தோழர் மகாலிங்கம் அவர்களுக்குச் செவ்வணக்கம் - தியாகு

செவ்வணக்கம் தோழர் மகாலிங்கம்!

தோழர் மகாலிங்கம் அவர்களுக்குச் செவ்வணக்கம் - தியாகு

1974ஆம் ஆண்டு தொடக்கக் காலம். மார்ச்சு – ஏப்ரல் மாதங்களாக இருக்கலாம். நானும் தோழர் ரெங்கசாமி இலெனின், குருமூர்த்தி ஆகியோரும் திருச்சி மத்திய சிறையில் சி.பி. கண்டத்தில் தூக்குக் கைதிகளாக இருந்தோம். எங்களோடு மேலும் பத்துப் பதினைந்து பேருக்கு மேல் தூக்குக் கைதிகளாக இருந்தனர். 

சிறையில் ஆயுள் கைதியாக இருந்த தோழர் ஏஜிகே என்னும் ஏஜி கஸ்தூரி ரெங்கன் தலைமையில் இரகசிய அமைப்பாகச் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. தூக்குக் கொட்டடியாகிய கண்டத்திலும் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்தின் இரு கிளைகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தன. ஒரு கிளையின் செயலாளராக நானும், மற்றொரு கிளையின் செயலாளராகத் தோழர் குருமூர்த்தியும் இயங்கி வந்தோம். 

அந்த நேரத்தில்தான் தோழர் மகாலிங்கம் தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்று கண்டத்துக்கு வந்து சேர்ந்தார். மனைவியைக் கொன்றதாக வழக்கு. உயர் நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். நாங்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி, இயல்பாக எல்லாருடனும் பழகச் செய்தோம். சில நாளில் அவர் இயல்புநிலைக்கு வந்து விட்டார். வெகுவிரைவில் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்திலும் உறுப்பினராகி விட்டார். 

சிறைதழுவிய ஒரு போராட்டத்துக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தோம். உரிமைக் குரல் என்ற இரகசியக் கையேடு நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால் மகாலிங்கத்துக்கு அப்போது எழுதப் படிக்கத் தெரியாது. கண்டத்திலேயே எழுத்தறிவு இயக்கம் நடத்தத் தீர்மானித்தோம். இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவுக்கு நானும் இன்னொரு குழுவுக்கு குருமூர்த்தியும் ஆசிரியர்களாக இருந்து எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தோம். பகல் உணவுக்காகக் கொட்டடியைத் திறந்து விடும் நேரத்தை இதற்குப் பயன்படுத்திக் கொண்டோம்.  அந்த நேரத்தில் என்னிடமிருந்து அக்கறையுடன் கல்வி கற்று எழுதப்படிக்கக் கற்றார் தோழர் மகாலிங்கம். 

சிறை வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மத்திய சிறையில் 1974 மே நாளில் அமைப்புசார்ந்த போராட்டம் தோழர் ஏஜிகே தலைமையில் மூண்ட போது தோழர் பாலகிருஷ்ணன் தூக்குக் கைதிகள் சார்பில் உண்ணாவிரதக் குழுவில் இடம்பெற்றார். ஆயுள்கைதிகள் சார்பில் அந்தக் குழுவில் இடம் பெற்ற 10 பேரில் நானும் இருந்தேன். 10 நாள் நீடித்த அந்தப் போராட்டத்தில் தூக்குக் கொட்டடியில் முனைப்புடன் இயங்கியது மகாலிங்கத்தை முழு அளவில் எங்கள் தோழனாக்கிற்று. 

மேல்முறையீட்டில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைந்த பிறகும் தோழர் மகாலிங்கம் தொடர்ந்து சிறை இயக்கத்தில் முனைப்புடன் பங்காற்றினார். பல போராட்டங்களில் எங்களோடு இணைந்து நின்றார். நானும் தோழர் இலெனினும் மற்றக் கைதிகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்த காலங்களில் எங்கள் சார்பில் சிறைப்பட்டோரிடையே இயங்கி வந்தவர் தோழர் மகாலிங்கம். அவரோடு இணையாகப் பணியாற்றியவர் தோழர் (மார்க்கெட்) அண்ணாமலை. 

மகாலிங்கத்தின் எளிமை, உறுதி, ஈடுபாடு, நிதானம், தெளிவு ஆகியற்றை வளர்த்ததில் தோழர் இலெனின் முக்கியப் பங்காற்றினார். மகாலிங்கத்தை அவர் அன்புடன் மகா என்று அழைப்பார். சில நேரம் மாவோ என்றும் அழைத்து மகிழ்வார்.    

 தோழர் மகாலிங்கம் பத்தாண்டுக்கு மேல் சிறையில் கழித்து விடுதலையாகிச் சென்ற பிறகும் செவ்வியக்க உணர்வு குன்றாமல் செங்கொடி இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டார் எனக் கண்டு மகிழ்ந்தேன். இறுதி வரை அப்படியே இருந்தார். 

சென்ற திசம்பர் 25ஆம் நாள் தமிழ் மக்கள் உரிமை முன்னணி சார்பில் கீழ வெண்மணி சென்றிருந்த போது அங்கு எங்களுக்கு முன்பே தோழர் மகாலிங்கம் இருந்தார். ஆண்டுதோறும் வெண்மணி நினைவு நாளில் இங்கு வந்து விடுவேன் என்றார். 

நான் நந்தன் ஏட்டில் எழுதிய விலங்கிற்குள் மனிதர்கள் தொடர் நூல்வடிவில் வெளியிடப்பட வேண்டும் என்பது தோழர் மகாலிங்கத்தின் பெருவிருப்பமாக இருந்தது. அவர் உயிருடன் இருக்கும் போதே அவரது அந்த விருப்பத்தை மெய்ப்படச் செய்ய முடியவில்லை என வருந்துகிறேன். விரைவில் அந்த நூலை வெளியிட்டு அவருக்குப் படையலாக்குவேன் என உறுதியளிக்கிறேன். 

அவர் மறைந்த போது நேரில் வந்து இறுதி வணக்கம் செலுத்த எனக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. இப்போது அந்த அன்புத் தோழரின் படத்திறப்பு நினைவேந்தலிலும் பங்குபெற முடியாமல் உடல் நலிவுற்றுக் கிடக்கிறேன். 

அவருக்காக இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து நடத்தும் உங்கள் அனைவருக்கும் மனத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறிக்கொள்கிறேன்.

செவ்வணக்கம் தோழர் மகாலிங்கம்! 

தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். 

05.10.2025

https://www.facebook.com/share/167UkhGzE4/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு