கவிதை: நீ எப்போதும் எங்களுள் எரிந்துக் கொண்டேயிருப்பாய்...
ஞாலன்

நீ எப்போதும் எங்களுள் எரிந்துக் கொண்டேயிருப்பாய்...
எம்மைப் போல் பல்லாயிரம் உள்ளங்களில்
நெருப்பை பற்ற வைத்து
இன்றும் தழலாய்
எரிந்துக்கொண்டிருப்பவன் நீ!
ஈழத்துக் கொடுமைக் கண்டு
உள்ளுக்குளேயே குமுறிக் கொண்டிருந்த
உள்ளங்களிலெல்லாம்
நீ பற்றவைத்த தீ
இன்றும் கனலாய்
எரிந்துக் கொண்டுதானிருக்கிறது!
அன்று கல்லூரியில்
புதிதாய் அடியெடுத்து வைத்த
சில நாட்களிலேயே
ஈழத்து விடுதலைப்போராட்டம்
பெரும் கொதிப்படைய வைத்தது..!
ஈழத்துக் கொடுமைகளுக்காய்
இங்கே கண்ணீர் விட்டு
கதறியவர்களில் நானும் ஒருவன்!
இலங்கை தீவினிலே
ஈழத்து பிஞ்சுகளை
சிங்கள பேரினவாதம் கொன்று புதைக்கையிலே
தமிழீழ இளம் தங்கைகளை
ஆடையுருவி அக்கிரமம் செய்கையிலே
கொதிப்பேறிக் கொண்டிருந்தது
எங்கள் இரத்தம்..!
உன் உயிரையே
நீ எரித்துக்கொண்ட போது தான்
இனி என்ன இருக்கிறது இழந்துவிட? என்று எமது குரலும்
வீதிகளில் வந்து வெடித்தது!
உன்னிலிருந்து தான்
துரோகிகளை இனம் கண்டோம்!
எதிரிகள் மீது கடுஞ்சினம் கொண்டோம்!
அரசியலின் அவசியம் உணர்ந்தோம்!
இந்தியாவும் இலங்கையும்
ஏகாதிபத்திய பிணந்திண்ணி கழுகுகளும்
ஈழத்து விடுதலைப் போராட்டத்தை
கொத்தி தின்றதை அறிந்து
அதிர்ந்தோம்!
தமிழின விரோத
காங்கிரசும் கருணாநிதியும்
பச்சை ரத்தம் குடிக்கும்
பங்காளிகள் என தெளிந்து
நிமிர்ந்தோம்!
இதா!உலகின் மூலையெங்கும்
உயரும் விடுதலைப் போராட்டங்களை
அடக்கி ஒடுக்க
அலையாய் அலைகிறது
ஏகபோக மூலதன பேய்கள்!
அதன் கழுத்தை அறுக்காமல்
அமையாது எங்கும் விடுதலை தேசம்!
ஈழம் மட்டுமல்ல
இதோ இன்று பாலஸ்தீனத்தில்
அந்த அடங்கா பேய்கள் ஆட்டுவிக்கிறது!
காஷ்மீரத்திலும் மணிப்பூரிலும்
ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது...
தோழா உன் நெருப்பெடுத்து
மூலதன அரக்க கூட்டங்களுக்கு
கொள்ளி வைப்போம்!
விடுதலை தேசங்கள்
விளைந்தெழ
தோழா முத்துக்குமரா...
உன் நினைவினை என்றும்
எங்கள் நெஞ்சில் தைப்போம்!
- - ஞாலன்