சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தவரும், தமிழீழ ஆதரவாளருமான வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி!

சிவப்பிரியன் செம்பியன்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தவரும், தமிழீழ ஆதரவாளருமான  வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி!

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிக் கேட்டு போராடியோர்/ போராடுவோர் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு மாமனிதர் இருக்கிறார். 

அவர் தாம் வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன். 

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என பிரகடனப்படுத்தி சிங்கள பேரினவாதம் நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலையை, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு எதிரான போர் என்ற வகையிலேயே அணுகிக்கொண்டிருந்த காலம் அது. 

அதிலும், தமிழ்நாட்டினர் அதனை வெறும் போர் என்றே கருதினர். 

கொஞ்சம் கொஞ்சமாக அந்த இன அழிப்பு போரின்  உக்கிரத்தை தமிழர்கள் கண்டுணரத் தொடங்கியபோது, எல்லாம் கைமீறி சென்றுக்கொண்டிருந்தது. 

இலங்கை அரசின் இனவெறி போரை நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய அரசிடம் 2008 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் தமிழக அரசியல் தலைமைகள் கோரிக்கை விடுக்கத் தொடங்கினர். 

அதுவரை  தமிழ்நாட்டின் வீதிகளில் நிலவிய மௌனத்தை முதலில் போராட்டம் மூலமாக கலைத்தவர் த.வெள்ளையன். 

தமிழ் சமூகத்தில் எப்போதுமே 

உழைப்போம், பிழைப்போம் என இருந்த வணிகர்களை வைத்து தான் அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எனும் அமைப்பின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இயங்கி்வந்த 95% வணிகர்கள், போரை தடுத்து நிறுத்தக்கோரி முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து அடக்குமுறைகளை ஒடுக்குமுறைகளை எல்லாம் கடந்து, அந்த கடையடைப்பு 100% வெற்றிப்பெற்றது.

அந்த காலக்கட்டங்களில் த.வெள்ளையன் ஐயா அவர்களின் பெரம்பூர் வீடும், பேரவை அலுவலகமும்  நாள்தோறும் உணர்வாளர்கள் கூடும் இடமாகின. அழுவதும், புலம்புவதும், போராட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வதே அங்கு தான்  அன்றாடம் நடைபெற்றன. 

அரசியல் இலாப நட்டங்களை கருதாமல் தொடர் போராட்டங்களை த.வெள்ளையன் எனும் தனிமனிதரே வடிவமைத்தார். இதற்காக அவர் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. 

வணிக சங்கத்தலைவர் த. வெள்ளையன் அவர்களின் உதவியால் தான் முத்துக்குமாரின் உடல் மக்கள் பார்வைக்கே வந்தது. 

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் இறுதி மரண சாசனம் படி, மாணவர்களிடம் ஒப்படைக்க பெரும்பாடு பட்ட ஒரே தலைவரும் அவர்தாம். கேஎம்சி வாசலில் தலைவர் என்ற மமதை இன்றி தார்சாலையில் அமர்ந்து போராடியவரும் அவரேதாம். 

கொதிநிலையில் இருந்த உணர்வாளர்களால் கொளத்தூரில் ஓர் எம்.எல்.ஏ மீது செருப்பு வீசப்பட்டது. அதை  செய்த மாணவர்களை தாக்க ஏவப்பட்ட குண்டர்களிடம் இருந்து அவர்களை தன் சொந்த வீட்டில் வைத்து பத்திரப்படுத்தி, தானே வாசலில் நின்று பாதுகாத்தவர் த.வெள்ளையன். 

அஸ்தியாய் ஆன பின்பும் ஆட்சியாளர்களை அச்சுறுத்தினான் முத்துக்குமார். அவனது அஸ்தியை கைப்பற்ற காவல்துறை முயன்றபோது செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பேரணியாய் எடுத்துச்சென்று பரப்புரை செய்தவர். 

கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், கட்டிங், கரன்சி என அவர் நினைத்திருந்தால் அந்த சங்கத்தை வைத்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், இன உணர்வோடும் மாந்தநேய உணர்வோடும் களத்தில் நின்ற காரணத்தால் அந்த சங்கத்தை உடைத்து விக்கிரமராஜாவின் சங்கத்தை  உருவாக்கினார் அரசியல் நரித்தனத்தையே ராஜதந்திரமாக கருதிய கலைஞர் மு.கருணாநிதி.

விக்கிரமராஜாவின் மகன் இன்று எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார் என்பது நிகழ்கால வரலாறு.

1983 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் வரை அவரது பங்களிப்பு இருந்தது. தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு தமிழீழ இன அழிப்புக்கு உதவிய அமெரிக்கா & இங்கிலாந்து நாடுகளின் உற்பத்தி பொருட்களை புறக்கணிப்போம் என்ற பிரசாரம் செய்தபோது, ஐயா செய்த உதவிகளை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் அன்று, ஐயா த.வெள்ளையன் அவர்களிடம் எனக்கே இருந்த தனிப்பட்ட உறவை வைத்து, கொஞ்சமும் தயக்கமின்றி இரட்டை ஏரி சந்திப்பு, பெரம்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அவரை வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க வைத்தோம். 

தலைவரை குறித்து பேசும்போதெல்லாம், 'அந்த மாவீரனுக்கு நாம் என்ன மரியாதை செய்தோம். நம்பிக்கை துரோகம் மட்டும் தான் இழைத்தோம்' என நீர் கசிய குரல் கம்ம உருக்கமாக அவர் கூறியவை இன்னும் எமது காதுகளில் சன்னமாக கேட்கிறது. 

தனது செல்வாக்கை, தனது ஆளுமையை, தனது அரசியல் பலத்தை தனக்காகவோ தனது பிள்ளைகளுக்காகவோ அல்லாது தமிழ் மக்களுக்காக பயன்படுத்திய நல்ல மனிதர். 

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிக்கேட்டு உலகமுழுவதும் போராடிவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஏதேனும் செய்துக்கொண்டே இருக்க வேண்டுமென எண்ணுபவர். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை எதிர்த்து 'Boycott Srilanka' பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டவர். ஒரே நாளில் 1000 கூட்டங்களை அவரது தலைமையிலான வணிகர் சங்கம் நடத்திக்காட்டியது. அதில் ஏறத்தாழ 50 கூட்டங்களில் எங்கள் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பும் பங்குகொண்டது. 

அதுமட்டுமா ? இந்திய அளவில் வணிக பெருந்தலைகள் பங்கேற்கும் மே5 வணிகர் தின மாநாடுகளில் தவறாது தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிக்கேட்டு தீர்மானங்களை இயற்றி தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தவர். கடந்த ஆண்டு கூட மாநாட்டில் தமிழீழ இனப்படுகொலை பெருந்துயர் எனும் கருப்பொருளில் கண்காட்சி நடத்தினார். 

2009 ஆம் ஆண்டுக்கு பிறகான ஐ.நா சபையின் ஒவ்வொரு மனித உரிமை ஆணையக் கூட்டத்தொடர்களின் போதும் அவர் தன்னால் ஆன அரசியல் பணிகளை வெளியில் தெரியாதவாறு செய்துக்கொண்டே தானிருந்தார். 

அவர் புகழ் வெளிச்சத்தையோ, அரசியல் இலாப நட்டங்களை கருத்தில் கொண்டவரல்ல. பெயருக்கு ஏற்ற தூய பொது வாழ்வை வாழ்ந்தவர் வெள்ளையன் தான்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு, எழுவர் விடுதலை, தமிழீழ இன விடுதலைக்கான ஆதரவு  என தமிழ்நாட்டில் நடந்த அனைத்து போராட்டங்களிலும் உண்மையாக நடந்த ஒரேயொரு தலைவனும், தலைவர் மேதகு அவர்களை உளமார நேசித்த உணர்வாளருமான வெள்ளையன் ஐயா அவர்களின் இழப்பை இனி ஒருவராலும் ஈடுசெய்ய முடியாது.

SivaPriyan Sempiyan

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு