உன் விரல் பிடித்து எங்கள் பயணம்...

சமரன்

உன் விரல் பிடித்து   எங்கள் பயணம்...

ஆசானை பாடுதல் ஆசையன்று

அவர் போதனைக் கொண்டு 

புரட்சியை நாடுதல் ஆகும்!

 

 

 

இடர்கள் பல நூறை

எட்டி மிதித்தவன் நீ!

அடர் இருள் தனில் மீது

சுடர் கொடி பிடித்தவன் நீ!

 

 

 

பாட்டாளி விடுதலையொன்றே 

மூச்சாய் என்றும் வாழ்ந்தவன் நீ!

அதற்காய் அரை நூற்றாண்டு

தலை மறைவு தவம் பூண்டவன் நீ!

 

 

 

கடுஞ்சிறைக் காவல் பெரும் வரலாற்றில் 

கருப்பு குல்லாக்களையும்

கலகக் காரனாய் மாற்றிய

விதி செய்தவன் நீ!

 

 

 

மார்க்சியம் மடிந்ததாய்

மடையர்கள் கூவுகையில்

அதன் ஆன்மா காத்தவன் நீ!

 

 

 

சிவந்த ருஷ்யாவும்

செஞ்சீனமும் கூட 

சிதைந்து போன போதும்

துவளாதெழுந்து

துரோக முகந்தனை

துகிலுரித்தவன் நீ!

 

 

 

புரட்சி புயல் ஓய்ந்து

கலைப்புவாத காரிருள் சூழ்ந்து

சூனியவாத சுதி பாடிய போது

வரலாற்றின் கட்டளையை 

வாஞ்சையோடேற்று 

மார்க்சிய அடிநாதத்தை

அகலப்படுத்தியவன் நீ! 

 

 

 

திருத்தல்வாத திரை கிழித்து

கலைப்புவாத ஊடறுத்து

இடது வலது போக்குடைத்து

 மார்க்சியத்தின் வழியில் நின்ற

பாட்டாளி வர்க்க ஆசானே!

 

 

 

மார்க்சியத்தின் கருவூலத்திற்கான 

உந்தன் அறிவு போதனைகளை

நாளை புரட்சி வரலாறு

கணக்கில் வைக்கும் மறவாது!

 

 

 

நீ விதைத்த விதைகளாய் 

விருட்சமாக எழுந்து நிற்போம்!

வீரீயம் கொண்டே களத்தினில் 

நாங்கள் என்றும் துணிந்து நிற்போம்!

 

 

 

 

(சமரன் நவம்பர் இதழில்)