கவிதை: லெனின் தனது மற்றுமொரு பிரதி என மார்க்ஸ் கூறியிருப்பார்!

ஞாலன்

கவிதை: லெனின் தனது மற்றுமொரு பிரதி என மார்க்ஸ் கூறியிருப்பார்!

காலம் வாய்த்திருப்பின்
மீண்டும் ஒருமுறை அந்த வார்த்தைகள்
மார்க்சிடமிருந்து வந்திருக்கும்
எங்கல்சை பார்த்து கூறிய அதே வார்த்தைகள்தான்
ஆம்! லெனின் தனது
மற்றுமொரு பிரதி என
மார்க்ஸ் கூறியிருப்பார்!

 

தலை நிறைந்த முடியும்
முகம் மூடிய தாடியும் இல்லாத
ஏகாதிபத்திய பாட்டாளிவர்க்க
சகாப்தத்தின் மார்க்ஸ்
இந்த லெனின்!

 

தான் போர்த்தியிருந்த போர்வையை
தானே கிழித்தெறிந்து
முதலாளித்துவம் தன் வழியில்
ஏகபோக மூலதனமாய்
வடிவெடுத்து...
பறிமுதல் செய்தவர்களே
பறிமுதல் செய்யப்படுவதின்
பரிணாமத்தை அறிந்து சொன்ன
மார்க்சின் அறிவுப்பேனா
ருஷ்ய மார்க்சிடம்
கால நேர்த்தியோடு
தன்னை தகவமைத்துக் கொண்டது..!

 

மார்க்சை வாசிக்கும் போதெல்லாம் அவரிடமிருந்து
ஆலோசனை பெறுவதாக கூறிய லெனின்
முதலாளித்துவம்
ஏகாதிபத்தியாக பரிணமித்ததை
மேதமை தாங்கி உலகறிய செய்து
அதன் பலவீனமான கண்ணியறிந்து
புரட்சியால் ருஷ்யாவை சிவக்க செய்தார்!

 

திருத்தல்வாத திரைகிழித்து
கலைப்புவாத களையறுத்து
சீர்த்திருத்தவாத சிறையுடைத்து
சீறி எழுந்த லெனினது போல்ஷ்விக் கட்சி
படைத்தது மகத்தான நவம்பர் புரட்சி!

 

சீர்த்திருத்தத்திற்கு அப்பால்
சீற மறுக்கும் புலிகளை
கூலியடிமை முறையின்
பாதுகாப்பு சாமியார்கள்
என சட்டையை பிடித்து உலுக்கியது
லெனினது கைகள்!

 

இன்று சீர்த்திருத்தவாதமே
பெரும் புரட்சி என்றும்
அதற்கும் குறைவான திட்டம் வகுக்க
பல அதி மேதாவி ஆய்வாளர்கள்
ஆராய்ச்சியும் செய்கின்றனர்
லெனினின் படத்தோடும் பெயரோடும்...

 

தொழிலாள தோழர்களே!
கூலி உயர்வுக்காய்
போராடி வெல்லும்
வெற்றி திலகத்தை
கூலியடிமை முறையினை
உரு தெரியாமல்
அறுத்தெறியும் வரையிலும்
பூசி நிற்போம்!

 

லெனினது வழியில்
புது பாணி கட்சி அமைப்போம்
ஏகாதிபத்திய சுரண்டல் பேய்களின்
அடிமை விலங்கு உடைப்போம்
புரட்சி பொண்ணுலகு படைப்போம்
என்றும் லெனினது வழி நடப்போம்!

 

-        - ஞாலன்