உயர் கல்வியை எளியோருக்கு எட்டாக் கனியாக்கும் சதி!
அறம் இணைய இதழ்
கல்வியை மேன்மேலும் வணிகப்படுத்தி, அதை ஏழை.எளியோருக்கு எட்டாக்கனியாக்க வேண்டும் என்பதை லட்சியத்தை கொண்ட தேசிய கல்விக் கொள்கையின் அம்சத்தை தான் இன்று தவெக அரசில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவாக அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் விளைவுகள் ஆபத்தானவை;
2025 ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் கொண்டுவரப்பட்ட ‘பிரவுன்ஃபீல்டு பல்கலைக்கழகங்கள்’ (Brownfield Universities) தொடர்பான சட்டத்திருத்தம் கல்வியாளர்கள், மாணவர்கள், இடதுசாரி கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு 2026 பிப்ரவரியில் திரும்பப் பெறப்பட்டது.
அதையே சில சிறிய மாறுதல்களுடன் தற்போதைய 2026 புதிய திருத்தச் சட்டமாக அறிவித்துள்ளார், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்.
2019 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 14/2019), மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு வழிவகுத்தது.
ஆனால், திமுக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தமோ தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக்கிக் கொண்டு கல்வி சேவையில் இருந்து விலகி கல்வி கொள்ளையர்களாக்க வழி வகுத்தது.
அதிமுக அரசு கொண்டு வந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 4, தனியார் பல்கலைக்கழகம் அமைக்கக் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவை எனக் குறிப்பிட்டு இருந்தது. அந்த சட்டவிதிகளைத் தளர்த்தி: இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில்: 25 ஏக்கர்
நகராட்சி அல்லது பேரூராட்சிப் பகுதிகளில்: 35 ஏக்கர்
பிற பகுதிகளில்: 50 ஏக்கர் இருந்தாலே போதுமானது பல்கலைக் கழகம் நிறுவலாம் என்றது.
ஆனால் தவெகவின் விஜய் அரசோ, கல்வியை வணிகமாக்குவதில் திமுக, அதிமுக அரசுகளை விஞ்சும் விதத்தில்
சென்னை மாநகராட்சிக்குள் என்றால் பன்னிரண்டு ஏக்கரே போதும்.
பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் என்றால் 18 ஏக்கரே போதும்.
ஊரகப் பகுதிகள் என்றால், 25 ஏக்கரே போதுமானது.
பல்கலைக் கழகத்திற்கான நிரந்தர வைப்பு தொகை கூட 50 கோடிகளில் இருந்து மிகவும் குறைக்கப்பட்டுவிட்டதாம்.
ஆக, எப்படியெப்படியெல்லாம் சட்டவிதிகளை தளத்தி எளிமைப்படுத்தி தர முடியுமோ தருகிறோம். கல்வி வணிகத்தில் கால் பதிக்க வாருங்கள். பல்கலைக் கழகம் என்று என்னவோ ஒன்றை ஆரம்பித்து கல்லா கட்டிக் கொள்ளுங்கள் என்கிறது, தவெக அரசின் சட்டத் திருத்த மசோதா.
தனியார் கல்லூரிகள் என்பதில் அரசின் தலையீடுகள் உள்ளன. அதைத் தகர்த்து இஷ்டப்படி பாடப் பிரிவுகளை ஆரம்பிக்கவும், தகுதியற்ற பேராசிரியர்களை குறைந்த சம்பளத்திற்கு வைத்து சுரண்டிக் கொள்ளவும், கல்வி கட்டணத்தை கற்பனைக்கு எட்டாத வகையில் உயர்த்திக் கொள்ளவும் வேண்டியே பல்கலைக் கழக அந்தஸ்த்தை பரிசளிக்கிறது இந்தச் சட்டம்.
வளர்ச்சி பெற்ற நாடுகளான சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் உயர்கல்வித் துறைகளெல்லாம் அரசின் வசமே அதிகம் உள்ளன. ஆனால், நம்மை போன்ற வளரும் நாடுகளில் தான் கல்வியை கசாக்கும் சட்டங்கள், திட்டங்கள் ஒன்றையடுத்து ஒன்றென வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த சட்டம் பற்றிய அடிப்படை புரிதல்களையாவது கொண்டிருப்பார்களா? எனத் தெரியவில்லை.
அரசியல்வாதிகள் என பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் போதிய சமூக அக்கறையும், ஆளுமையும் தொலைத்தவர்களாக இருப்பதால் அதிகாரிகள் நிர்பந்தத்திற்கு ஆளாகி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறார்கள்!
இந்த சட்டத்தை இன்றைக்கு சட்டமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே எதிர்த்தன. மருத்துவ கல்வியில் மனிதத்தை தொலைத்து பெரு வணிகமாக்கும் நீட் தேர்வை எதிர்ப்பது உண்மை என்றால், இந்த சட்டத்தையும் அனைத்து தமிழக கட்சிகளும் எதிர்க்க வேண்டும். மக்கள் இயக்கங்கள் வலுப்பெற்றால் மட்டுமே இது போன்ற சட்டங்களை தடுத்து நிறுத்த வழியுண்டு.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/32890/tn-private-university-amandment-bill/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு