நான்கு மாநிலத் தேர்தல்கள் நமக்கு சொல்லும் செய்திகள்!

வலைதளக் கட்டுரை தொகுப்புகள்

நான்கு மாநிலத் தேர்தல்கள் நமக்கு சொல்லும் செய்திகள்!

1
நான்கு மாநிலத் தேர்தல்கள், நமக்கு சொல்லும் செய்திகள்!

அசாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பல திருப்பங்களை இந்திய அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளன.! அசாமில் பாஜக செய்த சூழ்ச்சிகள், மேற்கு வங்கத்தில் மம்தாவின் வீழ்ச்சி, பாஜகவின் எழுச்சி எப்படி உருவானது?,கேரளாவில் காங்கிரசின் வெற்றி – ஒரு விரிவான அலசல்;

இந்த  தேர்தல் முடிவுகளின் அடிநாதமாக திகழ்வது ஆட்சியாளர்கள் மீதான மக்களின் அயற்சியே ஆகும். இதற்கு விதி விலக்காக உள்ளது அசாம் மாநில தேர்தல் முடிவுகள் தான். அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொண்டதற்கு பின்னால் உள்ள காரணங்களும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. பாண்டிசேரி தேர்தல் முடிவுகளை, அதன் அளவு மற்றும் வீச்சை கருத்தில் கொண்டு நாம் இங்கு கருத்தில் கொள்ள வில்லை.

மூன்று முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருந்த (2011,2016, 2021) திரிணாமுல் காங்கிரசும், இரண்டு முறை கேரளத்தில் அபூர்வமாக தொடர்ந்த இடது சாரி அரசும்,

2021 முதல் ஐந்தாண்டுகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழக

அரசும் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டன.இம்மூன்று மாநிலங்களிலும் தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மீதான மக்களின் வெறுப்பும் , அயற்சியும் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டன.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்கத்தில் முதல்வர் ம்மதா பானர்ஜி ஆகிய இரு தலைவர்களின் சொந்த தோல்வியும்( கொளத்தூர் மற்றும் ப்பானிபூர்) கேரள முதல்வர் பினராயி விஜயனின் “சாரமற்ற வெற்றியும்” இதை உறுதிபடுத்துகின்றன.

இந்த மாநிலங்களில் எல்லாம் வேலை செய்த ‘ஆட்சியாளர் மீதான மக்களின் அயற்சி’ (anti incumbency) என்ற காரணி அசாமில் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும் பாஜக மீது

ஏன் வேலை செய்யவில்லை என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.

அசாமில் அந்த காரணி வேலை செய்யவில்லை என்பதை விட , அத்தகைய மனநிலையை மக்கள் அடையாமல் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதில் முதல்வர் ஹிமந்தா சர்மாவும்,

பா ஜ கவும் வெற்றி கண்டுள்ளனர். இதில் அவர்களுக்கு உதவிய இரு காரணிகளில் அசாமின் பாரம்பரியமும் ,அங்கு வாழும் பல தேசீய இன மக்கள் தொகையும் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் , 2023 -ல் நடத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஆகும்.

அசாம் தேர்தல்;

அசாமின் மொத்த மக்கள் தொகையில் 61.47% இந்துக்களும்,34.22% இஸ்லாமியர்களும் உள்ளனர். மொழி வழியாகவும் அசாமியை தாய் மொழியாகவும் வங்காள மொழியை தாய் மொழியாகவும் கொண்ட இருபெரும் பிரிவாக உள்ள சமுதாயம் அது.

இந்து – முஸ்லீம் மக்களின் கணிசமான இருப்பு , பாஜ கவின் வகுப்புவாத அரசியலுக்கு உகந்த களமாக இருக்கின்றது. இதற்கு முன்பு அசாமில் தலைவிரித்தாடிய அசாமிய தேசீய இனவாதம்“அசாமிய ஜாதியபாடி” இயக்கமாக உருவெடுத்து ஜாதி – மாதி – பேட்டி ஆகிய மாண்புகளின் அடிப்படையில் அசாமில் வசிக்கும் வங்காளிகளை அப்புறப்படுத்தும் இயக்கமாக உருவெடுத்தது.

அசாம் மாணவர் கிளர்ச்சியாக 1980களில் வெடித்த இயக்கத்திலும் அதை நடத்திய அசாம் கண பரிஷத் கட்சியிலும் தேசீய இனவாதம் இருந்ததே ஒழிய இந்து முஸ்லீம் என்ற மதவாதம் இல்லை. ஆனால் வெறுப்பு என்ற ஒற்றை காரணியில் இணைந்த தேசீய இனவாதிகளும், மதவாதிகளும் அசாம் அரசியலை இன்று பாஜகவின் பாதங்களில் கொண்டு சேர்த்துள்ளனர். வங்காளிகளை வந்தேறிகள் என்று நம்புகின்ற அசாமிய மக்களிடம் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் “மியா முஸ்லீம்களே” என்று இஸ்லாமியருக்கு எதிரான புதிய வகுப்புவாத போதனையை பாஜக விதைத்து அதன் பயனையும் அறுவடை செய்கிறது.

இதற்கு உறுதுணையாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2023 ல் துவக்கிய பாஜக இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை உடைத்து அவர்களின் செல்வாக்கை குறைத்தனர். இதை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவனரின் நன்மைக்காக செய்கிறோம் என கூறியதோடன்றி, போடோ பழங்குடியினரையும் இஸ்லாமியருக்கு எதிராக நிறுத்துவதில் வெற்றி கண்டனர். இப்படி அசாமிய இந்துக்களையும், வங்காளி இந்துக்களையும், முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினரையும் (தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர்) ஆகிய மூன்று பிரிவினரையும் இந்து தேசீயம் என்ற போர்வையில் ஒன்று சேர்த்துள்ளது. இதை எதிர்க்க

காங்கிரஸ் கட்சி தவறியதும், இஸ்லாமியருக்கெதிரான பாஜக அரசின் செயல்களை எதிர்த்து களம் காணத் தயங்குவதும் ( இந்துக்களை பகைத்து கொள்ள வேண்டுமே என தயங்குவது ) காங்கிரசின் இரண்டுங்கெட்டான் அரசியலாக அங்கு உள்ளது.

இதன் விளைவு வகுப்புவாதம் தேர்தல் களத்தில் பாஜக விற்கு (97+5= 102 இடங்கள், வாக்கு 48.27%) அதிக இடங்களை ஈட்டி தந்துள்ளது. பா ஜ க வெற்றி பெற்றுள்ள 102 தொகுதிகளிலும் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என்பதும் , எதிர்கட்சி வரிசையில் வென்ற 24 இடங்களில் 22 பேர் இஸ்லாமிய சமூகத்தினர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காங்கிரசின் உட்கட்சி பூசலும், ஒற்றுமையின்மையும், முக்கிய தலைவர்களின் விலகலும், எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையும் சேர்ந்து பாஜகவை மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்த்தியுள்ளது.

மேற்கு வங்கத் தேர்தல்;

2011 முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவின் வெற்றி (206 தொகுதிகள், வாக்கு விகிதம் 45.83%) ஒரு அறமற்ற வெற்றி என்றும், முதல்வர் பதவியை துறக்கப் போவதில்லை என ம்மதா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் காவிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று இடைவிடாது “ உழைத்த” மோடி அரசு வாக்கு திருட்டின் மூலம் இந்த வெற்றியை ஈட்டியுள்ளது என்று எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சிறப்பு தீவிர தேர்தல் அட்டவணை திருத்த நடவடிக்கைகளின் மூலம் மேற்கு வங்கத்தில் லட்சக் கணக்கானோர் வாக்குரிமை பறிக்கப்பட்டனர். நீதியையும், அரசியல் சாசன மாண்பையும் நிலைநாட்ட வேண்டிய உச்சநீதி மன்றம் தனது கடமையை செய்ய தவறியதானால் இந்த விபத்து மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்சமான, தான்தோன்றி தனமான , செயல்பாடுகளால் வாக்காளர் உரிமை மறுக்கப்பட்டதோடன்றி, தேர்தல் களமும் சம நிலை குலைந்து மாசுபடுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலமும், சுயாதீன அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்தி மேற்கு வங்க அரசை முடக்கியும் பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது மட்டுமே தேர்தல் முடிவுகளை தீர்மானித்தன என்றும் சொல்வதற்கில்லை. நேர்மையான தேர்தல் நடந்திருந்தால் மேற்கு வங்க மக்கள் மீண்டும் ம்மதா பானர்ஜியை , திரிணாமுல் கட்சியை தேர்ந்தெடுத்திருப்பார்களா? என்ற கேள்விக்கும் தெளிவான விடையில்லை.

2016 , 2019 தேர்தல்களில் படிப்படியாக வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்ட பாஜக, 2021 மாநிலத் தேர்தலில் ஆக்ரோஷமாக களம் இறங்கியது, ஆட்சியை பிடிக்காவிட்டாலும் 77 தொகுதிகளை வென்று , 38% வாக்குகளை அங்கு பெற்றது.

எனவே பா ஜ கவின் வெற்றி SIR மூலமாக மட்டுமே சாத்தியமானது என்ற கருத்து சரியானதல்ல. சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவாக ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள் என்பதும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகம்பேர் இஸ்லாமியர்கள் என்பதும் உண்மைதான். பத்து முதல் பதினைந்து தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வாக்காளர் நீக்கத்தினால் தோல்வியை தழுவினார்கள் என்பதும், அங்கு பா ஜ க வென்றது என்பது மறுப்பதற்கில்லை. இவ்வாறு வெட்டி குறைக்கப்பட்ட தொகுதிகள் 13ல் திரிணாமுல் கட்சி வென்றிருப்பதும் உண்மைதான்.

எனவே SIR மட்டுமே ம்மதாவின் தோல்விக்கு காரணம் என்று கூறுவது சரியல்ல. ம்மதாவின் தோல்விக்கான காரணங்களில் SIR மிக முக்கியமானது. அது தவிர்த்த ஏனைய முக்கிய காரணங்கள் பல உள்ளன.

அவை, திரிணாமுல் ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழலும், முறைகேடுகளும்ஆகும். அந்த கட்சியின் கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகளும் , வசூல் மையங்கள் வைத்து மாநிலம் பூராவும் கமிஷன் பார்த்த திரிணாமுல் கட்சிமக்களின் ஆதரவை இழந்து நின்றது,

‘போதுமடா சாமி ‘ என மக்கள் தப்பிக்கும் வழியைத் தேடியது வாக்குகளில் தெரிகிறது. பாலியல் வன்கொடுமைகளும், குற்றச் செயல்களும் ஆட்சியினரின் ஆதரவோடு வலம் வருவதும், பாதுகாப்பின்மையையும் மக்கள் பார்த்து பார்த்து சலித்து விட்டனர். ம்மதா அரசின் மக்கள் நலத்திட்டங்களும் , உதவித் தொகைகளும் இந்த சலிப்பை சரி செய்யவில்லை.

பாஜகவினரின் வகுப்புவாத பிரசாசாரங்களும், சங் பரிவாரின் ஊடுருவல்களும் மேற்கு வங்க கிராமப் புறங்களில் பல வடிவங்கள் பெற்று காலூன்றின. நகர்ப்புறத்தில் உள்ள வாக்காளர்கள்

பலர் வகுப்புவாதத்திற்கு துணை போகாவிடினும், திரிணாமுல் கட்சியினரின் அராஜகத்திற்கு முடிவு கட்ட , களத்தில் வலிமை வாய்ந்த கட்சியாக திகழும் பாஜக விற்கு ஆதரவை இப்பொழுது நீட்டியுள்ளனர். இடது சாரிகளும், காங்கிரசும் மேற்கு வங்கத்தில் குறைத்து வாக்கு வாங்கும் சூட்சுமம் இது தான். இத்தகைய கள நிலைமையை பாஜ க வெற்றிகரமாக பயன்படுத்தி இந்துத்துவ அஜெண்டாவை அங்கு நடைமுறை படுத்த முயற்சிக்கிறது.

மொத்த வாக்காளர்களில் 30% விழுக்காடுள்ள இஸ்லாமியர்களின் வாக்கு முன்பு ஒருசேர திரிணாமுல் கட்சிக்கு சென்றன. ஆனால் அது இப்பொழுது காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் இந்திய மத சார்பற்ற முன்னணி (ISF) என்ற கட்சிகளும் திரிணாமல் கட்சியோடு இந்த வாக்குகளை பங்கு போடுவதால் திரிணாமுல் வாக்கு விகிதம் குறைந்துள்ளது.

அதே சமயம் இந்துக்களின் வாக்கு, மேலும் மேலும் ஒருசேரக் குவிந்து சங் பரிவாரத்தை ஆதரிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து களம் காண திராணாமுல் கட்சியிடம் தெளிவான சித்தாந்தமோ, சிறப்பான திட்டமோ, கொள்கையோ இல்லை. மாற்றம் வேண்டும் எனக்கூறி மாற்றத்திற்கான மாற்றுக் கொள்கையோ, திட்டமோ இல்லாது ஆட்சியில் அமர்ந்தார் ம்மதா 2011ல் . அப்பொழுது மக்கள் இடது சித்தாந்தத்தை கைவிட்டு, ம்மதாவின் கவர்ச்சி அரசியலுக்கு இரையாயினர். இன்று 2026-ல் பதினைந்து ஆண்டுகள் கழித்து திரிணாமுல் கட்சி அராஜகத்தை ஒதுக்கிவிட்டு, மாற்றம் என்ற பெயரில் இந்துத்துவ  சித்தாந்தத்தை , வங்க மக்கள் தழுவுகின்றனரா?

கேரளத்தில் பத்து ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு தேர்தலில் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட கேரளத்தில் 102 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தலைமையிலான UDF மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. வெறும் 35 தொகுதிகளை மட்டுமே வென்ற இடதுசாரி கூட்டணி , தன்னுடைய வாக்கு விகித்த்திலும் (37.34%) வீழ்ச்சியே கண்டுள்ளனர்.

பத்தாண்டுகளாக ஒரே கூட்டணி ஆட்சியில் நீடிப்பது கேரளத்தின் வழக்கம் அல்ல, என்பதை முறியடித்து பினராயி விஜயன் ஆட்சி 2021-ல் ஆட்சியில் நீடித்தது. ஆனால், இப்பொழுது ஒப்பீடு செய்ய மாற்றுக் கட்சி ஆட்சி இல்லாத நிலையில் இடது சாரிகளின் ஆட்சி மக்களின் மனதில் சலிப்பை சம்பாதித்து தோல்வியை தழுவியுள்ளது. இத்துடன் ஆட்சி முறையில் முன்பிருந்த

கூட்டுத் தலைமை, கலந்துணர்ந்து செயல்படுதல் என்ற நிலைமாறி, பினராயி விஜயனின் முடிவும் , முகமும் அரணின் அனைத்து செயல்களிலும் தென்பட்டதால் மூத்த கட்சி தலைவர்கள் , விஜயனின் ஆதிக்கத்தை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறினர். இன்று மக்கள் மத்தியிலும் அந்த சலிப்பு பரவியுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த முறை மலபார் பகுதியில் சிறுபான்மையினரின் வாக்குச் சிதறலால் அந்த பகுதியில் அதிக இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்த விஜயனுக்கு இந்த முறை சிறுபான்மையினர் காங்கிரஸ் கூட்டணியின் பின் சிந்தாமல், சிதறாமல் அணி திரண்டதால் தோல்வியை சந்திக்க தேர்ந்துள்ளது. மற்றொரு  சிறுபான்மையினரான கிறித்துவர்களும்,

காங்கிரஸ் கூட்டணிக்கான ஆதரவை நீட்டித்ததால் பினாராயி விஜயனின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

திருவிதாங்கூர் பகுதியில் பாஜகவினர் மூன்று தொகுதிகளில் வென்று தங்களது வாக்கு விகிதத்தை 14% உயர்த்தி உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் .

இடது சாரி அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் ஒன்றான வெள்ளப்பள்ளி நடேசன் விவகாரத்திலும், சபரி மலை வழக்கில் அரசின் நிலை பாட்டிலும்

ஊசலாட்டங்கள் ஏற்பட்டுள்ளதை சரி செய்யாத அல்லது சரி செய்ய விரும்பாத இடதுசாரி அரசு சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டிகாட்டுகின்றன.

சபரிமலை கோவில் தங்கம் திருடு போன விவகாரத்திலும் ஆட்சியின் மீது விழுந்த சந்தேகப்புள்ளி மறையவில்லை என்பதையும் தேர்தல் காட்டுகிறது. பல்வேறு சமய மார்க்கங்களை பின்பற்றும் கேரள மக்கள் மாபெரும் தவறுகள் ஏதும் இல்லாவிடினும் இடதுசாரியினரின் பத்து ஆண்டு ஆட்சியில் சலிப்படைந்து , காங்கிரஸ கூட்டணிக்கு வாய்ப்பு கொடுக்க தயாராய் உள்ளதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்;

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் தி மு க அரசை மக்கள் தோற்கடித்தனர் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தி மு க வை விட்டால் தமிழர்களை காப்பாற்ற யாருமில்லை என்ற மாய வலையை பின்னியிருந்த ஊடகத்தாரின் சித்திரத்தை கிழித்தெறிந்து

தமிழக வெற்றி கழகம் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆச்சரிய மூட்டும் தகவல் என்னவென்றால் , கட்சி துவங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆலமரம் என்று வருணிக்கப்பட்ட இரு திராவிட கட்சிகளை தன்னந்தனியாக களத்தில் எதிர் கொண்டு தோற்கடித்துள்ளார். இதற்காக விஜய் எடுத்த முடிவும், வகுத்த திட்டமும், அதை செயல்படுத்திய விதமும் உண்மையில் சாதனைகளே ஆகும்.

அக்கட்சி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மீறி திமுக வை தோற்கடித்தது, அதிமுக – பா ஜ க கூட்டணியை ஓரங்கட்டி மூன்றாமிடத்திற்கு தள்ளியுள்ளது பலரது கனவை கலைத்துள்ளது எனலாம்.

திமுக கூட்டணியின் தோல்விக்கு காரணங்கள் ஏராளமுள்ளன. மக்களின் வெறுப்போ பன் மடங்கு இருந்தன. இயற்கை வளக்கொள்ளை, மணற் கொள்ளை, திட்டங்களில் ஊழல், வேலையின்மை, அரசு வேலைகளை தனியாரிடம் ஒப்பந்தம் மூலம் கொடுப்பது, கள்ள சாரயம் பெருக்கெடுத்தல், காவல்துறையின் அத்துமீறல் , வெளியில் வீராப்பு உள்ளே சரண்டர் என பாஜக கொள்கைகளை சத்தமின்றி அமுல் செய்த ( கல்வி மற்றும் தொழிற் கொள்கைகளை) ஸ்டாலின் அரசு மீது மக்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏராளமிருந்தன..ஆனால் இவற்றையெல்லாம் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதன் மூலமும், நலத்திட்டங்கள் மூலமும் மூடி மறைத்து விடலாம் என்று தி மு க நினைத்தது.

இந்த நாடகத்திற்கு மக்கள் ஒரு முடிவு கட்டியுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிலும் புதிதாக களமிறங்கியுள்ள விஜய் கட்சியான தவெக விற்கு 108 இடங்கள் கொடுத்து தங்கள் எண்ணத்தை மக்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள அழு குரல்கள் ஒருபுறமிருக்க, ஒட்டு மொத்தமாக அகில இந்திய அளவில் இத்தேர்தல் முடிவுகள் கூறும் செய்தி என்ன?

ஆளும் மோடி அரசின் மதவாதப் போக்கையும்,

ஜனநாயக விரோத போக்கையும் எதிர்கட்சிகள் எவ்வாறு எதிர் கொள்ள போகின்றன ?

மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பது, தொகுதி மறுசீரமைப்பை அனைவரும் ஏற்கும் விதத்தில் எவ்வாறு நிறைவேற்றுவது, அரசியல் சாசனக் கூறுகளை காப்பாற்றி அனைவருக்குமான புதிய அரசை எவ்வாறு ஏற்படுத்துவது? என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியின் பங்கு இனி எப்படி இருக்கும்?

உண்மையில் இக் கட்சிகளெல்லாம் இணைந்து பா ஜ க வை – மோடி ஆட்சியை – வீழ்த்த முடியுமா? அரசியல்,பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளில் இக் கட்சிகள் பாஜக வின் கொள்கைகளுக்கெதிரான உருப்படியான மாற்று திட்டத்தை முன் வைக்காமல் இது சாத்தியமா?

வாக்கு திருட்டு என்று அவ்வப்போது கூவாமல் ,தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் நடைமுறையையும் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் மோடி அரசின் செயல்களை எதிர்த்து எதிர்கட்சிகள் நிலைத்து நின்று போராட திட்டம் உள்ளதா?

ஊழலிலும் அதிகார முறைகேட்டிலும் பாஜக போலவே இந்தியா கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுக் கொண்டு நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று பேசுவதால் மக்களின் நம்பிக்கையை பெற முடியுமா?

தோல்வியடைந்துள்ளதால் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக மற்றும் திரிணாமுல் மற்றும் இடது சாரி கட்சிகளின் நிலை என்ன?

காங்கிரஸ் கட்சி கேரளத்தில் ஆட்சியை பிடித்தாலும், அசாமில் மோசமான தோல்வியடைந்துள்ளது. மாநிலங்களில் எதிரும் புதிருமாக இருந்தாலும் தேசீய அளவில் காங்கிரசுடன் இடது சாரிகள் நிற்கின்றனர். அப்படியும் இப்படியும் இருந்த ம்மதா ‘இந்தியா’ ‘ கூட்டணியுடன் இணைந்து தீவிரமாக செயல்படப் போவதாக கூறியுள்ளார். ராகுல் காந்தி மேற்கு வங்க தேர்தல் பரப்புரையில் ”மமதா ஆட்சியை காட்டாட்சி’’ என வருணித்தாலும் ”பாஜகவின் வெற்றி தேர்தல் திருட்டு மூலமே சாத்தியமானது’’ என கூறியுள்ளார்.

ஹரியானா, மகாராஷ்டிரா வை தொடர்ந்து SIR மூலம் பீகாரிலும் இப்பொழுது மேற்கு வங்கத்திலும் தேர்தல் மோசடி நடந்துள்ளது, வாக்கு திருட்டு நடந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆனால், இத்தகைய குற்றச் சாட்டுகளை கேரளத்திலோ தமிழ்நாட்டிலோ இதுவரை யாரும் எழுப்பவில்லை. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவளிக்க முன் வந்துள்ளது. இடதுசாரிகளும் விசிகவும் கூட இந்த பாதையில் தொடர வாய்ப்பு உள்ளது.

பா ஜ க எங்களது கொள்கை எதிரி என்ற நிலைபாட்டில் உள்ள தவெக வும் இந்தியா கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. அநேகமாக அந்த நிபந்தனையின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டியிருக்க வேண்டும்.

அப்படி நேர்ந்தால் திமுக வின் நிலைப்பாடு என்ன? தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக தொடருமா அல்லது மோடிக்கு ஆதரவை மறைமுகமாக அளிப்பார்களா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

இவற்றுக்கெல்லாம் விடை விரைவில் தெரிய வேண்டும் , அதுவே மக்களின் நம்பிக்கையை வளர்க்கும்!

ச.அருணாச்சலம்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24623/four-state-election-2026/

================================

2
கார்ப்பரேட் சந்தை தான் கட்சிகளை வழி நடத்துகிறது!

சந்தை அரசியல் சமூகத்திற்கான அரசியலாகுமா? இன்று மக்களை ஆள்வது யார்?  மத்திய, மாநில ஆட்சிகள் யாருக்கானவை? ஆண்ட கட்சிகள், தேசியக் கட்சியானாலும் சரி, மாநிலக் கட்சியானாலும் சரி அனைத்தையும் ஊழல் என்ற சேற்றுக்குள் புதைய வைத்து விட்ட  கார்ப்பரேட் சந்தையின் ஆற்றல் குறித்து அலசுகிறார் பேராசிரியர் க.பழனித்துரை

இன்று மக்களை ஆள்வது யார்? மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் பிரதிநிதிகளா அல்லது தேர்தலுக்கும் அரசியல் நடத்துவதற்கும் யார் மூலதனம் தருகிறார்களோ அவர்களா?

இந்த ஆட்சி யாருக்கானது?

மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படுகிறதா? அல்லது அரசியல் செய்வதற்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கும் நிதி தரும் சந்தைக்கா?

இந்தக் கேள்வியை ஏன் நாம் கேட்க வேண்டியுள்ளது?

நாம் பொருளாதாரத்தில் வரலாறு காணாத வளர்ச்சியை தொடர்ந்து சாதித்து வரும் நிலையில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்பை பொது வினியோக முறையில் தரும் விலை இல்லா உணவுப் பொருள்கள் கொண்டு ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர். அப்படி என்றால் நம் நாடு அடைந்த 7 சத பொருளாதார வளர்ச்சி யாருக்குச் சென்றது. இதைக் கேட்க இந்த நாட்டில் யாரும் இல்லையே.

சந்தையை நடத்துபவர்களுக்கு அரசியல் உதவியாக இருக்கின்ற வரை சந்தைக்காரர்கள் அள்ளித் தருவார்கள், அவர்கள் உருவாக்கிய செல்வத்திலிருந்து. அதே போல் ஆட்சியில் உள்ளவர்கள் சந்தைக்கு உதவியாக இருக்கின்றவரை ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர எவ்வளவு நிதியை வேண்டுமானாலும் தருவார்கள்.

அரசாங்கத்தையே வாங்கும் அசூர சக்தி பெற்ற சந்தை!

வாக்கை வாங்கலாம், சட்டமன்ற உறுப்பினரை வாங்கலாம், பாராளுமன்ற உறுப்பினரை வாங்கலாம், ஊடகங்களை வாங்கலாம், அறிவு ஜீவிகளை வாங்கலாம், பொதுக் கருத்தாளர்களை வாங்கலாம், ஆராய்ச்சிக் கம்பெனிகளை வாங்கலாம், எதையும் வாங்கலாம். ஏன் ஓர் கட்சியை வாங்கலாம் அரசாங்கத்தை வாங்கலாம். இன்று அந்த அளவுக்கு அசுர சக்தி படைத்ததாக சந்தை வளர்ந்து விட்டது.

இன்று  சந்தை தான் அனைத்தையும் முடிவு செய்கிறது. மக்கள் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, கிடைக்கும் வாழ்வாதாரம் அனைத்தையும் முடிவு செய்கிறது. எப்படிப்பட்ட ஆட்சி மக்களுக்கு வேண்டும் என்று முடிவு செய்வதை விட, எப்படிப்பட்ட ஆட்சி சந்தைக்குத் தேவை என சந்தை முடிவு செய்து அதை உருவாக்கத் தேவையான வாக்குகளை சந்தைப்படுத்த மக்களுக்கு பணம் தந்து வாக்குக்கு விலை தந்து பெற வைத்து விடுகிறது. மக்கள் ஜனநாயகத்தை சந்தை ஜனநாயகமாக மாற்றி வைத்துக்கொண்டு விட்டது சந்தை.

புதிய பொருளாதாரக் கொள்கை திறந்துவிட்ட வாசல்;

இதைப் புரிந்து கொள்ள ஒரு வளர்ச்சி வரலாற்றை இங்கே தருவது தான் தேவையாக இருக்கிறது. 1991-ல்தான் சந்தைக்கு இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கி திறந்து விடப்படுகிறது. இதைத் திறந்து விட்டவர் பி.வி.நரசிம்மராவ். எப்படித் திறந்துவிடப்பட்டது என்பதை 1991ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையை வாசித்தால் நாம் அறிந்து அந்த அறிக்கையை வாசித்தவர் பின்னாளில் இரண்டு முறை பிரதமராக இருந்தார். ஆனால் 1991ல் நிதி அமைச்சர். அவர் தான் மன்மோகன்சிங். அதற்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய். தேசத்தை ஒரு இக்கட்டான பொருளாதாரச் சூழலிலிருந்து வெளியேற்ற செய்தது தான்.

கார்ப்பரேட் சந்தையால் கட்டமைக்கப்பட்ட பிம்ப அரசியல்! – இந்தியாவை மாற்றி அமைத்த சிற்பி.

அன்று அவர்களுக்கு இருந்த வாய்ப்பு அது தான். ஆனால், நம் அரசமைப்புச் சாசனத்தில் உள்ள சோசலிசம் என்ற சொல் பற்றி எவரும் கண்டு கொள்ளவில்லை. இன்று அது ஒரு அலங்காரச் சொல் மட்டும்தான். அதற்கான பொருள் எந்த இடத்திலும் இல்லை. அந்த சந்தைக்கான முன்னெடுப்பை பின்னாளில் வாஜ்பாய் பிரதம அமைச்சராக இருந்தபோது அதை மேலும் வலுவாக்கி சந்தைப் பொருளாதாரத்தில் நாட்டைத் தோயச் செய்தார். அதன் பிறகு இந்த புதிய பொருளாதாரத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட மன்மோகன்சிங் பிரதமரானார். அதை இன்னும் வேகமாகவும் வலுவாகவும் காலூன்றச் செய்தார்.

அரசியலே சந்தையானது;

இந்தக் கால கட்டத்தில் தான் சந்தை காட்டாற்று வெள்ளம் போல் பெருகுவதை உன்னிப்பாக கவனித்த அரசியல்வாதிகள் சந்தைக்குள் புகுந்தனர். எல்லாத் தளங்களிலும் அவர்கள் காலூன்றி அவர்களும் சந்தைக்குள் புகுந்து வணிகர்களாக, கார்பரேட் கம்பெனிகளுக்குள் பங்குதாரராக  மாறினர். கல்விச் சந்தை, மருத்துவச் சந்தை, நிலச் சந்தை, கனிம வளச் சந்தை, கட்டமைப்பு உருவாக்கும் செயல் என எதையும் விட்டு வைக்கவில்லை. கடைசியாக அரசியலையும் சந்தையாக்கிவிட்டனர். பெரும்பான்மை அரசியல்வாதிகள் பகுதி நேர அரசியலும், முழு நேர தொழில் செயல்பாட்டிலும் ஈடுபட்டதன் விளைவுதான் கட்சிகளால் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட முடியவில்லை. கவனம் செலுத்த நேரமில்லை.

தேர்தலின்போது பணம் தந்து வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைப் பிடிக்கின்றனர். வாக்கில் ஆரம்பித்த விற்பனை, சட்டமன்ற உறுப்பினர் விற்பனை, பாராளுமன்ற உறுப்பினர் விற்பனை என அனைத்தும் விற்பனைக்கானதாக மாறிவிட்டது. இதற்கு உடந்தையாய் உயர் அதிகார வர்க்கத்தையும் சந்தை உள்வாங்கி, அரசியல்வாதிகளோடு அவர்களையும் ஜோதியில் கலக்க வைத்து விட்டது.

மக்களிடம் இருந்து விலகிய அரசியல்;

ஒட்டு மொத்த அரசியல், ஆட்சி, ஆளுகை, நிர்வாகம் அனைத்தும் சந்தை நோக்கி செயல்பட ஆரம்பித்து, சாதாரண மக்களிடமிருந்து விலகி நிற்க அனைவருக்கும் கற்றுத் தந்தது சந்தை. இந்தச் சூழலில் தான் இந்தியா ஒளிர்கிறது என்ற விளம்பரம் வந்தது. அதைச் சரியாக பயன்படுத்தி, மக்கள் படும் வேதனை சொல்லி மாளவில்லை, இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் மக்களை வெறுப்பேற்றும் அளவுக்கு அரசியல் எதிர் வினையாற்றி தேர்தலைச் சந்தித்தனர் 2004ல். அப்பொழுது மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் குறைந்தபட்ச செயல்த்திட்டத்துடன் தேர்தலைச் சந்தித்து, அந்த அரசியல் அணி வெற்றி பெற்றது.

சந்தைக்கு தேவையானவர் நாட்டுக்கு தலைவரானார்!

அந்த நேரத்தில் அந்த ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்க தலைவரை தேடிய போது தலைவருக்குப் பதிலாக ஒரு சந்தைக்கான தலைமை ஆலோசகர் அந்த ஆட்சிக்கு தலைமையேற்க சம்மதித்தார். யாரை அன்று ஆட்சிக்குத் தலைவராக தேர்ந்தெடுத்தார்களோ, அவர் தான் 1991-ல் நம் நாட்டின் பொருளாதார கொள்கையை மாற்றியமைத்த மன்மோகன்சிங். மிகவும் நேர்மையானவர். ஆனால் அவர் மக்கள் தலைவர் அல்ல.

நரசிம்மராவ், வாஜ்பாய் கட்டி வளர்த்த இந்திய புதிய பொருளாதாரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றார், அந்த மாமனிதர் மன்மோகன் சிங். ஒரு ஐந்தாண்டு அல்ல. இரண்டு ஐந்தாண்டு மக்கள் தலைவராக எவரும் அந்தக் கட்சிகளிலிருந்து கிடைக்காத நிலையில் அவரே ஆட்சித் தலைவராக நீடித்தார். அந்தக் கூட்டணி காலத்தில் இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு வளர்ந்த பொருளாதாரத்தினால் அறிவித்து மாநில அரசுகளின் பொறுப்பில் நிறைவேற்ற வைத்தது.

அதே நேரத்தில்தான் கூட்டணிக் கட்சிகளின் எல்லை இல்லா ஊழல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி விழி பிதுங்கினார் மன்மோகன் சிங். கடைசியில் சந்தைக்காரர்களை அதாவது, பெரும் தொழில் அதிபர்களை சி.பி.ஐ அலுவலகம் முன் நிற்க வைத்தார் மன்மோகன் சிங். அப்பொழுதுதான் சந்தை மனிதர்கள், தனக்கானவர்களை தேடினர், கிடைத்து விட்டார். 1991-ல் ஆரம்பித்து வளர்த்த சந்தைப் பொருளாதாரத்தை ஒரு குழப்பத்தில் 2013-ல் கொண்டு வந்து நிறுத்தியது அந்த அரசு.

கோடுகளை எல்லாம் ரோடுகளாக்கிய மோடி

2014-ல் தெளிவுடன் வந்த புதியவர், முந்தைய அரசு போட்ட கோடுகளை எல்லாம் சாலையாக சிமெண்ட் சாலையாக கொள்கைகளிலும், சட்டங்களிலும், திட்டங்களிலும் கொண்டுவந்தார். அவர் போட்ட சாலை சந்தைக்கானது. அதற்கு முன் போட்ட கோடுகள் சந்தைக்கும் சமூகத்திற்குமானதாக இருந்தன. ஆனால், இவரோ சந்தையை பாதுகாப்பாக்கிக் கொண்டார். மக்களுடன் இருந்த கட்சிகள் இந்த சந்தை காலத்தில் தங்களை தங்கள் தொழில்களுக்குள் புதைத்துக் கொண்டன. பகுதிநேர அரசியலில் ஈடுபட்டன. மக்களிடமிருந்து விலகி நின்றன.

அரசியல் + வியாபாரம் = அரசியல்வாதி

அதன் விளைவு மக்கள் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி, சந்தைப் பிரச்சினைகளை கவனிக்க ஏதுவாக புதிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் பிரச்சினைகளை யாரும் விவாதிக்காமல் பார்த்துக் கொண்டனர். வறுமை, பசி, வேலை வாய்ப்பின்மை, தீண்டாமை, வாழ்வாதாரம், விவசாயிகளின் தற்கொலை, தண்ணீர் பஞ்சம், சுற்றுச் சூழல், அனைத்தும் புறம் தள்ளப்பட்டு நாட்டுப்பற்று, பொருளாதார வளர்ச்சி, உலகம் பாராட்டும் ஒட்டுமொத்த வளர்ச்சி, கட்டுமான வளர்ச்சி என சந்தைக்கான முழக்கங்களை கட்டியமைத்து பழைய விவாதங்களை முற்றிலுமாக புறக்கணிக்க, ஊடகங்களை அதிகார மையம் சந்தைப் பக்கம் கொண்டு சென்றுவிட்டது.

கட்சிகளை ஊழல் சேற்றுக்குள் புதைத்த சந்தை!

சந்தையே ஊடகங்களை பொருள்கள் கொள் முதல் செய்வது போல் செய்து மக்களின் புலன்களைத் தூண்டி நுகர்வு வெறிக்கு மக்களை மதிமயக்கி வைத்துக் கொண்டனர். ஆண்ட கட்சிகள், தேசியக் கட்சியானாலும் சரி, மாநிலக் கட்சியானாலும் சரி அனைத்தையும் ஊழல் என்ற சேற்றுக்குள் புதைய வைத்து விட்டது சந்தை. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது இன்றைய ஆளும் கட்சி. இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் வளம் பெற்றார்களா?  சிரமத்தில் இருக்கிறார்களா? என்பதைப் புரிந்து கொள்ள இரண்டு அறிக்கைகளைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

வறியவர்களை அதிகப்படுத்திய வளர்ச்சிப் பொருளாதாரம்;

இந்த அறிக்கை அரசால் தயாரிக்கப்பட்டது. அதை தொழிலாளர் ஆணையத்தின் தலைவராக இருந்த அர்ஜின் சென் குப்தா தயாரித்த அறிக்கை. அந்த நேரத்தில் பொருளாதார வளர்ச்சி 9% ஆகும். அப்போது வாழ்ந்த 104 கோடி மக்களில் 83.6 கோடி மக்களின் தின வருமானம் ரூ 20 மட்டுமே. இன்று மக்கள் தொகை 146 கோடி. இதில் மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையைப் படித்தால் நாம் புரிந்து கொள்ளலாம். இன்று இந்தியாவில் உள்ள 70% மக்களின் நிலை பரிதாபகரமானது என்பது அனைத்து மேம்பாட்டு அறிக்கைகளும் கூறுகின்றன.

தேர்தல் அரசியல் எனும் பொம்மலாட்டம்!

ஆனால், இதைப் பற்றிய எந்தவித விவாதம் இல்லாமல் நடக்கும் ஒரு தேர்தல் அரசியலை சந்தை தெளிவாக பொம்மலாட்டம் நடத்துவது போல் அரசியல் கட்சிகளை வைத்து நடத்துகிறது. ஊடகத்தை சந்தை விலைக்கு வாங்கிக் கொண்டது. அது செய்ய வேண்டிய வேலையை அது செய்வது கிடையாது, அறிவுஜீவிகளை சந்தையும், அரசும் வாங்கிக் கொண்டு அரசுக்கு வால் பிடிக்க வைத்து விட்டது.

அரசுப் பணியாளர்களை மக்களை மேய்க்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளது சந்தை. நடுத்தர வர்க்க மக்களை சுயநலமாக சிந்தித்து தாங்கள் எப்படி கோடீஸ்வரர் ஆகுவது என சிந்திக்க வைத்து விட்டது. ஏழைகளை குடியிலும், கேளிக்கைகளிலும், உணவிலும் தோய வைத்து விட்டது. இதன் விளைவு இன்று சந்தை மக்களுக்கான அரசியலை தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது.

இன்றுள்ள சந்தைக்கான அரசை அசைக்க முடியாத நிலையில் எதிர்க் கட்சிகளை முரண்பட்டு மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது சந்தை. இந்தச் சூழலில் இந்த அரசியல் கட்சிகளின் அரசியலால் நிலைமை மாறப் போவது கிடையாது. இதை மாற்ற சமூகச் சிந்தனை கொண்டோர் ஒன்றிணைந்து கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் அரசியலைக் கட்டும் போது தான் சாத்தியமாகும். தீயவைகள் சமூகத்தில் நடப்பது தீயவர்களால் அல்ல, நல்லவர்களின் அமைதியால் என்று எட்மண்ட் பர்க் கூறுவான்.

நான் நல்லவன் என்று கூறி வீட்டில் அமர்ந்திருக்காமல், இன்னொரு நல்லவருடன் இணைந்து மக்களுடன் செயல்படும் போது மட்டும் தான் மாற்றம் திகழும் என்பதை மனதில் கொண்டு செயல்படப் புறப்பட வேண்டும். அது தான் இன்றைய தேவை.

கட்டுரையாளர்; க. பழனித்துரை, பேராசிரியர், எழுத்தாளர், காந்திய செயற்பாட்டாளர்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24631/corporate-market-politics-in-india/

==============================

3
‘வஞ்சிக்கப்பட்ட வாலிபன்!... விஜய் வெற்றிக்குக் காரணம் இதுதான்...’

மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் டி தருமராஜ், கூர்மையான அவதானிப்புகளுக்கும் கருத்துகளுக்கும் அறியப்பட்டவர். யாரும் எதிர்பாராத அளவுக்கு கட்சி ஆரம்பித்த குறுகியகால இடைவெளியில் விஜய் மாபெரும் அரசியல் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பெரும் ஆதரவு உள்ளது என்பது பற்றி கணித்தவர்களில் பேரா. டி.தருமராஜ் முக்கியமானவர். சமூகப் பண்பாட்டு அசைவுகளின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தும் ஆய்வுக் கருத்துகளுக்கு உரியவரான பேராசிரியர் அவர்களிடம் தவெக வெற்றி குறித்து சில அரசியல் கேள்விகளை முன் வைத்தோம்.

