறக்கணிப்பாக (Active boycott) இருக்க வேண்டும். அதாவது இரண்டிற்கும் கணிசமான மக்கள் ஆதரவு இருக்கவேண்டும் என்பது தெளிவு. 

9) கட்சியின் பலம் - பலவீனம்; கட்சிக்கு மக்களிடையே நிலவும் செல்வாக்கு - செல்வாக்கின்மை; அலை ஏற்றம் (புரட்சிகர சூழல்) - அலை இறக்கம் (எதிர் புரட்சிகர சூழல்) உள்ளிட்ட பல காரணிகள் பங்கேற்பு, புறக்கணிப்பை தீர்மானிக்கின்றன. 

10) கட்சி பாரளுமன்றத்தில் பங்கேற்பதன் நோக்கம், பாராளுமன்றத்தை அம்பலப்படுத்தவே தவிர, அதாவது அரசியல் ரீதியாக அதை காலாவாதியாக்கவே தவிர, அதன் மீது மாயைகளை உருவாக்க அல்ல. பாராளுமன்றம் - சட்டமன்றத்தை கட்சியின் புரட்சிகர நோக்கங்களை பிரச்சாரம் செய்யும் ஒரு பிரச்சார மேடையாக பயன்படுத்தவே கட்சி பங்கேற்க வேண்டும்.

ரசியாவில் ஒரு குறிப்பிட்ட சூழலில்,குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரே ஒரு முறைதான் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றது; பிறகு வெளியேறி புரட்சிக்கு தலைமை தாங்கியது. சீனாவில் மாவோவிற்கு பங்கேற்கும் தேவையே எழவில்லை. அங்கு அவ்வித பாராளுமன்ற முறையும் இல்லை. 

ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி தேவைப்படின் பாராளுமன்றத்தை பிரச்சார மேடையாக பயன்படுத்த, அரசியல் ரீதியாக அதை காலாவதியாக்க, செயல்தந்திர ரீதியாக அதில் பங்கேற்கும். தேவைப்படாவிட்டால் பங்கேற்காது. அது நிலைமைகளைப் பொறுத்தது.

இவை விரிவான விளக்கம் இல்லை எனினும் இவற்றை மார்க்சிய அடிப்படைகள் எனலாம். 

நாம் துவக்கத்தில் சொன்னவாறு இங்கு நடக்கும் தேர்தல்களில் குறைந்தபட்சம் முதலாளிய ஜனநாயகத்தன்மையாவது உள்ளதா?? எனில் இல்லை. 

ஆகவே தேர்தலை ஜனநாயகப்படுத்தக் கோரி போராடுவது நம்முன் உள்ள முக்கிய கடமையாகும். இது தேர்தலுக்குப் பிறகும் தொடரவேண்டிய போராட்டமாகும். 

சரி. நிலவும் பாசிச தேர்தல் முறையை எவ்வாறு ஜனநாயகப்படுத்துவது?? 

1) பாசிச ஆட்சி முறைக்கு வித்திடும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்கு மாறாக விகிதாச்சார தேர்தல் முறையை அமல்படுத்தக் கோருவது 

2) தேர்ந்தெடுக்கும் முறை மட்டுமே தற்போதுள்ளது. எனவே திருப்பி அழைக்கும் முறைக்காகப் போராடுவது.

3) பொது வாக்கெடுப்பு (Referendum / Plebiscite) முறை. 

4) அரசியல்வாதிகளை மட்டுமல்லாது, அதிகார வர்க்கத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமை.

5) மத்தியில் குவிக்கப்பட்டுள்ள மாநில உரிமைகள், அதிகாரங்களை மீட்பது, மாநில அரசுகளை கலைக்கும் மத்திய அரசின் சட்ட உரிமையை ஒழிப்பது, ஆளுநர் பதவியை ஒழிப்பது, மாநில சுயாட்சியை வெல்வது. 

6) SIR மற்றும் தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற போராடுவது. 

7) வரவிருக்கும் ஒரு நாடு-ஒரு தேர்தல் எனும் பாசிச சட்டத்தை முறியடிப்பது. 

8) EVM முறையிலுள்ள குளறுபடிகளை நீக்குவது. 

ஆகிய கோரிக்கைகள் மக்கள் கோரிக்கைகளாக மாறி அவை நிறைவேற்றப்படும் பட்சத்தில் தேர்தலை ஜனநாயகப்படுத்த முடியும்.

விகிதாச்சார தேர்தல் முறை 

தற்போது இந்தியாவில் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை அமலில் உள்ளது. அது ஒரு சிறு கும்பலின் சர்வாதிகார ஆட்சி முறைக்கு வித்திடும் பாசிசத் தன்மை கொண்டதாக உள்ளது. இதற்கு மாற்றாக விகிதாச்சார முறையை அமல்படுத்தக் கோரலாம். காரணம் இது பல்வேறு வர்க்கங்களையும் கட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

2024-நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., மொத்தம் பதிவான வாக்குகளில் மிகக் குறைந்த சதவீதம் வாக்குகளை (36.5% (கூட்டணி சதவிகிதம் 43.8 %)) மட்டுமே பெற்று, நாடாளுமன்றத்தில் மிகப்பெரும்பான்மையான (240 (கூட்டணி 290)) இடங்களை பிடித்து அறுதிப் பெரும்பான்மை பெற்றதற்குக் காரணம் தொகுதிவாரி பிரதிநிதித்துவம் என்ற பிற்போக்கான தேர்தல் முறையே ஆகும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை எவர் பெறுகிறாரோ அவரை தேர்ந்தெடுப்பது என்பதே தொகுதிவாரி பிரதிநிதித்துவம் ஆகும். 

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போல விகிதாச்சார தேர்தல் முறை இருந்திருக்குமானால் பா.ஜ.க.விற்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது. விகிதாச்சார தேர்தல் முறையில் ஒவ்வொரு தொகுதியிலும் 51% சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றால்தான் ஒருவர் வெற்றிபெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவார். மேலும் ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள வாக்கு சதவீதத்திற்கு ஏற்றாற்போல் அக்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

விகிதாச்சார தேர்தல் முறை இருக்குமானால் கடந்த 2024 தேர்தலில் பா.ஜ.க. வாங்கியுள்ள வாக்குகளில் சதவீத அடிப்படையில் அக்கட்சிக்கு சுமார் 150 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். கூட்டணிக்கு கணக்கிட்டால் கூட மொத்தமாக சுமார் 240-45 இடங்கள்தான் கிடைத்திருக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு சுமார் 220-30 இடங்கள் கிடைத்திருக்கும். ஆகவே அறுதிப் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சியை பிடித்திருக்க இயலாது. தொங்கு பாராளுமன்றம் அமைந்திருக்கும். பாஜக ஆட்சி பாசிச முறையில் கொடூரமான சட்டங்களை இயற்றுவது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். 

பிற கட்சிகளுக்கும் அதன் வாக்கு சதவிகிதத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கும். உதாரணமாக நாதகவிற்கு அதன் 8% வாக்குகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கும். விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கும் அதன் வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கும். சீட்டுகளுக்காக திமுகவிடம் கையேந்தும் நிலை ஏற்படாது.

எனவே விகிதாச்சார தேர்தல் முறை என்பது ஒப்பீட்டளவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் பிரிவினருக்கும் வாக்குகளின் சதவீதத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் பரவலாக கிடைக்கும். அந்த அளவுக்கு எதேச்சதிகார ஆட்சி முறையை தடுத்து நிறுத்தப் பயன்படும்.

இந்த ஆட்சி அமைப்பிற்குள்ளாகவே விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்பது எதார்த்தமாக பல்வேறு அரசியல் பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆனால் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையோ எதார்த்தத்திற்கு புறம்பான பிரதிநிதித்துவப்படுத்தும் முறையைக் கொண்டுள்ளது. சிறுகும்பலின் எதேச்சதிகார ஆட்சி அமைவதற்கு வழிவகுத்துவிடுகிறது. அவ்வாறு அமைந்த ஒரு சிறு கும்பலின் சர்வாதிகார ஆட்சிதான் பாஜக ஆட்சி.

திருப்பி அழைக்கும் உரிமை 

நமது நாட்டில் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே உள்ளது. அதுவும் முழுமையாக இல்லை. கட்சிகளின் சார்பாக நிறுத்தப்படும் உறுப்பினர்களில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமைதான் உள்ளது. யார் தமது தொகுதிக்கு உறுப்பினராக நிற்க தகுதி உடையவர் என தீர்மானிக்கும் உரிமை மக்களிடம் இல்லை. தமது தொகுதிக்கான சட்டமன்ற - பாராளுமன்ற பிரதிநிதிகளை தாங்களே தேர்ந்தெடுத்து நிறுத்தும் உரிமை மக்களுக்கு இல்லை. நிறுத்தப்படுவோரில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை மட்டுமே உள்ளது. 

ஊழல் பின்னணி கொண்டவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், மக்கள் விரோத செயல்பாடு கொண்டவர், அந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர் என அவர்களை தீர்மானிப்பது கட்சிகளே. மக்கள் அல்ல. நிறுத்தப்படும் நபர்களின் பின்புலம், சொத்து விவரங்கள் கூட மக்களுக்கு தெரிவதில்லை. 

திருப்பி அழைக்கும் உரிமை என்பது இரு வகையாக முதலாளித்துவ நாடுகளில் அமலில் உள்ளது. 1) மேலிருந்து திருப்பி அழைப்பது. அதாவது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது (2) கீழிருந்து திருப்பி அழைப்பது. அதாவது மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களை திரும்பப் பெறும் (பதவி நீக்கும்) உரிமை. 

முதல் வகையானது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் அமலில் உள்ளது. ஆனால் இதிலும் மக்களுக்கான ஜனநாயகம் இல்லை. 

இரண்டாம் வகையானது பெரு, வெனிசுலா, கியூபா, ஈக்வடார், பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டுமே அமலில் உள்ளது. இந்த முறை சரியாக அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான ஜனநாயகம் உள்ளது எனலாம். இந்த நாடுகளில் கூட சோவியத் வடிவிலான மக்கள் கமிட்டிகள் மூலம் நடைமுறைப்படுத்தும் முறை இல்லாததால், அதை முரணற்ற ஜனநாயகம் என அறுதியிட்டு சொல்லிவிட இயலாது. 

இந்தியாவில் மத்தியப் பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களை மட்டும் திரும்பப் பெறும் உரிமை உள்ளது. இந்தியா முழுக்க சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை திரும்பப் பெறும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. 

திருப்பி அழைக்கும் உரிமை இல்லாத தேர்தல் என்பது அடிப்படை ஜனநாயகமற்ற தேர்தல் முறையாகும். 

இந்த விசயத்தில் முழு ஜனநாயகத்தை வழங்கியது சோசலிச நாடுகள் மட்டுமே. லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய தலைவர்கள் அரசியல் தளத்தில் மட்டுமின்றி, அதிகார வர்க்கத்தையும் கூட தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் அவர்களை திருப்பி அழைக்கும் உரிமை ஆகியவற்றை சட்டமாக்கி கறாராக நடைமுறைப்படுத்தினர். முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தன்மையை அம்பலப்படுத்தினர். 

பொது வாக்கெடுப்பு முறை 

இம்முறை நாட்டின் முக்கியமான வாழ்வாதாரமான கொள்கைகளை அமல்படுத்துவதற்கு முன்பு அதை பொது மக்களின் வாக்கெடுப்பிற்கு விடும் முறையாகும். உதாரணமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாமா வேண்டாமா (Brexit) என்பது குறித்து பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. வெளியேறலாம் என பெரும்பான்மை முடிவிற்கேற்ப பிரிட்டன் வெளியேறியது. இந்த பிரெக்சிட் (Brexit) வாக்கெடுப்பை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பிரிட்டனில் உள்ள இம்முறை ஒரு முதலாளித்துவ ஜனநாயகமுறை. அது முற்றான ஜனநாயகமில்லை. எனினும் இந்தியாவில் அத்தகைய முறையை கற்பனை கூட செய்ய இயலாது. 

திருப்பி அழைக்கும் உரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் எவ்வளவுதான் பரந்த ஜனநாயகத் தன்மை கொண்டிருப்பினும் அது எதேச்சதிகார முறையை முற்றாக ஒழிக்கப் பயன்படாது. அந்த முறையும் முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கக் கூடியதுதான். ஏனெனில் இது பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை போன்றவற்றிற்கு இது செயல்படுத்தப்படுவதில்லை. எனவே இதுவும் முற்றாக ஜனநாயகத்தை வழங்காது.

முற்றான, முரண்பாடற்ற ஜனநாயகம் என்பது மக்களுக்கு உண்மையில் அதிகாரம் வழங்கக் கூடிய சோவியத் ஜனநாயக ஆட்சி முறையே ஆகும். தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்க ஆட்சி முறையை ஒழித்துக்கட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை வழங்குவது; நீதித்துறை, போலீசு, இராணுவம் அனைத்தும் கலைக்கப்பட்டு மக்கள் இராணுவம், மக்கள் கமிட்டிகளை நிறுவுவது; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமையை மக்களுக்கு வழங்குவது; வர்க்க அடிப்படையில் தொகுதிகளை பிரிப்பது போன்ற சோவியத் ஆட்சி முறையே உண்மையான மக்கள் ஜனநாயகம் ஆகும்.

பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் முதலில் அதிகாரம் உள்ளதா?? அதன் தேர்தல் ஜனநாயகமானதா?? 

இந்திய வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கூட இல்லை. அதன் மீது வாதம் நடத்தவோ வாக்கெடுப்பு நடத்தவோ கூட அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமில்லை. 

உயர் அமைச்சரவைக் குழுவும் அதன் அதிகாரக் குழுவும் அடங்கிய ஒரு சிறு கும்பல்தான் இந்தியாவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை, வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கிறது. உதாரணமாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீதான வாதம் மற்றும் வாக்கெடுப்பை சிபிஐ, சிபிஎம் கோரியபோது அன்றைய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (சிபிஎம்) அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். மோடி ரிசர்வ் வங்கிக்கோ, பாராளுமன்றத்திற்கோ கூட தெரியப்படுத்தாமல், இந்த சிறு கும்பலின் ஆலோசனையின் பேரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பாசிச முறையில் செயல்படுத்தினார். 

பாராளுமன்ற நிலைக்குழு, சட்ட தேர்வுக் குழு ஆகியவை பெயரளவுக்குத்தான் உள்ளன. விவாதம் ஏதும் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் 60% - 70% சதவிகிதம் மசோதாக்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பாமலேயே சட்டமாக்கப்பட்டுள்ளன. நிலைக்குழுவில் முன்வைக்கும் திருத்தங்களை பாராளுமன்றம் கணக்கில் கொள்வதே இல்லை. 

1970களிலிருந்து இதுவரை எந்த தனிநபர் மசோதாவும் சட்டமாக்கப்படவில்லை. கில்லட்டின் மூடல் என்ற முறையில் நேர ஒதுக்கீடு முடியும்போது விவாதிக்கப்படாத சட்டபிரிவுகளும் ஒரே வாக்கில் நிறைவேற்றப்படுகின்றன. இதன்படி, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370, 2019ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து செய்யப்பட்டது.   

டிரம்ப் கும்பல் அண்மையில் ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என வெளிப்படையாகவே மோடியை மிரட்டியது. மோடியும் சரிங்க எஜமான் என்றார். மீண்டும் ஈரான் மீதான போருக்கு பிறகு உருவான தட்டுப்பாட்டை சமாளிக்க ரசியாவிடம் வாங்கிக்கொள்ளுமாறு டிரம்ப் கும்பல் கூறியபோது அதற்கும் சரிங்க எஜமான் என்றார் மோடி. இரண்டிற்குமே பாராளுமன்றத்தில் எந்த வாதமும் இல்லை. 

காங்கிரசு கட்சி இவ்வாறுதான் பாராளுமன்றத்தை கேட்காமால் வாதிக்காமல் அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டு நாட்டை நாசமாக்கியது. பிறகு புதிய பொருளாதாரக் கொள்கைகளை அவ்வாறே செயல்படுத்தியது. 

இதுதான் இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் இலட்சணம்.

அமெரிக்க அன்னிய நிதிமூலதனத்தின் ஏவலாக பாராளுமன்றம் உள்ளது. அமெரிக்காவிற்கும் அம்பானிக்கும் அதானிக்கும் சேவை செய்வதில் யார் சிறந்தவர் பாஜகவா?? காங்கிரசா?? இதுதான் பாராளுமன்ற தேர்தலின் நோக்கம். 

பாராளுமன்றத்திற்கும் அம்பானிக்கும் அதானிக்கும் யார் நல்ல விசுவாசி திமுகவா?? அதிமுகவா?? இதுதான் சட்டமன்ற தேர்தலின் நோக்கம். 

மத்திய அரசு நினைத்தால் மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல், பொதுப்பட்டியல் எனும் பேரில் அனைத்து பட்டியல்களும் காங்கிரசு, பாஜக  அரசுகளால் அமெரிக்கப் பட்டியல் ஆக்கப்பட்டு வருகிறது. மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என சொன்னாலும் மூன்றின் மீதான இறுதி அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. இதை துவக்கி வைத்தது காங்கிரசு ஆட்சி. 

இந்தியர் அனைவரும் ஒரே இனம், இங்கு பல தேசிய இனங்கள் எல்லாம் இல்லை. மாநில உருவாக்கம் வெறுமனே நிர்வாக வசதிக்காகவே என்று அம்பேத்கரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பில் இதைத்தான் எதிர்பார்க்க இயலும். 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கில்லை என அண்மையில் மு.க.ஸ்டாலின் பேசியது நினைவிருக்கலாம். ஆனாலும் வாக்குறுதிகளை அள்ளி வீசி, இலவசங்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றன அதிமுக, திமுக கட்சிகள். சட்டமன்ற தீர்மானம் மாநில ஆளுநருக்காக காத்திருக்கின்றன. இது என்ன ஜனநாயகம்?? கேலிக்கூத்தல்லவா! மாநில சுயாட்சிக்கு போராட இரண்டு கட்சிக்கும் வக்கில்லை. துணிவில்லை. 

தேர்தல் ஆணையம் முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுதான் மாநில தேர்தல்களையும் நடத்துகிறது. மாநிலங்களுக்கு ஒரு தேர்தல் ஆணையம் கூட வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. அதிகாரப் பகிர்வுள்ள மத்திய மாநில கூட்டு ஆணையம் அமைக்க கோரவேண்டியுள்ளது. அதைக் கூட திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பேச தயாரில்லை. 

மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசின் கங்காணியான  ஆளுநர் கையெழுத்திட்டால்தான் சட்டமாகும் என்பது கேலிக்கூத்தான ஜனநாயகம். 

மத்திய அரசு நினைத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 356 சட்டத்தின் கீழ் கலைக்க முடியும். திமுக ஆட்சி இருமுறை காங்கிரசு ஆட்சியால் கலைக்கப்பட்டது. கேரளாவில் சிபிஎம்  ஆட்சி ஒரு முறை காங்கிரசு ஆட்சியால் கலைக்கப்பட்டது. பிரிவு 356 ஐ ஒழிக்காமல்,ஆளுநர் பதவியை ஒழிக்காமல், மாநில உரிமை, சுயாட்சி, பாசிச எதிர்ப்பு பற்றியெல்லாம் பேசுவது கற்பனை. வீண் வேலை. 

இவ்வாறு கண்துடைப்பிற்காக நடத்தப்படும் ஜனநாயகமற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதால் என்ன பலன்?? ஜனநாயகப்படுத்தப் போராட வேண்டாமா?? என மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு சிந்திக்க வேண்டும்.

SIR 

தகுதியற்ற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவது; புதிய வாக்காளர்களை சேர்ப்பது எனும் பெயரில் பாஜக அரசு இந்துமதவாத வாக்கு வங்கியைத் திடப்படுத்தும் நோக்கத்தோடு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. CAA-NRC-NPA வில் என்னென்ன அம்சங்கள் உள்ளதோ, எந்தெந்த கேள்விகள் கேட்கப்பட்டதோ, அவையனைத்தும் இந்த SIR கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளன. 

வாக்குரிமையையும் குடியுரிமையையும் இணைத்து, இசுலாமியர்களையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களையும் நாடற்ற உள் நாட்டு அகதிகளாக்கும், இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் - தேசிய குடிமக்கள் பதிவேடு - சிறப்பு தீவிர திருத்தம் (CAA-NRC-SIR) எனும் முக்கூட்டு பாசிசமாக உள்ளது. 

பீகாரில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 60% பேர் இசுலாமியர்கள் குறிப்பாக பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிமக்கள் ஆவர். இந்து ராஜ்ஜியத்தின் எதிரிகளாக இம்மூன்று பிரிவினரும் வரையறுக்கப்பட்டுள்ளதை நாமறிவோம். பாஜகவின் காவி பயங்கரவாத ஆட்சியால் பாதிக்கப்படும் இம்மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, தனக்கான இந்துமதவாத வாக்கு வங்கியைத் திடப்படுத்துவது, போலியான வாக்காளர்களை உருவாக்குவது என கேடுகெட்ட ஜனநாயக விரோதத் திட்டத்தை செயல்படுத்தியது. 

தமிழகத்தில் SIR! 

தமிழகத்தில் மிக வேகமாகவும் தீவிரமாகவும் SIR பணிகள் கடும் எதிர்ப்பையும் தாண்டி திமுக அரசால் முடுக்கிவிடப்பட்டன. இங்கு இடம்பெயரும் பீகார் உள்ளிட்ட வட மாநில உழைக்கும் மக்களை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இணைக்கும் நோக்கத்துடனேயே பீகாரிகளின் வாக்காளர் பட்டியல் பிரதி தமிழக SIR இல் கேட்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 75லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில், பெரும்பாலானோர், இசுலாமியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும்  பழங்குடியினர் ஆவர். 

ஹிட்லர் கும்பல் தேர்தல் முறையை ஒழித்துக்கட்டி பாசிசத்தை அரங்கேற்றியது. அவர்களின் இந்திய வாரிசான ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலோ அதைவிட ஒரு படி முன்னேறி, SIR மூலம் தேர்தலை பாசிசத்தின் கருவியாக மாற்றி வருகிறது. தேர்தலில் தனக்கான வாக்காளர்களை மட்டும் இணைப்பது, தனக்கு எதிரான வாக்காளர்களை நீக்குவது எனும் கொடூரமான பாசிச திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இவ்வாறாக CAA-NRC ஐ கள்ளத்தனமாக SIR மூலம் செயல்படுத்துகிறது. எனவே இதை அனுமதிப்பது என்பது நிரந்தரமாக பாஜக ஆட்சியை நிறுவும் பாசிச திட்டத்தை அனுமதிப்பதே.

தொகுதி மறு சீரமைப்பு சட்டம் (Delimitation act) 

இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று கூறினார். அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் நாடாளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்டு தனிப் பெரும்பான்மையோடு நிலைப்பெற்ற ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதன் அடிப்படைதான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பாஜக ஆளும் பீகார், உ.பி, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும். இந்த உள்நோக்கத்துடன் தான் பாஜக அரசு ஒவ்வொரு திட்டத்தையும் மறைமுகமாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாழ்படுத்துவதோடு, இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வாரி வழங்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் மாற்றங்கள் யாருக்கு சாதகமானது?

2026-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன. உதாரணமாக, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம்+11 (மொத்தம் 91), பீகார் +10 (மொத்தம் 50), மத்தியப் பிரதேசம் +4 (மொத்தம் 33), ராஜஸ்தான் +6 (மொத்தம் 31) என பாஜக அதிக அரசியல் லாபம் அடைகிறது.

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 848 என உயர்த்தப்பட்டால், தென்னிந்தியாவின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 164 என உயரும். ஆனால், பிரதிநிதித்துவத்தின் சதவீதம் தற்போது உள்ளதைவிட 19.34% குறைவாக இருக்கும். உத்தரப்பிரதேசம்: +63 (மொத்தம் 143), பீகார்: +39 (மொத்தம் 79), மகாராஷ்டிரா: +28 (மொத்தம் 76), மத்தியப் பிரதேசம்: +23 (மொத்தம் 52), ராஜஸ்தான்: +25 (மொத்தம் 50) ஆகிய தொகுதிகளைப் பெறலாம்.

இதன் மூலம் பாஜக 455 இடங்களை வென்று, ஆட்சி அமைக்கத் தேவையான 424 எனும் பெரும்பான்மை எளிதாகப் பெறமுடியும். இந்த பெரும்பான்மையால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எந்த விதமான சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரத்தை பாஜக பெறலாம்.

இவ்வாறு தேர்தலே பாசிசமயமாக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பாசிசத்தின் கருவியாக மாற்றப்பட்டு வருகிறது. ஆகையால் தேர்தலை ஜனநாயகப்படுத்தாமல் தேர்தலில் வாக்களிப்பதால் என்ன பலன்?? என மக்கள் சிந்திக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பது பாசிசத்திற்கு வாக்களிப்பதே. 

பாசிச ஆட்சியமைப்பில் தேர்தலில் மட்டும் ஜனநாயகம் இருப்பதாக நம்பி, தேர்தலே பாசிசமயமான பிறகும் தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த இயலும் எனும் மாயையில் இருந்து சட்டமன்றவாத இடதுசாரி, தமிழ் தேசிய கட்சிகள் மீள வேண்டும். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் பற்றி

பாசிசம் என்பது மையப்படுத்தப்பட்ட மூலதனத்தின் கொடூரமான சர்வாதிகாரமாகும். அது பார்ப்பனியமோ சனாதனமோ மதவாதமோ அல்ல. இந்துத்துவம் என்பது மதம் சார்ந்தது மட்டும் அல்ல; இந்துத்துவம் என்பது அந்நிய மூலதனம் மற்றும் அம்பானி, அதானிகளின் ஏவலாக செயல்படும் பாசிச அரசியல் இயக்கம்; அது மதத்தை ஒடுக்குமுறைக் கருவியாக பயன்படுத்துகிறது. 

பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும், அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச்செல்கிறது. இந்த ஒன்று குவிப்பு ஏகாதிபத்திய - ஏகபோக நிதி மூலதனத்தின் தவிர்க்க இயலாத பண்பாகும். ஆகவே பாசிசத்தை வெறுமனே கட்சிகளுடன் மட்டுமே தொடர்புபடுத்தி ஆட்சி மாற்றத்தால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என நினைப்பது கற்பனாவாதமே. 

திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகள், காங்கிரசு பாஜக போன்ற அகில இந்திய கட்சிகள் என அனைத்து பாராளுமன்ற சட்டமன்றவாதக் கட்சிகளுக்கும் ஒரே அரசியல் பொருளாதார (உலகமய, தனியார்மயக் கொள்கை) கொள்கைதான். எந்த கட்சிக்கும் பாஜகவிற்கு மாற்றான கொள்கையோ அரசியலோ இல்லை. மதத்துறையிலும் கூட மாநில கட்சிகளிடம் முன்பு இருந்துவந்த சிற்சில வேறுபாடுகள் மறைந்துவிட்டன. நாத்திகம் பேசிய திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மதத் துறையில் கூட மென் இந்துத்துவக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதை நாம் கண்டோம். திருப்பரங்குன்ற பிரச்சினை, திமுக ஆட்சியின் அதிகபட்ச குடமுழுக்குகளும் முருகன் மாநாடும் (கேரள சி.பி.எம் ஆட்சி நடத்திய ஐயப்பன் மாநாடும்) அதன் உதாரணங்கள். மாநில தரகு முதலாளித்துவ மூலதனம் அகில இந்திய மூலதனத்தையும் அன்னிய மூலதனத்தையும் சார்ந்து இயங்குமாறு சந்தை மையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூலதனச் சார்புதான் ஆட்சி வடிவத்தில் மதச்சார்பின்மையை கைவிட்டு மதவாத சார்பிற்குள் தள்ளுகிறது. மேலும் மக்களிடையே பலப்பட்டு வரும் இந்துமதவாத சிந்தனைகளை அம்பலப்படுத்தினால் வாக்கு வங்கி பாதிக்கப்படுமோ என அஞ்சி அதனுடன் சமரசம் செய்து கொள்கின்றன இக்கட்சிகள். மென் இந்துத்துவக் கொள்கையின் மூத்த முன்னோடி காங்கிரசு கட்சிதான். மென் இந்துத்துவம் பாஜகவின் வளர்ச்சிக்கே பயன்படும். பயன்பட்டும் வருகிறது என்பது கண்கூடு. தமிழக, கேரள மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள் வேகமாக வளர்ந்துவருவதை நாம் காண்கிறோம். 

இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் உள்ளது. ராகுல்காந்தி கேரள சிபிஎம்-ஐ பாஜகவின் பி.டீம் எனவும், பினராயி விஜயன் ராகுலையும் காங்கிரசையும் பாஜகவின் பி.டீம் எனவும் கூறிவருகின்றனர். ஆனால் தமிழகத்தில் சிபிஎம் காங்கிரசு ஒரே அணியில் உள்ளன. மேற்கு வங்கத்தில் சிபிஎம்-க்கு மம்தாதான் பிரதான எதிரி, பாஜக அல்ல. புதுச்சேரியிலோ, திமுக வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரசு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.  

பாஜகவின் காங்கிரசு முக்த் பாரத் (காங்கிரசு இல்லாத இந்தியா) திட்டத்திற்கு திமுக அரசும், கேரள சிபிஎம் அரசு நேராகவும் மறைமுகமாகவும் சேவை செய்கின்றன. 

இந்தியா கூட்டணி ஏன் தோல்வி பெற்றது?? 

அதன் கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை. பாஜக எதிர்ப்பு என சொல்லிக்கொண்டாலும் அதன் வழியில் செல்லவில்லை. 

அதில் அங்கம் வகிக்கிற கட்சிகளான திமுக, காங்கிரசு, சிபிஎம், மம்தா கட்சி போன்றவை தங்களது கட்சிகளின் வளர்ச்சியை பிரதானமாகக் கருதுகின்றன. அதுதான் மையமான பிரச்சினை. 

ஒருபுறம் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தோடு ஒன்றுபடுவது போல நாடகம் ஆடுகின்றன. மறுபுறம் தமது கட்சிகளின் வளர்ச்சியே முக்கியம் என நடைமுறையில் பரஸ்பரம் குழி பறிக்கின்றன. இவ்வாறான இக்கட்சிகளின் இரட்டை நிலைதான் கூட்டணியின் தோல்விக்கு முக்கியமான காரணம். 

தமிழகத்தில் திமுகவின் நோக்கம் தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதாக மட்டுமே உள்ளது. பாஜக ஆதரவு சக்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து பாஜக எதிர்ப்பில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளை புறக்கணிக்கிறது. பாஜக கைக்கூலிகளான ஓ.பி.எஸ், தேமுதிக, மைத்ரேயன், எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு முக்கியத்துவம் தந்து அதிக சீட்டுகள் ஒதுக்கப்படுவதும், தமிழர் தேசம் கட்சி எனும் பெயரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பான முத்திரையர் சாதிய (தலைவர் செல்வகுமார்) கட்சிக்கு சீட்டு கொடுப்பதும், 25 கூட்டணி கட்சிகளில் 13 கட்சிகள் சாதியக் கட்சிகள் என்பதும் எதை காட்டுகிறது?? திமுக பாஜகவுடன் அடுத்த 5 ஆண்டு ஆட்சியில் இன்னமும் நெருக்கமான அரசியல் பொருளாதார உறவுக்கு அடித்தளம் போடுகிறது என்பதையே காட்டுகிறது. 

இந்தியா கூட்டணியின் இந்த இரட்டை நிலைப்பாடுதான் பாஜகவுக்கும் சாதகமாக உள்ளது.

தவெகவை உ.பிக்கள் பாஜகவின் பி.டீம் என்றனர். ஆனால் ராகுல்காந்திதான் விஜய்யுடன் கூட்டணிக்கு முயன்றார். ஆனால் ஏனோ நடக்கவில்லை. இது திமுக காங்கிரசுக்கு இடையில் முரணை உண்டாக்கியது. பிறகு தற்காலிகமாக சமரசம் செய்யப்பட்டது. ஒரு நிலையான கொள்கை அரசியல் தெளிவு இல்லாமல் திரைக்கவர்ச்சியை மட்டும் மூலதனமாகக் கொண்டு இயங்கும் கட்சியாக தவெக உள்ளது. 

நாம் தமிழர் மற்றும் தமிழ்தேசிய பேரியக்கத்தின் திராவிட எதிர்ப்பு அரசியல் வரவேற்கக் கூடியதே. ஆனால், அவர்கள் சொல்லும் தமிழ்தேசியம், சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளை, அமெரிக்க எடுபிடி புதிய காலனிய பாராளுமன்ற - சட்டமன்ற எல்லைக்குள் அமல்படுத்துவது சாத்தியமில்லை.  

பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லிவந்த எடப்பாடி எதிர்பார்த்தபடியே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். மாநிலங்களை வஞ்சிக்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார். ஜெயா காலம் தொட்டு அதிமுக பாஜகவின் இயல்பான கூட்டாளி (Natural alliance) என்பது வரலாற்று உண்மை. 

திமுக ஆதரவில் ராமதாசும், பாஜக ஆதரவில் அன்புமணியும் இருந்ததன் விளைவாக எழுந்த முரண் உட்கட்சி முரணாக வெளிப்பட்டு கட்சி உடைந்தது. சாதியவாத அன்புமணி மதவாத பாஜகவின் காலடியில் கிடக்கிறார். சாதியவாத ராமதாசும் சசிகலாவும் போக்கிடமின்றி தனிக் கூட்டணி அமைத்துள்ளனர். 

திமுக ஆட்சி 5 ஆண்டுகளில் தமிழகத்தை வரலாறு காணாத கடனில் தள்ளியுள்ளது. கடன் மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி. உலகமய, தனியார்மய, வணிகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட விளைவிது. இடைநிலை ஆதிக்கச் சாதிகளின் கூடாரமாக விளங்கும் திமுக இயல்பாகவே வழக்கம் போல தாழ்த்தப்பட்ட சாதிமக்களுக்கு எதிராக செயல்பட்டது. கோவில் தீண்டாமை, சாதி ஆணவப்படுகொலைகள், வேங்கைவயல்களில் திராவிட மாடலின் சமூக நீதியானது  நாற்றமெடுத்து நாடெங்கும் நாறியது. சாம்சங் தொழிலாளர்கள், பரந்தூர் மக்கள், தூய்மைப் பணியாளர்கள் மீது திராவிட மாடல் ரத்தம் தெறித்தது. பாஜக ஆளும் மாநிலங்களைவிட திராவிட மாடலில்தான் அதிகளவு குடமுழுக்குகள் நடந்ததாக ஆர்.எஸ்.எஸ். ஸ்லீப்பர் செல் சேகர்பாபு மார்தட்டுகிறார். திருப்பரங்குன்றம், கோசலாக்கள், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் என கொடி கட்டி பறக்கிறது காவிக் கழிசடைகளின் அதிகாரம். அதிகார வர்க்கம் முழுதும் ஆர்.எஸ்.எஸ் பரவியுள்ளதாக வேல்முருகன் கூறுவது உண்மையே. இது தமிழகமா?? உ.பியா?? எனும் கேள்வி எழும் அளவுக்கு இருந்தது திமுக ஆட்சி. 

அதிமுக - பாஜகவின் மனைவி. திமுக - பாஜகவின் துணைவி என நாம் அறிந்ததே. மக்களும் அனுபவத்தில் இதை ஓரளவு அறிந்துள்ளனர். ஆனால் மூன்றாம் அகிலத்தில் இருந்து நேராக இந்தியாவுக்குள் குதித்த மருதையன்களுக்கும், சிபிஐ, சிபிஎம் மற்றும் சில எம்.எல் அமைப்புகளுக்கும் இன்னமும் திராவிட மயக்கம் தெளிந்தபாடில்லை. 

இவ்வாறு பாஜகவிற்கு மாற்றாக எந்த மாற்று திட்டமும் இல்லாத கட்சிகளை பாஜகவிற்கு மாற்று எனும் சந்தர்ப்பவாத அரசியலை முன்வைத்து திமுக - காங்கிரசு கூட்டணியை ஆதரிக்கும் அவலநிலை சட்டமன்ற இடதுசாரி கட்சிகளாலும், சில எம்.எல் அமைப்புகளாலும் ஏற்பட்டது.

என்ன செய்ய வேண்டும்?

1) பாசிசத்தை தீவிரப்படுத்தும் அமெரிக்க - அம்பானி - அதானி ஆதரவு உலகமய, தாராளமய, தனியார்மய, வணிகமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பது 

2) அதற்கு மாற்றாக மாநில சுயாட்சி மற்றும் மக்கள் நலனுக்கான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை (சுதேசிய அரசியல் பொருளாதாரக் கொள்கை) முன்வைப்பது 

3) அதிகாரப் பரவலை உண்டாக்கும் வகையில், பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் தேர்தலை ஜனநாயகப் படுத்துவதற்கான சீர்திருத்தங்கள்

4) தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், குட்டி முதலாளித்துவ சக்திகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய முதலாளிகள், வணிகர்கள், ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய மக்கள் முன்னணியைக் கட்டியமைத்தல் 

5) எந்தவொரு ஆளும் வர்க்க முதலாளித்துவக் கட்சியும் பாசிசத்திற்கு மாற்றாக விளங்காது என்பதை மக்களுக்கு உணர்த்துவது 

உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரி கட்சிகள், ஜனநாயக சக்திகள் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை ஏற்படுத்தி மக்களை அரசியல்படுத்த வேண்டும். மாறாக நடப்பிலுள்ள பாராளுமன்ற-சட்டமன்ற- தேர்தல் பாசிசத்தை ஜனநாயகம் என்று நம்பி அதன் மீதான மாயைகளில் மூழ்கியிருந்தால், ஆரிய-திராவிட மாயைகளில் மூழ்கியிருந்தால் நாடு பாசிச இருளில் நாசமாவது உறுதி. 

ஆகவே, பின்வரும் முழக்கங்கள், அதன் விளக்கமான மேற்கண்ட நிலைப்பாட்டின் அடிப்படையில் இடதுசாரிகள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள், பொது மக்கள் ஒன்றுபட ம.ஜ.இ.க அறைகூவி அழைக்கிறது.

பாசிச ஆட்சியமைப்பில் தேர்தலில் மட்டும் ஜனநாயகம் நீடிக்குமா?? 
திருப்பி அழைக்கும் உரிமையற்ற தேர்தல் ஜனநாயகமே அல்ல! தேர்தல் சீர்திருத்தம் -  ஜனநாயகத்திற்காகப் போராடுவோம்! 

* பாசிச ஆட்சிமுறைக்கு வித்திடும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ  முறையை எதிர்ப்போம்! 
பல்வேறு வர்க்கங்களையும் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விகிதாச்சார தேர்தல் முறைக்காகப் போராடுவோம்! 

* மாநில அதிகாரங்களை மத்தியில் குவித்துக்கொண்டு நடத்தப்படும் சட்டமன்ற தேர்தல்கள் வெறும் கண்துடைப்பே! மாநில உரிமைகள் -  அதிகாரங்கள் - அதிகாரப் பரவலுக்காகப் போராடுவோம்! 

* வெளியுறவுக் கொள்கையை  தீர்மானிக்க முடியாத பாராளுமன்றம்! பாராளுமன்றத்தின் ஏவலாக சட்டமன்றம்!  சட்டமன்ற தேர்தலை ஜனநாயகப்படுத்தப்  போராடுவோம்! 

* மத்திய அரசின் எடுபிடியாக செயல்படும் தேர்தல் ஆணையத்தைக் கலைக்கப் போராடுவோம்! அதிகாரப் பகிர்வுள்ள கூட்டு  ஆணையம்  அமைக்கப் போராடுவோம்!

* பாசிசம் என்பது மையப்படுத்தப்பட்ட  மூலதனத்தின்  சர்வாதிகாரம்! பார்ப்பனியமோ சனாதனமோ அல்ல! 

* SIR மற்றும் தொகுதி  மறுசீரமைப்பு சட்டம் (Delimitation act)  இந்துப் பெரும்பான்மைவாத வாக்கு வங்கியை உருவாக்கவே! தேர்தலை பாசிசமயமாக்கவே! 
தேர்தல் முறையே  பாசிசமயமான பிறகும் தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்தலாம் எனும் மாயைகளை தகர்ப்போம்! 

* திருப்பி அழைக்கும்  உரிமை கொண்ட  தேர்தல் முறை! 
அதிகார வர்க்கத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை! 
பொது வாக்கெடுப்பு (referendum / plebiscite) முறை!
விகிதாச்சார தேர்தல் முறை! 
போன்ற ஜனநாயக கோரிக்கைகளை வலுவாக  முன்னெடுப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

PDF வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம் 

Files