புயற்பறவை – கவிதை

மக்சீம் கார்க்கி - தமிழில் : ஆர்.ரமணன்

புயற்பறவை – கவிதை

வெள்ளியெனத் துள்ளும் கடலின்
வெகு உயரத்தில்
காற்றின் சீறும் வேகங்கள்
சேர்த்திடும் புயல் மேகங்கள்.

கடலுக்கும் மேகத்திற்கும் இடையில்
கருத்த மின்னல் கீற்றென
கர்வத்துடன் பறக்கும்
புயற்பறவை.

அதன் சிறகினை
அலைகள் தழுவிடும்போது
அம்பென எழும்பி
ஆராவார அரற்றலில்
மேகங்களைக் கிழிக்கும்.

புயற்பறவையின் துணிவுக் கூச்சலில்
பேரானந்தம் ஒன்று இருப்பதைக்
காணும் மேகம்.

அந்தக் கூவலில்
முரசு கொட்டும்
புயலுக்கான ஏக்கம் விம்மும்.

பெருவிருப்பின் நெருப்பு பற்றும்.

கோபத்தின் கனல் தெறிக்கும்.

வெற்றியின் நம்பிக்கை
வீறு கொண்டு எழும்.

கடல் பரப்பில் பாய்ந்து செல்லும்
சீகல் பறவைகள் பயத்தில் கேவும் .

நீலக் கடல் ஆழத்தில்
பம்மிப் பயம் மறைத்து பரவசப்படும்.

அன்னங்களும் அழுகின்றன.

அவற்றிற்கில்லை
போராட்டத்தின் பெயரில்லாப் பேரானந்தம்.

தரையிறங்கும் இடியோசை கேட்டு
அவை நடுநடுங்கும்.

பேதை பெங்குவின்கள்
பாறைகளின் இடுக்குகளில்
பதுங்கிக் கொள்ளும்.

புயற்பறவை மட்டுமே
கர்வத்துடன்
வெள்ளி நுரையென வீசும்
கடல்நீர்ப் பரப்பின் மேல் கறங்கும்.

புயல் மேகங்கள்
மேலும் மேலும் கறுக்கின்றன.

கடலை நோக்கி
மேலும் மேலும் கீழிறங்குகின்றன.

போர்ப்பரணி கொட்டும் கடலலைகளும்
பேரானந்தத்தின் மீதேறி
இடியை நெருங்கும்.

இறங்கியது இடி.

காற்றுடன் கடும் போரிட்டன
வெடித்துச் சிதறும்.

அம்புப் பிழம்புகள்
அலைகளின் பிடியில்
அடங்கிப் போகும்.

அவற்றின் நிழல்
பாம்பாய் நெளிந்து
வேதனையில்
அடியாழத்தில் தீய்ந்து போகும்.

அது புயல்! வெடிக்கும் புயல்!

இருந்தும்
வீரமிக்க புயற் பறவை
கர்வம் கொண்டு
மின்னலை வலம் வரும்.

கொந்தளிக்கும் கடல் மேலே
குமுறும் கடல் மேலே
அதன் முழக்கம்
வெற்றிக்குக் கட்டியம் போல்
களிப்பில் அதிரும்.

சினமெல்லாம் கொண்டு
அது வெடிக்கட்டும்.

1901 இல் ரசிய ஜார் மன்னரை எவரும் விமர்சிக்க முடியாது. ஆகவே படைப்பாளிகள் ஈஸாப் கதைகள் போல் அவரது ஆட்சியை பகடி செய்து எழுதினர். மக்சீம் கார்க்கியும் இதை பின்பற்றி ‘புயற் பறவையின் பாடல்’ என்கிற பாடலை எழுதினார். பறவைகள் தங்களுக்குள் பேசுவது போல் அமைந்த இந்தப் பாடலில் ஆட்சியாளர்களை காகங்களாகவும் சாதாரண மக்களைக் குருவிகளாகவும் போராட்டக்காரர்களை சிஸ்கின்ஸ் எனும் பறவைகளாகவும் உருவகித்திருந்தாராம். பின்னர் ‘புயற்பறவை’ எனும் அடைமொழியால் கார்க்கியே அழைக்கப்பட்டார். இந்தப் பாடல் லெனினுக்கு மிகவும் பிடித்த பாடல் என நதேழா க்ரூப்ஸ்கயா கூறுவாராம்.( The Song of the Stormy Petrel – Wikipedia)

தமிழில் : ஆர்.ரமணன்

https://bookday.in/the-song-of-the-stormy-petrel-poetry-tamil-translation-by-r-ramanan/

Disclaimer: இந்தப் பதிவு மேற்கண்ட தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு