முட்டை உற்பத்தியில் அதானி! நடுக்கத்தில் நாமக்கல்!

அறம் இணைய இதழ்

முட்டை உற்பத்தியில் அதானி! நடுக்கத்தில் நாமக்கல்!

வலுத்தவன் மட்டுமே வாழ முடியும். நடுத்தர மற்றும் சிறு, குறு உற்பத்தியாளர்கள் கூண்டோடு உற்பத்தி துறையில் இருந்து விலக வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக செயல்படுத்தி வருகிறது மத்திய பாஜக அரசு. அதானி முட்டை உற்பத்தி தொழிலில் இறங்கவுள்ளதையடுத்து மற்ற உற்பத்தியளர்களை அப்புறப்படுத்தும் சட்டங்கள் வருகின்றன;

அந்த வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும், பிரதமர் மோடியின் நண்பருமான அதானி அவர்கள் சுரங்கங்கள், லார்ஜிஸ்டிக், சொந்த துறைமுகங்கள், சொந்த விமான நிலையங்கள், மின்சார உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்கும் பிரம்மாண்ட குடோன்கள், உணவுக்கு பயன்படும் எடிபில் ஆயில், அரிசி வியாபாரம், ஐ.டி தொழில் துட்பம்..டேட்டா சென்டர்ஸ், எனப் பற்பல துறைகளில் கோலோச்சுகிறார். அவர் தற்போது முட்டை உற்பத்தியில் இறங்க உள்ளார். இந்தியாவில் இனி அதானியின் முட்டைகளையே அனைவரும் வாங்கக் கூடிய வகையில் சட்ட திட்டங்களை உருவாக்க போகிறதாம் பாஜக அரசு;

இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 40 கோடி முட்டைகள் விற்பனையாகின்றன. இதில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் புரள்கிறது. இந்த  கோழி வளர்ப்பு, முட்டை விற்பனையை நம்பி பல லட்சம் எளிய உற்பத்தியாளர்கள் உள்ளனர். இனி இவர்கள் பிழைப்பு கேள்விக்குறியாகும் போல நிலைமைகள் உருவாகி வருகின்றன.

அதானி நிறுவனம் இந்தியாவில் முட்டை உற்பத்தியில் மிகப் பெரிய அளவில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக பீகாரில் உள்ள வைசாலியிலும், உத்திரபிரதேசத்திலும் ‘அதானி எண்டர்பிரைசஸ் போலியூட்டரி எக்ஸ்’  என்ற பெயரில் பெரும் பண்ணைகள் அமைக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதானியின் முட்டை பிராண்ட்டடு முத்திரையாக வர உள்ளது. இது ஹைஜினிக் முட்டை என்றும், தூய்மை மற்றும் தரமானது என்றும் இது வரை  சந்தையில் உள்ளவை சுத்தமில்லாதவை, தரத்திற்கு உத்திரவாதமில்லாதவை என்றும் அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உத்திர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், ”இனி முட்டை உற்பத்தியாளர்கள் எப்போது உற்பத்தியானது, எப்போது அது காலாவதியாகும் என்றும் முட்டைக்கு மேலே அச்சிட வேண்டும். அப்படி அச்சிடாதவற்றை விற்பனைக்கு அனுமதிக்க மாட்டோம்” என அறிவித்துள்ளது முட்டை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து  தமிழ் நாட்டின் முட்டை உற்பத்தி கேந்திரமான நாமக்கல் முட்டை வியாபாரிகள் வட்டாரத்தில் பேசிய போது, முட்டை மீது உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவை போட வேண்டும் என சொல்வது இதில் பெரும் உற்பத்தியாளர்கள் மட்டுமே இந்த தொழிலை செய்வதற்கு செய்யப்படும் சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது.

இப்படியான அவசியம் இல்லை என்றே நாங்கள் கருதுகிறோம். காலாவதியான முட்டையை உற்பத்தி செய்பவர்கள் இந்த தொழிலில் நீடிக்க முடியாது. தொடர்ந்து வாங்கவும் மாட்டார்கள். பெரும்பாலும் மக்களும், உணவுக் கடைகளும் அன்றாட உபயோகத்திற்கு மட்டுமே பெரும்பாலும் முட்டை வாங்குகிறார்கள். குளிர்பதன பெட்டி வைத்திருப்போர் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை வாங்கிப்போவார்கள். பெரும்பாலும் முட்டை சில்லறை விற்பனையில் தான் அதிகம் சேல்ஸ் ஆகிறது. நாங்களும் தேவை மற்றும் டிமாண்டை ஒட்டித் தான்  உற்பத்தி செய்கிறோம். ஆகவே இது தேங்கி நிற்கும் பொருள் அன்று.

அப்படி ஒவ்வொரு முட்டை மீதும் இந்த முத்திரையை பதிக்கும் விலை உயர்ந்த நுட்பமான மெஷினை வாங்க வேண்டும். ஏனென்றால், மெஷினின் அழுத்தம் தாங்காமல் முட்டை உடைந்துவிடக் கூடாதல்லவா? அப்படி செய்யும் போது அதற்கான செலவையும் முட்டை உற்பத்தியில் சேர்க்க வேண்டியதாக இருக்கும். இது வழக்கமான முட்டை விலையில் சுமார் 50 முதல் 60 பைசா கூடுதலாக விற்க நேரும்.

சிறு உற்பத்தியாளர்கள் இதற்கு மெனக்கிடுவார்களா? என்று தெரியாது. மேலும் வெளி நாட்டிற்கு அல்லது வெளி மாநிலத்திற்கு கப்பலில் செல்லும் போது சென்று சேர ஒரு வாரம் ஆகிவிடும். அப்படி இந்தியா முழுமைக்கும் மட்டுமின்றி வெளி நாட்டுக்கும் நாமக்கல்லில் இருந்து முட்டை போகிறது. அதானியிடம் துறைமுகங்க, ஏர்போர்ட் , லார்ஜிஸ்டிக் அனைத்தும் இருப்பதால் அவரோடு நாங்கள் ஒருபோதும் போட்டி போட முடியாது.

இந்த முட்டை உற்பத்தி மற்றும் விற்பனையை நம்பி சுமார் 1500  கோழிப் பண்ணைகள் நாம்க்கல்லில் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏழு கோடி முட்டை தயாரிக்கும் ஒரே இடம் நாமக்கல் தான். அதானி முட்டை உற்பத்தியில் இறங்கினல் எங்கள் நிலை என்னவாகும் எனத் தெரியவில்லை. அவரை போன்ற பெரு முதலாளிகள் இது போன்ற அதிக பேர் பிழைக்கும் சாதாரணத் தொழில்களுக்கு வந்து எங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடப்படாது எப்ன்பதை நாங்கள் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறோம் என்றார்கள்.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24264/eggs-production-in-adani/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு