அண்ணாயிசம் அம்மாயிசம் எல்லாம் எங்கிருந்து வந்தது?

துரை. சண்முகம்

அண்ணாயிசம்  அம்மாயிசம்  எல்லாம் எங்கிருந்து வந்தது?

அண்ணாயிசம் 
அம்மாயிசம் 
எல்லாம் எங்கிருந்து வந்தது?
 
அத்வைதமே
அனைத்திற்கும் மூலம்,
அங்கங்கே 
கொஞ்சம் வேறுபட்டு
 விசிஷ்டாத்வைத ஜாலம்! 

ஓ.பி.எஸ். வேறு 
இ.பி.எஸ். வேறா?
செங்கோட்டையன் வேறு
 செந்தில் பாலாஜி வேறா?
எல்லாமே 
அம்மா செதுக்கிய 
பிரம்மங்கள். 

இடமாறு 
தோற்றப் பிழையாய் 
எல்லா பிழையும்,
தடம் மாறாமல் 
தடுத்தாட் கொள்ளும் 
அகம் பிரம்மாஸ்மி 
அமித்ஷா குலச்சாமி! 

எதைக் கொண்டு வந்தாய் 
எதை கொண்டு போக!
இன்று இ.பி.எஸ் பக்கம் 
நாளை ஓ.பி.எஸ் பக்கம் 
நாள்பட்ட கலெக்க்ஷன்கள் 
தி.மு.க.விலும் ரொக்கம் ,
நாளது பாவங்கள்
கரைசேர
த.வெ.க சொர்க்கம்.

எல்லாமே சுரண்டல்
தேள் கொடுக்கின் வர்க்கம்!

குறுக்கே 
குரு பிரம்மாவின்
 பாடலும் ஒலிக்கிறது,
"ஒரு தெய்வம் இல்லாமல்
 கோயிலும் இல்லை 
பல கோஷ்டி இல்லாமல் 
குல நாசமும் இல்லை! 
பாவத்தின் முன்னே 
நீயும் நானும் வேறல்ல!"

ஆயினும் 
லாபக் கணக்கல்லவோ 
பாவக் கணக்கும்!

சுகம் பார்த்தே 
அகம் ஊறும்!

பிரிந்தவர் எல்லாம் 
கூட முடியுமோ?
கறந்ததையெல்லாம் 
பிரிக்கவும் முடியுமோ?

பர பிரம்ம 
பங்கு ஒத்து வந்தால்
ஓரணியில் இபிஎஸ் சோடு
இல்லையேல்
எங்கிருந்தாலும் 
ஓரணியில் தமிழ்நாடு!

அகம் பிரம்மாஸ்மியின் 
நகம் சதையல்லவோ 
அம்மாவின் பிள்ளைகள் 

இது ராமனின் ஆட்சி 
என்று சொன்ன ரகுபதி யார்? 

ஆன்மீக அரசு 
என்று சொல்லும்
சேகர் பாபு யார்?

பாட்டில் விழுச் செல்வம்
பாலாஜி யார்? 

எ.வ. வேலு
எங்கிருந்த ஆளு? 

எல்லாம் 
புரட்சித்தலைவரின் 
வார்ப்புகள் 
புரட்சித்தலைவியின்
 செய்வினைகள்

அறிவுக் குழப்பம் 
அகல்வீர்!

அகம் வேறு 
பிரம்மம் வேறல்ல

மூலதனமும் 
கட்சிகளும் வேறல்ல 

கொள்ளைகளும் 
கோஷ்டிகளும் வேறல்ல

அத்வைதம் துணைகொள்
 இருள் மனமே !

நீ பாம்பென்று பார்த்தால் பாம்பு!
 கயிறு என்று பார்த்தால் கயிறு!

அப்படியும் இப்படியும் 
அ.தி.மு. க.
அப்படியே தாவினால் 
தி.மு.க.!

அடித்த கொள்ளைக்கு
அடுத்த பிறவி த.வெ.க.

       - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/p/19NjxMsmKV/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு