இந்து முன்னணியின் அறிக்கையை முதல்பக்கத்தில் வெளியிட்ட முரசொலி

திருமுருகன் காந்தி

இந்து முன்னணியின் அறிக்கையை முதல்பக்கத்தில் வெளியிட்ட  முரசொலி

இந்து அறநிலையத்துறை குறித்த இந்துத்துவ அமைப்புகள், இந்து முன்னணியின் அறிக்கையை 13 ஜூலை இதழில் முரசொலி முதல்பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. 

வாழ்த்துகள்! வெல்க திராவிடம்!! 

இந்து அறநிலையத்துறையின் சொத்துக்கள் என 3084 ஏக்கர் நிலத்தை மக்களின் பயன்பாட்டில் இருந்ததை, கோவிலுக்கு சொந்தமென 'இனாம் நிலங்களை' கையகப்படுத்தியது அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திமுக செய்தது. இனாம் ஒழிப்பு நடவடிக்கையில் மக்களுக்கு கையளிக்கப்பட்ட சொத்துகளை மீண்டும் கோவில் சொத்துகள் என கையகபப்டுத்தும் வேலையை சேகர்பாபு செய்தார். இதைக் கண்டித்து 2024ம் ஆண்டிலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களில் மே17 இயக்கமும் பங்கெடுத்தது. தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் ஆகியோரினால் பயன்படுத்தபப்ட்ட நிலத்தின் மதிப்புகளை ரத்து செய்தார் சேகர்பாபு. இந்துத்துவ அமைப்புகளோடு நெருக்கமாக இயங்கியவர். முருகன் திருவிழாவில் அர்ஜூன் சம்பத்தை சிறப்பு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தியவர். மே17 இயக்கத்தை மேடைக்கு அழைக்கவோ, அல்லது, மே17 இயக்க மேடையிலோ ஏற மறுக்கும் திமுகவின் தலைவர்கள் இந்துத்துவ அமைப்பினரோடு கைகோர்த்த சமயங்களை தவிர்த்ததில்லை. இந்நிலையில் இனாம் ஒழிப்புச் சட்டம் 1963ம் ஆண்டு வகைப்படி இனாம் நிலங்கள் மக்களுக்கான பயன்பாட்டிற்கு வந்த பின்னரும் சேகர்பாபு ஆயிரக்கணக்கான ஏக்கர் இனாம் நிலத்தையும் கோவில் சொத்து என வகைப்படுத்தி எழை எளிய மக்களை அப்புறப்படுத்தினார். 

இந்த நிலங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலங்களை மீட்க போராடிய விவசாய அமைப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர். விவசாய சங்க தலைவர் தோழர் ஈசன் மீது பல வழக்குகளை பதிவு செய்து, சிறையில் அடைத்து பல வழக்குகள்  ஏவப்பட்டது. இவையனைத்தும் திமுக அரசின் இறுதி மாதங்களில் நடந்தன. இதுபோன்ற அடக்குமுறைகள் தேர்தல் முடிவுகளை பாதிக்கவும் செய்தது.

இந்நிலையில் தவெக அரசு இந்த நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தியது. இதைக் கண்டித்து கோவில் சொத்துகள் எனும் பெயரில் கொள்ளையடிக்க முனையும் இந்துத்துவ அமைப்புகள் ஒப்பாறி வைத்தன. கோவில் பெயரில் கொள்ளையடித்து சுரண்டிக்கொழுக்க நினைக்கும் பார்ப்பன-இந்துத்துவ கும்பல்கள், போராட்டங்களை நடத்த முனைந்தன.

இந்துத்துவ வன்முறை கும்பல் வெளியிட்ட கண்டனத்தையும், வன்முறை அரசியலையும் 'முரசொலி' இதழ் தனது முதல்பக்க செய்தியாக வெளியிட்டு மகிழ்கிறது. 

இது எவ்வகையான அரசியல்? 

பாஜகவை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கடந்த  திமுக அரசிற்கு எதிராக செய்த நடவடிக்கைகளைக் கண்டித்து மே17 இயக்கம் வெளியிட்ட அறிக்கைகளோ, போராட்டமோ இதுவரை முரசொலியில் வெளியானதில்லை. பல முற்போக்கு இயக்கங்களுக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு, இந்துத்துவ அமைப்பினருக்கு எளிதாக கிடைக்கிறது எனில், திமுகவின் இயல்பான போக்கு யாரை நோக்கி இருக்கிறது? 

திமுகவின் ஆட்சிகாலத்தில் மோடி வருகைக்கும், இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைக்கும் எதிராக நடந்துவந்த கடந்த அதிமுக கால போராட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. மோடிக்கு கருப்பு கொடி என்பது பெரும் விழாவாகவே முற்போக்கு அமைப்புகளால் நடத்தபப்ட்டதை, 'அரச விழாவுக்கு வருகிற பிரதமரை ஏன் எதிர்க்கிறீர்கள்' என பேசுமளவு இறங்கி போயினர். 

 பாஜக எதிர்ப்பு என்பதை தவெக அரசு தீவிரமாக மேற்கொள்வதில்லை எனும் நிலையில், அந்த கட்சியினரை நோக்கி நாம் குரல் எழுப்பும் சூழலில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளுதழ் தமது அரசியல் விருப்பத்தை மிக அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. இந்துத்துவ கருத்துகளை 'நார்மலைஸ்' செய்யும் பணியினை அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் பார்ப்பன கும்பலுக்கு ஆதரவு தெரிவிப்பதிலிருந்து நாம் காண இயலுகிறது. சீமானுக்கு சீதனம் எனும் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த கூத்துகள், செய்திகளை கேட்டுவரும்  சூழலில் இந்துத்துவ அமைப்புகளின் அறிக்கைகளுக்கான செய்தியை 'முரசொலி'யே வெளியிடும் அவலம் நடக்கிறது. 

எக்காலத்திலும் இந்துத்துவ அமைப்பின் செய்திகளை 'விடுதலை'யில் பெரியார் வெளியிட்டிருக்கமாட்டார், அறிஞர் அண்ணா அங்கீகரித்திருக்கமாட்டார். 'திராவிடம்' எனும் கருத்தியல் எளிய சாமானிய மக்களின் கருத்தாயுதம். இந்த கோட்பாட்டை அரசதிகார வர்க்கத்தின் கோட்பாடாகவும், முதலாளி-சாதியவாதிகளின் தளமாகவும் மாற்றிய திமுக, தற்போது இந்துத்துவ சக்திகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறது. தவெக எதிர்ப்பு என்பதற்காக இந்துத்துவ அமைப்பின் அரசியலோடும், சீமான் கூட்டத்துடனும், மாரிதாஸின் வீடியோக்களுடனும் ஒத்துப்போவோம் எனும் நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளது. திமுகவை ஆதரித்து தோளில் சுமக்கும் முற்போக்கு அமைப்பினரை அவமானப்படுத்தும் செயலாகவே இதை பார்க்க இயலும்.

திருமுருகன் காந்தி

https://www.facebook.com/story.php?story_fbid=1015417267779701&id=100079343118310&post_id=100079343118310_1015417267779701&rdid=C5udblQ0s4ass3VS

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு