தமிழ்நாடு அரசு ஊழியர் விரோத அரசாணைகள் 115 மற்றும் 152

உமாமகேஸ்வரன்

தமிழ்நாடு அரசு ஊழியர் விரோத அரசாணைகள் 115 மற்றும் 152

தமிழக நிதியமைச்சர் திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நிதி ஆண்டு 2022 - 2023 நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசு மனித வள மேலாளுமை சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான ஒரு விரிவான வரைபடத்தை முன்மொழிவதற்கான ஒரு மனித வள சீர்திருத்தங்கள் குழு ஒன்றை ஆறு மாத காலத்திற்குள் அமைக்கும் என்று அறிவித்தார்.

அதன்படி ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரி எம்.எப்.ஃபருக்கி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அரசு துறையில் மனித வள மேலாளுமை சீர் திருத் தங்களை ஏற்படுத்த அரசாணை எண் 115, 18.10.2022 அன்று வெளியிடப்பட்டது. இந்த குழுவில் 3 ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகா ரிகள், தன்னார்வ சமூக செயல்பாட்டாளர் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். கீழ்க்கண்ட குறிப்பு விதிமுறைகளின் அடிப்படையில் ஆறு மாதத்திற்குள் இந்த குழு ஒரு அறிக்கையை அரசுக்கு அளிக்கும்.

ஆளெடுப்பு வழிமுறைகள், கடைநிலை ஊழியர்கள் மற்றும் இதர பிரிவினரை - மூன்றாம் பிரிவு திறன்மிகு ஊழியர்கள் - குறிப்பிட்ட கால அளவு அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணி அமர்த்துவது குறித்த சாத்தியக்கூறுகள், தற்போதைய மனித ஆற்றல் மதிப்பீடு, செயல்திறன் மதிப்பீடு முறை, பயிற்சி மதிப்பீடு.

மேற்கண்ட குறிப்பு விதிமுறைகளின் படி செயல்பட இந்த குழு கொள்கை ஆய்வு மையம் புதுடில்லி பணியமர்த்தி கொள்ளவும் அந்த நிறுவனம் இந்த அரசாணைப்படி வழங்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது இந்த அரசாணையின் தொடர்ச்சியாக அரசாணை எண் 152 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அரசாணைகளையும் விரிவாகப் பார்க்கும் முன் கீழ்க்கண்ட விஷயத்தையும் கவனிக்கத் தவறக்கூடாது

இந்தக் குழு அறிக்கை தயாரிக்க ஆகும் செலவு ரூ.1.5 கோடி,

இந்த குழுவுக்கு இந்த அறிக்கை தயாரிக்க 6 மாத கால மதிப்பூதியம் மற்றும் இதர படிகள் ஒரு உறுப்பினருக்கு 16 லட்சம் ரூபாய் (மொத்தம் 80 லட்ச ரூபாய்)

தனியார் நிறுவனமான கொள்கை ஆய்வு மையத்திற்கு 50 லட்ச ரூபாய்

இதர செலவுகள் 20 லட்சம் ரூபாய்.

குடிமை அதிகாரிகள் தனியார் நிறுவனம் வழங்கும் அறிக்கையை சிறு மாற்றங்களுடன் அரசுக்கு சமர்ப்பிப்பதற்கு தண்டச் செலவு 80 லட்சம். குறிப்பாக, ஏற்கனவே அமைக்கப்பட்ட பல கமிட்டிகளின் அறிக்கைகளை தூசு தட்டி எடுத்து பரிந்துரைகளாக வழங்குவதற்கும் இது உதவும். பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றால், நீதிமன்றம் எந்த அடிப்படையில் ஆட்குறைப்பு, பணிநிரவல் கொள்கை, வெளி முகமை மூலம் பணியிடங்களை நிரப்புதல் (ஒப்பந்த அடிப்ப டையில்) ஆகியவற்றை எந்த அளவிடக்கூடிய தரவுகள் அடிப்படையில் மேற்கொள்கிறீர்கள் என்று கேட்கும்போது, நீதிமன்றத்தில் இந்த கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் என்று  அரசு முடிவு எடுத்ததாக கூறவும். பின் நீதிமன்றம், தன் வழக்கமான அரசு ஆராய்ந்து எடுத்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறவும் நடத்தும் நாடகத்திற்கு இந்த குழு அறிக்கை உதவும். 

இந்த இரண்டு அரசாணைகளும் வெளி வந்த பிறகு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை இது ஏற்படுத்தி உள்ளது. அதுவும் குறிப்பாக ஸ்டாலின் அரசு தனது தேர்தல் வாக்குறுதியான 4 லட்சம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பி தற்போதைய கடுமையான வேலைப்பளுவை  குறைத்திட உதவும் என்றும், அரசு ஊழியர்களில் தொடங்கி பள்ளி ஆசிரியர் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரையிலான ஒப்பந்த முறையை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கி அவர்களை நிரந்தரப்படுத்தும் என்றும் நம்பியிருக்கும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வள சீர்திருத்தக் குழு அமைத்து வெளியிட்ட அரசாணை எண் 115 மை காய்வதற்குள், இரண்டே நாட்களில், (அதாவது, 20/10/2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண் 152 வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால், இந்த குழு என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என்பதும், ஏமாற்று வேலை என்பதும், குறைந்தபட்ச அறிவுள்ள எவராலும் புரிந்துகொள்ள முடியும்

அரசாணை எண் 152 என்பது சென்னை பெருநகர மாநகராட்சி தவிர உள்ள புதிய மற்றும் பழைய 20 மாநகராட்சிகளில் பணி யமைப்பு, ஒரே சீரான பணியிடங்களை தோற்றுவிப்பது - ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைப்பது மற்றும் முறைப்படுத்துவது சம்பந்தப்பட்டதாகும்.

முதலாவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழக அரசிடம் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் 2021 ஆம் ஆண்டின் தோராய மக்கள் தொகைக்கேற்ப, 20 மாநகராட்சிகளை 4 வகைகளாக வகைப்படுத்தி அதன்படி புதிய வரையறையின் படி 4145 பணியிடங்களை ஏற்படுத்தும்படி (இதில் பெரும்பாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பணியிடங்கள்) கோரியிருந்த நிலையில் அரசு மறு சீரமைப்பு என்கிற பெயரில் 3417 பணியிடங்களை தான் அனுமதித்துள்ளது. அப்படியானால், ஒட்டுமொத்தமாக 728 பணியிடங்களை குறைத்துள்ளது.

இரண்டாவதாக, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை தவிர, நிரந்தர பணியிடங்களில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், செயல்திறன் மற்றும் செயல் திறனற்ற பணியாளர்கள் உள்ளிட்ட 20 வகையான பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்பு அல்லது காலிப்பணியிடம் ஆகும் போது அந்த பணியிடங்கள் நிரப்பபடக்கூடாது. எதிர் வரும் காலங்களில் இப்பணிகளை வெளி முகமை (ஒப்பந்த அடிப்படையில்) மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளது.

மூன்றாவதாக, நிரந்தரப் பணியாளர்கள் புதிய வரையறைக்கு அதிகமாக இருப்பவர் களை அதே பணியிடம் காலியாக உள்ள பிற மாநகராட்சிகளுக்கு பணி நிரவல் மூலம் நிரப்பப்பட வேண்டும். மேலே குறிப்பிட்ட இந்த நிலைமை கிட்டத்தட்ட எல்லா அரசுத் துறைகளிலும் கொண்டு வருவதற்கான ஏற் பாட்டைச் திட்டமிட்ட ரீதியில் செயல்படுத் தத்தான் இந்த குழு. இந்த சூழ்ச்சியை நாசகர திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் தங்கள் உடனடி எதிர்ப்பை தெரிவித்திருப்பதும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருப்பதும், அதன் காரணமாக தற்காலிகமாக அந்த குழுவின் குறிப்பு வரையறைகளை - குறிப்பாக ஒப்பந்த முறை தொடர்பான மறுவரையறை செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக வந்திருக்கும் செய்தியும் வரவேற்கத்தக்கவை என்றாலும், ஒட்டுமொத்தமாக அந்த அரசாணை எண் 115 மற்றும் 152 திரும்பப் பெற கோருவதுதான் சரியான மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் நடவடிக்கையாகும்.

இன்றைய நிதியமைச்சர் திரு.பழனிவேல் ராஜன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பல ஆண்டு காலம் பணியாற்றிய பின்புலம் கொண்டவர் என்பதும், அவருடைய கொள்கை முடிவுகள் எல்லாம் பெருமுதலாளிகளின் சேவையையும் மூலதன ஈர்ப்பு என்கின்ற அடிப்படை தளத்திலிருந்து தான் பயணிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிரந்தரமான உருப்படியான வேலைவாய்ப்புக்களை ஒழித்துக் கட்டி ஒப்பந்த அடிப்படையிலான குறைந்த கூலி அதிக வேலை மற்றும் தற்காலிக வேலை என்கிற கார்ப்பரேட் நிறுவன சிந்தனையை, புதிய பழைய ஒப்பந்ததாரர்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசுத் துறையில் வழி ஏற்படுத்துவதற்கான ஏற்பாடாகும். அரசு நிறுவனங்களை கார்ப்பரேட் மயமாக்கும் அபா யகரமான போக்கு இது. திராவிட மாடல் சமூக நீதி பேசிக்கொண்டே அதைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு வழி செய்யும் திட்டமாகும். பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் திருமதி.தாட்சர் எல்லாம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சொல்லி முதலில் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து அவர் தொடங்கினார் என்பதும், பெரும்பாலான அடிப்படை மக்கள் சேவைகள் அங்கு தொடங்குவதால் அதில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்திகளை வைத்து, மாற்றம் செய்யும் உளவியல் தந்திரமாகும். அரசுத் துறையின் திட்டச் செலவுகள் குறைப்பு, தனியார்த்துறை முதலீடு அதிகரிப்பு என்கின்ற வற்றால் பாதிக்கப்பட்டுள்ள கட்சி சார்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு மறுவாழ்வு அளிக்க செய்யும் ஏற்பாடாகுவும் இதைப் பார்க்கலாம். மாநில அரசுகளை பொதுவாக ஒப்பந்ததாரர்களால் ஒப்பந்ததாரர்களுக்காக ஒப்பந்ததாரர்களாலேயே நடத்தும் ஆட்சியாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

உள்ளாட்சி, மாநகராட்சி, சென்னை பெருநகர மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த முறையை ஒழித்து நிரந்தரமாக போராடிக் கொண்டிருக்கும் வேளையில், குடிநீர் வடிகால் வாரியம், ஆசிரியர் தொடங்கி பேராசிரியர்கள் வரை, அரசு போக்குவரத்து உள்ளிட்ட கார்ப்பரேஷன் தொடங்கி, கூட்டுறவுத் துறை, சிவில் சப்ளை துறை, டாஸ்மாக் வரை, ஒட்டுமொத்த தனியார் துறை வரை, ஒப்பந்த முறை ஒழிப்புக்காக தமிழக தொழிலாளர்கள் போராடும் இந்த சூழ்நிலையில், இந்த இரண்டு அரசாணைகளும் திரும்பப்பெறஅனைத்து ஊழியர்களையும் அணிதிரட்டி மாபெரும் போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் உள்ளது. காலத்தைப் கைப்பற்றுவோம் போராட்டக் களம் காண்போம்.

- உமாமகேஸ்வரன்

(வாட்சப் பகிர்வு)

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் 

– செந்தளம் செய்திப் பிரிவு