 மாநிலத்தில் பெரும்பாலான அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள் கணிக்க முடியாத விஜய் அலையை முன்கூட்டியே நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

இதை விஜய் அலை என்று சொல்வதே தவறு. ஆனால், எல்லா அறிவுஜீவிகளும் அப்படி நினைத்து தான் ஏமாந்து போனார்கள்.  இது தமிழ்ப் பண்பாட்டில் கடந்த பத்தாண்டுகளாக நிகழ்ந்து வரும் மிக முக்கியமான மாற்றம்.  அதன் முதல் வெளிப்பாடு, 2017இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம்.  அந்தப் போராட்டத்தின் போதும் நமது சிந்தனையாளர்கள் மக்களின் எழுச்சி என்று புளகாங்கிதம் அடைந்து தங்களுக்குள் கிளுகிளுத்துக் கொண்டார்கள்.  நான் அப்பொழுதும் இந்த வகைப் போராட்டம் ‘தலைமையின் வெற்றிடத்தை’ முன்னிட்டு நிகழும் போராட்டம் என்றே எழுதிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுதும் எல்லோருக்கும் அது அவமரியாதையாகப் பட்டது.  அதைப் புரட்சி என்றே அழைக்க வேண்டும் என்றார்கள்.  அதன் பின்பு தான் என்னுடைய ஆய்வு ஜல்லிக்கட்டு பற்றி ஆரம்பித்தது. அதன் போக்கில், தமிழ்ச் சமூகத்தில் எப்பொழுதெல்லாம் தலைமையில் வெற்றிடமோ அல்லது அவநம்பிக்கையோ ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மக்கள் திரள் கிளர்ந்தெழுகிறது என்பதை வரலாற்றுரீதியாக என்னால் நிரூபிக்க முடிந்தது.  ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ என்ற நூல் முழுக்க முழுக்க அதைப் பற்றியது தான்.  அந்த நூலை எழுதி முடிக்கும் போது தான் விஜய்யின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்தது.  அவரது அத்தனை அசைவுகளும், ஒரு ஜல்லிகட்டுக் காளையின் பிரவேசத்தைப் போலவே இருந்தது.  2017இல் நடைபெற்ற தலைமையின் வெற்றிடப் போராட்டத்தை நிவர்த்தி செய்வதற்காக வந்தவர் அவர் என்று அப்பொழுதே எனக்குத் தோன்றியது.  மக்கள் எதை எதிர்பார்த்திருந்தார்களோ அது நடக்க ஆரம்பித்திருப்பதை என் புத்தகம் வழியாகவும், பிற கட்டுரைகள் மூலமாகவும் கடந்த ஐந்து மாதங்களாக நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

 விஜய் தற்போது பெற்றிருக்கும் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதை விஜய்யின் சினிமா கவர்ச்சி என்று பலருக்கு தவறாக விளக்கம் சொல்கிறார்கள்.  இங்கு விஜய் சினிமா நடிகராக இருப்பது ஒரு தகவல் அவ்வளவு தான்.  அவர், தமிழ்ப் பண்பாட்டில் ஒரு தலைவனுக்கு கற்பிக்கப்பட்ட அத்தனை கவர்ச்சிகளோடு இருந்தார்.  அதற்கான குணநலன்கள் அவர் மீது தொடர்ச்சியாக ஏற்றப்பட்டன.  எனவே இந்த வெற்றி, பண்பாட்டுக் கூறுகளிலிருந்து உருவாகி வந்த வெற்றி.  இதை ஒரு குழுவோ அல்லது கட்சியோ திட்டமிட்டிருக்க முடியாது என்பது என் கணிப்பு.

 மாநிலம் முழுக்க விஜய் என்ற பெயரைப் பார்த்து மட்டும் மக்கள் வாக்களித்துள்ளனர். தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைப் பார்க்கிறோம்... இது பற்றி…

தேர்தலே மக்களாட்சி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தருணம் என்று சொல்லப்படுகிறது.  அதாவது, மக்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை சொல்லும் தருணம்.  வேட்பாளர்கள் தங்கள் பலத்தை சோதித்துக் கொள்ளும் தருணம்.  ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தேர்தல், இத்தகைய மாண்புகளுடன் நடைபெறுவது இல்லை.  இங்கே ஒவ்வொரு வேட்பாளருக்கும் சாதி, மதம், பாரம்பரியம், வட்டாரம், மொழி போன்ற சார்புகள் உள்ளன.  இவையே அவரது பலமாகக் கருதப்படுவதால் மக்களாட்சியின் மாண்பை நாம் உணர்வதே இல்லை.  சாதி, மதம், மொழி, வட்டார குணம் போன்ற அனைத்திற்கும் எதிரானது பண்பாடு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இங்கே, விஜய் என்ற கதாபாத்திரம் பண்பாட்டிலிருந்து உருவாகி வருவதால், வேட்பாளர்கள் அனைவரும் அவரது சாயலாக மாறிப் போகிறார்கள்.  எனவே தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் விஜய் மட்டுமே,  அவர் தனி நபர் அல்ல. பண்பாட்டால் தலைவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கதாபாத்திரம் அவ்வளவு தான்.  மக்களாட்சி போன்ற உயரிய விழுமியங்கள் காலப்போக்கில் குறுங்குழு அரசியலுக்குப் பலியாகும் போது பண்பாடு எடுக்கும் எதிர் நடவடிக்கை இது.

Bollywood & South Asian Film

பிம்பச் சிறை என்பது தமிழ்நாட்டில் பிரபல கோட்பாடு... ஆனால் இக்கோட்பாட்டில் தங்களை நம்பிய மக்கள் பிம்பத்தால் ஏமாற்றப் படுகிறார்கள் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்... விஜய் என்னும் பிம்பம் இது வரை இருக்கும் பிம்பங்களில் இருந்து எப்படி மாறுபடுகிறது?

பிம்பச்சிறை என்பது காலாவதியான ஒரு கோட்பாடு.  அது வெளியே புரட்சிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் கட்டுப்பெட்டித்தனமானது.  அதை நம்ப ஆரம்பிக்கும் போது நீங்கள் உங்களையே புத்திசாலியாக நினைத்துக் கொள்கிற ஆபத்து அதில் இருக்கிறது.  அந்த மயக்கத்தைத் தருவதைத் தவிர அது வேறொன்றையும் பெரிதாய் சாதித்து விடவில்லை.  பிம்பங்கள் தனி நபர்களாலோ அல்லது மக்கள் என்ற கூட்டத்தாலோ மட்டும் உருவாகி விடுவதில்லை.  அது ஒரு கூட்டுத் தயாரிப்பு.  ஆங்கிலத்தில் amalgamation என்று சொல்லலாம்.  பல காரணிகள் சூழ்ந்து உருவாகும் பண்பாடுச் செயல்.  அது ஒரு இயந்திரத்தைப் போலச் செயல்படுகிறது.  பிம்பச்சிறை என்ற காரணி அவ்வியந்திரத்தின் ஒரு சிறு பகுதியாக வேண்டுமானால் இருக்க முடியும்.  நான் மேலே சொன்னது போல, பண்பாட்டின் வெவ்வேறு காரணிகள் அதற்குக் காரணமாகின்றன.  வரலாற்றிலிருந்து ஏராளமான சங்கதிகள் அதில் செயல்பட ஆரம்பிக்கின்றன.  சினிமா என்ற சாதனம் உருவாக்கிய ஒரு பிம்பம் அல்ல அது.  அதுவொரு சூழ்ச்சி.

 பிம்பங்களை மக்கள் திறள் தான் உருவாக்குகிறது என்று நீங்கள் சொல்வது நேரெதிராக உள்ளதே?

மக்கள் திரள் என்ற வார்த்தை இங்கே பல்வேறு அர்த்தங்களை உடையது.  அதற்கு, ஏராளமான மனிதர்கள் ஓரிடத்தில் திரள்வது என்று மட்டுமே பொருள் இல்லை.  அவர்கள் ஓரிடத்தில் திரள்கிறார்கள் என்றால் அந்த இடம், அதாவது திணையின் பங்களிப்பு அதில் அதிகம்.  அதே நேரம் அவர்கள் திரள்கிறார்கள் என்றால், அங்கு நிகழும் ஈர்ப்பு எத்தன்மையது என்று நாம் விளக்க வேண்டியிருக்கிறது.  விஜய் என்ற நபர் ஓரிடத்தில் தோன்றப் போகிறார் என்றதும், மக்கள் அங்கே திரள்வதற்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். இந்தப் பழக்கத்தையே நான் பண்பாடு என்று சொல்கிறேன்.  வாடிவாசலை விட்டு திமிறிக் கொண்டு வரும் காளையைப் போன்ற வருகையை விஜய் நிகழ்த்தும் போது, அவரைத் தழுவிக் கொள்ள தமிழர்கள் முட்டி மோதுகிறார்கள்.  ஏறு தழுவுதல்தான் அது.

 கொளத்தூர் தொகுதியில் தோற்கடிக்கப்படும் அளவுக்கு ஸ்டாலின் என்ன தவறு செய்தார் என நினைக்கிறீர்கள்?

ஸ்டாலின் என்ன தவறு செய்தார் என்பதற்கு, கொளத்தூர் தொகுதியில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் முழுக்க விசாரித்த பின்பே வந்து சேர முடியும்.  அவரது தோல்வி வருந்தத்தக்கது.  அவர் போட்டியிட வட மண்டலத்தையும் தென் மண்டலத்தையும்  தவிர்த்திருக்க வேண்டும்.  வடமண்டலத்தில் தான் வேங்கைவயல் வருகிறது; தென்மண்டலத்தில் கவின் கொலை நடந்தது.  இந்த மண்டலங்கள் திமுகவிற்கு ஆபத்தானவை.

விசிக தன் அரசியல் நிலைப்பாட்டை இழந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.  அவர்கள் மகாபாரதத்துக் கர்ணனைப் போன்ற மனச்சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.  நியாயமா அல்லது விசுவாசமா என்ற கேள்விக்கு அவர்கள் அரதப்பழைய விசுவாசம் என்ற பதிலையே எடுத்துக் கொண்டார்கள்.  இது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

பாஜக அதிமுக கூட்டணியில் நின்றும்கூட பெரும்தோல்விதான்..

பாஜக மீது பெரும் அதிருப்தி வரலாற்றுரீதியாய் தமிழகத்தில் திரண்டிருக்கிறது.  இங்கே பிராமண எதிர்ப்பு தான் வெகுஜன அரசியல்.  இதற்கு நூற்றாண்டுகள் கடந்த வரலாறு இருக்கிறது.  அதே போல், இங்கே மத நம்பிக்கை என்பது பகுத்தறிவை இன்னொரு கையில் பற்றிக் கொண்டிருக்கிறது.  எனவே பாஜகவின் வட இந்தியத் தந்திரங்கள் தமிழகத்தில் செல்லுபடியாகுவதில்லை.

தவெகவின் கொள்கைகளைப் பார்க்கையில் அது திராவிடக் கட்சிக் கொள்கைகளின் நீட்சியான கட்சி எனத் தோன்றுகிறதா?

தவெகவிற்கு நிலையான, ஆணித்தரமான கொள்கைகள் இருப்பதாய் நான் நம்பவில்லை.  அது இனி மேல் தான் அக்கட்சிக்கு திகைந்து வர வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் ஆலோசனை?

தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் வடிவம் நாம் தமிழர் கட்சி.  தனித்தமிழில் பேச வேண்டும் என்பது எல்லோரின் ஆசையும் தான்.  ஆனால், அது அன்றாட வாழ்க்கைக்கு ஒத்து வருவதில்லை.  அன்றாட மொழியில் ஆங்கிலம், சம்ஸ்கிருதம், உருது, தெலுங்கு என்று பல்வேறு மொழிகள் கலந்துள்ளன.  அதே போன்றது தான் நாம் தமிழர் கட்சி.  எல்லோருக்கும் அவர்கள் பேசுவதன் மீது ஆசை தான்.  ஆனால், அப்படி வாழ முடியாது என்பது தான் நிஜம்.

விஜய்யை வஞ்சிக்கப்பட்ட வாலிபன் என்று சொல்கிறீர்கள், அது ஏன்?

 இந்தப் பாத்திரத்தை உருவாக்கியவர்கள் திமுகவினர் தான்.  அவர்கள் தங்களை அறிவுடைய கட்சியாக நினைத்துக் கொள்ளும் மடமையை என்றுமே விட்டு விலகுவது இல்லை.  உங்களை நீங்களே அறிவுடையவர் என்று எண்ணிக் கொள்ளும் போது எதிராளியை மூடன் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்.  மூடனை முன்னேற்றும்  கடமை உங்களுக்கே இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்.  மூடன் அறிவாளியாகி விட்டால் உங்களது ‘முன்னேற்றக்’ கட்சிக்கு வேலை இல்லை என்பதும் உங்களுக்கு விளங்குகிறது.  இந்த இடத்திலிருந்து நீங்கள் பாசாங்கு செய்ய ஆரம்பிக்கிறீர்கள்.  சமூகத்தைக் காப்பாற்றும் பெருங்கடமை உங்களுக்கு இருப்பதாய் பசப்ப ஆரம்பிக்கிறீர்கள்.  இது, உங்களுக்கு எதிரே இருக்கும் ‘மூடனை’ வஞ்சிக்கும் செயல் என்று உங்களுக்குத் தோன்றுவதே இல்லை. 

திமுக, அரசியல் கட்சி என்ற நிலையிலிருந்து கார்ப்பரேட்டாக மாறி பல வருடங்கள் ஆகிறது.  அதன் 75 வருட வரலாற்றில் அது பல்வேறு துரோகங்களை மறைக்க வேண்டியிருக்கிறது.  அதனால், அதன் எல்லா செய்கைகளும் மறைமுக அர்த்தங்களைக் கொண்டதாக மாறி விடுகின்றன.  இதையே, திமுகவின் வஞ்சகம் என்று மக்கள் விளங்கிக் கொள்கிறார்கள்.  மக்கள் எதிர்கொண்ட வஞ்சகத்தின் உதாரண வடிவமாக விஜய் பார்க்கப்பட்டார் என்பது தான் இந்த தேர்தலில் நடைபெற்ற விசித்திரம்.  அவரைச் சுற்றி நிகழ்ந்த அத்தனையையும் திமுகவின் சதியாகவே மக்கள் விளங்கிக் கொண்டதற்கு திமுகவின் வரலாறு தான் காரணம்.  திமுக முன்வைத்த அறிவுடமை, ராஜதந்திரம் போன்ற செயல்பாடுகளே அவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி விட்டது.

அந்திமழை வலைதளம்

https://www.andhimazhai.com/politics/political%20interviews/the-reason-for-vijays-victory

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு