கவிதை: தீயில் வெடித்த புரட்சி...
தீ நா

தீயில் வெடித்த புரட்சி...
முத்துக்குமார் என்றொரு மனம், தீயில் மலர்ந்த தியாகம்!
ஈழத்தின் அழுகையைக் கேட்டு, தன் உயிரைத் தீயில் ஈந்தான்;
அவன் தீ வைத்தது தனக்கு, ஆனால் பற்றி எரிந்ததோ தமிழகம்!
அடங்கி இருந்த தமிழகம், வெடித்து கிளப்பியது அவன் தீ!
தன்னைத் தானே விதைத்து, விருட்சமாய் வளர்த்த தேசியத்துவம்!
கடல்களின் அக்கரையில்,
அலைகளாய் வந்த ஈழத்தின் குரல்!
எரிந்தது ஓர் உள்ளம், எழுந்தது மகா புரட்சி!
ஈழம் என்பது தீர்வு! அதற்கு தோள் கொடுப்பது தமிழகத்தின் தெரிவு!
தன் தீயில்
அலையாய் வந்த செய்தி! அலை அலையாய் திரண்ட தமிழகம்!
மீண்டும் உரக்க சொன்ன தருணம்! ஈழம் மட்டுமே தீர்வு!
இந்திய சுரண்டலை விஸ்தரிக்க,
சூழ்ச்சியில் இலங்கையை வீழ்த்த,
தேசிய தீயை நசுக்க,
ஈழக் குரலை ஒடுக்க,
காலனி ஆதிக்க தாச, களத்தில் இறங்கிய காங்கிரஸ்!
தேசிய தீயை மடை மாற்ற, படையாய் நின்ற திராவிடம்,
திராவிட முன்னேற்றத்தைக் காத்த கழகம்,
வழக்கம்போல் தமிழ் இனத் துரோகத்தின் உச்சியில் நின்ற தருணம்!
திராவிடம், காங்கிரசின் எச்சில் துண்டுகளை விழுங்கி
மலைப் பாம்பாய் நெளிந்த தருணம்,
மேலும் துண்டுகளை விழுங்க
பட்டினி போராட்டம் கண்ட, திராவிடத்தின் தலை கலைஞர்!
நாடகக் கலையை கண்ட தமிழகம், மலையாய் வெதும்பி அதிர்ந்தது!
தமிழகம்,
ஈழத்திற்கு மலையாய் நிற்கத் துடிக்க,
திராவிட மானெங்கெட்ட மலையை கண்டு அதிர்ந்தது!
தமிழினம், திராவிட வேரை நோக்கி பார்வையை பாய்ச்ச,
விடுதலையை காட்டிக் கொடுத்த மரபணு தெரிந்தது!
மரபணு மரபை தொடர, இத்தருணம் வேட்டையில் சிக்கியது ஈழம்!
நன்று தின்று கொழுத்த, கலைஞர் கும்பல் இன்று ஆள,
ஈழத்தை தொடர்ந்து தமிழகம் வேட்டை காடாய் மாறிப்போனது!
"தமிழன் என்று பிறந்தேன், தமிழனாகவே மடிவேன்!"
கடிதம் எழுதி கனல் பாய்ந்தான்;
பீனிக்ஸ் பறவையாய் மாறியது தமிழின உலகம்!
தன் சுய நிர்ணயத்தை இழந்து, ஈழத்தின் சுய நிர்ணய உரிமையை
கொடுங்கோலுக்கு எதிராகக் கோரினான்!
சிங்கள அடக்கு முறைகளை எதிர்த்து,
போர்க்கோலம் கொண்டது ஈழம்!
"விடுதலை" குரல் செவிகளிலே, கோபத்தில் எழுந்தது உலக ஏகாதிபத்தியங்களே!
சூழ்ச்சியை வலையாய் விரித்து
வரிந்து செயல்பட்டது ஏகாதிபத்தியம்!
ஈழக் குரல் அடக்க, சிங்கள அரசு படப்படக்க,
ஏகாதிபத்தியங்கள், அங்குலத்தையும் இழக்க மறுக்க,
சரளத்தையும், சிங்கள அரசுக்கு கொடுக்க
ஆறடியில் புதைந்த சத்தம்! பேரொலியாய் எழுந்தது உலகம்!
அம்பலமானது உலக ஏகாதிபத்தியம்!
விடியல் என்பது சோசலிசம்! அதை உரக்க சொன்னது முத்துகுமாரின் ஈகம்!
முத்துகுமரனின் கடிதம்,
விடுதலை போரின் கீதம்!
செவிகளில் ஓங்கி பறையும் அவன் நாதம்!
வீறுகொண்டெழுவோம் நாளும்!
அனைத்து விடுதலைக்கும் எதிரி,
உலகின் ஏகாதிபத்தியங்கள் என்று அறிவோம்!
அவற்றின், சுவர்களை இடித்துத் தகர்ப்போம்,
முத்துகுமரனை நினைவில் ஏந்தி
விடுதலை எங்கள் மூச்சென்ன்று பகர்வோம்!
இழப்பதற்கு ஒன்றுமில்லை!
வர்க்கமாய் ஒன்று திரண்டால்,
படைப்பதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது!
மார்க்சின் வார்த்தைகள் உண்மை என்பதை தெளிவோம்!
- - தீ நா