கவிதை: மார்க்ஸ் எனும் பெயர் பாட்டாளி வர்க்கத்துக்கான ஆயுத எழுத்து!

ஞாலன்

கவிதை: மார்க்ஸ் எனும் பெயர் பாட்டாளி வர்க்கத்துக்கான ஆயுத எழுத்து!

மார்க்ஸ் எனும் பெயர்
பாட்டாளி வர்க்கத்துக்கான ஆயுத எழுத்து!

அவனைப்போல
தூற்றப்பட்டவனையும்
துரத்தப்பட்டவனையும்
இனி வரலாற்றில் பார்ப்பதரிது!

வறுமைக்கு வாழ்க்கைப்படும் வர்க்கத்தில்
பிறவாதவனாதலினும்
வறுமையின் சூடு பொறுத்தவன்
அவன்!

தீச்சுடும் வாழ்விற்கு
தன்னை ஒப்புவித்துக் கொண்ட
தியாக பெருந்தலைவன்
புரட்சியாளன் மார்க்ஸ்!

நிகழ்காலத்திலிருந்து
கடந்தகால இருள் கிழித்து
எதிர்காலத்தின் மீது
வெளிச்சமடித்து வழிகாட்டியவன்!

உலகை எல்லோரும் வியாக்கியானம் செய்து கொண்டிருந்த போது
அவன்தான் அதை விளக்கியதோடு
மாற்றவும் பாதை சமைத்தான்...

மானுட வாழ்விற்கு தகாத
தனியுடமை உறவுகளை
தகர்த்தெறிய அவனது மூளை
சிந்தனைத் தீயை
எப்போதும் சிந்திக் கொண்டேயிருந்தது...

அவனது பேனா
பாட்டாளிகளுக்கான ஆயுதத்தை
எப்போதும் கூர்த்தீட்டிக் கொண்டேயிருந்தது!

பூமியில்
உயிர்கள் இருக்கும் வரை
அவனது பெயர்
காற்றைப் போல
சுவாசிக்கப்படும்!

நீர் நிலம் நெருப்பு
காற்று ஆகாயம்
இவைகளுடன் மார்க்சும்
இந்த பூமிப் பந்திற்கு
ஆறாவது அவசியத்தேவை!

நாடற்றவர்களின் இடுகாட்டில்
அவனது உடல்
புதைக்கப்பட்டிருப்பினும்
இன்று உலகின்
பூக்களெல்லாம்
அங்கேதான் புகழஞ்சலி
செய்துகொண்டிருக்கிறது...

மார்க்ஸ் என்றென்றும் வாழ்வார்!
மார்க்சியமே வெல்லும்!

-        - ஞாலன்