2025-ல் இராணுவச் செலவினங்கள் அதிகம் செய்யும் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா
business standard
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2025 ல் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 92.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, உலகின் இராணுவச் செலவினங்கள் அதிகம் செய்யும் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த 8.9% சதவீத அதிகரிப்பானது, மே 2025-இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிராந்திய மோதல்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதில் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணை அமைப்புகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. மோதலின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கொள்முதல் தேவைகளே இந்தச் செலவு அதிகரிப்பிற்குக் காரணமாக அமைந்தன.
“போர் விமான அமைப்புகளுக்கான மூலதனச் செலவு முதலில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 50 சதவீதம் அதிகமாக இருந்தது,” என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. “இந்திய விமானப்படையின் செயல்பாட்டு செலவுகள் மட்டும் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட 18 சதவீதம் அதிகரித்தன”.
பாகிஸ்தானின் அதிகரித்து வரும் ராணுவ பட்ஜெட்
அறிக்கையில் 31-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், 2025-இல் தனது பாதுகாப்புச் செலவை 11.9 பில்லியன் டாலராக (11% சதவீதம் அளவுக்கு) அதிகரித்துள்ளது. மோதலுக்குப் பிறகு சீனாவிலிருந்து விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளுக்கான புதிய கொள்முதல் ஆர்டர்கள் வழங்கப்பட்டதே இதற்கு காரணமாக அமைந்தது.
பாகிஸ்தானின் ராணுவச் செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.9 சதவீதமாக உள்ளது. இது மோதலுக்குப் பிந்தைய உடனடித் தேவைகளையும், இராணுவத் திறன்களைத் தக்கவைப்பதற்கான அதன் நீண்டகால திட்டங்களையும் பிரதிபலிக்கிறது. அதேசமயம், இந்தியாவின் இராணுவச் செலவு அதன் ஜிடிபியில் (GDP) பாகிஸ்தானை விட சற்றே குறைவாக 2.3% சதவீதமாகவே உள்ளது.
உலகளாவிய போக்குகள்
2025 ஆம் ஆண்டில் உலக ராணுவச் செலவு உச்சபட்சமாக 2,887 பில்லியன் டாலராக இருந்தது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அதிகரித்து வந்தததையே இது குறிக்கிறது. உலகளாவிய ஜிடிபியில் இது 2.5 சதவீதமாகும்.
அமெரிக்கா 954 பில்லியன் டாலர் செலவுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. வெளிநாட்டு ஒதுக்கீடுகள் குறைந்ததால் 7.5% சதவீத வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், உலகளாவிய இராணுவ செலவினங்களில் அமெரிக்கா மட்டும் 33 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. 7.4 சதவீதம் அதிகரித்து தனது ராணுவ பட்ஜெட்டை 336 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இது உலகளாவிய இராணுவ செலவினங்களில் 12 சதவீதமாகும். அதிவேகமாக இராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.
2022 லிருந்து உக்ரைனுடன் நீண்டகாலப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, தனது செலவை 5.9 சதவீதம் அதிகரித்து சுமார் 190 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இதன் பாதுகாப்புச் செலவு அதன் ஜிடிபியில் 7.5 சதவீதத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஜெர்மனியும் இந்தியாவும் உலகின் இராணுவச் செலவு செய்யும் மிகப்பெரிய ஐந்து நாடுகளாகியுள்ளன. 2025-இல் உலகளாவிய மொத்த பாதுகாப்புச் செலவில் 58% சதவீதத்தை இவை மட்டுமே கொண்டுள்ளன.

இந்தத் தரவுகள் ஆசியா மற்றும் ஓசியானியாவில் நிலவும் பரவலான இராணுவமயமாக்கல் போக்கையும் எடுத்துக் காட்டுகின்றன. அப்பிராந்தியத்திற்கான செலவு மட்டும் 681 பில்லியன் டாலராகும்; இது 2024-ஐ விட 8.1 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் போட்டி, இந்தியா-பாகிஸ்தான் மோதல், இந்தோ-பசிபிக் பிராந்திய பதற்றங்கள் போன்ற சிக்கல்களே இதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தச் செலவு அதிகரிப்பானது இரண்டு முக்கியத் தேவைகளைப் பிரதிபலிக்கிறது: 2025 மோதலில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் மற்றும் இராணுவத்துக்கான நவீனமயமாக்கல் திட்டம்.
தமிழில்: வெண்பா