கவிதை : பாசிச பாம்பு நீண்டு கிடக்கிறது...
ரண தீபன்
பேசமுடியாத நாடாளுமன்றம்!
பாசிச குற்றவாளிகளை
குதூகலப்படுத்தும்
நீதிமன்றம்!
உண்மையை மட்டும்
பேசமறுக்கும்
ஊடக சுதந்தரம்...
இங்கே ஜனநாயகம்
சொற்களாகவே
சோம்பி கிடக்கிறது!
அந்நிய மூலதனத்தின் முரட்டுப் பிடியில்
நாட்டின் நரம்புமண்டலம்
அறுப்பட்டு கிடக்கிறது...
வறுமை பிணி எங்கும்
நெறிகட்டி தெறிக்கிறது!
காடு கழனி மலை கடல் வான்
அனைத்தும் களவு போகின்றன...
எஙகள் செல்வம்
கொள்ளை கொண்டு போகவோ?
அழுது கொண்டிருப்போமோ
ஆண் பிள்ளைகள் அல்லவோ
உயிர் வெல்லமோ?
என பாரதியின்
பசை எடுத்து ஒட்டிக்கொண்டால்
காவி டயர்களின்
துப்பாக்கி முனைகள் துருத்திக்கொள்கின்றன!
காசுமீரத்து தலையிலிருந்து
கன்னியாகுமரியின் கால் வரை
பாசிச பாம்பு நீண்டு கிடக்கிறது!
பாம்படிக்கும் பம்மாத்து செய்யும்
"கை" யிலோ பாசிச ரேகையே
பளிச்சிட ஓடுகிறது...
பாசிசத்தை வீழ்த்த போன
முற்போக்கு ஒட்டடைகள்
பாராளுமன்றத்திலேயே
'படிந்து' விட்டன!
தேர்தல் ஓட்டை வழியே
ஜனநாயகம் மீட்க சென்று
நாடாளுமன்ற படிக்கட்டுகளை
நாவால் சுத்தம் செய்யும்
புனித போரையும் துவங்கி விட்டன...
கருப்பு மையை விரலில் அப்பிக்கொண்டு
ஐக்கிய முண்னணி எனும் அவதாரம் வேறு!
நிதி மூலதன அடி வேரை
சீர் அறிந்து பார்க்காமல்
விளைந்து எழும் பாசிசத்தை
நேர் அறுக்க முடியாது!
மூலதன உடல் உடுத்தும்
காவி, கதர், பலவண்ண சட்டைகளை
கிழித்து எறிந்திடாமல்
பாசிசம்தான் மடிந்திடுமோ?
பாட்டாளி தலைமையில் நேர் நின்று
வர்க்க கலகம்தான் புரிந்திடாமல்
ஜனநாயகம் ஊறிடுமோ?
- ரண தீபன் (முகநூலில்)