கவிதை: பகத்சிங் ராஜகுரு சுகதேவ் தூக்கிலும் அழியாத வாழ்வு!
துரை. சண்முகம்

பகத்சிங் ராஜகுரு சுகதேவ்
தூக்கிலும் அழியாத வாழ்வு!
விடியலை
தூக்கிலிட முடியாது
என்பதால்
இரவோடு இரவாக
தோழர்களை எரித்தது
ஏகாதிபத்தியம்.
இந்த இரவில்
சட்லெஜ் நதி
என்னமாய் துடித்திருக்கும்?
இயற்கையின்
இதயத்தை இழந்து!
அவர்கள் சாவைக் கூட
சகித்துக் கொண்டார்கள்
ஏகாதிபத்தியத்தின் கீழான அடிமை வாழ்வை அருவெறுத்தார்கள்.
தியாகம் தெரிந்தால் போதாது! அவர்கள் தியாகத்தின்
நோக்கம் தெரிய வேண்டும்.
வேசமிடும் ஜனநாயகத்தை வெறுத்தவர்கள்
சோசலிச இந்தியாவை
கனவு கண்டார்கள்.
தொழிலாளர்களுக்கு எதிரான "தொழிலாளர் சட்ட மசோதாவுக்கு" எதிராக
கேளாத செவிகளுக்காக..
போலி பாராளுமன்றத்தில்
அரசியல் குண்டுகளை
வீசினார்கள்!
தாய்.. தந்தை..
குடும்ப உறவுகள்
காதல்
அனைத்தைப் பற்றியும்
சித்தாந்தத் தெளிவின்
கம்யூனிசக் காதலன்
பகத்சிங்!
பகத்சிங்கை பேசிவிட்டு கம்யூனிசத்தை கைவிடுவது கேவலமானது.
அவர்களால்
அனுமதிக்க முடியாதது.
அவர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும்
ஒரே பொருள்:
"சுதந்திர சோசலிச இந்தியா"!
இதை நினைப்பவர்களுக்கு அவர்களை நினைப்பதற்கு உரிமையுண்டு!
அவர்கள் அச்சப்பட்டது
சாவைக் கண்டு அல்ல;
புரட்சியின் பொறுப்புகளை மறந்த வாழ்வைக் கண்டு!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/p/1UMmSnY8JD/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கவிஞரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு