பாசிச எதிர்ப்புக்கு மட்டுமல்ல பார்ப்பன பிரிவின் மேலாதிக்க எதிர்ப்புக்கும் தலைமை தாங்கும் தகுதி நிலை திமுகவுக்கு இல்லை

துரை சண்முகம்

பாசிச எதிர்ப்புக்கு மட்டுமல்ல பார்ப்பன பிரிவின் மேலாதிக்க எதிர்ப்புக்கும் தலைமை தாங்கும் தகுதி நிலை திமுகவுக்கு இல்லை

ஒரு வலதுசாரி நீடிப்பதற்கான அடிப்படையை தகர்க்கும் அரசியலை பேசாமல், பாசிசத்தை எதிர்க்கிறேன்! பாஜகவை எதிர்க்கிறேன்! என்பது வலதுசாரி அரசியலை வெவ்வேறு கைகளில் மாற்றி நீடிப்பதற்கான ஒரு போங்காட்டம்தான். 

இவர்கள் சொல்லும் பார்ப்பன மேலாதிக்கம் என்பது அவர்களுடைய பலத்தில் மட்டுமல்ல, பார்ப்பனர் அல்லாத சுரண்டும் வர்க்கங்களின் நலன்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பில்தான் நீடித்து உயிர் வாழ்கிறது.

பார்ப்பனர் அல்லாதவர் எல்லாம் ஒரே வர்க்க நலனை கொண்டவர்கள் என்பது பஞ்சமி நில அபகரிப்பில் பல் இளிக்கிறது.

 அதுபோலத்தான் பாஜகவின் பலம் என்பது அதனோடு அரசியல் பொருளாதாரம் நலன்களை ஒட்டி சமரசம் செய்து கொள்ளும் எதிரும் புதிரும் ஆன கட்சிகளின் உள்ளார்ந்த சமரச ஒப்புதல் பலத்தில் இருக்கிறது. இதற்கான அரசியல் அதிகாரம் ஏற்பு கொண்டதுதான் அனைத்து தேர்தல் கட்சிகளும்.

 பாசிசத்தை அல்ல, நீங்கள் ‘பார்ப்பனியத்தை’ பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடினால் கூட இந்த அரசு உங்களை அனுமதிக்காது.

தானும் போராடத் தயாரில்லை! போராடும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் அனுமதிக்க முடியாது! என்பதுதான் இந்த அரசும்.

  அதிமுக ஆட்சியில் கூட எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி மக்கள் பிரிவை திரட்டிக் கொள்ள முடியும்.

அப்படி எதிர்ப்பு உணர்வில் திரட்டப்பட்ட மக்கள் உணர்வுகளை தனக்கான தேர்தல் ஆதாயமாக பெற்றுக் கொண்டதுதான் திமுக.

  எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலனுக்கு காங்கிரஸ் ஒரு சேப்டி வால்வாக செயல்பட்டது, அதேபோல தற்போதைய உலகமய மூலதன மேலாதிக்க காலகட்டத்தில் ஒரு பிரிவு என்ற வகையில் பார்ப்பனர்களின் சேப்டி வால்வாக தமிழகத்தில் இருப்பதும் தி.மு.க. 

அதனால்தான் எஸ்.வி. சேகர் எனும் வெளிப்படையான பார்ப்பன தர்ம நபரும், போலி முற்போக்கு கமலஹாசன் போன்ற இன்னொரு முகமும் திமுகவை தமக்கான வாழ்வாக கருதி மகிழ்கிறார்கள்.

  கோட்பாட்டு அடிப்படையிலான, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நலன்களை முன்னிலைப் படுத்தக்கூடிய திட்டவட்டமான செயல்திட்டங்கள் இல்லாமல் பொதுவாக பாசிச எதிர்ப்பு! பார்ப்பன எதிர்ப்பு! அதற்கு திமுக தலைமை! என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை அல்லது அறிவு பிழைப்புவாத காரியவாதிகளின் ஏமாற்றுக்கு நாம் பலியாகும் நிலை.

  பாசிச எதிர்ப்புக்கு மட்டுமல்ல பார்ப்பன பிரிவின் மேலாதிக்க எதிர்ப்புக்கும் தலைமை தாங்கும் தகுதி நிலை திமுகவுக்கு இல்லை என்பதுதான் நாம் நடைமுறையில் காணும் உண்மை. இப்போதைய உலகமய மூலதனத்தின் உடன் பிறப்பாகிவிட்ட திமுக எனும் கட்சிக்கு அது தேவையில்லை என்பதுதான் அதன் அடிப்படை.

  இந்த அடிப்படையை வெளிப்படையாக அரசியலாக பேசாமல், பண்டைய பெரியார் பேச்சுகளின் பின்னே ஒளிந்து கொண்டு திமுக அப்படி இருக்க வேண்டும்! இப்படி இருக்க வேண்டும்! என்று அளந்து கொட்டுவது மூடி மறைக்கப்படும் சந்தர்ப்பவாதங்களே.

    மெல்ல மெல்ல பாசிச எதிர்ப்பில் திராவிட டவுசர் கழன்று கொண்டு இருக்கிறது. திமுக பின்னே தேர்தல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் பாஜகவின் பாசிச நடவடிக்கைகளை தடுத்து விடலாம் எனும் சித்தாந்தமற்ற வாதம் தோல்வி அடைவது, தி.மு.க.வால் அல்ல. நரியை பரியாக்கிய நாயன்மார்களால் நேரும் அவலம் இது.

  பாஜகவுக்கு மாற்று பரந்துபட்ட பாட்டாளி வர்க்க நலனை முன் வைக்கும் இடதுசாரிகள் தலைமையிலான மாற்று வெகுஜன இயக்கங்களே தேவை என்பதை திரும்பத் திரும்ப சூழல் உணர்த்துகிறது.

   அப்படி ஒரு மாற்று அரசியல் பொருளாதார செயல்திட்டத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டணி, தலைமை தாங்கும் ஆற்றல் என்ற அளவுக்காவது தேர்தல் பாதையில் செல்லும் இடதுசாரிகள் காலம் அறிந்து செயல்படாவிட்டால் இத்தகைய கட்சி அமைப்புகள் மக்களுக்கு தேவைப்படாது என்பதை வலி மிகுந்து உணர வேண்டிய நிலைமை ஏற்படும்.

  எனவே பொதுவாக பாசிச எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு எனும் தேர்தல் வியூக வகுப்பாளர்களிடம் சிக்கிக் கொள்ளாமல், இடதுசாரி என்போர் துணிந்து மாற்று அரசியல் பொருளாதார செயல் திட்டத்தை உருவாக்கி முன்வைத்து அதை நோக்கி மக்களை அணி திரட்டுவது தேவை. இது தாமதம் ஆனாலும் கம்யூனிஸ்டுகளை தவிர்க்கவியலாத சக்தியாக அரசியல் அரங்கில் உயர்த்தும்.

  இதைத் தனி நபராக சொல்பவர்களைப் பார்த்து நீ என்ன கம்யூனிஸ்டா? என்று நீங்கள் கடந்து போகலாம். ஆனால் கம்யூனிசத்தின் ஆதரவாளர்களாக அரசியல் அரங்கில் கருத்துச் சொல்லும் உரிமையை நீங்கள் கண்டுகொண்டோ கசந்து கொண்டோ பரிசீலிப்பது நல்லது.

    - துரை. சண்முகம்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0uQPfsBjykMHXn9mj6eKhACe17N8YkbxyCcLxmMwCM61ZwpscJWCFyYhPQZ29nUwDl&id=100080904177819&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு