தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் முகநூல் விவாதங்களும்

தெய்வ சுந்தரம் நயினார் - இரா. முருகவேள் - துரை. சண்முகம் - Chandran Dhamodaran - சாவித்திரி கண்ணன் - Sathes karki - Lingam Deva - மகுடேசுவரன்- Karl marx Ganapathy - Nandhagopal Chandrasekaran - Silambarasan Che - Dharmaraj Thamburaj - சு.பா.திருப்பத்தூர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் முகநூல் விவாதங்களும்

1
தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவு . . . விஜய் அவர்களின்  வெற்றி 1 & 2

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம்  . . .  அண்மையில் துவக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி . . .  கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்து வந்த திராவிடக் கட்சிகளைத் தனித்து எதிர்த்து நின்று . . .  வேறு எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் . . .  தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. 

இரண்டுநாள்களுக்குமுன்பு இதுபற்றி நான் இட்ட ஒரு பதிவில் தமிழகத்தில் இளைஞர்களிடையே ஒரு எழுச்சி தோன்றி நீடிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த எழுச்சி விஜய் கட்சிக்கு ஆதரவாக நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். சீமான் அவர்களுக்கும் இளைஞர்களின் ஆதரவு நீடித்துவந்தாலும், விஜயின் அரசியல் வருகைக்குப்பிறகு , இளைஞர்களின் எழுச்சி அலை திசைதிரும்பியுள்ளது என்றும் கூறியிருந்தேன். இளைஞர்களின் எழுச்சி அவர்களுடைய பெற்றோர்களின் வாக்குகளையும் திசைதிருப்பியுள்ளது. அதன் பிரதிபலிப்புதான் இன்றைய தேர்தல் முடிவு!

நாம் கவனமாக ஆராயவேண்டியது . . .  இன்றைய இளைஞர்களின் எழுச்சிக்கு என்ன காரணிகள் என்பதுபற்றி ஆகும்! இது வெறும் திரைப்பட மோகம் என்று புறந்தள்ளிவிடக்கூடாது. ஏனென்றால் திராவிடக் கட்சிகளின் கடந்தகால வெற்றிக்கு மிகப்பெரிய அளவு பங்களித்தவர்கள் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களே! 

மக்களின் வாழ்க்கைப் புறச்சூழலில் நீடிக்கிற அல்லது தோன்றியுள்ள சமூகக்காரணிகளே இளைஞர்களின் உள்ளங்களில் மாற்றத்தைத் தேடும் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதற்குக் காரணமாக அமையமுடியும். பொருளாதாரக் காரணிகளே முதன்மையானவையாக இருக்கமுடியும். விலைவாசிப் பிரச்சினை, அன்றாட அவசியத் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே நீடிக்கிற இன்னல், கடன் வாங்கிக் கல்வியைப் பெற்றாலும் வேலை பெறுவது என்பது குதிரைக்கொம்பாக இருப்பது, வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லாதது, லஞ்ச லாவண்யம். . .  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இப்பாதிப்புகளுக்கு எந்தவித நிவாரணம் தராத இன்றைய அரசியல் பொருளாதாரச் சூழல், அதற்கு மாற்றாக மது, போதை மருந்து, பாலியல் வன்முறை, சாதிய மோதல், ஆணவக்கொலைகள், பணத்திற்காக எல்லாவித சமூகவிரோத வன்முறைகளிலும் ஈடுபடத் தூண்டும் ஒரு சூழல், கூலிப்படை ஆதிக்கம் ஆகியவற்றையே வளர்த்துவிட்டுள்ளது. 

தேர்தலின்போது இவற்றையெல்லாம் மக்கள் 'மறந்துவிட'  . . .  ''இலவசங்கள்'' தொடர்பான வாக்குறுதிகளும், ஓட்டுக்குப்  பணம் வழங்குவதும் போதும் என்றும்,  ஆண்ட, ஆளுகின்ற கட்சிகள் கருதுகின்றன. இந்த வகையான 'மறக்கடி மருந்து' ஒரு கட்டத்திற்குமேல் செயல்படாது என்பதையே தற்போதைய தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. 

ஆட்சிக்கு வந்தவர்களின் குடும்பங்கள் பல கோடிகளுக்கு அதிபர்களாக ஆவதையும், ஆட்சிப் பதவிகள் 'வாரிசுகளின்' சொந்தமாக ஆவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குத் தற்போது எந்தவொரு கட்சியும் விதிவிலக்கு இல்லை. ஆட்சியாளர்களின் துணைகொண்டு, 'காண்டிராக்டர்களும் தொழில் அதிபர்களும்' வளர்வதையும் மக்கள் பார்க்கின்றனர். மேலும் ஆட்சியில் அமர்கிற கட்சிகளின் 'தொண்டர்கள் (மாவட்டங்கள், வட்டங்கள்) ' ஆகியவர்களின் பலவகை அடாவடித்தனங்கள் ஆகியவற்றாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அரசியல் கட்சிகள் நீட் எதிர்ப்பு, இந்திமொழி ஆதிக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தொகுதி மறுவறையீடு போன்றவற்றை முன்வைக்கும்போது,  அவற்றிற்கு மக்கள் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கத் தயார் இல்லை என்பது தெரிகிறது. 

மேற்கூறியவைபோன்ற வெளிப்படையான பல கூறுகளே தற்போதைய 'விஜய் அலைக்கு' அடிப்படை எனக் கருதுகிறேன். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை . . .  இந்திய அரசியல் பொருளாதார அமைப்பு, உலக அளவிலான பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் , பாசிச வளர்ச்சி போன்றவையே. இவையெல்லாம் உலகிலிருந்து அகற்றப்படும்வரை, அவற்றால் வெளிப்படும்  மேற்கூறிய பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தோன்றி நீடிக்கத்தான் செய்யும். 

இவைபோன்ற உண்மையான பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் ஆழமான ஆய்வு இன்றி வெளிப்படையாகப் புரியாது. ஒரு சரியான அரசியல் தலைமையினால்தான் இதைச் செய்யமுடியும். மக்கள் இவற்றைப் புரியாதவரைக்கும் அல்லது புரியவைக்கப்படாதவரைக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு நல்லதே. 

மேற்கூறியவற்றை மக்களுக்குப் புரியவைத்து , அவர்களை அணிதிரட்டி, மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமையுள்ள, தெளிவுள்ள அரசியல்கட்சிகள் கட்டமைக்கப்படாமல் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தீராது. அதுவரை மக்கள் தேர்தல் அரசியலில் 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்னும் அடிப்படையில் மாறி, மாறி கட்சிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இது தவிர்க்க இயலாத ஒன்று. 

மேற்கூறிய எனது கருத்துகளுக்கு அடிப்படை பின்கண்ட உண்மையே!  ஒரு காரணமின்றி ஒரு செயல் நிகழாது!காரணமின்றித் தற்போதைய தேர்தலில் 'விஜய் அலை' அடிக்கவில்லை! ஏதோ மூன்று வயது குழந்தைகள் உட்பட சிறுவர்கள், இளைஞர்கள் ''வேண்டுகோளுக்கு'' இணங்கப் பெற்றோர்கள் வாக்களித்துவிட்டனர் என்று எளிதாகப் புறந்தள்ளிவிடக்கூடாது! 

நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இன்றைய 'எழுச்சி அலையை' உருவாக்கிய இளைஞர்கள் தொடர்ந்து உண்மையான அரசியல் பொருளாதாரத்தையும் சமூக இயக்கத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் உணரவேண்டும். இல்லையென்றால் தற்போதைய அலையானது பயனற்ற அலையாகவே  அமைந்துவிடும்.

விஜய் அவர்களின் வெற்றிபற்றிய எனது கருத்துக்குத் தோழர் ஜமாலன் அவர்கள் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். தோழருடைய உணர்வை நான் மதிக்கிறேன். விஜயின் வெற்றியை - திமுக, அதிமுக எதிர்ப்பு அலையை - இளைஞர்களின் சமூகப்பார்வை கொண்ட 'எழுச்சியாக' , முற்போக்குச் சமூகப்பார்வைகொண்ட 'எழுச்சியாக' பார்க்கக்கூடாது என்பதில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு. இதில் தோழருக்கு ஐயமே வேண்டாம். 

இந்தத் தேர்தல் முடிவில் ஒரே ஒரு அம்சத்தைத்தான் நான் குறிப்பிட விரும்பினேன். இன்றைய சமூகச் சூழல் - பொருளாதார, பண்பாட்டுச்சூழல் - இளைஞர்களின் வாழ்க்கையையும் மனதையும் மிகவும் பாதித்துள்ளது. இந்தச் சூழல், தற்போது தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக்கு வழி விட்டுள்ளது. 

ஆனால் இன்றைய தமிழகத்தின் பிரச்சினைகளை இக்கட்சி தீர்த்துவிடும் என நான் கருதவில்லை. அவ்வாறு தேர்தல் அரசியல்மூலம் தீர்த்துவிடவும் முடியாது. அதற்குத் தெளிவான அரசியல் பொருளாதார ஆய்வு, தெளிவான மாற்றுத்திட்டம் , உண்மையான அரசியல் உணர்வு போன்றவை தேவைப்படுகின்றன. இவற்றையெல்லாம் அளிக்கும் ஒரு அரசியல்கட்சித் தலைமை உருவாகாமல் இளைஞர்களின், தமிழக மக்களின் பிரச்சினைகள் தீராது.

இந்தத் தேர்தல் நமக்கு வெளிக்காட்டுவது . . . இன்றைய தமிழகத்து அரசியல் பொருளாதார, பண்பாட்டுச்சூழலின்மீது இளைஞர்களுக்குக் கடுமையான அதிருப்தி உள்ளது. அவ்வளவுதான். இச்சூழலை விஜய் தலைமையிலான ஆட்சி தீர்த்துவைத்துவிடும் என நான் கூறவரவில்லை. இந்தியாவின் அடிப்படை அரசியல் பொருளாதார அமைப்பு மாற்றப்படாமல் இப்பிரச்சினைகள் தீராது. இளைஞர்களின் மாற்றத்தில் ஒரு படிதான் இது. அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆனால் சரியான மாற்று அரசியல் உருவாகாமல் இளைஞர்களின் அதிருப்தி மறையாது. அந்த மாற்று அரசியல் தமிழகத்தில் உருவாகும்; உருவாகவேண்டும். இந்த மாற்று அரசியல் தவெக -இன் அரசியல் என்று நான் கூறவில்லை. ஒன்றின் ஆதிக்கம், அல்லது அழிவு அல்லது மறைவில்தான் மற்றொரு ஆக்கம் தோன்றி நீடிக்கும். இக்கட்டத்தில் தெளிவான அரசியல் பொருளாதாரக் கொள்கை, திட்டம் உடைய ஒரு சரியான அரசியல் இயக்கம் தோன்றி வளரவேண்டும். சரியான மாற்று அரசியலை முன்வைக்கவேண்டும். அதற்கான சூழலும் தேவையும் இப்போது உள்ளது. இல்லையென்றால், தற்போதைய எதிர்ப்பு அலை விழலுக்கு இறைத்த நீராக அமைந்துவிடும். தேர்தல் அரசியலுக்கு வெளியே நின்று நான் இதைக் கூறுகிறேன்.

தெய்வ சுந்தரம் நயினார்

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02x8EPdLmL2GhXqMwMuAQgfkC8xDfjQ5CcEB81nBUjviTvrtPQFrVRmeP6vvtajptSl&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

https://www.facebook.com/100004424580477/posts/3643865199104264/?rdid=qYQOLcRY2LQ076NE

===============================================

2
நடுவண், மாநில அரசாங்கங்களின் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மாறி மாறி அமைவதற்கு ஒரு முக்கியக் காரணம்

(சமூக உணர்வுள்ள நண்பர்களுக்குமட்டும்  - அரசியல் பாடத்தின் அடிப்படை )

இத்தலைப்பில் உள்ளே செல்வதற்குமுன் . . .  ஒரு நாட்டின் ஆளும் வர்க்கங்கள்,(Ruling Classes)  அரசு (State), அரசாங்கங்கள் (Governments) ஆகியவற்றைப்பற்றி ஒரு சிறு விளக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன். 

ஒரு நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்துகிற வர்க்கங்களே அந்நாட்டின் ஆளும் வர்க்கங்கள். நிலவுடைமை வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம் , ஏகாதிபத்திய வர்க்கம், தேசிய முதலாளி வர்க்கம், ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக ஒரு நாட்டில் செயல்படும் தரகு முதலாளி வர்க்கம் என்று பலவகைப்பட்ட வர்க்கங்கள் நீடிக்கின்றன. விவசாயிகள், தொழிலாளிகள், மத்தியதர வர்க்கம் ஆகியவை ஆளப்படுகின்ற வர்க்கங்கள்.

நாட்டின் பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்துகிற வர்க்கங்களே ஆளும் வர்க்கங்கள். இந்த வர்க்கங்கள் தங்களுக்கான - தங்களுடைய பொருளாதார அமைப்பைப் பாதுகாப்பதற்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கிவைத்துக்கொள்ளும். இந்த அரசியல் அமைப்பை உருவாக்கிக் கட்டுப்படுத்துகிறவர்கள் ஆளும் வர்க்கங்களே என்றாலும் , வெளிப்படையாக அவர்கள் அரசியல் அமைப்பில் வெளிப்படமாட்டார்கள்.  

இந்த அரசியல் அமைப்பே 'அரசு' என்னும் முக்கியமான அங்கமாகும். அரசியல் சட்டம், இராணுவம், அதிகாரி வர்க்கம், நீதிமன்றங்கள், காவல்துறை, அரசாங்கங்கள்  ஆகியவையே அரசின் பல்வேறு அங்கங்களாகும். இவற்றின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகள் அனைத்தும் ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த உறுப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணைந்து ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும்.

ஒரு நாட்டின் நடுவண் அரசாங்கமும் மாநிலங்களின் அரசாங்கங்களும் தங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் 'அரசின்' உறுப்புகளே. இந்த அரசாங்கங்கள் 'தேர்தல்' என்னும் ஒரு 'வாக்கெடுப்புமுறையில்' தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதிக வாக்கு பெற்றவர்கள் 'ஆளும் கட்சியாகவும்' குறைவான வாக்குபெற்றவர்கள் 'எதிர்க் கட்சிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்த இரு கட்சிகளுமே 'ஆளும் வர்க்கங்களின் கட்சிகளே' ஆகும். 

'அரசு' எந்திரத்தைப் பாதுகாப்பதும், அதன்மூலம் ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாப்பதுமே இந்த  'அரசாங்கங்களின்'   அடிப்படை வேலையாகும். ஆளும் வர்க்கங்கள் தங்களின் 'அரசு' வழியே இந்த 'அரசாங்கங்களை' கட்டுப்படுத்தும். நீதிமன்றங்கள், இராணுவம், அதிகாரி வர்க்கம் போன்றவை இதற்குப் பயன்படுத்தப்படும். 'தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்' தன்னைக் கட்டுப்படுத்தும் 'அரசுக்கு' எதிராகச் செயல்பட்டால், அந்த 'அரசாங்கம்' கலைக்கப்படும். ஒருவேளை ஆளப்படுகின்ற வர்க்கங்களின் அரசியல் கட்சிகள் எதிர்பாராதவிதமாக தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றால், ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் அதன் 'அரசாங்கம்'  கலைக்கப்படும். 

இங்குக் கவனமாகப் பார்க்கவேண்டியது . . .  பொதுவாக, அரசாங்கங்களின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கவே செயல்படும். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 'ஆளும் கட்சி' மக்களின் நம்பிக்கையை இழந்தால், 'எதிர்க்கட்சிகளை' ஆளும் கட்சிகளாக மாற்றுவதில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபடும். அல்லது அரசாங்கத்தின் ஆளும் கட்சி 'அரசைக்' காப்பாற்றச் சரிவரச் செயல்படவில்லையென்றால், அரசாங்கம் கலைக்கப்படும். 

ஆகவே, தேர்தல்மூலம் ஒரு ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாகவும் மாறுவது என்பதும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகவும் மாறுவது என்பதும் அடிப்படையில் 'ஆளும் வர்க்கங்களின் நலன்களைக் ' காப்பாற்றுவதற்கே ஆகும். மக்கள் 'அரசுக்கு' எதிராகவும் அதன்மூலம் 'ஆளும் வர்க்கங்களின் நீடிப்பு எதிராகவும்'  கிளர்ந்தெழுந்துவிடக்கூடாது என்பதற்கே இந்த அரசாங்க மாற்றங்கள் நடைபெறுகின்றன. தங்கள் நலன்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செயல்படும். 

மக்களின் 'ஆதரவை' இழக்கிற ஆளும் கட்சியினால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்,  ஆளும் வர்க்கங்கள் இந்த 'ஆளுங்கட்சிகளை' மாற்றும். அதுவரை 'எதிர்க்கட்சியாக ' இருந்த ஒன்றை 'ஆளும் கட்சியாக' மாற்றும். இந்த ஆட்சி மாற்றங்களால் தங்கள் 'நலன்கள்' காப்பற்றப்படுவதுபோல் மக்கள் நம்பவைக்கப்படுவார்கள். 

மேற்கூறிய கருத்துக்களே சமூக உணர்வுள்ள இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டிய அடிப்படையாகும். இதுவே உண்மையான 'அரசியல்' ஆகும்! 

ஆளும் வர்க்கங்களைத் தூக்கியெறிவதே 'சமூகப் புரட்சி'! மாறாக, ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும் 'ஆளும் கட்சி' 'எதிர்க்கட்சி' இடமாற்றம் உண்மையில் சமூகப் புரட்சி இல்லை! இந்த இடமாற்றத்திற்குப் பின்னணியில் இருப்பது ஆளும் வர்க்கங்களே. இதை நாம் உணருவது சமூகப் புரட்சிக்கான முதல் படியாகும்!

தெய்வ சுந்தரம் நயினார்

https://www.facebook.com/100004424580477/posts/3644365909054193/?rdid=59QBNFvDZjpMkZQH

============================================

3
நேற்றைய 'விஜய் பதவி ஏற்பு'

நேற்று விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் 'வந்தே மாதரம்' பாடல் தொடக்கத்திலேயே ஒலிக்கப்பட்டதுபற்றி விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழர்களின் மரபு காப்பாற்றப்படவேண்டுமா, அல்லது நடுவண் அரசின் முடிவு 'தக்கவைக்கப்படவேண்டுமா? என்ற ஒரு சர்ச்சை. 

''நடுவண் அரசு தற்போது 'வந்தே மாதரம்' பாடலுக்கு நாட்டு வணக்கத்திற்கு இணையான தகுதி கொடுக்கவேண்டும் என்று ஆணை இட்டுள்ளது. எனவே அதனடிப்படையில் அது ஒலிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க ஆளுநரின் முடிவு. இதற்கும் தவெக-வுக்கும் தொடர்பு இல்லை. ஆளுநர் நிகழ்ச்சிக்கு என்று ஒரு  சில மரபுகள் உண்டு. அதுதான் கடைபிடிக்கப்பட்டது'' என்று கூறப்படுகிறது. 

சரி. இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் கூறிவிட்டார். 

எனக்கு மற்றொரு ஐயம். நேற்றைய பதவி ஏற்பு நிகழ்ச்சி மேடையில் ராகுல் அவர்களுக்கு எவ்வாறு இடம் அளிக்கப்பட்டது? பதவியேற்பு, ரகசிய காப்பு உறுதிமொழி ஆகியவை முழுக்க முழுக்க ஒரு அரசின் நிகழ்ச்சி. அதற்கான மரபுகள் கடைபிடிக்கப்பட்டதா? ராகுல் மேடையில் அமரலாமா? இது சரியா?

அடுத்து, ஆளுநருடன் , முதலமைச்சரின் அமைச்சரவை  அதிகாரப்பூர்வ நிழற்படம் எடுக்கப்பட்டபோது, அதில் ராகுல் காந்தி அமர்ந்திருந்தது சரியா? எதிர்காலத்தில் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு என்ன எண்ணம் ஏற்படும்? ஏன் ராகுலுக்கு மரபைமீறி இவ்வளவு 'தனி மரியாதை'? 

ஒன்று, ராகுலே இவற்றைத் தவிர்த்திருக்கவேண்டும். அல்லது அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கவேண்டும். இதற்கு விடை என்ன? ஆளுநர் எப்படி இதை ஏற்றுக்கொண்டார்? 

இதற்கு உறுதியாக ஒரு அரசியல் பின்னணி இருக்கவேண்டும். பாஜக - காங்கிரசு மோதலின் ஒரு பகுதிதான் இது. விஜய் அவர்கள் யார் பக்கம் அதிகம் ''சாய்கிறார்''? ஆளுநருக்கும் ராகுலுக்கும் நடுவில் விஜய் அவர்கள் அமர்ந்திருந்தாலும், அவர் 'தலை' எந்தப் பக்கம் அதிகம் ''சாய்கிறது'' என்பதே இப்போதைய ஐயம்! 

மாநிலக் கட்சிகளையும் மாநில அரசாங்கங்களையும் தேசிய கட்சிகளான பாஜக-வும் காங்கிரசும் எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன? உலக அளவிலான ஜார்ஜ் சோரஸ் - அதானி முரண்பாடு,  மோடி - ராகுல் முரண்பாடாக மாறி,, தற்போது முதலமைச்சர் பதவி ஏற்புவிழாவரை தொடர்கிறது.

தெய்வ சுந்தரம் நயினார்

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0iYwXNyPsbavMoiH2dqniPcAqRD59cEJEFbfkVM8DsyNDcLjXxQWktWz85zSep4ATl&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

=============================================================

4
இந்தா தொடங்கிடாங்கப்பா 

மக்களுக்கு நன்றி இல்லை. மக்களுக்கு அரசியல் உணரவில்லை அது இல்லை இது இல்லை....

இப்போதும் மக்களுக்கு நாங்கள் இதெல்லாம் செய்தோம். எனவே எங்களுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் என்ற தொனியே உடன் பிறப்புகள் இடமிருந்து வருகிறது.

இதில் விஜய்க்கு ஓட்டுப் போட்ட மக்கள் தரப்பு என்று ஒன்று இருக்கும் இல்லையா . . 

திமுக ஏராளமான சிறு சிறு தொகைகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தது. மகளிர் உதவித் தொகை, மாணவர் உதவித் தொகை, ரேஷனில் அவ்வப்போது தொகைகள் பொருட்கள்... இவை மக்களுக்கு நிச்சயம் உதவியாக இருந்து இருக்கும். 

ஆனால் இந்தத் தொகைகள் மக்கள் வாழ்க்கையை மாற்றவில்லை. பத்தாயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களின் நெருக்கடியான வாழ்க்கை மாறவில்லை. நீண்ட வேலை நேரங்கள், கடுமையான பணியிட அடக்குமுறைகள்.....உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை இன்னும் மோசமானது. நடுத்தர வர்க்கமும் EMI யும் பூவும் மணமும் போல பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்துள்ளன.

ஒரு சினிமா ஹீரோ, சூப்பர் ஹீரோ இதையெல்லாம் மாற்றி விடுவார் என்று நினைத்து இருக்கிறார்கள். 

திமுகவும் அதிமுகவும் மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று முயன்றனர். குட்டிக் குட்டி சாதிவெறி கட்சிகளுக்கு இடமளித்து அங்கீகாரமும் அளித்தனர். இந்தக் கட்சிகள்  இந்த அலையில் துடைக்கப் பட்டு விட்டன. இந்தக் கட்சிகள் ஜெயித்து இருந்தாலும் சமூகத்துக்கு ஆபத்துதான்.

விஜயால் மக்களின் எந்த எதிர்பார்ப்பையும் சரி செய்ய முடியாது.  கொஞ்ச காலத்துக்கு ஒரு மாற்றமாக இருப்பார். ஏதோ நம்பிக்கை கொடுப்பார்.

விஜய்க்கு கார்ப்பரேட் ஆதரவு இருக்கிறது. அது யார் என்று பாருங்கள் என்றால் முடியாது. அது தற்குறிகள் கூடாரம்.

இப்போது மக்களுக்கு பிரச்சினைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன என்றால் மக்கள் முட்டாள்கள். நம்பிக்கை துரோகிகள். 

ம் ஹும் மாறும் என்பதே மாறாது என்ற எங்காளின் வாக்கே பொய்யாகி விட்டதே.

இரா. முருகவேள்

https://www.facebook.com/1714910257/posts/10216322044119791/?rdid=WFyLR001k20lgddy

=====================================

5
தற்குறி திடீரென்று எழுச்சி ஆகி விட்டது.

த வெ கவுக்கு பெரிய அளவுக்கு கார்ப்பரேட் ஆதரவு இருந்ததும், திமுகவை விட சிறப்பான கட்சி கட்டமைப்பை அவர்கள் ஏற்படுத்தி இருந்ததும் நன்றாகவே தெரிந்தது. கோவையில் எல்லாம் அவர்களுக்கு அட்டகாசமான அலுவலகங்கள் உள்ளன.  திமுக அலுவலகங்கள் இதற்கு பக்கத்திலேயே வர முடியாது. எனவே வெற்றி இயல்பானதுதான்.

தற்குறி, தற்குறி என்று திமுகவினரும் கம்யுனிஸ்ட் காரர்களும் சொன்ன போது காமெடி போலிருந்தது.

ஆனால் கருத்துக் கணிப்பு காரர்கள் திமுக வெற்றி பெறும் என்று திரும்பத் திரும்ப சொன்ன போது தேர்தல் அறிவியலை நம்பாமல் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது.

பெண்களும் இளைஞர்களும் விஜய்க்கு ஓட்டு போடப் போவதை வெளியே சொல்லவில்லை போலிருக்கிறது. Axis my இந்தியா நிறுவனத்தின் vote sample பெரியது என்கிறார்கள். அதனால் அது சரியாக இருந்து இருக்கிறது.

ஆனால் ராகுல்காந்தி முன்பே ஓரளவு ஊகித்து இருக்கிறார். Cpim முரண்டு பிடித்தது கூட இதனால் இருக்கும். கார்ப்பரேட் வட்டங்களில் அந்தப் பேச்சு இருந்து இருக்கும் போலிருக்கிறது.

தேர்தலுக்கு பிறகு திருமா, பாலகிருஷ்ணன்,  வைகோ போன்றோர் ஊகித்து விட்டார்கள் போலிருக்கிறது.  எப்படி அந்த முடிவுக்கு வந்தரகள்  என்று அவர்கள்தான் விளக்க வேண்டும். தற்குறி திடீரென்று எழுச்சி ஆகி விட்டது.

கண் முன் அனைத்து அறிகுறிகளும் இருந்திருந்தும்  சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறோம்.

இரா. முருகவேள்

www.facebook.com/story.php?story_fbid=10216319494296047&id=1714910257&rdid=MD8drX930hCakG6A

===========================================


அனில் அகர்வாலும் விஜய்க்கு ஆதரவு

ஶ்ரீதர் வேம்பு வைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ( வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடட் நிறுவனர்) அனில் அகர்வாலும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். விஜயை விஷனரி என்றெல்லாம் புகழ்ந்து உள்ளார். 

 

இந்த ஆதரவுகள் பதவி பெற்றவர்களுக்கு வழக்கமாக பணம் படைத்தவர்கள் காக்காய் பிடிக்க வழங்கும் ஆதரவு அல்ல. தமிழக வெற்றி 

கழகம் மற்றும் விஜய்க்கு நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அவர்கள் உடன் நிற்கிறோம் என்று மற்ற ஆளும் வர்க்க பிரிவுகளுக்கு  அறிவிக்கும் ஆதரவு இது. தங்கள் ஆதரவு TVK வால் ஏற்றுக் கொள்ளப்படும், வரவேற்கப் படும் என்று தெரிந்து கொடுக்கப் படுபவை. இந்த உறவுகள் திடீரென்று வராது. முன்பே இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

 

தமிழகத்தின் மிக முக்கியமான இன்ஸ்டஸ்ரியல் பெல்ட் ஶ்ரீபெரும்புதூர். அங்கே செல்வ பெருந்தகை TVK வால் தோற்கடிக்க பட்டுள்ளார். அதிகாரத்தின் மையமான சென்னையில் இருந்தும் TVK வெற்றி பெற்று உள்ளது. 

 

எனவே சென்னை தொழில், முதலாளித்துவ மையங்கள் TVK வை ஆதரிக்கின்றன, இது உயர் அதிகார மட்டங்களில் எல்லோருக்கும் தெரிந்தது தான் என்று ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சொன்னார். இவற்றில் பன்னாட்டு நிறுவனங்களும் நிச்சயம் இருக்கும். 

 

எனக்கு என்னவோ பிஜேபியை ஆதரிப்பதும் ஸ்டெர்லைட்டை ஆதரிப்பதும் ஒன்றுதான் என்று  தோன்றுகிறது. நமது தோழர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். சிக்கலான நிலைதான். எனவேதான் ஆதரவு கொடுப்பது என்றால் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும். மக்களுக்கு பொறுப்பெடுத்து கொள்ள வேண்டும். ஒத்து வரா விட்டால் தூக்கி வீச வேண்டும். 

 

ஸ்டெர்லைட் அல்லது வேறு பன்னாட்டு நிறுவனம் ஏதாவது ஏடாகூடமாக செய்து அதில் நாம் பங்கு 

பற்றினால் மக்கள் மன்னித்தாலும் இடதுசாரி இயக்கங்களின் முதுகெலும்பாக இருக்கும் அறிவாளி வர்க்கம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது.

 

இதற்காகத்தான் TVK வின் பொருளாதார பின்புலம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றேன். TVK மட்டுமல்ல திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளின் அரசியல் பொருளாதார ஆதரவு தளம் முழுமையாக மக்கள் முன் வைக்கப் பட வேண்டும். இதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இடதுசாரிகள் உடையது. ஆனால் அந்தப் பானை எப்போதும் காலியாகவே உள்ளது.

 

இரா. முருகவேள்

https://www.facebook.com/share/1EX4oW4Wbv/

 

=====================


இன்னொரு புதிய கட்சி ஏன் தேவைப்பட்டது?

திமுக இந்தத் தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தில் ஏழு எட்டு விழுக்காட்டையும், கார்ப்பரேட் ஆதரவையும் இழந்து உள்ளது. இதுவே அதன் தோல்விக்கு காரணமானது. இது அதிமுகவுக்கும் பொருந்தும். ஏன் 

இவ்வாறு நடந்தது? இன்னொரு புதிய கட்சி ஏன் தேவைப்பட்டது?

 

1. ஜெயலலிதா களப் 

பணியாளர் அல்ல என்பதால் சசிகலா வழியில் சாதி ஆதிக்க வாதிகளை கொண்டு ஆட்சியும் கட்சியும் நடத்தினார். முன்பு முக்குலத்தோர், பின்பு கவுண்டர். அவரது ஆட்சியில் தான் உள்ளூர் தலைவர்கள் குட்டி ராஜாக்களாக வளர்த்தனர். ஓட்டுக்கு பணத்தை அள்ளி விடுவதை ஜெயலலிதா புதிய மட்டத்துக்கு கொண்டு சென்றார்

 

2. திமுகவில் கருணாநிதியின் பேச்சு, எழுத்து கேட்டு வளர்ந்த பரம்பரை குறைந்து போனது. தென் மாவட்டங்களில் சரிவை சரி செய்ய அனுப்பப்பட்ட அழகிரி திருமங்கலம் பார்முலாவை உருவாக்கினார். உள்ளூரில் அசைக்க முடியாத நிரந்தர தலைவர்கள் தோன்றினார்கள். கட்சி ஜனநாயக தன்மையை இழந்தது.

 

3. சென்ற ஸ்டாலின் ஆட்சியிலும் இந்த்துவ எதிர்ப்பு என்ற கோட்பாட்டு அடிப்படையில் கட்சியை ஒருங்கிணைக்க முயன்றாலும் கீழ் மட்டங்களில் உள்ளூர் தலைவர்களே ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் அடிப்படையில் சாதிய வாதிகளாகவும் இருந்தனர். குறிப்பிட்ட பிரிவினர் தவிர மற்றவர்கள் கட்சியில் வளர முடியாத நிலை இருந்தது. அறிவுத் துறையினர் பிஜேபி எதிர்ப்பு என்ற புள்ளியில் திமுகவை உறுதியாக ஆதரித்தாலும்  அவர்களை இணைத்துக் கொள்ளும் மக்கள் திரள் அமைப்புகள் திமுகவில் இல்லை. 

 

4. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு நகருக்கு தொழில் தொடங்க வருகிறது என்றால் அது சென்னை, டெல்லி அதிகார மையங்கள் தவிர உள்ளூர் ஆளும் கட்சி அரசியல் வாதிகளையும் அனுசரித்து போக வேண்டியிருந்தது. 

 

5. முதலாளித்துவம் ஒரு போதும் பல அதிகார மையங்களை விரும்பாது. ஒரு அரசு, ஒரு வரி, ஒரு மொழி, ஒரு  சட்டம் என்பதுதான் வணிகத்துக்கும் தொழிலுக்கும் உகந்தது. ஸ்டாலின் மற்றும் எடப்பாடியால் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளித்துவத்திற்கு ஏற்ற ஒற்றை அதிகார மையத்தை ஏற்படுத்த முடியவில்லை 

 

6. இந்தக் கட்சிகளில் இரண்டாம் மூன்றாம் மட்ட தலைவர்கள், தொண்டர்கள் பெரும்பாலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். சமூகத்தின் பெரும்பகுதி இளைஞர்கள், பெண்கள், வருமானம் குறைவான மக்கள் பிரிவுகள், அதிகாரத்தில் உட்கார முடியாத சாதிகள் இந்த கட்சிகளின் செல்வாக்குக்கு வெளியே இருந்தன. 

 

7. கட்சி கட்டமைப்பு இல்லை என்று விஜய் பற்றி பேசினாலும் உண்மையில் சமூகம் முழுவதையும் பிரதிநிதித்துவ படுத்தும் கட்டமைப்பு இந்த இரு கட்சிகளுக்கு தான் இல்லை.

 

8. இதைப் பணம் கொடுத்தும், சாதி அமைப்புகளை சேர்த்து கொண்டும் இந்தக் கட்சிகள், முக்கியமாக திமுக சரி செய்ய முயன்றது. அது மக்களை மேலும் அன்னியப் படுத்தியது. 

 

9. இதையெல்லாம் சரி செய்யக் கூடிய, மேலே ஒரு தலைவன் சொன்னால் மொத்த கட்சியும் அட்டன்ஷனில் 

நிற்கும் ஒரு ஆள் கார்ப்பரேட் அமைப்புகளுக்கு தேவைப்பட்டது. விஜயை கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் அரசியலுக்கு தயார் செய்து வந்தார்கள்.

 

எனவே இப்படி சுருக்கலாம் 

 

உள்ளூர் குட்டி தலைவர்கள் வணிக, தொழில் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக ஒரு உள்ளூர் தலைவர் ஒரு  ஒப்பந்தத்தை தன விரும்பும் நபருக்கு கொடுக்க சொல்லலாம். விஜய் கூட தனது உரையில் பல அதிகார மையங்கள் இருப்பதை ஒழிப்பேன் என்றார். அவரை ஆதரிக்கும் கார்ப்பரேட் அமைப்புகளின் எதிர்பார்ப்பு  அது

 

ஒரு பதினெட்டு வயது ஆணை அல்லது பெண்ணை இந்தக் கட்சிகளால் அணுக முடியவில்லை. எனவே தலைவரின் செல்வாக்கு சமூகம் முழுமையிலும் சீராக இல்லை.

 

அரசு நலத் திட்டங்கள் குறைந்த வருமான பிரிவினரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 

 

ஒரு தேர்தல் தோல்வி என்பது தற்காலிகமானது. மாறிவிடும். ஆனால் இந்தப் பிரச்சினைகள் சரி செய்யப்படாத வரை மாறாது.

 

இரா. முருகவேள்

 

https://www.facebook.com/share/1Cxh7bHwpX/

=====================

8
பாசிச எதிர்ப்பில்  பாட்டாளி வர்க்க அரசியலின் அடிப்படைக் கொள்வோம்!

முடியாட்சிக்கு எதிராக 

கலகம் செய்த நாட்டில் 

எப்படிடா?

 

இந்த 

ஃபோனபர்ட்  வந்து 

ஏறிக்கொண்டான்!

தலையில்!

என்று,

எல்லோரும் 

தலையை

பிய்த்துக் கொண்டனர்.

கடந்த காலத்தைப்

 பொறுத்தவரை

 புரட்சிகரமானதாகவும் 

எதிர்காலத்தைப்

 பொறுத்தவரை 

எதிர் புரட்சிகரமானதாகவும் 

விளங்கும்

முதலாளித்துவ

 ஜனநாயகத்தின் 

முற்போக்கு 

நாடகத் திரைகளை 

விலக்கி

அதன் 

உள்ளடக்கம் உருவாக்கும்

கேலிக்குரிய விளைவை

சமூக வர்க்கப் பின்னணியில் 

சரியாக விளக்கினார் 

மார்க்ஸ்,

" வரலாறு மீண்டும் நிகழ்கிறது

 முதல் முறை 

சோகமாக  

இரண்டாம் முறை

 கேலிக்குரியதாக!"

வரலாற்றின் 

நிர்ணயிக்கத்தக்க 

லட்சியவாத வர்க்கமான 

பாட்டாளி வர்க்கத்தின் 

இயக்கு விசைகளை

 கண்டறிந்து, 

சமூக அறிவியல் விதிப்படி 

தொழிலாளர் வர்க்கத்தின் மேல்

 நம்பிக்கை வைத்து 

அதற்காகவே 

இயங்கினார் மார்க்ஸ்.

தற்புகழ்ச்சியற்ற 

உழைக்கும் மக்களை

 காதலிக்கும் 

நெஞ்சம் அது! 

சொந்தக் கொள்கைக்கு 

குழி தோண்டி 

உழைக்கும் வர்க்க நலனை

 காலில் மிதித்து;

நெஞ்சமெல்லாம் 

வஞ்சமென 

கொஞ்சம் 

கொஞ்சமாக 

பாட்டாளி வர்க்க

 இயக்கத்தை சிதைத்து,

தஞ்சமென 

முதலாளித்துவ 

மஞ்சமெலாம் 

உருண்டு 

இங்கே 

திமுகவின் 

கொஞ்சும் புறாக்கள்

உடன்கட்டை 

சிறகடிக்கின்றன

ஒரு முதலாளித்துவ கட்சியின்

 தேர்தல் தோல்விக்காக 

தேம்பி விம்முகின்றன

கம்யூனிசத்தை 

இழந்ததற்காக கூட

கம்யூனிஸ்டுகள்

 ஒழிக்கப்படுவதற்காக கூட

கண்ணீர் சிந்தாத 

திருத்தல்வாத நாயகர்கள்! 

இவ்வாறு

வருந்தியது இல்லை 

இந்த உயிரினங்கள்!

துரத்தப்பட்ட 

வறுமையிலும் கூட  

மார்க்ஸ் 

வருத்தப்பட்டதெல்லாம் 

 பாட்டாளி வர்க்கத்துக்காகவே!

கண்ணீர் 

கண்டவருக்கும் 

அல்ல 

ரத்தம் 

எதிரிகளுக்கு 

அல்ல 

சித்தம் 

சுரண்டுபவருக்கு 

அல்ல 

வக்கப் போராட்டத்தின் 

யுத்தம் 

ஒன்றே வாழ்வு!

என வாழ்வாங்கு வாழ்ந்த மார்க்ஸ் பிறந்த நாளில் 

"மார்க்சிய திருத்தல்

 வாதங்களை "

தூக்கி எறிவோம்! 

பாசிச எதிர்ப்பில் 

பாட்டாளி வர்க்க அரசியலின் 

 அடிப்படைக் கொள்வோம்!

       - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1001877415852388/?rdid=PtKKs3e11aahsq5F

=====================================

9
செங்கொடிக்கு எதிராக செங்கொடியை அசைப்பவர்களை இனியும் கம்யூனிஸ்டுகள் என நம்புவது பேதமை!

"நல்லாட்சி" என்பது பொதுமக்களின் அனுபவ அடிப்படையில் பொருளாதார வழியில் தங்களுக்கு உதவி செய்வது, "நல்லது" செய்வது எனும் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புரிதல் மட்டத்தை மெயின்டெய்ன் செய்வதையே ஆளும் கட்சிகள் தங்களுடைய அரசியல் தந்திரமாக கொண்டுள்ளன. 

நாங்கள்  அதை கொடுத்தோம்! இதைக் கொடுத்தோம்! என்று நலத்திட்ட உதவிகளைச் சொல்லி தாங்கள்தான் நல்லாட்சி! இது வேண்டுமா? 

இல்லை இன்னும் கஷ்டப்பட வேண்டுமா? எனும் மென்மையான மிரட்டல் அரசியல் அணுகுமுறையில் 

இதுதான் நல்லாட்சிக்கான அரசியல் என்பதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைத்துள்ளது அரசு. 

உழைத்து வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் எவ்வளவு எவ்வளவு சிதைக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நலத்திட்டங்களுக்கான ஏக்கங்களும் பிறக்கிறது. "முதலாளித்துவ நல அரசு" மேலும் மேலும் மூர்க்கமாக மூலதனத்தின் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டே" மக்கள் நல அரசு" எனும் கோட்பாட்டை 

நிலை நிறுத்துவதில் மக்களின் சமூக வாழ்வில் முரண்பாடு வெடிக்கிறது. 

இந்த புறநிலை எதார்த்த வாழ்க்கைக் போராட்டங்கள், 

"நலத்திட்டங்கள்" " நல்லாட்சி" என்பவைகளை மக்களின் சுயமரியாதையான வாழ்விற்கு பொருந்தாததாக மேலும் மேலும் முரண்பாட்டை வளர்க்கிறது.

இந்த முரண்பாடு இன்னும் துலக்கமான வடிவத்தில் வெளிப்படாத வர்க்க முரண்பாட்டின் சூக்குமங்களைக் கொண்டுள்ளது. 

எனவே இது நலத்திட்டம் நல்லாட்சி என்பதன் போதாமையை மட்டுமல்ல முதலாளித்துவ அரசியலின் போதாமையையும் மக்களுக்கு எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்ட அதன் முரண்பாட்டையும் சேர்த்தே கொண்டு வருகிறது. 

இந்தப் போக்கில் கம்யூனிஸ்டுகள் கவனிக்க வேண்டியது முதலாளித்துவ நல அரசுகளின் நலத்திட்டம் நல்லாட்சி எனும் கோட்பாடுகளுக்கு பின்னே ஓடுவது அல்ல. மக்கள் தன்னியல்பாக இந்த போக்கில் இருந்து வெளிப்படுத்தும் அரசியல் அதிருப்தியை, கம்யூனிச அரசியலுக்கான உள்ளடக்கத்தோடு வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

மக்களே தன் அறிவிற்கு தன் முன்னே பரப்பப்பட்டுள்ள முதலாளித்து வகைப்பட்ட பழைய கருத்தாக்கங்களை நிராகரிக்கும் போது, அவர்களின் புதிய அரசியல் தேவைகளை ஈடு செய்யும் திறன் பெற்றவர்களாக கம்யூனிஸ்டுகள் முன்னே வந்து நிற்க வேண்டும். 

ஆனால் நமது தற்காலத்திய சுற்றுப்புற அவலம் மக்களே வெறுத்துப் போன கட்சிகளை

வென்றெடுக்கப் போவதுதான் 

கம்யூனிசம்! என கதை விட்டுக் கொண்டிருக்கும் திருத்தல்வாதம். 

உண்மையில் மக்கள் தன்னியல் பாக குறிப்பு காட்டும் சூழல்களை, மக்களை வென்றெடுக்கும் தருணத்தை சரியாக அரசியல் படுத்த பயன்படுத்திக் கொள்வதுதான் உண்மையான கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய பணி. 

ஆனால் தேர்தல் புனித வாதிகளின் பிழைப்பிற்கு இது தேவைப்படவில்லை. 

தமிழக அரசியல் களத்தில் மக்கள் ஆள்வதற்கு கொடுத்த வாய்ப்பை உழைக்கும் மக்களின் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கு எதிராக பிரயோகித்த திமுகவை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள். தங்கள் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டு சப்பை கட்ட வேண்டிய தேவை மக்களுக்கு இல்லை. 

திராவிட மாடல் கதைகளை நம்பவும் தயாராக இல்லை. 

"உனது திராவிட மாடல் புதிய பொருளாதாரக் கொள்கை தனியார்மய உலகமயத்தை ஏற்கிறதா? எதிர்க்கிறதா?" என்பதைச் சொல்! என நடைமுறை போராட்டங்களின் மூலமாக கேள்விகளை எழுப்பி அதன் ஏகாதிபத்திய முதலாளி வர்க்க சேர்மானத்தை அம்பலப்படுத்தி விட்டார்கள். 

ஓட்டு போடுவது எனும் அரங்கிலும் கூட தொடர்ந்து உன்னுடைய அரசியல் எங்களிடம் செல்லாது என்று தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு முறையில் வெளிப்படுத்துவது என்பது ஒருவகையில் முன்னோக்கிய சிந்தனை. இந்த நிலையை மேற்கொண்டு வளர்த்தெடுப்பதற்கு தான் கம்யூனிஸ்டுகள் தேவை.

இத்தனைக்கும் பிறகும் கூட மக்களை விடவும் பின்தங்கி நின்று கொண்டு செங்கொடிக்கு எதிராக செங்கொடியை அசைப்பவர்களை இனியும் கம்யூனிஸ்டுகள் என நம்புவது பேதமை! 

கம்யூனிஸ்டுகளுக்கே உரிய வர்க்கப் போராட்ட அரசியல் திட்டங்களை முன்வைத்து மக்களை குறைந்தபட்சம் இடதுசாரி அரசியல் தோழமை சக்தியாக வென்றெடுக்கும் வேலைதான், தேர்தல் அரசியலின் உள் முரண்களில் இருந்தும் மக்களின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்டுகள் தங்களை வளர்த்துக் கொள்ளும் வழிமுறையாக இருக்க முடியும்.

        - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1004234335616696/?rdid=a7hoqqiXJ9NRyv06

===========================================

10
பாசிசமாவது வெங்காயமாவது?
திராவிட மாடலின் தீர்த்தங்கரர்கள்!

 

அம்பலமாக்கும் 

முதலாளித்துவ அரசியல்!



அதிமுக ஆட்சியை கொண்டுவர திமுக பேசியது உண்மைதான் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் பேபி அவர்களின் காணொளி பேச்சிலிருந்து தெளிவாக தெரிகிறது.

 

ஊர் அறிந்த இந்த உண்மையை அப்படி இருக்கலாம்! இப்படி இருக்கலாம்! தமிழக கம்யூனிஸ்ட் செயலர் சொல்லவில்லை! என்றெல்லாம் தந்திர அடிப்படையில் மூடி மறைத்து பேசுகிறார்கள் திமுகவின் பலன் விரும்பிகள் பலர். 

 

ஆனால் டிபேட் எனும் youtube சேனல் செய்தியாளரிடம் பேசும் இரண்டு கட்சித் தலைவர்களும் 

தவிர்க்க இயலாமல் "உரையாடல் வந்தது! செய்திகள் வந்தது! நாங்கள் ஏற்க இயலாது என்று சொன்னோம்!" என்று தயங்கி தயங்கி நடந்ததை ஏற்கிறார்கள்.

 

முன்னறிந்து மக்களுக்கு வழிகாட்டும் முண்கள அறிவுக் கடவுள்களோ, ஒரு நடந்த உண்மையை சொப்பனலோகத்தில் கனவு கண்டது போல உருட்டுகிறது. 

 

அதிமுகவை கொண்டுவர பாஜக உடன் சேர்ந்து கொண்டு செய்த இந்த வேலை எவ்வளவு அயோக்கியத்தனமானது. இதன் மீது ஒரு முற்போக்காளருக்கு எவ்வளவு ஆத்திரமும் வர்க்க கோபமும் வர வேண்டும். 

 

ஆனால்,

 

திமுகவை ஆதரிக்கும் நபர்கள், குறிப்பாக வித்வான் மருதையன்  போன்றவர்கள் இது பெரிய வரலாற்றுப் பிழையாகிவிடும் இப்படி முடிவு எடுக்கக் கூடாது! 

இன்று ஆலோசனை வழங்குகிறார்கள்.

 

இப்படி ஒன்று நடந்து இருக்கிறது. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்! இவர்கள் சொல்லிக் கொண்ட கொள்கைக்கு மோசடி!

திமுக அதிமுக பாசிச பாஜக இவை யாவும் ஒரே நேர்கோட்டில் தமிழ்நாட்டிற்கு எதிராக எவ்வளவு கேவலமாக சிந்திக்கின்றன! என்று இத்தகு அரசியலை இந்த முயற்சிக்காகவே கண்டிக்க வேண்டும். அம்பலப்படுத்த வேண்டும். ஆனால் இவர்கள் அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது! என்பதாக நடந்ததையே ஒரு யூகம் என்பது போல திருத்தல்வாதம் செய்கிறார்கள். இதுவும் ஒரு மோசடிதான்.

 

திமுக மீதான முற்போக்கு பிம்பத்தை என்னைப் போன்ற பலர் அவ்வப்போது அம்பலப்படுத்திய போது வரட்டு தாக்குதலை வன்மத்தைக் கக்கினார்கள் சிலர். பொழுதுக்கும் youtube பேச்சு கச்சேரியில் அண்ணா திமுகவை வெளுப்பதும் பாசிச எதிர்ப்புக்கு திமுக என்பதை ஏற்காதவர்களை அரசியல் அறிவற்றவர்களாக  கதாகாலேட்சபம் வைத்த மருதையன் உட்பட இதன் மறைமுக கூட்டாளிகள்தான்.

 

புரட்சிகர அமைப்பின் கணிசமான பகுதியினரை இந்த தேர்தல் சூதாட்டத்துக்குள் இழுத்து விட்டதைப் பற்றி எந்த சுய விமர்சனமும் இன்றி திமுகவுக்கு மேலே நின்று ஆசி வழங்கும் அற்பவாதி பாத்திரத்தை வரலாறு அவருக்கு வழங்கி இருக்கிறது. 

 

பாசிசமாவது வெங்காயமாவது? பதவி வெறியும் அதிகார ருசியும்தான் இவர்களின் லட்சியமாக இருக்கிறது.

 

குறைந்தபட்சம் தேர்தல் அரசியலில் கூட்டணியில் இருந்த சிபிஐ சிபிஎம் தோழர்களிடம் வெளிப்பட்ட எதிர்ப்புணர்வு கூட இவரை போன்ற பிழைப்பரங்கவாதிகளுக்கு இல்லை. 

 

திமுக ஒரு தேர்தல் ஆதாய கட்சி. 

அதன் அரசியல் நகர்வுகள் முடிவுகள் மக்களிடம் எளிதில் அம்பலப்பட்டு விடும். அந்த வகையில் இது போன்ற கட்சிகளை விடவும் முதலாளித்துவக் கட்சிகளுக்கு மார்க்கெட்டிங் ஏஜென்சிகளாக மக்களை மோட்டிவேட் செய்யும்

பல வண்ண மக்கள் விரோத பேர்வழிகள்தான் அதிக ஆபத்துக்கு உரியவர்கள். 

 

 நமக்கு இவர்களையும் அடையாளம் காட்டி இருக்கிறது இந்தச் சூழல்.

 

      - துரை. சண்முகம்

 

https://www.facebook.com/share/1P2f3hM91Y/

 

=======================

11 
திமுக அதிமுகவுக்கு எதிராகவே தமிழக மக்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்!"

" டெல்லியின் தலையீட்டால் தமிழகத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக வேலை செய்ய முயற்சிக்கிறார்கள்! கொல்லைப் புற வழியாக அதிமுக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள்! திமுக அதிமுகவுக்கு எதிராகவே தமிழக மக்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்!" 

  என்று சிபிஎம்  பொதுச்செயலாளர் பேபி அவர்கள் மதுரையில் செய்தியாளர்களிடம் மீண்டும் தமது கருத்தையும் சூழலின் உண்மையையும் பேசி உள்ளார். 

 

இந்த தேர்தல் ஜனநாயக கட்டமைப்பில்  நடக்கும் விசயங்களில் ஆளுநரை வைத்து அடாவடி செய்யும் பாஜகவின் போக்கை எதிர்ப்பது, மதவாத சக்திகள் காலூன்றாமல் தடுப்பது! என்று தான் அறிவித்த முடிவின்படி சிபிஎம் கட்சி சி.பி.ஐ கட்சி இந்த விசயத்தில் அதனை ஒட்டி நடந்துள்ளது. அந்த அளவுக்கு 

அது குறிப்பிடப்பட வேண்டியது.

 

இவர் சொன்ன நிலைமைகளை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட திமுக அதிமுகவுடன் பேரம் பேசி அதற்கு துரோகம் அளித்தது சந்தர்ப்பவாத சமரசவாத அரசியலை வெளிக்காட்டி உள்ளது. 

 

வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் தொடர்ந்து

பாசிச எதிர்ப்புக்கு தலைமை தாங்க திமுகவுக்கு அரசியல் அடிப்படை இல்லை, அதன் பின்னே வால் பிடித்துப் போவது தன்னழிவுக்கு வழிவகுக்கும் என்பதை பல கோணத்தில்  நான் மற்றும் Chandran Dhamodaran , ரணதீபன் , Sidhambaram Voc , உடனே நினைவுக்கு வராத இன்னும் சில தோழர்கள் சொல்லிவரும் கருத்துக்கள் சரியானது என்பதை அரசியல் சூழல்கள் மெய்ப்பிக்கின்றன.

 

சரியான கண்ணோட்டத்தை சமரசம் இல்லாமல் தொடர்ந்து 

தொடர்ந்து பேசுவோம்! 

 

    - துரை. சண்முகம்

 

https://www.facebook.com/share/p/1Gr2oJyQo7/

 

==================

12 
முதலாளிகளுக்கு பல கட்சிகள் இருக்கின்றன - தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரே கட்சி கம்யூனிஸ்ட் இயக்கம் தான்

சில கருத்தாளர்கள் என்ன கணக்கு வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை! நல்ல முதலாளித்துவம் மோசமான முதலாளித்துவம் என்று முடிந்து வைத்திருந்த நேர்த்திக்கடன் ஆசையில் நிறைந்து இருந்திருப்பார்கள் போல. 

 

விஜய் என்ற முதலாளித்துவ தொடர்ச்சி வந்தவுடன் இனிமே எல்லாம் போச்சு! என்று  மனம் வாடுகிறார்கள்.

 

வெள்ளக்காரன் வந்தான் எல்லாம் போச்சு! என்று முணகிய சமூகம் இது. பிறகு 

" திமுக வந்தது நாடே கெட்டது!"

என்ற நில பிரபுத்துவ பெருசுகளின் ஆவிகள் இப்போதும் நீடிக்கின்றன.

 

முதலாளித்துவ வளர்ச்சி போக்கின் விளைவுகளை 

ஒரு திட்ட வகைப்பட்ட முறையில் கைப்பற்றி மாற்று திசையில் சமுதாயத்தை இயக்கும் சக்திகள் ஆதிக்கம் செலுத்த முடியாத போது 

முதலாளித்துவத்தின் ஏக போக கட்ட," நிலை மறுப்பின் நிலை மறுப்பிற்கு" அது சென்றுதான் தீரும். மூலதன சுரண்டலின் 

தீவிரத்திற்கு அது பயணப்படும். 

 

பழைய முதலாளித்துவமே பரவாயில்லை எனும் விருப்பங்களில் அது தேங்கி நிற்காது. அது வளர்ந்தே தீரும். 

 

இந்தியாவில் அதன் தொடக்கக் கட்டத்திலேயே மார்க்ஸ் சரியாக சொன்னார், " இருப்பதையும் இழந்து புதிதாக எதையும் பெறாத " அதன் அவலச் சூழலைச் சுட்டிக்காட்டினார்.

 

இந்தச்சூழலில்

 

விஜய் ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்தது போல 

இப்பொழுதுதான் முதலாளித்துவத்தை விஜய் கொண்டு வந்தது போல, பழைய திராவிடமே பரவாயில்லை என சிலர் மனசு கிடந்த அடித்துக் கொள்கிறது.

 

கணவான்களே!

 

எதார்த்தத்தில் நமக்கு எந்த வகை குறுக்கீடு தேவை எனும் அரசியலை மாற்றாக நிறுத்தாமல், ஏற்கனவே இருந்த ஒப்பீட்டளவு மன அமைதியை 

முதலாளித்துவத்தின் வளர்ச்சி வழங்குவதில்லை. நல்ல முதலாளித்துவத்தின் நாட்களுக்காக ஏங்குவதும் நமது வேலை அல்ல. 

 

முதலில் விருப்பு வெறுப்பின்றி எதார்த்தத்தை ஆராய்ந்து சூழலை மதிப்பிட வேண்டும். 

சூழலை மதிப்பிடுவது என்பது சூழலுக்கு பலியாவது அல்ல. 

 

இந்தச் சூழலின் முரண்பாட்டை எப்படி பாட்டாளி வர்க்க அரசியல் சூழலுக்கு முன் நகர்த்துவது இன்னும் சித்தாந்த 

யுத்தத்தில் அது பிறக்கிறது. 

 

இதற்கான அறிவியல் பூர்வமான நம்பிக்கையை வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்கம் பக்கத்தில் நிற்பதன் மூலமாக மட்டுமே பெற முடியும். 

பாட்டாளி வர்க்க நலன்களின் நிர்பந்தம் இல்லாமல் யார் பக்கத்திலும் போய் நின்று கொள்வதால் வெல்ல முடியாது. 

மக்களின் நம்பிக்கையையும் பெற முடியாது. 

 

இவ்வாறு இல்லாமல் முதலாளித்துவ அணிகளில் ஏதாவது ஒரு பக்கம் நின்று கொண்டு, மக்களுக்கு சரியாக சிந்திக்க தெரியவில்லை! அவரைவிட இவர் நல்லவர், இவரை விட அவர் நல்லவர்,  என்று திராவிட சமூக நீதி அக்கரை இக்கரை பார்வையில் கரைந்து போனதால் ஏற்பட்ட சூழல்தான் கம்யூனிச இயக்கம் வளர முடியாமல் போனது. 

 

எதார்த்தத்தில் எந்த கட்சிகளை விடவும் மக்களுக்காக அளப்பரிய தியாகங்களும் போராட்டங்களும் கட்டமைப்புகளும் நிறுவன ஒழுங்கமைப்பும் கொண்டது கம்யூனிஸ்ட் இயக்கம். 

 

அதன் சித்தாந்த சறுக்கல்தான் முதல் சறுக்கல். தனக்கான கம்யூனிச சித்தாந்த கட்சியாக மக்களிடம் ஊன்றி நிற்கும் போது மட்டுமே அது வளரும். 

மக்களும் இணைந்து இருக்கிறார்கள். 

 

நாம் எப்படி தோற்றோம் எனும் பரிசீலனைக்கு வருவதும், விஜய் எப்படி ஜெயித்தார் என்று ஆராய்வதும் வேறானது அல்ல. 

 

முதலாளிகளுக்கு பல கட்சிகள் இருக்கின்றன. 

 

தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரே கட்சி கம்யூனிஸ்ட் இயக்கம் தான். 

 

இதைப் புரிந்து கொண்டு பாட்டாளி வர்க்கத்துக்கான சுயேட்சை அரசியல் தன்மையோடு, நமது கொள்கைகளின் நலன்களின்

திட்டங்களுக்கு ஒத்து வருபவர்களை நமது தலைமையின் கீழ் நட்பு சக்தியாக திரட்டுவதற்கான அரசியல் வேலைதான் 

நமக்கானது.

 

திராவிடம் மாடல் என்பது முற்றிலும் ஒருவகை முதலாளித்துவ மாடல்தான். 

அதனால்தான் அதுவால் மக்கள் மனங்களை வெல்ல முடியவில்லை. ஏனென்றால் அது மெய் உலகில் மெய்யான சமூக நீதியை நிலைநிறுத்த முடியாது. யாரோ ஒரு விஜய் வந்து அனைவரையும் ரசிகராகிவிட்டார் அதனால் மொத்தமும் கெட்டு விட்டது என சூழலை மதிப்பீடு செய்வது எளிமைப்படுத்தப்பட்ட வாதம். 

 

விஜய் கூட இதை புரிந்தே வைத்திருக்கிறார். பதவி ஏற்ற பின்பு நான் ஒன்றும் தேவதூதன் அல்ல! என்று சொல்வதன் மூலம் மக்கள் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க முடியாது என்பதன் மறைவு பொருள் அதில் அடங்கியுள்ளது.

 

இந்தச் சூழலை பயன்படுத்திக் கொள்ளும் திறன் பெற்றவர்களாக கம்யூனிஸ்ட் இயக்கம் இல்லாத சூழலில் அந்த இடம் விஜய்க்கு வாய்த்து இருக்கிறது.

 

குறைந்தபட்சம் ஏற்கனவே தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் இரண்டும் மக்களை சுரண்டும் கட்சிகள் ஒன்றை ஒன்று அண்டர் கிரவுண்ட் அண்டர்ஸ்டாண்டிங் உள்ள கட்சிகள்! என்று வெளிப்படையாக விஜய்யால் பேச முடிந்ததை! மக்கள் வரவேற்று ஏற்க முடிந்ததைக் கூட ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகளால் தம்மை மாற்றாக முன்னிறுத்தி பேச முடியவில்லை?

 

ஒரு உண்மையான சமூக சூழலை வெளிப்படையாக அரசியலாக பேச தடுப்பது எது?

 

முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு வகையான விஜய் கூட  முதலாளித்துவ அரசியலில் தன்னை மாற்றாக நிறுவிக்கொள்ளும் வழிமுறையில் வெற்றி பெறும்போது, இது கம்யூனிஸ்டுகளால் ஆகாத காரியம் அல்ல. 

 

வர்க்கப் போராட்டத்திற்கு ஆகாத தத்துவங்களின் பின்னாலும், கட்சிகளின் பின்னாலும் போய் தேய்ந்த அழிவதை விட, பாட்டாளி வர்க்க சித்தாந்த அரசியலின் கீழ் 

பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரு சுயேச்சை கட்சியாக தன்னை நிறுவிக்கொள்ளும் பரிசீலனைகளும் வேலை முறைகளுமே தேவைப்படுகிறது. 

 

மீண்டும் திமுக ஐடி விங் மீம்சுகளுக்கு பின்னே போய்

அரசியல் பேசுவது நமக்கு அவசியம் இல்லை. 

 

நமக்கான பாட்டாளி மக்கள் அரசியலை வேறு வர்க்க சார்பின்றி உண்மை சூழலை மக்களுக்கு உரத்து முழங்குவோம்!

 

     - துரை. சண்முகம்

 

https://www.facebook.com/share/1D1xBhEy6e/


======================

13
பெயரளவிற்கு மார்க்சியம் பேசுவதைக் கூட முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாத நிலைக்கு பாராளுமன்றப் பாதை போய்விட்டது

தேர்தல் அரசியலில் பங்கு கொண்டு பாராளுமன்றப் பாதையை நிராகரித்த அமைப்புகளுக்கு எதிராக,

அப்பாதையை ஏற்றுக் கொண்டன சில கம்யூனிஸ்டு கட்சிகள்.

நிராகரித்தவர்கள் ஒருபுறம் தங்களுடைய அதிதீவிர நடவடிக்கைகளால் பின்னடைவை சந்தித்தனர்.

ஏற்றுக் கொண்டவர்கள் சற்று முன்னேறியது போலத் தெரிந்தது.

அவ்வாறு ஏற்றுக் கொண்டவர்களின் பணி என்பது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் மூலம் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதும்,

உழைக்கும் மக்களின் குரலை ஒலிப்பதுவும்தான்.

ஆனால் அக்கட்சிகளோ நிராகரித்தவர்கள் ஒரு எல்லைக்குப் போய்விட்டதைப் போன்று, இவர்கள் வேறொரு எல்லைக்குப் போய்,

 பாராளுமன்றங்களின் மூலமே சமூக மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் என்று நம்பினார்கள்.

அதையே தங்களுடைய செயல்தந்திரமாகவும் மாற்றிக் கொண்டார்கள்.

இப்போது இப்படி ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்டு கட்சிகள் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவில்லை

மாறாக பாராளுமன்றப் பாதை இவர்களை புறக்கணித்துவிட்டது.

அதாவது பெயரளவிற்கு மார்க்சியம் பேசுவதைக் கூட முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாத நிலைக்கு பாராளுமன்றப் பாதை போய்விட்டது.

இனி இருதரப்பும் என்ன செய்யப் போகிறது.

தங்களுடைய தோல்விகளை சுயவிமர்சனமாக பரிசீலித்துக் கொள்ளப் போகின்றனவா அல்லது தவறுகளுக்கு காரணம் கற்பிக்கப் போகின்றனவா ?

Chandran Dhamodaran

https://www.facebook.com/story.php?story_fbid=122280598370244910&id=61557347300989&rdid=nCDR0UY0fZVtzQfG

========================================

14
விஜய் முதலாளித்துவத்தின் மற்றொரு தயாரிப்புதான்

வாக்கு இயந்திரத்தில் குளறுபடி மூலம் பா ஜக விஜயின் தவெகவை வெற்றி பெற வைத்திருக்கிறது என்று திமுக ஆதரவாளர்களும், திமுக ஆதரவு முற்போக்கு அறிவுஜீவிகளும், திமுகவை ஆதரிக்காத சில முற்போக்காளர்களும் எழுத ஆரம்பித்துள்ளனர்.

அதை உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் கூட

அப்படிப்பட்ட வெற்றியைத் தரும் அளவுக்கான வாக்குகளுக்கு அருகாமையிலாவது தவெக வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.

மாறாக நாதகவின் வாக்குகளைப் போன்ற வாக்குகளைப் பெற்றிருந்தால் தவெகவை வெற்றியாளராக்க முடியாது.

அப்படிப் பார்த்தாலும் தவெகவிற்கு பெருவாரியான வாக்குகள் பதிவாகியிருப்பதை முதலில் ஒப்புக் கொள்ளவேண்டும்.

அந்த அளவு திராவிடக் கட்சிகளின் மீதான,

அவர்களுடைய பண்ணையார்த்தனம், ஊழல் , அதிகார மமதை, அதிகார துஷ்பிரயோகம்,

நிர்வாக சீர்கேடு,

முதலாளிகளுக்கு ஆதரவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்ப்புமான கொள்கைகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பைத்தான் இந்த வாக்குகள் வெளிப்படுத்துகிறது.

அடுத்து இதை பா ஜகதான் செய்யுமா, வேறு யாரும் பாஜகவை செய்ய வைத்திருக்கக் கூடாதா என்ற கேள்வியை எழுப்பி விடை தேடலாம்.

இவ்வாறான கேள்வியை எழுப்புவதே வித்தியாசமானதாகவும், அதீதமானதாகவும் தோன்றலாம்.

ஆனால் இப்படிப்பட்ட கேள்வியை மார்க்சியவாதிகள்தான் எழுப்ப முடியும்.

ஏனென்றால் மார்க்சியம்தான் பொருளுற்பத்தி என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் என்ற மேல்கட்டுமானம் உருவாகிறது என்ற தத்துவத்தை அளித்திருக்கிறது.

ஆனால் மற்ற கட்சிகள் இப்படியொரு தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை அதனால் அவர்கள் இப்படிப்பட்ட கேள்வியை எழுப்ப மாட்டார்கள்.

உதாரணமாக திமுகவைப் பொருத்தவரை திராவிடம் எனும் தத்துவம்தான் சமூகத்தை இயக்குவதாக நம்புகிறார்கள், அதனால்தான் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மனிதக் குரங்காக இருந்த மனிதன் ஆறறிவு பெற்றவனாக ஆனான் என்று பேசுகிற நிலை உருவாகிறது.

அடித்தளம், மேற்கட்டுமானத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது முதலாளித்துவ வர்க்கம் தனக்குத் தேவையான அரசியல் கட்சிகளை பல வண்ணங்களில் உருவாக்கிக் கொள்ளும், ஒருவேளை மக்களிடமிருந்து எழுச்சியோடு ஒரு அரசியல் இயக்கம் உருவானால் அதை தனக்கேற்ப வளைத்து இயக்கும்.

அதிலொன்றுதான் பா ஜக. மற்றபடி இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது, ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது பா ஜக அல்ல, முதலாளித்துவ அடித்தளம்.

இதைச் சொல்லும் போது பாசிசம் என்பதன் அரசியல் வடிவம்  முதலாளித்துவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதுதான் என்பதை ஏற்கவேண்டும்.

ஆனால் திமுக போன்ற முதலாளித்துவ கட்சிகள் அதை ஏற்பதில்லை.

மாறாக பாசிசத்தை அனைத்துக்கும் மேலானதாக உயர்த்திக் காட்டுகிறார்கள்.

எனவே விஜய் முதலாளித்துவத்தின் மற்றொரு தயாரிப்புதான்.

இது மக்கள் எழுச்சியோடு மேலெழுந்து வருமென்று கண்டுணர்ந்து விஜயைக் கூட சில பல ஆண்டுகளாக திரைத்துறையிலும் வளர்த்தெடுத்து வந்திருக்கலாம்.

அதறுகேற்ப அவருடைய வியாபாரத்தை எப்போதும் முன்னணியிலேயே வைத்திருந்து பிம்பத்தை வளர்த்தெடுத்திருக்கலாம்

இன்றும் விஜய் தேர்தல் களத்திலும் பெருவாரியான வாக்குகள் பெறும் போது வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருக்கலாம்.

அதை பா ஜ க மூலமும் , அதன் கைப்பாவையாக இயங்கும் தேர்தல் ஆணையம் மூலமும் நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.

எனவே விஜய் ஒரு முதலாளித்துவ வர்க்க விளைபொருளென்று பார்க்காமல் பா ஜகவின்  விளைபொருளென்று  திராவிடக் கருத்தியலாளர்கள் போல

மார்க்சியவாதிகள்

 பார்க்கக் கூடாது.

இதுகூட ஒரு பார்வைதான்.

இதுவே இறுதியானதென்பதில்லை.

சரியானதென்பதில்லை என்று கூட வாதிடலாம்.

எது சரியான பார்வை என விளக்கி நிரூபிக்க வேண்டியது கம்யூனிஸ்டு கட்சிகளின் பணி.

அவர்கள் வலுவான ஆதாரத்தோடு வாதத்தை முன்வைக்கும் போதுதான் உண்மையை நம்மைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

அதோடு  பா ஜ க பற்றிய அதீதமான கட்டமைப்புகளை உருவாக்காமலும், அதன் மூலம் பா ஜகவிற்கு பலமான பிம்பத்தையும் முற்போக்காளர்களே உருவாக்காத நிலையும் வரும்.

ஆனால் இங்கோ திராவிடக் கருத்தியலாளர்கள் மற்றும்  கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டு திராவிடக் கருத்தியலை தூக்கிச் சுமப்பவர்களின் கருத்தைத்தான் கம்யூனிஸ்டு கட்சிகளே முன்வைக்கின்றன என்ற பரிதாப நிலை.

இதைவிட மோசமானது, அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய சமூக இயக்கவியல் விதியே தவறு என்றும்,

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வன்முறையானது அஹிம்சைதான் சிறந்தது என்றும்,

பொதுவான ஜனநாயகம் என்று ஒன்று உண்டு என்றும்,

முதலாளித்துவ சர்வாதிகாரத்தையே பொதுவான ஜனநாயகம் என்றும் திரித்து,

திரிபுவாதக் கருத்துக்களை பரப்பும் அந்நிய என்ஜிஓ கையாட்களை மார்க்சிய அறிஞர் என்று தூக்கிச் சுமக்கும் கட்சிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியம்.

Chandran Dhamodaran

https://www.facebook.com/61557347300989/posts/122280733286244910/?rdid=YSDoXvCe7ugrEEFy

=============================================

15 
தனக்கு முற்போக்கு முகமூடி தரித்துக் கொண்ட திமுக

தமிழ்நாட்டில் ஒரு பெரும் கட்சியான அதிமுக தன்னை எப்போதும் முற்போக்கானதாக சொல்லிக் கொண்டதில்லை.

இன்னும் சொல்லப் போனால் அவர்களே அவர்களை அம்பலப்படுத்திக் கொள்வார்கள்.

அதிமுகவை விமர்சிக்கலாம் கண்டிக்கலாம் ஆனால் அம்பலப்படுத்தும் தேவையில்லை.

தவெகவினருக்கு அரசியல் தெரியாது என்பதுதான் அவர்கள் மீது இருக்கும் விமர்சனமே.

போகப்போக அவர்களுடைய செயல்பாட்டையொட்டி விமர்சனம் வரும்.

ஆனால் தமிழ்நாட்டில் திமுக என்பது முற்போக்கான கட்சி, பாசிச எதிர்ப்புக்கட்சி, சமூகநீதிக்கட்சி என்ற பெயர் பெற்றிருந்தது.

கொள்கைக்காக பதவியையே இழக்கத் தயங்காதவர்கள் என்றெல்லாம் புகழப்பட்ட கட்சி.

இந்தக் கட்சியை இதுபோல உயர்த்திக் காட்ட அவர்களிடம் இணைய நிறுவனம் ஒன்று இருந்தது.

அதோடு கம்யூனிசம் பேசிய பலரையும், இலக்கியவாதிகளையும் அந்நிறுவனம் பயன்படுத்தியது.

இதன்மூலம் திமுகவை விட்டால் பாசிச

 பா ஜகவிடமிருந்து தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சியிலில்லாத

 பா ஜக எப்படி கபளீகரம் செய்யும் என்ற கேள்விக்கு அவர்கள்

அதிமுக மூலமாக அதைச் செய்வார்கள் என்று பதிலளித்தனர்.

அதிமுக என்பதை அமித்ஷா திமுக என்றுதான் குறிப்பிட்டனர்.

அடிமை பழனிச்சாமி என்றனர்.

தேர்தல் சமயத்தில் அதிமுகவிற்கு அளிக்கும் வாக்கு பா ஜகவிற்கு அளிக்கும் வாக்கு என்றனர்.

இந்தத் தேர்தலே டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் நடக்கும் தேர்தல் என்றனர்.

எனவே அதிமுக என்றாலே பா ஜ கதான் என்றனர்.

தேர்தல் முடிந்தது.

எதிர்பாராத விதமாக தவெக அதிகப்படியான இடங்களைப் பெற்றது.

திமுகவும் அமித்ஷா திமுகவும் பெரும்பான்மை பெறவில்லை.

இந்த சூழலில் தவெக ஆட்சியமைக்க முயற்சித்தபோது இடதுசாரிகள் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்தனர்.

அதற்கான காரணம் குறித்துப் பேசிய  சிபிஎம்மின் தேசிய பொதுச்செயலாளர் தோழர் பேபி 

" நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம், அவர்களுடன் கலந்து பேசியே இந்த முடிவை எடுத்துள்ளோம்,

ஆனால் திமுக , ' அதிமுகவை வெளியிலிருந்து ஆதரித்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க உள்ளோம் என்று ' எங்களோடு கலந்தாலோசிக்காமலே ஒரு யோசனையை முன்வைத்தனர்,

இது பா ஜக கொள்ளைப்புற வழியாக ஆட்சியமைக்கும் முயற்சி எனவே நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, அதிகப்படியான இடங்களை வென்ற தவெகவிற்கு உடனடியாக ஆதரவை தெரவித்துள்ளோம் " என்று கூறியுள்ளார்.

 

அதாவது பா ஜக பூச்சாண்டி காண்பித்து, தனது 50 ஆண்டு கால அரசியல் எதிரியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து

அதன்மூலம் தனக்கு முற்போக்கு முகமூடி தரித்துக் கொண்ட திமுக

தனது ஆட்சிக்கால அவலங்களை மறைக்க

அதே பாசிச பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயாரானதே தோழர் பேபி அம்பலப்படுத்திவிட்டார்.

இதுவரை திமுகவிடம் பலன்பெற்றுக் கொண்டு ஆதரித்தவர்கள் போக

உண்மையிலேயே திமுக என்பது முற்போக்கான கட்சி என்று நம்பிய தோழர்கள் தங்கள் நிலையை இப்போதாவது மாற்றிக்கொள்வது மட்டுமல்லாது,

திமுகவின் இந்த கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதப் போக்கை அம்பலப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

ஏற்கெனவே கூறியது போல அதிமுகவும், தவெகவும் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்வார்கள், நாம் அம்பலப்படுத்துவதும் சுலபம்.

ஆனால் முற்போக்கு முகமூடி தரித்துள்ள திமுகவை தோழர்கள்தான் இதுபோன்ற ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும்.

இந்த விசயத்தில் தோழர் பேபி அம்பலப்படுத்திய உண்மையை தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான் முதலில்  வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஏனோ செய்யவில்லை, என்னவென்று தெரியவில்லை.

தோழர் பேபிக்கு நன்றி

 

Chandran Dhamodaran

 

https://www.facebook.com/share/1Ei3ofoagV/

==================

16
நினைத்துப் பார்க்க முடியாத  அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளன...!

தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் கை கோர்க்கிறார்களாம்! தவெகவுடன் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கை கோர்த்து தடுப்பானேன்? இதன் பின்னணி என்ன?

‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்கும்’ என்ற நிலைபாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளார். இதற்கான முன்னெடுப்புகள்  வேகம் பெற்றுள்ளன.

மே-5 ஆம் தேதி மாலை எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, ”தவெக ஆட்சி அமைவதை தடுக்க, ”நம் இரு திராவிட இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்..’’ என்று ஆதரவு கேட்ட தகவல் கிடைத்த போது நம்ப முடியவில்லை.

பெரியாரையும், அம்பேத்காரையும் வழிகாட்டித் தலைவராக அறிவித்து செயல்படும் விஜய் திராவிட கருத்தியலுக்கு எதிராக ஒரு போதும் பேசியதில்லையே. ‘பாஜக கொள்கை விரோதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சமரசமே இல்லை’ என கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்திலும் விஜய் உறுதிபடுத்தி உள்ளாரே.

‘அவசரப்பட்டு எதையும் எழுத வேண்டாம்’ என நாம் அமைதி காத்தோம்.

அதன் பிறகு திமுகவிடம் ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து  சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிய செய்தி  வந்தது.

’பரவாயில்லையே அதிமுகவில் ஒரு சிலருக்கேனும் சுயமரியாதை இருக்கிறதே?  அறச் சீற்றம் இருக்கிறதே.. தலைமையை தட்டிக் கேட்கும் ஜனநாயகம் இருக்கிறதே’ என நினைத்துக் கொண்டோம்.

அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சுதாரித்துக் கொண்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை புதுச்சேரி தூக்கிச் சென்று தங்க வைத்து, ’’நல்ல செய்தி தரப்போகிறேன். நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்’’ எனப் பேசிய தகவல்கள் வெளியாயின.

”எடப்பாடியார் ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியிலேயே தங்கியிருப்பார்கள்” என அந்தக் கட்சி நிர்வாகி அன்பழகன் கூறி இருக்கிறார்.

அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடமும் ஸ்டாலின் தகவல் கூறியுள்ளார்.

கட்சிக் கூட்டத்திலும் ”நான் எந்த முடிவு எடுத்தாலும், நீங்க எல்லாம் கட்டுபட்டு நடக்கனும்.. வர்ற 10-ந் தேதி வரைக்கும் சென்னையில் தான் இருக்கனும்”  என்று அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார் ஸ்டாலின். அவசரகால முடிவுகளை கட்சி தலைமை எடுக்கும் போது அதனை அங்கீகரிக்க வேண்டும்…’’ என்றும் கூறியுள்ளார், ஸ்டாலின்.

“நிலையான ஆட்சி அமைய, அவசரமான எந்த முடிவையும் எடுக்க” ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி,  திமுகவின் உயர் நிலை கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.

”பாஜக முகமுடியை போட்டுக் கொண்டுள்ளது அதிமுக . அதிமுகவிற்கு வாக்களிப்பது  பாஜகவின்  மறைமுக ஆட்சிக்கு வித்திடுவதாகவே முடியும்” என்று மேடைதோறும் ஸ்டாலினும், உடன் பிறப்புகளும் பேசிய வார்த்தைகளின் ஈரம் இன்னும் காயவில்லை. திடீரென்று அதிமுக புனிதமான கட்சியாகிவிட்டதா திமுகவிற்கு? ‘விஜய் ஆட்சி அமைப்பதைக் காட்டிலும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்தால் பரவாயில்லை’ என நினைக்க வேண்டிய அவசியம் எப்படி வந்தது…?

விஜய் ஆட்சி அமைத்தால், இடதுசாரிகளும், விசிகவும் அதிகாரம் பெறக் கூடிய நிலை உள்ளது. அவர்கள் உடனிருந்து விஜய்யை வழி நடத்தும் வாய்ப்பு  ஏற்படும், மதச்சார்பற்ற ஆரோக்கியமான அரசியல் சூழல் கனிந்துள்ளது. அத்துடன் சிறுபான்மையினரை பிரதிபலிக்கும் ஐ.யு.எம்.எல்லிடமும் தவெக ஆதரவு கேட்டுள்ளது. இந்த சிறிய கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியில் இன்னும் ஒரு நூற்றாண்டுகள் தொடர்ந்தாலும் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது.

”பாஜக அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயகக்  கூட்டணியில் உள்ள பாமகவிடம் கூட ஆதரவு கோரமட்டோம்” என தவெக திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இப்படியாக பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கைகோர்த்து தடுப்பானேன்?

பாஜகவின் ஆளுநர் அர்லேகரின் அராஜக செயல்பாட்டுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. ”தவெகவிற்கு பெரும்பான்மை எண்ணிக்கையை காட்ட முடியவில்லை. ஆகவே, ஆட்சி அமைக்க அவர்களை அழைக்க மாட்டேன். தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் நான் அழைப்பது சாத்தியம் ’’ என்று  ஆளுநர் கூறியுள்ளார்.

திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து வரும் வரை விஜய்யை அழைக்கப் போவதில்லை’ என ஆளுநர் காத்திருக்கிறார்…என்றால், விஜய்யை எதிர்க்க திமுக, அதிமுக,பாஜக ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

”தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினால், 108 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம்” என தவெக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

தற்போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்;

திமுக, அதிமுக இருவருக்கும் ஒரே பாஸ் தான். அந்த பாஜக என்ற பாஸ் தான் விஜய் ஆட்சிக்கு வருவதை தடுக்க தன்னுடைய இரு அடிமைகளையும் ஒன்றிணைய கட்டளை இட்டுள்ளது.

அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற பாஜகவின் கட்டளை நடிகர் ரஜினிகாந்த் மூலமாக ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ”உங்களால் நீண்ட காலத்திற்கு இடதுசாரிகளையும், விசிகவையும் கண்ரோல் பண்ண முடியாது. விரைந்து முடிவெடுங்கள்” எனச் சொல்லப்பட்டுள்ளது.

அதிமுகவானது திமுக தயவில் ஆட்சியில் அமர்வதை அதிமுகவின் கடைக் கோடி தொண்டன் கூட ஏற்கமாட்டான். அப்படி அதிமுக தலைமை முடிவெடுப்பது என்பது அந்தக் கட்சிக்கே முடிவுரை எழுதிவிடும். அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இந்த அசிங்கமான முடிவை எடுத்தால், கட்சியே அழிந்து போவது திண்ணம். திமுக ஒரு தீய சக்தி என அரை நூற்றாண்டுக்கும் மேலாக எம்.ஜி.ஆரால். ஜெயலலிதாவால் சொல்லிச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் தொண்டன் எடப்பாடி பழனிச்சாமியை எள்ளவும் ஏற்கமாட்டான்.

அதே போல தவெகவின் விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்க தனது பரம விரோதியான அதிமுகவை ஆதரிக்க திமுக முடிவெடுப்பதை அந்தக் கட்சியில்  எம்.எல்.ஏக்கள்  ஏற்கலாம். ஆனால், 56 ஆண்டுகளாக அதிமுகவை அடிமை கட்சியாக  காட்டியே அரசியல் செய்த திமுக தலைமை இன்று திசைமாறி கைகோர்ப்பதை அடி நிலை திமுக தொண்டன் கூட அறவே ஏற்கமாட்டான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிதியை முதல்வராக்கி அழகுபார்க்கத் துடித்தார் ஸ்டாலின். அதற்கு குறுக்காக விஜய் விஸ்வரூம் எடுத்து வளர்வதை ஸ்டாலின் விரும்பவில்லை. உதயநிதியின் எதிர்காலத்திற்காக விஜய்யின் வளர்ச்சியை முடக்கத் துடிக்கிறார் ஸ்டாலின். இதற்காக எந்த அசிங்கத்தையும் செய்ய தயாராகிவிட்டார் ஸ்டாலின்.

திமுகவில் உள்ள கொள்கை பற்றாளர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். திமுகவின் கொள்கை வழிப் பயணத்தை திசைமாற்றிக் கொண்டு செல்லத் துடிக்கும் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக திமுகவில் உள்ள சுயமரியாதைக்காரர்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள் என நம்புவோம்.

காங்கிரசும், இடதுசாரிகளும் அதிகாரம் பெறுவதை தடுக்கும் பாஜகவின் சூழ்ச்சிக்கு ஏற்ப செயல்பட்டு இரு திராவிட கட்சிகளும் கைகோர்த்து அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் இடதுசாரிகளும், விசிகவும் இன்னும் உள்ள முற்போக்கு அமைப்புகளும் ஜன நாயகத்தை காக்கும் வரலாற்று கடமையை சரியாக செய்வார்கள் என்று நம்புவோம்.

*சாவித்திரி கண்ணன் (ஆசிரியர், அறம் இணைய இதழ்)

https://www.facebook.com/100000227053317/posts/36435061489417960/?rdid=87lOKZ1gzrscuTBq

==============================================

17
இது தமிழக வரலாற்றின் முக்கிய தருணமாகும்…!

தமிழகத்தை பொறுத்த அளவில் இன்றைக்கு  தன்னுடைய பிரதான எதிரியை பாஜக ஆள் மாற்றி நமக்கு அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது…!

 

இது தமிழக வரலாற்றின் முக்கிய தருணமாகும்…!

 

இது வரை தீண்டத்தாகதது என்று இவர்கள் பாசாங்குத்தனமாக  பகை காட்டிய திராவிட கட்சிகள் இன்றைக்கு தீஞ்சுவை கட்சிகளாகிவிட்டன…!

 

பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ்  தனது x பக்கத்தில், "தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை காலம் மட்டுமே சொல்லும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: காங்கிரஸ் கட்சி இறுதியில் அவமானத்தையே சந்திக்க நேரிடும்" என்று சொல்கிறார்.

 

ஆக, விஜய்யை ஆட்சியமைக்க விடமாட்டோம். காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் தவெக இடம் கொடுப்பது தான் பாஜகவிற்கு பிரச்சினை!

 

திமுகவும் – அதிமுகவும் கைகோர்த்தால் இறுதியில் அவமானத்தையே சந்திக்க நேரும் என்றல்லவா பி.எல்.சந்தோஷ் பேசி இருக்க வேண்டும்…? உங்களுக்கு இது நாள் வரை  வேப்பங்காயாக இருந்த திமுக விருப்பக் கனியாகிவிட்டதா?

 

அடுத்ததாக விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தவராம் திருமாவளவன். அவர் பதவிக்காக தவெகவை ஆதரித்தால், அது சந்தர்ப்பவவாத அரசியலின் உச்சமாம்! –சொல்பவர் பாஜகவின்  நாராயணன் திருப்பதி.

 

அதிமுகவானது திமுக தயவில் ஆட்சிக்கு வரத் துடித்ததும்,

 

திமுக  அதிமுகவை ஆதரிக்கும் நிலைபாடு எடுத்ததும் 

சந்தர்ப்பவாத அரசியலாகத் தெரியவில்லை,  நாராயணன் திருப்பதிக்கு!

 

தமிழக மண்ணில் பாஜகவின் பகையாளிகளே

 

ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பற்றாளர்களாவர்.

 

அந்த வகையில் இன்றைய மாறியுள்ள அரசியல் சூழல் பாசாங்குத்தன பாஜக எதிர்ப்பு கட்சிகளை பட்டவர்த்தனமாக தோலூரித்துக் காட்டியுள்ளது.

 

சாவித்திரி கண்ணன்

 

https://www.facebook.com/share/178wtruKxj/

 

=================

 

18
செம திரிலிங்காக போய்க் கொண்டுள்ளது உள்ளது, தமிழக அரசியல்!

 

பலருடைய புனித பிம்பங்கள் பல்லிளித்துவிட்டன!

 

திமுக தயவில் முதலமைச்சராக ஆசைப்பட்டு எம்.எல்.ஏக்களை பாண்டிச்சேரியில் வைத்து காபந்து செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.

 

”பாஜகவின் முகமுடியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க ஒத்துழைக்கமட்டோம்” என்ற கம்யூனிஸ்டுகளின் உறுதியான நிலைபாட்டால் ஸ்டாலின் கண்ட கனவு காலாவதியானது.

 

விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் அடுத்த அஸ்திரமாக திருமாவை முதல் அமைச்சராக்கும் முடிவை ஸ்டாலின் எடுத்தார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இணங்கவில்லை. ஆதரவு தந்து விட்ட பிறகு கம்யூனிஸ்டுகளாலும் பின் வாங்க முடியாத நிலைமை.

 

இதற்கிடையே அதிக மக்கள் வாக்களித்து விஜய் முதல்வர் ஆவதைக் காண ஆவலோடு இருக்கும் சூழலில் அது விசிகவால் தடைபட்டது என்ற அவப் பெயர் எழுவதை தவிர்க்க வேண்டிய கட்டாயம் திருமாவிற்கு ஏற்பட்டது. ஆதரவு உண்டா? இல்லையா? என்பதற்கு  திருமாவளவன் எடுத்துக் கொண்ட மிக அதிக காலகட்டம் பல மர்மங்களை உள்ளடக்கியது. இந்த  அதீத தாமத்தின் பின்னிருந்த பேரங்கள், அரசியல் அழுத்தங்கள் குறித்து வெளியான செய்திகள் வருத்தம் அளிக்கின்றன.

 

தலித் மக்களில் கணிசமானோர் விஜய்க்கு விரும்பி வாக்களித்துள்ளனர். 28 தலித் எம்.எல்.ஏக்கள் தவெகவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதுவும் பொதுத் தொகுதியில் இருந்து நால்வர் வென்றுள்ளனர். இந்தச் சூழலில் விஜய்யின் பதவி ஏற்பிற்கு விசிக வால் வில்லங்கம் ஏற்பட்டது என்ற அவப் பெயரை தவிர்க்கும் நிர்பந்தம் காரணமாக ஸ்டாலினை சமாதானப்படுத்திவிட்டு தவெகவிற்கு சப்போர்ட் தந்துள்ளார், திருமா.

 

 ”ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பிள்ளை தான் தவெக என்று நான் வைத்த விமர்சனம் அப்படியே இருக்கிறது. எங்களால் விஜய் ஆட்சி அமைக்க முடியாமல் போனார் என்ற வரலாற்றுப் பழியை தவிர்க்கவே ஆதரவு தந்துள்ளோம்” என திருமா சொல்லி உள்ளார்.

 

கிட்டத்தட்ட இதே நிலைபாடு தான் கம்யூனிஸ்டுகளுக்கும். எப்போது ஸ்டாலினை இயக்குவது பாஜக தான் என்று பட்டவர்த்தனமாக தெரிய வந்ததோ, அப்போதே திமுகவுடனான உறவுக்கு முற்ற முழுக்க முற்றுப்புள்ளி வைக்காமல், ”தற்போதும் திமுகவுடன் இருந்து கொண்டே பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்வோம்” என கம்யூனிஸ்டுகள் கூறுவது கடைந்தெடுத்த கயமைத் தனம்.

 

இதே போல அகில இந்திய அளவில் காங்கிரசோடு கைகோர்த்துள்ள ஐ.எம்.எல்லுக்கு டெல்லியில் அழுத்தம் தரப்பட்டுள்ளது. இஸ்லாமிய வேட்பாளர்களை இந்துக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் தைரியமாக நிற்க வைத்து வெற்றி ஈட்டிய விஜய்யை புறக்கணிப்பதை இஸ்லாமிய மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் அவர்களும் ஸ்டாலினை சமாதானப்படுத்தி ஆதரவு தந்துள்ளனர்.

 

தற்போதும் கூட திமுக கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் உள்ள கூட்டணி உறவை தொடர்வதாக அறிவித்துள்ள நிலையில், இவர்களின் ஆதரவு நிலைக்குமா? நீடிக்குமா? என்ற பதற்றம் தவெகவுக்கு இருந்து கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.

 

அதிகாரத்தில் பங்கு என்பதாக இல்லாமல், ‘வெளியில் இருந்து ஆதரவளிப்பது’ என்பது எப்போது வேண்டுமானாலும் சுலபத்தில் வெளியே வருவதற்கான வாய்ப்பை உள்ளடக்கியது.

 

திமுக ஆட்சி பாஜகவின் சட்ட திட்டங்களை அமல்படுத்திய போது கண்டும், காணாமல் அமைதி காத்த இந்தக் கூட்டணி கட்சிகள் தற்போது தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் விமர்சிப்பார்கள். அதற்கான தூண்டுதல்களை, நிர்பந்தங்களை திமுக உருவாக்கித் தரும். அதாவது, விஜய் உடனுள்ள கட்சிகளின் ரிமோட் கண்ட்ரோல் ஸ்டாலினிடம் உள்ளது.

 

ஆக, திமுகவுடன் விசுவாசம் பாராட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் மக்களுடையே வெறுப்பிற்கு ஆளாகாமல் இருக்கவே தவெகவிற்கு ஆதரவு என்ற பூமாலையை விஜய் கழுத்தில் போட்டுள்ளனர். அந்த மாலையை எப்போது வேண்டுமானாலும் அவருக்கு சுருக்கு கயிறாக மாற்றும் வாய்ப்பை கொண்டுள்ளனர்.

இப்படி ஒரு சூழல் உருவானால் அதை சரிகட்ட அதிமுகவில் ஒரு பிரிவினர் சி.வி.சண்முகம் ஒருங்கிணைப்பில் தவெகவை ஆதரிக்க காய் நகர்த்துகிறது. அந்தக் கொள்ளை கூட்டம் ஆட்சியில் பங்கு பெறும் சூழல் உருவானால், விஜய் ஆட்சி தாங்காது.

 

மற்றொருபுறம் அமமுக எம்.எல்.ஏவுக்கு ஆசைகாட்டி ஆதரவு பெறுவதற்கு தவெகவினர் செய்த அத்து மீறல்களை கிரிமினல் குற்றமாக்கி விஜய்யை தண்டிக்கும் சூத்திரக் கயிறையும் பாஜக பெற்றுள்ளது.

 

ஆளுநரை சந்திக்க விஜய் சென்ற போது ஆந்திர கிரானைட் அதிபர் விஷ்ணு ரெட்டி, பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் ஆகியோரை அழைத்துச் சென்றதானது தவறான பண முதலைகளின் பின்னணியில்  விஜய் இருக்கிறார் என்ற தோற்றத்தை பொது வெளியில் உருவாக்கி உள்ளது.

 

நடந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

 

ஆட்சி அமைத்தாலும், விஜய் ஆட்சி ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்குள் கவிழவே வாய்ப்புண்டு.

 

அரசியல்வாதிகளின் பேராசையாலும், சுயநலத்தாலும் ஜனநாயகம் கேலிக் கூத்தாகிக் கொண்டுள்ளது.

 

சாவித்திரி கண்ணன், ஆசிரியர், அறம் இணைய இதழ்

 

https://www.facebook.com/share/18hz7JXcnv/

 

===================

19
2026 தேர்தல் ஒரு பார்வை

 

இந்த தேர்தலில் மக்கள் பிரச்சனை பெரிய அளவில் பேசப்படவேயில்லை என்பது தான் 2026 தேர்தலின் வெற்றி. 

 

அதிகார போட்டியின் விழாவாகத் தான் நடந்து முடிந்து இருக்கிறது தேர்தல்.

 

தொழிலாளர் சட்டங்கள் பற்றி இம்மி அளவு கூட யாரும் பேசவில்லை.

SIR பிரச்சனை பற்றி பெரிய அளவில் பேசப்படவில்லை. சிவகாசி,விருதுநகர் பகுதிகளில் நடந்துவரும் தொடர்ச்சியான பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் பற்றியும் பேசப்படவில்லை.

 

ஆனால் பொத்தம் பொதுவாக சட்ட ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சில விடயங்களை மட்டும் தான் பேசி இருக்கிறார்கள்.

 

ஒரு பிரச்சனையில் கூட இந்த அரசை நெருக்கடியில் தள்ளும் அளவிற்கு யாரும் நுட்பமாக பேசவில்லை. 

 

உண்மையில் திமுக அரசிற்கு இது ஒரு ஜாக்பாட் நேரம். கூட்டணி கட்சிகள் அரசினை பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. பாஜக,அதிமுக கட்சி பெயர்க்கு தான் திமுக அரசை விமர்சனம் செய்தார்களே தவிர எதிர்கட்சி என்று சொல்லும் அளவிற்கு எதையும் செய்யவில்லை...

 

TVK uncle,sir என்று வார்த்தை விளையாட்டுகளை செய்தார்களே தவிர அவர்களும் பெரிய அளவில் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கவில்லை. கேட்டால் மாற்றம் வேண்டும் என்கிறார்கள். 

 

என்ன மாற்றம்  செய்வோம், எதற்காக மாற்றம் என்றும் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அனைத்து விட்டிலும் எங்களுக்கு வாக்கு இருக்கிறது என்கிறார்கள்.

 

புதிதாக Dress code பற்றிய பேச்சினை வைரலாக மாற்றி இருக்கிறார்கள். இது தான் அந்த மாற்றமோ? பெதுவாக கட்சி கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் நிறத்தத்தை தான் Dress code காக வைப்பார்கள். ஆனால் நடிகர் விஜய் வெள்ளை சட்டை,காக்கி நிற பேண்ட் இதனை dress code என்கிறார்கள். அது RSSன் Dress code. தங்களது கொள்கை எதிரி என்று சொல்லும் TVK கட்சிக்கு இந்த ஆடை தான் dress code என்று எவ்வாறு சொல்ல முடியும்?

 

பாலியல் கல்வி, தொழிலாளர் சட்டம், நீட் தேர்வு என எந்த ஒரு முக்கிய பிரச்சனை பற்றியும் பேசவில்லை. கடைசியாக ஒன்றிய அரசு கொண்டு வந்த Delimitation பற்றி தான் பேசினார்கள், அதுவும் முழுமையாக இல்லை.

 

ஒவ்வொரு வீட்டிலும் எங்களுக்கு ஓட்டு இருக்கிறது என்கிறது TVK, ஒவ்வொரு வீட்டிலும் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்று பேசுவதற்கு கூட வழியில்லாமல் ஆகிவிட்டது.

 

குறைந்தபட்சம் ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்று பேச்சு கூட இம்முறை சிறிய தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. மாறாக பக்கத்து வீதியில் வழங்கி இருக்கிறார்கள், நமது வீதிக்கு நாளைக்கு வழங்கிவிடுவார்கள் என்ற நிலைக்கு மக்களை கொண்டு வந்து விட்டார்கள்.

 

8000,10000,2500 என்ற வாக்குறுதிகள் பெற்ற இடத்தை மற்ற வாக்குறுதிகளால் பெற இயலவில்லை.

 

தேர்தலை சில இடங்களில் புறக்கணிப்பு செய்து இருக்கிறார்கள். ஏன் எதற்கு செய்தார்கள் இதற்கு தீர்வு என்ன? என்பது பற்றி மீடியாவும் பெரிய அளவிற்கு  பேசவில்லை.

 

ஆக யார் வைரல் ஆகிறார்கள், யார் டிரால் செய்யப்படுகிறார்கள், யாருக்கு அதிக கூட்டம் வருகிறது, யார் யாரை கடுமையாக திட்டி பேசி இருக்கிறார்கள், யார் அதிக பணம் கொடுத்தார்கள் என்பவை தான் பேசு பொருளாக மாறி  இருக்கிறதே தவிர மக்கள் பிரச்சனை அல்ல.

 

ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை என்கிறார்கள். ஆனால் அந்த தேர்தலில் உழைக்கும் மக்கள் பிரச்சனை, புதிய தொழிலாளர் சட்டம், விவசாயிகள் பிரச்சனை, பழங்குடிகள் , பெண்கள் பாதுகாப்பு, புதிய கல்விக் கொள்கை என  எந்த ஒரு பிரச்சனையும் யாரும் பேசவில்லை. 

 

தேர்தலில் வரும் நிதி, கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்களிப்பு, Donation, electroal bond இவற்றை பற்றியும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

 

கடைசியாக கூட்டணி கட்சிகள் தொகுதி எண்ணிக்கைக்கு காட்டிய அக்கறை மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதில் சிறிது அளவு கூட இந்த தேர்தலில் வெளிப்படவில்லை.

 

Sathes karki

 

https://www.facebook.com/share/18XSMt7EBy/



=======

 

20
திமுக இரண்டாம் முறையாக ஆட்சி அமைக்காமல் போனதற்கு காரணம் என்ன?

 

தொழிலாளர் விரோத போக்கினை தொடர்ச்சியாக கையாண்டதே அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. 12 மணிநேர வேலைக்கு அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் கடும் எதிர்ப்பின் காரணமாக அது வாபஸ் பெறப்பட்டது. இதுவே உழைக்கும் மக்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.

 

தூய்மை பணியாளர்கள் பிரச்சனையை அரசு மிக மோசமாக கையாண்டது. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் ஆகியவற்றை மனிதநேயமின்றி அணுகியதாக பல தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

அநாகபுத்தூர் குடியிருப்பு வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் அரசின் மெத்தனமான அணுகுமுறையும் விமர்சனத்துக்கு உள்ளானது.

 

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.

 

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சம்பவங்களுக்கு பின் துறைசார்ந்த அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ததாக கூட செய்திகள் பெரிதாக வெளிவரவில்லை.

 

வேங்கை வயல் பிரச்சனையில் அரசின் அலட்சியமான செயல்பாடும் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது.

 

மொத்தத்தில், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு சரியாக கையாளவில்லை என்ற எண்ணம் பரவலாக உருவாகியுள்ளது.

 

விஜய் தாக்கம் மட்டும் இந்த தேர்தல் மாற்றத்திற்கான ஒரே காரணம் அல்ல. அந்தக் கட்சியே தனித்து பெரும்பான்மை பெற முடியாத நிலையை சந்தித்துள்ளது. மக்கள் ஒரு அளவிற்கு அந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தாலும், ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு ஆதரவு இல்லை என்பதும் உண்மை.

 

ஆனால் திமுக தலைமையிலான கூட்டணிக்கும் தவெகவிற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3.25% மட்டுமே என்பதுதான் முக்கியமான தரவு.

 

அந்த குறுகிய இடைவெளியை உருவாக்கியதில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்று.

 

இதர காரணங்களாக போதைப்பொருள் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு, நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட பல அம்சங்கள் இருந்தாலும், உழைக்கும் மக்களின் நம்பிக்கையை இழந்ததே மிகப்பெரிய அரசியல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தங்களை “சமூகநீதி அரசு” என்று கூறிக் கொண்ட இந்த அரசு, உழைக்கும் மக்களின் உரிமைகள், தொழிலாளர் பாதுகாப்பு, அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் ஆகியவற்றில் போதுமான அக்கறை செலுத்தவில்லை என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது. சமூகநீதி என்பது சாதி ஒதுக்கீடு அல்லது அரசியல் முழக்கத்தில் மட்டும் இல்லாமல், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வாதார பாதுகாப்பிலும் வெளிப்பட வேண்டும். அந்த இடத்தில் ஏற்பட்ட முரண்பாடே இந்த அரசின் மீது ஒரு பகுதி மக்களிடம் நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது.

 

Sathes karki

 

https://www.facebook.com/share/1EL5hpQQYD/

 

==========================================

21
ஒருநாள் இந்த வானம் நம் வசப்படும். அன்றதன் விடியலும் அழகும் அணைவருக்குமானதாக இருக்கும்

கடந்த 5 ஆண்டுகளாக மக்களை புரிந்து கொள்ளாமல், மக்கள் பக்கம் உறுதியாக நிற்காமல், தி.மு.க அரசை மக்களிடம் இருந்தும் மற்ற சக்திகளிடம் இருந்தும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றதற்காக மக்கள் தக்க பாடம் புகட்டி.இருக்கிறார்கள்.

ஆனால், இப்போதும் கூட அவர்களின் மொழியை புரிந்து கொள்ளாமல், மக்களுக்கு அரசியல் புரியவில்லை, மக்கள் கவர்ச்சியில் மயங்கி விட்டார்கள், இளைஞர்கள் இதற்கான விளைவை அனுபவிப்பார்கள் என்றெல்லாம் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தோழர்கள் பலரும் எழுதுகிறார்கள், "திரைக்கவர்ச்சியில் மக்கள் விழுந்து விட்டார்கள் வேறொன்றும் இல்லை."

இப்படி எளிமையாக காரணம் சொல்லி, அடுத்தவரை கை காட்டி, தற்கால சமூக ஓட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய கடமையில் இருந்து நழுவுகிறார்கள். ஏற்கானவே இபப்டி நழுவி நழுவி தான் இந்த இடத்தில் வந்து நிற்கிறோம் என்பதைக் கூட உணராமல், இப்பவும் இப்படி பேசுவது வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அளிக்கிறது. இந்த "வேறொன்றும் இல்லை" என்பதன் பின்னால் தான் இத்தனை காலம் தவற விட்ட ஆய்வுகளும், வர்க்க கண்ணோட்டமும், இயக்கவியல் பார்வையும் உள்ளடங்கி இருக்கிறது.

பெரும்பாலும் நேற்றைய நாள் நிகழ்வாக இது சுருக்கி பேசப்படுத்திறது. ஆனால் இது கால ஓட்டத்தின் ஒரு நிலை. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் இருந்து இது துவங்கப்பட வேண்டும்.

தி.மு.க ஆட்சி அமைத்த உடன் முதல் பொங்கல் 2022 இல் வந்தது அந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருந்ததாக புகார் அளித்த ஒருவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கடுமையாக விசாரணை செய்தது. இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவரின் மகன் தீக்குளித்து உயிரிழந்தார். பின்னர் கைது செய்யப்பட்டிருந்த தந்தையும் உயிரிழந்தார். 

இது தான் அரசு மக்களை கையாள்வதில் முக்கிய உறுப்பான காவல்துறையின் துவக்க நிலை போக்காகவே இருந்தது. அது தொட்டு, காவல் மரணங்கள், காவல்நிலையம் முன்னரே விசம் அருந்தி மரணம், போராடியவர்களை காவல்துறை நடத்திய விதம் என தொடர்ந்து அரசு தனது கோர முகத்தை காட்டிக் கொண்டே இருந்தது. 

மக்களின் அன்றாட வாழ்க்கை அனைத்து வகைகளிலும் பாதிக்கப்பட்டு கஞ்சா, போதை, சாதிய வெறி, வேலை இல்லா திண்டாட்டம், பெண்கள் பாதுகாப்பு இல்லாமை என ஏகப்பட்ட விஷயங்கள் மக்களின் கோவத்துக்கு இந்த அரசை ஆளாக்கியது.

இந்தக் கோவம் ஏதேனும் ஒரு வகையில் முறையாக கையாளப்பட்டிருக்க வேண்டும். ஐந்தாண்டுகள் துவக்கம் முதலே அ.தி.மு.க hybernate mode க்கு சென்று விட்டது. மக்கள் அரசின் மீது கொண்டிருந்த கோவம் இந்த அரச எந்திரத்தின் மீதான விரக்தியாக மாற துவங்கி இருந்தது. இதையும் அந்த இடத்திலும் கூட இடதுசாரிகள் உணரவில்லை. ஆளும் வர்க்கம் மிக சரியாக அந்த எச்சரிக்கையை உணர்ந்து கொண்டது. மக்களை மீண்டும் இந்த முதலாளித்துவ ஜனநாயக போர்வையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க ஒரு ஊன்று கோல் கொணர்ந்தது. 

த.வெ.க இங்கு பாலாறும் தேனாரும் கொண்டு வரும் என்று மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக, அவர்களின் address பண்ணப்படாத கோவத்தை எழுந்து வந்த ஆளுமையின் மேல் சுமத்தி வடிகாலாக தங்களை பிரதிபலிக்கும் பிம்பமாக உருவகப்படுத்திக் கொண்டார்கள்.

விஜய்யின் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் தரப்பு மிக வலிமையானதாகவும் எந்த இடத்திலும் நிலவுடைமை உற்பத்தி சாராத நவீன மூலதன சகத்தியாகவும் இருப்பதாகத்தான் தெரிகிறது. சத்யாபாமா, சாய் ராம் போன்றவை எல்லாம் விஜய் கட்சிக்கு மூன்றாம் நிலை நிதி ஆதாரங்களாகத்தான் இருக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப துறை சார்ந்த, ngo வகைப்பட்ட மூலதன சக்திகள் தான் பெரிய பலமாக இருந்திருக்கும். நிற்க.

அத்தகைய ஆளும் வர்க்க தரப்பு மக்களின் இந்த நிலையை மிகச் சரியாக கணித்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. பலரும் சொல்வது போல எதிர்பாராத luck என்று இதனை எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி எடுத்துக் கொள்வதானால், அதற்கு பதில் எல்லாம் அவன் செயல் என்று மொத்தமாக சொல்லி விட்டுப் போகலாம். 

இது இன்றைய நேற்றைய பிரச்சனை அல்ல குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன் தி.மு.க ஆட்சியில் அமர்ந்து "அரசாக" மக்களுக்கு எதிர் நின்று தனது வேலையை செய்ய துவங்கிய போது, மக்களின் கோவத்தை துன்பத்தை சரியான முறையில் address பண்ணும் வலுவான ஆளும் வர்க்க எதிர் சக்தி இல்லாத நிலையில், இடதுசாரிகள் அந்த இடத்தை எடுத்திருக்க வேண்டும். மத்திய பி.ஜே.பி அரசையும் மாநில தி.மு.க அரசையும் வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். (ஆனால், நமது தோழர்கள் பி.ஜே.பி யை கூட தி.மு.க விடம் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே எதிர்ப்பது எனும் நிலைக்கு தாழ்ந்து விட்டார்கள்) அப்படி செய்ய முடிந்திருக்கும் பட்சத்தில் அரசியல் களத்திலான முரணை வேறு வகையில் மாற்றி எழுதி ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி இருக்கலாம். 

அதன் பின்னர் விஜய்யே வந்திருந்தாலும் கூட அவரும் இன்னொரு தி.மு.க தான். ரெண்டு பேரும் ஒன்னு தான் என narrative shift க்கு முயற்சி செய்திருக்கலாம்.

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும் என்பது உற்பத்தி சார்ந்து வேறொரு இடத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த இடத்தில் பொருந்துவதால் எடுத்துக் கொள்ளலாம். மக்களை இந்த முதலாளித்துவ ஜனநாயக போர்வையின் மீது - இந்த அரச எந்திரத்தின் மீது - நம்பிக்கை கொள்ள வைக்க ஆளும் வர்க்கம் இளைஞர்களையும் மாணவர்களையும் பெண்களையும் அரசியல் களத்திற்கு உள்ளே இழுத்து விட்டிருக்கிறது.

பழைய உற்பத்தி முறைகள் நிலவிய காலம் போல மக்கள் ஒன்றின் மீது அதிருப்தி கொள்வதற்கு மிக அதிக காலம் இந்த முதலாளித்துவ சமூகத்தில் தேவைப்படுவதில்லை. சரியாக வேலை செய்தால் மிக விரைவில் - சில ஆண்டுகளில் - அது நடக்கும்.

காந்தி தனது போராட்டங்களில் மிகக் குறிப்பாக அன்றைய புரட்சிகர சக்திகளான விவசாயிகளையும் பாட்டாளிகளையும் கொண்டு வருவதை தவிர்த்தே வந்தார் என பகத்சிங் வைத்த கருத்து நாம் ஊன்றி கவனத்தில் கொள்ள வேண்டியது. ஏனெனில் அவர்கள் உள்ளே வந்தால் அது காந்தி விரும்பும் நோக்கங்களோடு நிற்காமல் வர்க்க விடுதலை என்பதை நோக்கி சென்று விடும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. 

அதே போல இங்கு இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அரசியலற்று இருத்திவைக்கப்பட்ட பெருங்கூட்டம் ஒன்று தற்போது களம் நோக்கி இழுத்து விடப்பட்டுள்ளது.

இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை தோழர்களே !

Stage is all set. தி.மு.க தான் பா.ஜ.க வுக்கு மாற்று என்பது போல தி.மு.க தான் தா.வெ. க வுக்கு மாற்று என பழைய பல்லவி பாடிக் கொண்டிருக்க வேண்டாம்.

இனியேனும் தி.மு.க விடம் இருந்து கடன் வாங்கிய narrative களையும், விவரங்களையும் வைத்து பேசிக் கொண்டிருக்காமல், அவர்களது நலனுக்காக அடியார்க்கு அடியாராக வேலை செய்யாமல், சொந்தமாக ஆய்வு செய்து, மார்க்சிய அடிப்படையில், மக்களின் நலனுக்காக மட்டுமே நமது  செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். 

தி.மு.க வின் கருத்துருவாக்கங்கள் பின் செல்வதை விடுவோம். தி.மு.க வின் எதிரிகள் நமது எதிரிகள் அல்ல. தி.மு.க வும் நமக்கு எதிரி தான் என உணர்வோம். மக்களை திட்டும் மண்டை வீங்கித்தனத்தை விடுவோம். மக்களிடம் கற்போம் அவர்களுள் உள்ள புரட்சிகர தன்மையை சரியாகக் கண்டு address பண்ணுவோம்.

பின் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் அவர்களோடு இணைந்து தீர்வு நோக்கி முன்னேறுவோம். மிகப்பெரிய தலைகீழ் மாற்றம் தேவையாக உள்ள சமூக சூழலில் இன்றய ஆட்சி மாற்றம் போதுமானதல்ல என்பதை சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள். கரித்துக் கொட்ட அல்ல. அவர்கள் கரம் பற்ற தயாராகுவோம். 

ஒருநாள் இந்த வானம் நம் வசப்படும். அன்றதன் விடியலும் அழகும் அணைவருக்குமானதாக இருக்கும். 

இன்குலாப் ஜிந்தாபாத் !

Lingam Deva

https://www.facebook.com/100002769735269/posts/25736996235976015/?rdid=oTlQQDrXnRTBLV1U

=======================

22
காலத்தினால் என்றும் மறக்க முடியாத மாபெரும் தேர்தல் 2026

தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் களம் முன்பிருந்ததுபோல் இல்லை. முற்றிலும் மாறியிருக்கிறது. இதனை எளிய மக்கள்கூட ஓரளவு  உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், கட்சி அரசியலுக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கின்ற பெருங்கட்சிக்காரர்கள் அறவே உணரவில்லை. அவர்களுடைய பேச்சும் கருத்தும் கொள்கைகளும் அறைகூவல்களும் களமனநிலையைப் பெரிதும் கருத்தில்கொண்டு எழுந்தனவாக இல்லை. அதே பழைய முறையிலான புள்ளிவைப்புகளாகவே இருந்தன. அல்லது அவர்கட்குத் தெரிந்திருந்தும் தாம் நம்பியவற்றையே பேசவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்கள். 

தொண்ணூற்றைந்துக்குப் பிறகு பிறந்தவர்கள் தொழில்நுட்பப் பேருலகில் வாழத் தலைப்பட்டவர்கள். உண்மையிலேயே இவர்களுடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்திருக்கிறது. இருக்கிறது. இனி அவர்களோடு பழைய தலைமுறையினர் போட்டியிட்டு வெல்வது எங்ஙனம் ? எண்பதுகளில் நாம் வாழ்ந்த பசித்த வாழ்க்கையினர் அல்லர். ஒருவகையில் பசிப்பிணிக்குத் தீர்வு கிடைத்த தலைமுறையினர் அவர்கள். இவற்றோடு இணைய ஊடகப் பங்கேற்பிலும் அவர்கள் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். அவற்றில் அவர்கள் ஏதேனும் ஒருவகையில் பங்கேற்கிறார்கள். நன்கு எழுதப் படிக்கத் தெரியவேண்டுமென்ற கட்டாயம்கூட இல்லை. ஒரு காணொளியில் அன்றாடப் பேச்சுவழக்கில் பேசிப் பதிவேற்றிவிடலாம். அவர்களும் படைப்பாளிகள். எண்மப் படைப்பாளிகள் என்றே ஊடகமும் அவர்களை அழைக்கிறதே. (உண்மையான ஊடகங்களில் பலவும் அகம் ஊடும் தன்மையழிந்தன.) 

தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நான் இளைய தலைமுறையினரோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். எனது தனிப்பட்ட வகுப்புகளில் பலரையும் காண்கிறேன். அவர்கள் முற்றிலும் வேறுபட்ட மனநிலையினராக இருப்பதனை அறிந்தேன். அவர்கள் மிகவும் நிகழ்வுலகத் தொடர்போடு வாழ்கிறார்கள். அவர்களிடம் பழையன பேச இயலாது. புதிய பொறுப்புகளைக் கற்பித்து அழுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் திசைக்கே வரமாட்டார்கள். அவரவர் போக்கில் அடையத்தக்க  மேம்பாடுகளைத்தாம் வலியுறுத்தமுடியும். அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய “அண்டமே” (யுனிவெர்ஸ்) வேறு. மெல்ல மெல்லவே பழைய கட்டுக்கோப்பான மனத்தினரின் தொகை குறைந்துபோய் புதுத்தலைமுறைப் போக்குடையோரின் எண்ணிக்கை பெரும்பான்மை ஆகிவிட்டது. அவர்கள் தரப்பினரை முன்வைக்கும் ஓர் அமைப்பு நம்மிடையே ஏதேனும் உண்டா ? இல்லை. அப்பொருளில் பெருவெற்றிடம் நிலவுகிறது. இப்போதுள்ள எவ்வகை அமைப்பாலும் அவர்களை ஈர்க்கவும் இயலாது. 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் - நம்மிடையே திகழ்கின்ற கட்சி அரசியல், தேர்தல் நேரத்து அரசியல், கொள்கை அரசியல், கோட்பாட்டு அரசியல், கூட்டணி அரசியல், ஊழல் ஆட்சியியல் என அனைத்தின்மீதும் மாபெரும் கசப்புணர்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோமா, இல்லையா ? அது குறித்த உரையாடலைக்கூட நாம் முன்னெடுக்க முடிவதில்லை. ’ஐயோ மனம் புண்பட்டுவிடுமோ’ என்று பலரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பொறுப்பிலிருக்கின்ற நட்பு ஆற்றலர்கள் அவற்றுக்கெதிரான ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லையே. முற்றுமுழுக்கக்கூட வேண்டா, எதனையும் சிறிதளவாவது மேம்படுத்த முடியாதா ?  

தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு எனது பதிவுகளையே குறைத்துக்கொண்டேன். பொதுவாக ஒரு சொல் குற்றஞ்சாட்டி வந்தால்கூட அது தம்மைத்தான் சுட்டுகிறதோ என்று கொண்டு ஏடாகூடம் செய்யத் தொடங்கவேண்டியது.  கட்சிப்பற்று கரையுடைந்து பாய்ந்ததில் நல்லோர் அல்லோர் வேறுபாடற்றுக் கடித்தார்கள். இளைய தலைமுறையினரின் இப்போக்கினை உணர்ந்து, அவர்களை ஈர்ப்பதில் விட்டுவிட்ட காலத்தாழ்ச்சியை உணர்த்தும்வகையில் சில சொற்களைக்கூட எழுத முடியவில்லை. தமிழுக்கு எதிரான ஆங்கிலமொழிப் பெரும்பரவலைச் சாடி எழுதியபோது நட்பு ஆற்றலர்களே அதிலுள்ள ஒரு புள்ளியைக்கூடப் பொருட்படுத்தாமல் மனம்போன போக்கில் எழுதினர். நமக்கு நாமே எழுதிக்கொள்வதில் யாது பயன் ? வெளியே பெருந்திரளான மக்கட்கூட்டம்தானே ஆட்சியைத் தேர்ந்தெடுக்கிறது ? அவர்கட்குத் தெரியாதென்றா நினைத்துக்கொள்வது ? 

தேர்தல் காலங்களில் தொடர்ந்து சாதி மதக் கணக்குகளைக் குறுக்கும் நெடுக்கும் போட்டுக் கொண்டாடியவர்களைக் கண்டாலே குமட்டியது.  “மக்கள் எப்போதும் அப்படியில்லை, நம்மவர்களிடையே வேறுபாட்டுணர்ச்சியைத் தூண்ட இயலாது, பெரும்பான்மைக்கு அந்தப் பார்வை என்றுமே இல்லை”  என்று தொடர்ந்து நண்பர்களிடம் கூறியிருக்கிறேன். இன்றைக்குத் தோற்றுப் போனது எந்தக் கணக்கு என்று அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் மேலும் இந்தக் கணக்கு தோற்றுக்கொண்டேதான் இருக்கும். 

நூறு நூறு படிப்பனைகளைக் கொடுத்துச் சென்றுள்ள, காலத்தினால் என்றும் மறக்க முடியாத மாபெரும் தேர்தல் என்று ஈராயிரத்து இருபத்தாறு சட்டமன்றத் தேர்தலைக் குறித்துவைத்துக்கொள்வோம். இந்தப் போக்கினை உணர்த்தியலில், அதாவது இதிலும்  தமிழ்நாடே முந்திக்கொண்டதாக இருக்கலாம். 

வாழ்க மக்கள், வாழ்க தமிழ்நாடு !  

- கவிஞர் மகுடேசுவரன்

https://www.facebook.com/100000854949412/posts/27026154186996381/?rdid=MgvGBi8GkOTfK9eJ

============================================

23 
நான் நினைத்ததற்கு மாறாக தவெக அதிக இடங்கள் வென்று பிரதான இடத்தை அடைந்திருக்கிறது

திமுக தன்னுடையை சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதத்துடன் தயாராக இருந்தது. அதிமுகவும் தனது சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதத்துடன் தயாராக இருந்தது. இரண்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் போதாது என்ற சூழலில், திமுக கூட்டணிக் கட்சிகளான CPI, CPM, VCK ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்பு இருவருக்கும் தேவையாக இருந்தது. 

 

திமுக முன்மொழிந்தத் திட்டமான அதிமுகவை ஆதரிப்பதற்கு, கம்யூனிஸ்ட்கள் தயாராக இல்லை. கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடுதான் எங்களது நிலைப்பாடு என்று விசிகே பிடிகொடுக்காமல் பேசியது.   உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற இன்னொரு கூட்டணிக் கட்சியான மதிமுக, தவெகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைப்பதுதான் முறை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது. அல்லது அந்தக் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் திமுகவுக்கு ஏற்படவில்லை.

 

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்கிற திட்டத்துக்கு பிஜேபியின் ஒப்புதல் இருந்தது. அதனால்தான் கவர்னர் விஜயின் ஆட்சியமைப்புக் கோரிக்கையை நிராகரித்துவிட்டு இரண்டு கட்சிகளுக்கும் போதுமான அவகாசம் வழங்கிவிட்டுக் காத்திருந்தார். திமுக, கம்யூனிஸ்ட்களை இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் வழிமுறைகளைத் தீவிரமாகக் கையாண்டது. எல்லா தந்திரோபாயங்களையும் செய்தது. மரபான மீடியாக்கள் கூட கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டன. 

 

காங்கிரஸ் முழு மூச்சாகக் களத்தில் இறங்கியது. கார்கே, திருமாவளவனுடன் தொடர்ந்து உரையாடலில் இருந்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிற அதிமுகவை ஆதரிப்பதை விட விஜயை ஆதரிப்பதே சரி என்ற நிலைப்பாட்டிற்கு கம்யூனிஸ்ட்கள் உறுதியாக வந்துவிடவும் திமுக தங்களுடைய narrative ஐ அவசர அவசரமாக மாற்றிக்கொண்டு, "ஸ்டாலின் எத்தனை கண்ணியமானவர் தெரியுமா, நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள் என்று ஸ்டாலின்தான் சொன்னார் தெரியுமா" என்பது போன்ற பச்சைப் பொய்களை அவிழ்த்துவிட ஆரம்பித்தது. CPM ன் தேசியப் பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி அவர்கள், "திமுக எங்களை அதிமுகவை ஆதரிக்கச் சொல்லிக் கேட்டது, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தோம்" என்று திமுகவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தவும், திமுக கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடனைப் போல் விழிக்கிறது. 

 

இப்போது திமுகவுக்கு இருக்கும் ஒரே வழி, திமுகவின் இந்த விழுமிய முரணை, அப்பட்டமான பச்சோந்தி வழிமுறையைக் கண்டித்து எழுதுபவர்களைத் திமுக எதிர்ப்பாளர்கள் என்றும் தவெக ஆதரவாளர்கள் என்றும் வசைப்பாடுவதுதான். என்னுடைய நண்பர்களுக்கு, நான் மதிக்கும் மூத்த படைப்பாளிகளுக்கு, அவர்களது திமுக ஆதரவுகளுக்கு முன்பே அவர்களை ஆசானாக வரித்துக்கொண்டவனுக்கு, சொல்வதற்கு ஒரு விஷயம் மாத்திரமே உண்டு.

 

என்னுடைய சமரசமற்ற வெளிப்படைத்தன்மையே என்னுடைய கலைச் செயல்பாடு. அதுவே என் அரசியல் செயல்பாடும். 

 

கடந்த ஐந்தாண்டுகளாக திமுக நடத்தியது மிக மோசமான ஆட்சி. அந்த ஆட்சி அகலவேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்பினேன். எத்தனை இணையத் தாக்குதல்கள் என் மீது நடத்தப்பட்டபோதும் உறுதியாக அதை நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். திமுக மீதான என்னுடைய கூரிய விமர்சனத்தின் போதெல்லாம், இந்த எதிர்ப்பை தவெக தனதாக்கிக் கொள்ளும், இத்தனை இடங்கள் வெல்லும் என்றெல்லாம் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. வேறு யார் வென்றிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்று கேட்கலாம். அதிமுகவே இந்தத் திமுக எதிர்ப்பைக் consolidate செய்யும் என்று எதிர்பார்த்தேன். இதன் பொருள் அதிமுக நான் விரும்பும் கட்சி என்பதல்ல. மாறாக, மக்களாட்சியின் எல்லைகட்கு உட்பட்டு திமுக அடுத்த ஐந்து ஆண்டுகளும் தொடரக் கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. 

 

நான் நினைத்ததற்கு மாறாக தவெக அதிக இடங்கள் வென்று பிரதான இடத்தை அடைந்திருக்கிறது. இப்படியான சூழலில் திமுகவும் அதிமுகவும் தத்தமது தளங்களில் நின்று, தங்களது எதிர்க்கட்சிப் பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று விரும்பினேன். இதன் பொருள் நான் ஒரே இரவில் விஜயின் ஆதரவாளர் ஆகிவிட்டேன் என்பதல்ல. மாறாக நான் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிற என்னுடைய விழுமியம் சார் நிலைப்பாட்டின் மீது நின்றே அதை எழுதுகிறேன். என்னுடைய குரல் மிகவும் மெலிதானதுதான் ஆனால்  உறுதியானது. எல்லா அரசியல் நிலைப்பாடுகள் கொண்ட நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள். அவர்களின் பொருட்டு என்னுடைய நிலைப்பாடுகள் எப்போதும் மாறியதில்லை. 

 

இன்று மதியம், பூங்கொத்துகளுடன் அரசு அதிகாரிகள் ஸ்டாலினை சந்திப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருக்கிறார்கள், எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திப்பது உறுதியாகிவிட்டது என்று ஒரு திமுக நண்பர் என்னை அழைத்துச் சொன்னார். அவரது குரலில் இருந்த கசப்பு என்னை உலுக்கியது. இது மிகவும் மோசமான காலம் என்று அவர் என்னிடம் சொன்னார். ஸ்டாலினின் தன்முனைப்பு இத்தனைக் கொடுரமாக இருக்குமா என்று நான் அவரிடம் விசனப்பட்டேன். 

 

அதிமுக முகாமில் இருக்கும் இன்னொரு நண்பரிடம் அதிமுகவை திமுக ஆதரிக்கும் திட்டத்தை யார் முதலில் முன்மொழிந்தது என்று கேட்டேன். அவருக்குத் தெரியும் ஆனால் நான் சொல்ல விரும்பவில்லை என்றார். அது திமுகவாக இருக்கும் என்றே அனுமானித்தேன். இல்லை, தன்னுடைய கட்சியைப் பிளவுபடுத்த செங்கோட்டையன் வழியாக தவெக முயன்றதால் அது அதிமுக முன்னெடுத்த முயற்சி என்றார் இன்னொரு நண்பர். எப்படிப் பார்த்தாலும் அது மிகவும் கீழ்த்தரமான அரசியல் வழிமுறை என்பதே என் கருத்து.

 

அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது காங்கிரஸ் அப்படித்தான் நடந்துகொண்டது. மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டே மக்களாட்சியின் விழுமியங்களைக் காலில் போட்டு மிதித்தது. தனது முந்தைய காலத் தவறுகளுக்கு அது இன்று கொடுக்கும் விலை அதிகம். நாமும் கூட அதனால் இன்று வரை பாதிப்படைகிறோம். இன்று பாஜக அதை விட மோசமான ஒரு சர்வாதிகாரக் கட்சியாக நம்மை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. 

 

இந்த ஒடுக்குமுறை காலகட்டங்களில் எல்லாம் திமுக தன்னை பாதிக்கப்பட்ட கட்சியாகவே முன்வைத்தது. அது உண்மையும்தான். ஆனால் இன்று பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்க உரிமை கோரும் இடத்தில் இருக்கும் தவெகவை முடக்குவதற்கு, தனது கொள்கை கோட்பாடு எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்துவிட்டு தமது பரம எதிரியான அதிமுகவோடு தோளோடு தோள் சேர்ந்து கொண்டு பாஜகவுடன் கைகோர்க்குமெனில் எனக்கு இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதும் காறி உமிழத் தோன்றுகிறது. இதுவல்ல திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த விழுமியம். இதுவல்ல அது கடந்து வந்த பாதை. 

 

நான் விஜய் ஆட்சியமைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன். எனக்கு விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அதை எல்லாக் கட்டங்களிலும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறேன். இனியும் செய்வேன். நாளையே கூட virtual warrior எனும் அவர்களது இணைய கும்பல் என்னைத் தாக்கலாம். அதை ஒரு மயிராகக் கூட நான் பொருட்படுத்தமாட்டேன். மக்கள் விஜயைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர் ஆட்சியமைக்க அனுமதிப்பதே முறை. அவரது ஆட்சியில் பிழைகள் ஏற்படின், அந்த ஜனநாயக எல்லைக்குள் நின்று நான் அவரைக் கடுமையாக விமர்சிக்கவே செய்வேன். அதுவே என் நிலைப்பாடு. அந்த வெளியைத் தக்கவைத்துக்கொள்வதே எனக்கான கலை மற்றும் அரசியல் செயல்பாடு என்றும் நான் நினைக்கிறேன்.

 

Karl marx Ganapathy

 

https://www.facebook.com/share/p/1Dyf2RFUHH/

========================

24
வேண்டும், விகிதாச்சார தேர்தல் முறை !

 

 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை அளித்துள்ளது.

 

‘ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்பதுதான் அரசியல் சமத்துவத்தின் அடிப்படை என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். ஒவ்வொரு வாக்குக்கும் சம மதிப்பு என்பது சட்டரீதியில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், நமது தேர்தல் முறை அதனை நடைமுறையில் பின்பற்றவில்லை.

 

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் (FPTP), ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகள் எவருக்கு விழுந்துள்ளனவோ  அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாக மாறுகின்றன. அவரைத் தவிர மற்றவர்களுக்கு அளித்த வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாகின்றன. 

 

இதனால், அனைத்து வாக்குக்கும் சம மதிப்பு என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்று பொய்யாக்கப்படுகிறது. அரசியல் சமத்துவம்  எட்டப்படாமல் தொலைதூரக் கனவாகவே உள்ளது. 

 

தேர்தலில் பதிவு செய்யப்படும் எல்லா வாக்குகளுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமானால் "விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை" தான் உகந்தது என்ற வாதம் 1930 ஆம் ஆண்டிலேயே ஜவஹர்லால் நேருவால் முன்வைக்கப்பட்டது. “பல்வேறு சமூகங்களின் அச்சத்தை நீக்கி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய வேண்டுமெனில், அதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே பொருத்தமானது” என அவர் கூறினார். 

 

அரசியலமைப்புச் சட்ட அவையில், மெஹ்பூப் அலி பேக் சாஹிப் பஹதூர், காஸி ஸையத் கரிமுதீன் ஆகிய இரு உறுப்பினர்கள், 'சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே சிறந்தது’ என்று வாதிட்டனர். ஆனால், அது அங்கே ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

 

இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்ற தேர்தல் முறையைப் பின்பற்றிய 89 நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறிச் சென்றுவிட்டன. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. 

 

இந்தியாவிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

 

1964-ஆம் ஆண்டு சிபிஐ(எம்) கட்சி உருவானபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சித் திட்டத்தில் (Party Programme), இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது. மக்களின் வாக்கு சதவீதத்திற்கும், கட்சிகள் பெறும் இடங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமே சரியான தீர்வாக இருக்கும் என்பது கட்சியின் அடிப்படைப் பார்வையாக உள்ளது.

 

1974 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழுவும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைப் பரிந்துரை செய்துள்ளது. 

 

இந்திய சட்ட ஆணையம், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென, 1999 ஆம் ஆண்டு பரிந்துரை செய்து விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

 

2003 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்பியாக இருந்த ஜி.எம்.பனத்வாலா விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை வலியுறுத்தி, தனிநபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.  

 

விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை ஏன் வேண்டும் என்பதற்குக் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத்தேர்தலை உதாரணமாகப் பார்க்கலாம். பதிவான மொத்த வாக்குகளில் 31% வாக்குகளை பாஜக பெற்றது. அது இந்திய மக்கள் தொகையில் 14% தான். 

 

வாக்களிக்கத் தகுதிபெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அது 20% தான் வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 69% பாஜகவுக்கு எதிராக இருந்தாலும், அக்கட்சி அறுதிப் பெரும்பான்மைபெற்று ஆட்சி அமைத்துள்ளது. 

 

அதுமட்டுமின்றி, 2014 பொதுத்தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 20% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 27% வாக்குகளைப் பெற்றது. ஆனால், அது ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. ஒடிஷாவில் காங்கிரஸ் கட்சி 26% வாக்குகளைப் பெற்றது. அக்கட்சிக்கு ஒரு எம்பி இடம் கூட கிடைக்கவில்லை. மேற்குவங்கத்தில் இடதுசாரி கூட்டணி 30% வாக்குகளைப் பெற்றபோதும் அதனால் இரண்டு எம்பி இடங்களைத்தான் வெல்ல முடிந்தது. 

 

இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, தற்போதுள்ள தேர்தல் முறையில் மிகப்பெரிய கோளாறு உள்ளது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். இதனால்தான், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எச்.கிருஷ்ணமூர்த்தி, இங்கே விகிதாச்சார தேர்தல் முறை வேண்டும் என வலியுறுத்தினார். 

 

முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷியும், 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 20% வாக்குகளை பெற்றிருந்தாலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பதைப் பார்த்த பின், ஜெர்மனியில் இருப்பதைப்போல விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே இந்தியாவுக்கும் உகந்தது’ என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறியுள்ளார். 

 

தேர்தல் ஆணையர்களும், சட்ட ஆணையமும் மட்டுமல்ல ; இடதுசாரிக் கட்சிகளும், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், இந்திய குடியரசுக் கட்சி, லோக் ஜனசக்தி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பலவும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டுமென வலியுறுத்துகின்றன. 

 

2008 ஆம் ஆண்டு இதற்கென துவங்கப்பட்ட ‘இந்தியாவில் தேர்தல் சீர்த்திருத்தத்திற்கான பிரச்சார அமைப்புடன்’ (CERI) ஒன்றிணைந்து இக்கட்சிகள் இது தொடர்பாகக் கடந்த பல ஆண்டுகளாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. 

 

பெரும்பான்மை ஆட்சி என்பதை பெரும்பான்மைவாத ஆட்சியாக உருமாற்றிவிட முடியும் என்ற ஆபத்தை இந்தியா இன்று சந்தித்து வருகிறது. இந்நிலையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் ஒவ்வொரு வாக்குக்கும் சம மதிப்பு என்கிற அரசியல் சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அது தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையால் நிறைவேற்றப்படாது. 

 

எனவேதான், 30% பிரதிநிதிகளை நேரடித் தேர்தல் மூலமாகவும் 70% பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்வுச் செய்யக்கூடிய தேர்தல் முறை ஒன்றை இந்தியாவில் கொண்டு வரவேண்டுமென இக்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 

 

தேர்தல் ஜனநாயகம் முழுமையான பொருளில் செயல்பட வேண்டுமெனில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் 

அதற்கேற்ப விதிகளை உருவாக்கிட வேண்டும். 

 

 விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் பிரதிநிதிகள் பட்டியலில், எஸ்சி / எஸ்டி மக்களுக்கு தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதோடு, ஐம்பது விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும் என்பதையும் சட்டமாக்கப்பட வேண்டும். 

 

ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவதில் ஆர்வம் காட்டும் பாஜக, இந்த ஆலோசனைகளை ஏன் பொருட்படுத்த மறுக்கிறது?

 

1932 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் 33.1% வாக்குகளைப் பெற்ற ஹிட்லர் அந்நாட்டின் அதிபரானார். அதனால், ஏற்பட்ட அழிவைச் சந்தித்த அனுபவத்தில், 1949 ஆம் ஆண்டே அந்நாட்டில் விகிதாச்சார தேர்தல் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது. 

 

தற்போது நரேந்திர மோடி 2014 பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் வெறும் 31% வாக்குகளை மட்டுமே பெற்று இந்தியாவின் பிரதமராக வந்திருக்கிறார். அதன் விளைவுகளை நம் நாடு சந்தித்துவருகிறது. 

 

ஜெர்மனியைப் போல இந்தியாவிலும் தேர்தல் முறையை மாற்றவேண்டும் என்ற வலுவான குரலை முன்வைக்க வேண்டிய நேரம் இது.

 

நன்றி : கீற்று மற்றும் புதிய தலைமுறை இணையக் கட்டுரைகள்.

ச. நந்தகோபால் 

திருப்பூர் மாவட்ட செயற்குழு, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), 

 

2.5.2026

 

Nandhagopal Chandrasekaran

 

https://www.facebook.com/share/1LgvWk8bUp/

 

=================

25
இடது முன்னணிக்கு வாய்பில்லை
.

 

CPI CPM VCK சேர்ந்து ஒரு முடிவை அறிவிக்கும் அளவிற்கு கூட மூன்று கட்சிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை.

 

ஆனால் மேடை தோறும் இடது சாரிகளோடு சேர்ந்து பயணிப்போம் என்று சொல்வது ஏன்...?

 

தேர்தலுக்கு முன்பு இடது சாரிகளுக்கு 18- இடம் என்று தன்னையும் இடது சாரிகளோடு இணைத்து பேசி, பிறகு இடது சாரிகளோடு இணைந்தே பயணிப்போம் என்றெல்லாம் சொன்னது இடது முன்னணியில் VCK வும் இருக்க வேண்டும் என்று நினைத்தது தவறு என்று தோன்றுகிறது..

 

அடுத்ததாக இடது சாரி கட்சிக்குள் இருக்கும் முரண்...

 

DMK ADMK ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தியது என்று கட்சியின் பொது செயலாளர் மீடியாவில் பேசுகிறார்... அது ஒரு பெரும் விவாதத்தை கிளப்புகிறது, இன்று அது வதந்தி என்கிறார்..

 

ஆனால் மாநில குழு நடந்து முடிந்த பிறகு அறிக்கையில் அந்த செய்தி நேற்றே வெளியிடப்பட்டது, அறிக்கை என்பதால் திமுக கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்ற விவாதம் குறித்து அந்த அறிக்கையில் இல்லை..

 

ஆனால் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பேசியது சும்மா போற போக்கில் யாரோ ஒருவர் பேசுவது ஆகாதில்லையா..

 

ஆனால் இன்று அவரே பல்டி அடித்துள்ளார்...

 

ஏன் என்று புரியல..

 

யூகத்தின் அடிப்படையில் சொல்வது என்றால் திமுக தலைமை வலியுறுத்தி இருக்கும்..

 

ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி யாருடைய approve க்கும் கட்டுப்பட தேவை இல்லை என்கிறார் மாநில செயலாளர்.. இதில் எது உண்மை என்று தெரியாது..

 

ஆக மொத்தம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நெருக்கடியான நேரத்தில் முடிவு எடுக்கும் சூழ்நிலை இல்லை என்றே தெரிகிறது.. இது பலவீனம் மட்டுமல்ல இது எதையோ முன் அறிவிக்கிறது...

 

பர பரப்பான அரசியல் சூழ்நிலையில் கட்சி என்ன விதமான முடிவுகள் எடுக்கப் போகிறது என்று உறுப்பினர்கள் உற்று நோக்கிக் கொண்டு இருப்பார்கள்... ஆனால் மாநில தலைமை, மத்திய தலைமை என மாறி மாறி குழப்புகிறார்கள்..

 

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர சூழ்நிலையை கையாளக் கூடிய நிலையில் எப்போதும் இருக்க வேண்டும்...

 

ஒரு சாதாரண தேர்தல் நேர குழப்பத்தைக் கூட கையாளத் தெரியாமல் தடுமாறி நிற்கிறது.

 

கட்சிக்குள் லாபிகள் நடக்கிறதா என்கிற சந்தேகம் வலுக்கிறது.

 

நேற்றைய விஜய் வருகையின் போது சு வெ உடனான சந்திப்பு, பெரும் பான்மை sfi dyfi ஆட்களிடம் இருந்த tvk ஆதரவு என எல்லாமும் சந்தேகத்தை கூட்டுகிறது...

 

ஆம், இதுபோல சந்தேகத்தை பொது வெளியில் வைக்க கூடாது என்பீர்கள்..

 

மாநில, அகில இந்திய செயலாளர்கள் பொது வெளியில் தானே முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்..

 

Very very disappointment with party..

 

Silambarasan Che

 

https://www.facebook.com/share/p/18iwuQLRVd/

 

==================

26
தமிழக வலதுசாரி அரசியல் என்றால் என்ன?

 

வெற்றி, தவெகவிற்கு மிக எளிதாக சாத்தியப்பட்டிருக்கிறது.  கவனித்துப் பார்த்தால், கேளிக்கை அரசியலே அதன் பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது.  அதற்கான சூழலை, மரபான அரசியலில் பழகிப் போன பிற எதிர்க் கட்சிகளே உருவாக்கித் தந்தன. 

 

வெளிப்பார்வையிலும் பேச்சிலும் இது அறிவிற்கும் தற்குறித்தனத்திற்குமான போட்டியாகவே தோன்றினாலும், அப்போட்டியும் கூட ஒருதலைப்பட்சமானதாகவே இருந்தது.  சமூக ஊடகங்களாலும், இணையத்தாலும் வடிவமைக்கப்பட்ட இளையவர்கள் ‘தற்குறி’ அடையாளத்தை சுவீகரித்த அளவிற்கு, திராவிடக் கட்சியினர் ‘அறிவானவர்கள்’ என்ற சொல்லுக்குப் பொருத்தமாக வெளிப்படவில்லை.  

இதனால், அறிவாளி - தற்குறி மோதல் ‘தகவல் அறிந்தவர்கள் - அறியாதவர்கள்’ என்ற தளத்திலேயே முடங்கி விட்டது.  

 

தவெகவினருக்கு அரசியல் பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்கவில்லை என்பதைக் கடந்து எதிர்க்கட்சியினர் எதையும் நிரூபித்திருக்கவில்லை. அப்படியானத் தகவல்களை இன்றைக்கு யாரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்படும் போது அவற்றை இணையத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியும் என்றும் தவெகவினர் சொன்ன பதிலை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.  நிஜமாகவே தவெகவிற்கும் பிற கட்சியினருக்குமான மோதல், ‘எது அறிவு?’ என்று வரையறுப்பதில் தான் அடங்கியிருந்தது.   அதே போல், எது அரசியல், எது போராட்டம், எது விடுதலை, எது முன்னேற்றம் என்பதிலும் தவெகவினர் கொண்டிருக்கும் முன்முடிவுகள் ஆச்சரியமானவை, அச்சுறுத்தக் கூடியவை.   

 

இது பண்பாட்டுத் திரட்சிக்கான காலம் என்பதை தவெகவில் யார் முன்னுணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு நூற்றாண்டாக நம்பியிருந்த கருத்தியல் அரசியல் தோற்றுப்போயிற்று என்ற அறிவிப்போடு இது வெளிப்பட்டிருக்கிறது.  

 

பாஜகவின் அரசியலைப் போல, தமிழகத்திலும் மதக் காழ்ப்புகளும், மோதல்களுமே வலதுசாரி அரசியலாக இருக்கும் என்று திராவிடக் கூட்டணியினரும் பாஜவினரும் எதிர்பார்த்து தோற்றார்கள் என்றே நான் சொல்வேன்.  தமிழகத்தில், மத மோதல்கள் நடைபெறுவதற்கான சூழலை வரலாறு தொடர்ந்து மறுத்தே வந்திருக்கிறது.  ஆனால், அதற்கு மாற்றாக, இங்கே மதம் நீங்கிய பண்பாட்டு அரசியலின் தாக்கம் மிக அதிகம்.  அதன் மைய உருவகம் ‘ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு’ என்பதையே எனது ஆய்வுகள் உறுதி செய்கின்றன.  

 

எந்தவொரு அதிகார அமைப்பும் ‘ஜல்லிக்கட்டுக் காளை’யின் குணநலன்களோடே தமிழகத்தில் உருவாகி வந்திருக்கிறது.  அப்படி உருவாகும் அதிகாரங்கள், ஆரம்பத்தில் காலிக்குறிப்பானாக விளங்கி, நாளடைவில் ஏதாவதொரு வலுவான கருத்தியலின் கதையாடலால் விழுங்கப்பட்டிருக்கின்றன.  இன்றைக்கு, தவெக அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்வு, அப்படியொரு காலிக்குறிப்பானின் வருகையின் போதே ஆரம்பித்து விட்டது.  அந்த வருகையையே நான் 2017 ‘தைப் புரட்சி’ என்று சொல்கிறேன்.  திராவிடக் கருத்தியலின் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடே அந்தப் போராட்டம்.  அந்த அவநம்பிக்கை திராவிடர்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பேரதிர்ச்சி தான்.  அதனால் தான், அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் சாரிசாரியாய் திரண்டு வந்தனர்.

 

தமிழகத்தில் இந்துத்துவ அரசியலுக்கு இடமில்லை என்பது, திராவிடக் கூட்டணிக்கட்சிகளின் கோஷம் மட்டுமல்ல; அது தமிழகத்தின் பண்பாட்டு விழுமியமும் கூட.  ஆனால்,  அதே நேரம், தமிழகத்தில் வலதுசாரி சிந்தனைகளே ஆதிக்கம் செலுத்தின என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.   திராவிட அரசியலுக்கு முன்பு வரை தமிழகத்தில் வலதுசாரி அரசியலே செயல்பட்டு வந்தது.  அது, பாஜகவின் மதவெறியாட்டம் போன்றதல்ல.  அதற்குப் பெயர் ‘தமிழ்ப் பண்பாட்டு வெறியாட்டம்’.  பல்வேறு பனுவல்களிலும் விதந்து சொல்லப்படும் பண்பாட்டு விழுமியங்களுக்காக (தாய்மாமன் முதற்கொண்டு விருந்தோம்பல் வரைக்கும்) இங்கே கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன; அடிமைப்படுத்தல்கள் நடந்திருக்கின்றன; உடலரசியல் வன்முறையோடு செயல்படுத்தப்பட்டிருக்கிறது.  ஜல்லிக்கட்டுக் காளை அப்படியொரு பண்பாட்டு வெறித்தனத்தின் சமூக வழிபாடு.  

 

திராவிட அரசியலில் இத்தகையக் கூருணர்வுகளுக்கு இடமில்லை என்பது தான் யதார்த்தம்.  விடுதலையையும், பகுத்தறிவையும், சமூக நீதியையும் திராவிடக் கட்சிகள் எவ்வாறு நீர்க்கச் செய்தனவோ அதே போல், பண்பாட்டு அறிவையும், வரலாற்று அறிவையும் மலினப்படுத்தவே செய்தன.  சங்ககாலம் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் பற்றியும் தொன்மங்களை உருவாக்குவதே திராவிடத்தின் வரலாற்றுவரைவியலாக இருந்தது.  அல்லது, கீழடி, ஆதிச்சநல்லூர் பற்றிய சுயப் பெருமிதங்கள் மட்டுமே இங்கு பண்பாட்டுப் பிரக்ஞையாக வரையறுக்கப்பட்டது. 

 

இதையெல்லாம் கடந்ததே பண்பாடு என்பதை தவெகவின் வெற்றி நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.  இதையும் கூட, பழைய சினிமா கவர்ச்சி (பிம்பச்சிறை) என்ற ஒற்றை விளக்கத்துடன் நிறுத்திக் கொள்கிறவர்கள் குறித்து நாம் பெரிதாய் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.   எனது கவலையெல்லாம் பண்பாட்டு வெறியிலிருந்து தமிழகம் எப்போது வெளியேறும் என்பது தான்.  அதற்கான சிறு நம்பிக்கைக் கீற்று கூடத் தெரியவில்லை.

 

Dharmaraj Thamburaj

 

https://www.facebook.com/share/14dw8oVWRkJ/

==============================================

27
முதலாளித்துவ குழுக்களும் அதன் தொங்கு சதைகளும் இனி எப்படி தமிழ்நாட்டில்அரசியலைக் கொண்டு போகும்? 

கடந்த காலத்தில் மக்களின் அரசு எதிர்ப்பு உணர்வை தக்க வைத்துக்கொள்ள எப்படி அதிமுக × திமுக என லாவணிகளை அமைத்துக் கொண்டதோ, அதேபோல இனி த.வெ.க × திமுக என்று செட் செய்து கொள்ளும். 

இதற்குள் காரசார மசாலா பொடி தூவும் அரசியல் கொண்டு செல்லப்படும். 

உழைக்கின்ற மக்கள் இதன் பின்னே இழுத்துச் செல்லப்படுவதை தடுக்க வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கு மட்டுமே உண்டு. ஏனென்றால் உழைக்கும் வர்க்க நலன்கள் அடிப்படையில் அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் தேவையும் அவர்களுக்கு இருக்கிறது. 

சமூக சொத்துகளை குவாரிகளாகவும் சாராயமாகவும் கொள்ளையடித்தவர்கள் மீது 

கடந்த ஆட்சிகள் எப்படி அரசு அமைப்பதற்கு முன்பு, நாங்கள் வந்தால் இருக்கு! என்று மக்களிடம் உசுப்பேத்தி ஓட்டு வாங்கி வந்ததோ! அதேபோல இப்போதும் நடக்க அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. 

ஊழல், மன்னராட்சி என்று விமர்சனம் செய்து ஆட்சிக்கு வந்த விஜய் அதன் மீதான செயல் பூர்வமான அரசியல் நடவடிக்கையில் எப்படி வெளிப்பட போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

ஆனால் உழைக்கின்ற மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது 

இவர்கள் முதலாளித்துவத்தின் பல்வேறு குழுக்கள். மொத்தத்தில் முதலாளித்துவ நலன்களை முன்னிட்டு சந்தர்ப்பவாதம் சமரசம் செய்து கொள்பவர்கள். 

வெளியில் காட்டும் வசனங்களின் ஈகோ இவர்களின் வர்க்கத்திற்கு 

தேவைப்படாதது.

இப்படி சொல்வது பலருக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் முதலாளித்துவ அரசியல் குழுக்களின் போட்டிக் களம் என்பது "மறப்போம்! மன்னிப்போம் ! நாகரிகம்!" எனும் பாணியில் முதலாளித்து வர்க்க நலன்களை கட்டித் தழுவும் காரியத்தில் ஒன்று கூடும். 

மாற்றாக பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து இயங்காமல் மீண்டும் ஏதாவது ஒரு முதலாளித்துவக் கட்சிகளின் இழுவை எந்திரமாக 

செயல்படும் ஒட்டுண்ணிக் குழுக்களையும் உழைக்கும் மக்கள் புரிந்து கொள்வார்கள்

எனும் வகையில் தேர்தல் அரசியல் மேலும் நமக்கு தெளிவைத் தரும் ஒரு பகுதியும் உண்டு.

      - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1006791548694308/?rdid=Kf41OMCi7YmWWX8l

=========================================================

28
முதலாளித்துவத்தின் வளர்ச்சி போக்கில் மாற்றுக் கட்சியாக இப்போது த.வெ.க

சோப்பின் பயன்பாடு ஒன்றுதான், ஆனால் ஒரே பிராண்ட் சோப்பு போரடித்து விடுகிறது. கொஞ்சம் மாறுபட்ட மணம் வேறுபட்ட குணம் என்று முதலாளித்துவ சந்தை புது பிராண்டுகளை இறக்குகிறது.

பற்பசையில் கூட இப்படித்தான்! 

கொஞ்சம் உப்பு வேம்பு புதினா 

என்று சந்தை போட்டி  புதிய புதிய மாடல்களை தேர்வு சுதந்திரமாக கொடுக்கிறது.

அரசியல்கட்சிகளின் சந்தை நிலவரமும் இந்தமுதலாளித்துவ உள்ளடக்கத்தின் வேறுபட்ட சோப்புகள்தான். 

மக்களின் நிறைவின்மையை 

தங்களது வேறுபட்ட பிராண்டுகளின் அற்புதங்களைப் பிரச்சாரம் செய்து நிரப்பிக் கொள்கின்றன. 

சமூக வர்க்க குழுக்கள்  என்ற முறையில் மக்களின் தேவைகளை முன்வைத்து தொடங்கப்படும் கட்சிகளின் கொள்கைகள் குறிப்பிட்ட சமூக முரண்பாட்டிற்கு முகம் காட்டி விட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் நீட்சியாக அந்த வர்க்கத்தின் தேவையோடு பொருந்திக் கொள்கிறது.

முன்னர் கொள்கைகளாக தொடங்கப்பட்டவை முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடாக சந்தை பிராண்டுகளாக வடிவமைக்கப்படுகின்றன. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 

மூப்பனார் காலத்திலேயே காங்கிரஸ் வழியில் ரஜினியை பிராண்டாக்கி தொடர்ந்து நிலவும் திராவிட கட்சிகளின் மீதான நிறைவின்மையை அறுவடை செய்ய ஆளும் வர்க்கம் ஏற்பாடு செய்தது. 

சூப்பர் ஸ்டார் அதற்காக கூட போராட வேண்டிய களத்தின் தேவையிலிருந்து நழுவிக் கொண்டு இமயமலை குகையில் போய் ஒளிந்து கொண்டார்.

அரசியலுக்கு வா தலைவா! 

என்று மறைப்பொருளில் எழுதப்பட்ட வைரமுத்துவின் (சினிமா ) கொள்கை பாடல் வேஸ்ட் ஆகி போனது.

காங்கிரஸ் எடுத்துப் பார்த்து ஒடித்துப் போட்ட முற்றிய வெண்டைக்காயை பாஜக ஏவாரம் செய்யப் பார்த்தது. 

இந்தப் பக்கம் கருணாநிதி அந்தப் பக்கம் ஜெயலலிதா 

எதுக்குடா வம்பு? எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதை காப்பாற்றிக் கொள்வோம்! என்று படையப்பா முகாமுக்கு திரும்பி விட்டார். 

அன்று ஒத்து வந்திருந்தால் இன்றைய விஜய் போல மாற்று என்று ரஜினி தூக்கி கொண்டுவரப்பட்டு இருப்பார். 

இந்த வரிசையில் அலுப்பேறிய ஜனநாயகத்தின் அஞ்சால் அலுப்பு மருந்தாக ஆளும் வர்க்கத்திற்கு கிடைத்தவர்தான் விஜய்!  அவங்களேதான் இருக்கணுமா? எனும் மக்களின் அலுப்புக்கும் ஒருவகை அலுப்பு மருந்துதான்.

இட்லி, தோசை வயதானவர்கள் அல்லது பழைய காலத்து ஆட்களின் உணவு. 

பிரியாணி பிரைடு ரைஸ் நூடுல்ஸ் இதுதான் புதிய தலைமுறையின் உணவு ட்ரெண்ட் என சாப்பிடுவதில்

சோத்துக் கட்சி புதிதாக வளர்ந்து விட்டது போல! 

முதலாளித்துவத்தின் வளர்ச்சி போக்கில் மாற்றுக் கட்சியாக இப்போது த.வெ.க.

சந்தை புதிய பிராண்டுகளை மட்டும் உருவாக்குவதில்லை. 

மல்டி பிராண்டுகளுக்கான மால்களையும் உருவாக்கி வைத்திருக்கிறது. ஏறக்குறைய புதிதாக முளைத்திருக்கும் 

த.வெ.க. ஒரு மல்டி பிராண்ட் மால். இங்கே எல்லா வகையையும் ஓர் இடத்தில் பார்க்கலாம். 

வாச்சாத்தி புகழ் செங்கோட்டையனையும் பார்க்கலாம், வாச்சாத்திக்காக உயிரை பணயம் வைத்து இயங்கிய கம்யூனிஸ்ட் தோழர் சண்முகத்தையும் பார்க்கலாம். இயற்கை வளத்தை பாதுகாக்க சுடுகாட்டில் படுத்திருந்த சகாயத்தையும் பார்க்கலாம்,

காங்கிரஸ் செல்லப் பெருந்தகையையையும் பார்க்கலாம்.

அதாவது முதலாளித்துவ பிராண்டுகள் சந்தை என்பது 

மட்டுமல்ல, 

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் புதிய வகை சந்தையாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பு காலத்தின் அரசியல் முகமாக விஜய் வருகை.

முதலாளித்துவ முரண்களை பாட்டாளி வர்க்க அரசியலின் குறுக்கீடுகளோடு அணுகி அரசியல் செய்யும் கம்யூனிஸ்டுகளின் சுயேச்சை போக்கு வளராத வரை ,

முதலாளித்துவ கட்டமைப்பின் புதிய வளர்ச்சி போக்கே புதிய மாற்றாக ஏற்கப்படும் நிலையில் மக்கள் மீதான புறநிலை தாக்கம் நிலவுகிறது.

மிக எளிய வாய்ப்பாடாக அது முதலாளிவர்க்கம் !அது ஆளும் வர்க்கம்! அது அப்படித்தான் இருக்கும்! என்று சொல்வதை மட்டுமே, அல்லது புதிது புதிதாக தோன்றும் விஜய்களை நக்கல் அடிப்பது , மக்களை தலையில் தட்டுவது என்பதன் மூலமாக இதனை வெற்றி கொள்ள முடியாது.

ஒவ்வொரு சமூக நிகழ்விலும் 

மக்களின் சிந்தனை மட்டத்திற்கு நெருங்கிப் போய்

அது ஒவ்வொன்றிலும் யாருடைய நலன் மறைந்திருக்கிறது அல்லது வெளிப்படுகிறது எனும் நெருங்கிய ஜனநாயக பூர்வமான உரையாடலுக்கு முதலில் வழிவிடும் பழக்கம் நமக்கு வேண்டும். சொந்த குடும்பத்தில்  கூட இப்படி அணுகும் பழக்கம் உள்ளவர்களால் மட்டுமே அடுத்த தலைமுறையுடன் தோழமையாக பழக முடியும்.

சமுதாயத்தின் பல படித்தான சிக்கல்கள் உறவுகளில் எது வர்க்க கண்ணோட்டம்? எனும் அரசியலை பொருத்தமுடன் பேசுவது உரையாடுவதால்

நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பலபடித்தான வழிமுறைகளிலும் அணுக வேண்டிய தேவையை முதலில் நன்கு உணர வேண்டும். ஒரே முறையில் தான் அணுகுவேன் எனும் சர்வாதிகார மனப்பான்மைக்கு இளைஞர்களிடம் வேலை இல்லை.

 ஆக்கபூர்வமான வளரும் சக்தியான தொழிலாளர்கள் 

மேலோட்டமாக பார்த்தால் ஆளும்வர்க்க கருத்தியலுக்கு பலியாகி இருந்தாலும் அவர்களுக்கான நலன்களுக்கு உரிய அரசியலை பேசும் போது 

உணராமல் இல்லை. 

ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் என்ற சொற்களைப் பேசி விடுவதாலேயே அவர்களை விட நாம் மேம்பட்டவர்கள் என்று இறுமாப்பை முதலில் இறக்க வேண்டும். குறிப்பிட்ட நிகழ்வில் எது ஏகாதிபத்திய தன்மை! எது முதலாளித்துவ தன்மை!

என்று அவர்களுக்கு புரியும் விதமாக இறங்கி வாழ்வின் வர்க்க அடுக்குகளில் நின்று உணர்த்தும் திறன் பெற வேண்டும்.

விசயம் கம்யூனிஸ்டுகள் வர்க்க கண்ணோட்டத்தில் மக்களை அணுகுவதற்கு பதில் 

முதலாளித்து மாடல்களை மாற்றி மாற்றி ஆதரிப்பது என்பதை மக்கள் ஆதரிப்பதில்லை என்பதுதான் சமூக அனுபவம். 

புதிய அரசு மீதான விமர்சனம் என்பது கூட உழைக்கும் வர்க்க பார்வையில் இருந்து வைக்கப்படும் போது மக்களிடம் உகந்ததாக ஏற்கப்படும். மீண்டும் வேறு முதலாளி வர்க்கக் கட்சிகளின் வாலாக நின்று கொண்டு பேசும் போது 

மக்கள் அவர்களோடு 

சேர்த்துதான் அடையாளப்படுத்துவார்கள்.

நாம் எப்போதும் பாட்டாளி வர்க்க அரசியலை உழைக்கும் மக்களிடத்தில் உறுதியாகப் பற்றி நின்று பேசுவோம்! 

       - துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=1007964478577015&id=100080904177819&rdid=vNZAzitRttVNpalX

====================================================

29
பாட்டாளி வர்க்க  கண்ணோட்டம் இல்லாத அரசியல் பாழ்!

சட்டமன்ற பாராளுமன்ற முதலாளித்துவ அரசியல் என்பது குதிரை பேரமும் ஒருவருக்கு ஒருவர் கழுத்தறுக்கும் வீரமும் நிறைந்த காட்சிகள்தான்.

காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டது என்று திமுக சொல்கிறது. 

பாஜக அதிமுக வுடன் சேர்ந்து முதுகில் குத்த நினைத்ததை முறியடித்து விட்டோம் ! என்று காங்கிரஸ் சொல்கிறது.

" இந்தியா கூட்டணி காங்கிரஸ் தலைமை என்று இவர்கள் தேர்தலுக்காக பாசிச எதிர்ப்பு

தந்திரம் பேசினார்கள். 

பாசிச எதிர்ப்புக்கான குறிப்பான பொதுத்திட்டம்/ அதற்கான வேலைத் திட்ட ஒப்பந்தம் இல்லாமல் பாசிச ஒழிப்பு என்பது ஏமாற்று வேலை! என்று பேசிய போது, 

இவ்வாறு விமர்சிப்பவர்கள் பாஜகவின் பி டீம்! பாஜகவும் காங்கிரசும் சமமா? என்று திமுகவுக்கு முட்டுக் கொடுத்தவர்கள் இடதுசாரி வியாக்கியானம் செய்தார்கள். 

சமம் இல்லை, ஆனால் மாற்று இல்லை என்பதை மக்களிடம் கொண்டு சென்று  தேர்தல் ஆக இருந்தாலும் நிர்பந்த ஒப்பந்த அடிப்படையில் ஆதரிக்க வேண்டும் என்பதையும் ஏற்க மறுத்து ஒருதலைக்காதல் கொண்டார்கள்.

இப்போது வரை அரசியல் அடிப்படையில் இதை மீள் ஆய்வு செய்யவோ , பாசிச எதிர்ப்பின் வர்க்க அடிப்படையை முன்னிறுத்தவோ செய்யாமல் 

மீண்டும் திராவிட ஆரிய கதகளி ஆட்டத்தில் இறங்கி விட்டார்கள் 

கம்யூனிச அரசியலை கலைத்துவிட்ட சில விதி வழி அறிஞர்கள். 

இந்த உண்மைகளைப் பேசுவதால் நம் மீது கடும் கோபம் கொண்டு அவதூறு சாபங்களை இடுகிறார்கள் திராவிட விபூதி சித்தர்கள்.

நடப்பில் செயலில் இவர்களின் தேர்தல் திட்ட அளவிலேயே கூட 

ஆணியடித்த மாதிரி நிற்காமல்

திமுக கட்டுப்பாட்டை மீறிய சிபிஐ சிபிஎம் விசிக கட்சிகளின் மீது வரும் ஆத்திரத்தையும் கொட்டித் தீர்க்க முடியாமல் 

யாருக்கோ?  பாணியில் 

வசனத்தில் வாழ்கிறார்கள்.

திமுகவோடு மாறுபடுபவர்கள் எல்லாம் பாஜகவின் ஆட்கள் என்று செட்டிங் போட்ட இந்த பிரிவினர் விசிகவை இடதுசாரி கட்சிகளைப் பார்த்து இப்போது துணிந்து பேச வேண்டியதுதானே! அதிலும் ஒரு சந்தர்ப்பவாதமாக "சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி" எனும் சோகமான வீரம்.

இந்த இடைப்பட்ட சூழலில் நடந்த நிகழ்வுகளில் திமுக பின்னணியில் வந்த பாஜகவின் ஆட்டத்தையும் சில திமுக ஆதரவு பாசிச எதிர்ப்பு இயக்கங்கள் சரியாக கணித்து,

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு ஆதரவு கொடுப்பது எனும் நிலையில் ஜனநாயகம் பேணிக்கொண்டனர். 

அரசு என்ற வகையில் திமுக அரசாக இருந்தாலும் சரி த.வெ.க அரசாக இருந்தாலும் சரி இவர்களின் ஆட்சியின் கீழ் உழைக்கின்ற மக்களின் வர்க்க நலனுக்கான அரசியல் எது? 

உழைத்து வாழும் மக்களுக்கான நலன் மற்றும் உரிமை சார்ந்த கோரிக்கைகளை பேசுவது ,

இவைகளை பாட்டாளி வர்க்க அரசியலாகத்திற்கு பயன்படுத்திப் பேசுவது என்பதுதான் தேவை. 

மீண்டும் இரண்டும் சமமா? கோட்பாடுகளை பேசி ஏதாவது ஒரு முதலாளித்துவ கட்சியின் பக்கம் லாவணி பாடுவது இடதுசாரிகளின் வேலை அல்ல.

ஏனென்றால் ஆளும் வர்க்க அரசியலில் ஏதாவது ஒரு பிரிவை அண்டிப் பிழைக்கும் அரசியல் கண்ணோட்டத்தை புகுத்த நினைக்கும் கம்யூனிச எதிரிகளையும் இந்தத் தேர்தல் அரசியலின் மூலம் தெளிவாக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

     - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1008374521869344/?rdid=lchCSaxBmgkY9SiM

=========================================================

30
முதலாளித்துவக் கட்சி என்று பொதுவாக வகைப்படுத்தினாலும் நிதி மூலதன வளர்ச்சிக்கான மறுகட்டமைப்பு காலகட்டத்திற்கான கட்சியாக த.வெ.க முளைத்திருக்கிறது.

ஒரே பவர் சென்டர், அரசு அலுவலக விவகாரங்களில் கட்சிக்காரர்கள் தலையீடு கூடாது! சட்டம் ஒழுங்கு ஸ்டிரிக்ட்! போன்றவை பழைய வகை பண்ணையார் தன மண்டல ராஜாக்களின் அதிகார அட்டூழியங்களை சந்தித்த மக்களுக்கு,  மக்கள் பார்வையில் கூட ஒரு மாற்று போல ஏற்கப்படும். 

அந்த வகையில் துவக்க கால வரவேற்பையும் பெறும். 

காவல் நிலையங்களில் சிசிடிவி இயங்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே இருந்த வாய்ச் சொல்லாக இருந்தாலும், புதிய அரசு வந்த உடனேயே ஆவணப்படுத்த முனைவது வெறுத்துப்போன அதிகாரவர்க்கத்தின் மீது ஒரு மீள் நம்பிக்கையையும் மறு கட்டமைப்பையும் செய்வதன் ஊடாக மக்களையும் ஏற்பளிக்க வைப்பது எனும் தொலைநோக்கில் ஆனது.

மூலதன பாதையின் வடிகால் திட்டங்களோடு இதனோடு சமரசப்படுத்தும் வெகுஜன உளவியலுக்கான புல்லுக்கும் பொசியும் ஜனநாயக நீர்க்குமிழிகள் வெடிக்கும்.

இந்த மறு கட்டமைப்புக்கு கட்டுப்படும் மக்களுக்கு

தேவைக்கு அதிகமான தொந்தரவு இல்லாத பழைய வகை சில்லறைத்தனங்களை ஒழிப்பது மூலதன வளர்ச்சி நியாயவாதத்திற்கும் தேவைப்படுகிறது. அந்த வகையில் முதலாளித்துவ அளவில் கூட ஒப்பீட்டளவு மாற்றம்  மக்களின் விருப்பத்திற்கு உள்ளாவது இயல்பு.

உண்மையில் இதன் நோக்கம் மூலதன வருகைக்கான அனைத்து சமூக இடைஞ்சல்களையும் சரி செய்வது எனும் ஆளும்வர்க்க நோக்கிலான அடிப்படையைக் கொண்டது.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் நெருக்கடிகளை எப்படி கையாள்வது என்பதில் 

இடைக்கட்டங்களை முதலாளித்து வர்க்கம் பயன்படுத்துகிறது. 

பாட்டாளி வர்க்க இயக்கங்களும் 

பொத்தம் பொதுவாக இதுல என்ன இருக்கு ? எல்லாம் முதலாளித்துவம்தான் எனும் ஆய்வற்ற நிலைபெற்ற வாதத்தில் நில்லாமல், முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கின் கட்டங்களில் வெளிப்படும் ஒவ்வொரு அரசியல் தன்மையையும் அதன் பகுதிகளையும் முழுமையில் இணைத்து புரிய வைக்கும் வர்க்க அரசியலை முன்னெடுக்க வேண்டும். 

புதிய நிலைமைகளில் நடைபெறும் உழைப்பு சுரண்டலையும் அதை மூடி மறைக்கும் நுட்பமான "மாற்றம்" எனும் மடை மாற்றத்தையும் 

தொழிலாளர் வர்க்க சொந்த சித்தத்தில் உணரும்படியான அரசியல் முழக்கங்களை வடிக்க தெரிய வேண்டும்! 

இதற்கு பழைய வகைப்பட்ட முதலாளித்துவக் கட்சிகளின் ஏதாவது ஒரு முகாமுக்குள் போய் அடைந்து கொள்வதை முதலில் விட்டொழிக்க வேண்டும். 

பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கட்சியை உணரும்படி சுயேட்சை தன்மையோடு திறன் பெறுவதைத் தவிர கம்யூனிச பாதைக்கு வேறு வழியில்லை!

    - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1009841895055940/?rdid=1i3kZd3EOFUmFPun

=============================================================

31
முதலாளித்துவம் செட் செய்யும் திமுக× த.வெ.க இருமுனை லாவணி

எந்த ஒன்றையும் அதன் முழுமையில் பரிசீலிக்காமல் முதலாளித்துவ நவீன வாதம் முன்வைக்கும் முறையில் வெட்டி வெட்டி பகுதி பகுதியாக சிந்திக்கும் வெட்டி வேலைகளை செய்யும் ஒரு பிரிவு இடதுசாரி சாயலில் இணையத்தில் உலவுகிறது.

'திராவிட கம்யூனிசம்' எனும் புதைச்சேற்றில் சிக்கிக்கொண்ட இந்த  வகையினர் இதுகாறும் இடதுசாரிகளை அரித்து தின்ற  

முற்போக்கு வடிவிலான பிற்போக்கு சக்தியை குறிப்பாக திமுகவின் மீதான முதன்மை விமர்சனங்களை வைக்கும் போது இவர்கள் த.வெ.க ஆட்கள்! என வழக்கமான பில்லி சூனிய அரசியலால் மனதை தேற்றிக் கொள்கிறார்கள்.

மிகக் கேவலமாக தேர்தல் ஆதாயத்திற்காக பாசிச எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என உதார் விட்டுக் கொண்டு, 

தேர்தல் முடிவில் கடுப்பாகி 

பாஜக அதிமுக கூட்டோடு ஆட்சியைப் பிடிக்க செய்த அயோக்கியத்தனத்தை இவர்கள் அம்பலப்படுத்த தயார் இல்லை. இவர்களின் தொங்கு சதை அரசியலுக்கு இது அதிர்ச்சியாகவும் இல்லை.

இது இவர்கள் பேசிய அரசியலுக்கு எவ்வளவு பெரிய மோசடியும் சதிகாரத்தனமும் கொண்டது. 

புதிய கட்சிதான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலி பிம்பம் ‌ என்று சொல்லும்போது 

பழைய யோக்கியன் எவ்வாறு இருக்க வேண்டும்? பாஜகவோடு சமரச சக்தி என்று நாம் மதிப்பிட்டது எவ்வளவு உண்மையாக இருக்கிறது. 

இதில் திமுக மட்டுமல்ல இடதுசாரி போர்வையில் திமுகவுக்கு வேலை செய்த போலி முற்போக்காளர்களும் சேர்ந்து அம்பலப்பட்டு இருக்கிறார்கள்.

சொல்லப்போனால் வெளிப்படையாக திமுகவின் கூட்டணி கட்சிகளாக இருந்த சிபிஐ சிபிஎம் போன்றவர்கள் முயற்சியால்தான் இது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. 

அந்த அளவுக்குவாது அரசியல் நேர்மை அவர்களிடம் மட்டுமே வெளிப்பட்டு இருக்கிறது. 

நமது வெறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு சமூக நிலைமைகளை முழுமையாக மதிப்பிட்டு ஏன் இந்த புதிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என வர்க்க கண்ணோட்டப்படி பேசுவதுதான் மார்க்சிய அரசியல். 

முதலாளித்துவம் செட் செய்யும் திமுக× த.வெ.க இருமுனை லாவணி அரசியலுக்கு பலியாவது அல்ல.

அரசு என்ற முறையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதை பாட்டாளிவர்க்கு நிலைப்பாட்டில் இருந்து அணுகுவதுதான் தேவை.

அதிகாரத்தை இழந்த அடுத்த நொடியே எல்லா பித்தலாட்டங்களை செய்யும் இன்னும் மக்களின் தலையில் ஏறி உட்கார விரும்பும் சக்தியை 

அரசியல் வழியில் காலாவதியாக்க செய்வது

கம்யூனிஸ்டுகளுக்கு தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஒருவகை சாதக நிலை. 

முதலாளித்துவ கூட்டு பேர அரசியல் கட்சிகளே இதில் தயக்கம் இல்லாமல் விடுபடவும் விலகவும் விரும்புகின்றனர்.

சூழ்நிலை ஆதாயங்கள் தயக்கங்களுடன் இந்த உறவுகளை பேணிக் கொள்கிறார்கள். 

பாட்டாளி வர்க்கம் இதை ஒரு படித்தான வாய்ப்பாக கருதி 

மாற்றாக தமிழகத்தை கவ்வி கொண்டிருக்கும் காவி கருப்பு கூட்டணி இருளை விலக்கி வைத்து, தோன்றி இருக்கும் புதிய வகை முதலாளித்துவ அரசு அரசியலுக்கு மாற்றாக 

கம்யூனிச அரசியலை முன்வைத்து களம் காண வேண்டும். 

சமூக உண்மைகளை வெளிப்படுத்துவதாலேயே அவர் ஆள்! இவர் ஆள்! எனும் பூச்சாண்டிக்கு அஞ்ச கூடாது.

மந்த புத்தி கொண்ட பாட்டாளி வர்க்க சொந்த புத்தி இல்லாத 

திராவிட சித்தாந்தவகை ஸ்டாக் லிஸ்ட்டுகள் கையில் மார்க்ஸ் சிக்கினால் கூட இப்படித்தான் முத்திரை குத்துவார்கள்.

" தபால் தந்தி ரயில்வே சாலைகள் போன்ற உருவாக்கத்தின் மூலம் ஆங்கிலேய அரசு ஒரு அறியா கருவியாக நில பிரபுத்துவ சமூக அமைப்பில் உறைந்து கிடந்த இந்திய சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் நவீன யுகத்தில் இழுத்துவிட்டு இருக்கிறது!"

என்று இந்தியாவைப் பற்றிய மார்க்சின் ஒரு பகுதியை மட்டும் பிடித்துக் கொண்டு பாருங்க!

 பாருங்க! மார்க்ஸ் பிரிட்டிஷ்காரன் ஆளு! 

என்று கூட பினாத்துவார்கள். 

ஒரு பழைய அமுக்கு பிசாசு இறங்கியிருக்கும் வேளையில் 

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்தையும் இயக்கத்தையும் சுயேச்சை தன்மையோடு வளர்ப்பது என்பதுதான் உருவாகி இருக்கும் சூழலின் முழுமையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். 

      - துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=1010238995016230&id=100080904177819&rdid=vla3lehw43ilfqTT

=============================================

32
எந்த அரசு வந்தாலும் சரி கல்வி வணிகமயத்தை தடுக்கப்போவதில்லை

நல்ல வேளை

வெங்கட்ரமணன் என்பவர் உணவுத்துறைக்கு போடப்பட்டு விட்டார். இல்லையேல் குலக்கல்வி கொழுந்துவிட்டு எரிந்திருக்கும்! அப்படி ஃபயர் விட்டுக் கொண்டிருந்தார்கள் சமூக நீதி காவலர்கள்.

உண்மையில் சூத்திரர்கள்( இங்கே பார்ப்பனர் அல்லாதவர் எல்லாம் சூத்திரர் என்பதே விவாதத்துக்கு உரியது)  என்பவர்களை படிக்க விடாமல் செய்தது பார்ப்பான் மட்டுமல்ல பார்ப்பனருக்கு அடுத்த நிலையில் இருந்த பார்ப்பனர் அல்லாத மேல் அடுக்கு மேட்டுக்குடி சாதிகளும் தான் சேர்ந்து கொண்டு அநியாயம் செய்தது. 

கீழத் தஞ்சை கம்யூனிஸ்டுகளின் விவசாயப் போராட்ட களங்கள் எங்கும் பண்ணை கூலிகளின் வீட்டுப் பிள்ளைகளை படிக்க விடாமல் சாணி பொறுக்க செய்த அநியாயங்களை பார்க்க முடியும். 

அப்படி யாராவது தப்பித்து ஓடி வெளியூருக்கு போனாலும் பட்டாளத்துக்கு போய் வந்தாலும் கூட சாதிய ஒடுக்கு முறையில் இருந்து அதாவது பண்ணையார்களாக இருந்த பார்ப்பனர் அல்லாத நாயுடு, ரெட்டி , மூப்பனார், இன்னும் முற்பட்ட சாதி ஆதிக்கம் தண்டித்தது. 

வர்க்க வர்ண சாதிஅமைப்பு முறையின் படிநிலை அடியாட்களாக பார்ப்பனர் அல்லாத மேட்டுக்குடி கும்பல் 

பிரிட்டிஷ் அதிகாரத்தில் எங்கும் நிறைந்திருந்த பார்ப்பன கும்பலுக்கு போட்டியாக அதிகாரத்தை பங்கீடு செய்ய தங்களையும் படிக்க விடாமல் செய்ததாக சூத்திரப் பிரிவில் சேர்ந்து கொண்டு கதை கட்டியது. 

எந்த மூப்பனாரையும் நாயுடுவையும் இன்ன பிற பண்ணை வெண்ணைகளையும் யாரும் படிக்க விடாமல் தடுக்கவில்லை. 

தானாக சொத்து திமிரில் என்னடா படிப்பு என்று திரிந்தவர்கள் பலர். தனது சொத்துடமை காரணமாகவே வீட்டுக்கு வாத்தியாரை வரவழைத்து படித்த பிரிவுகளும் உண்டு. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டு முயற்சியால் 

மருத்துவக் கல்வி வரை பயில முடிந்தது.

எனக்கு இருக்கிற சொத்துக்கு எதுக்குடா படிப்பு என "ராசுகுட்டி"  போல ரவுசு விட்ட கும்பல் பலவும் உண்டு.

கல்வியில் தனியார்மயம் வந்த பிறகு உலகமயத்தோடு இணைந்த பிறகு எந்த சாதிக்காரன் எந்தத் துறைக்கு வந்தாலும் அரசு என்ற முறையில் அதன் இயல்புப்படி தான் நடைமுறைப்படுத்த முடியும். 

ஒரு தலித் காவல் அதிகாரியாக வந்தாலும் போராடும் வர்க்க தலித்தை போட்டு மிதிக்கத்தான் செய்வான். 

ஏனென்றால் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக அவர் மாறி விடுகிறார். 

இருந்தாலும் இந்தியாவுக்கே உரிய சாதி அமைப்புபடி பல தலைமுறைகளாக நம்மை படிக்க விடாத பார்ப்பனியத்தை பழிவாங்கத்தான் பல சமூக நீதி காவலர்கள் நடத்தும் தனியார் கொள்ளை கல்விக்கூடங்களில்  பார்ப்பன மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு கட்டணத்தால் பழிவாங்குகிறார்கள் போலும். 

அப்படியானால் பார்ப்பனியத்தால் படிக்க விடப்படாத சூத்திரர்களுக்கு இலவசக் கல்வி உண்டா? என்று கேட்டு விடாதீர்கள்.

 சனாதனம்தான் தப்பு 

தனியார்மயம் டாப்பு!

எந்த அரசு வந்தாலும் சரி 

கல்வி வணிகமயத்தை தடுக்கப்போவதில்லை. 

காசு உள்ளவனுக்கு கல்வி எனும் நாட்டில் வழக்கம்போல வர்க்க ரீதியாக கல்வி உரிமை மறுக்கப்படும் மக்கள் அதை போராடி பெற வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார்கள்.

இதை முதலாளித்து ஆட்சியின் தனிநபர்கள் முழுவதுமாக மாற்றி விடுவார்கள் என்று நம்புவதுதான் பார்ப்பனர் வழிப்பட்ட கதை.

     - துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=1011511044889025&id=100080904177819&post_id=100080904177819_1011511044889025&rdid=gTkS7m2qZqS22uQM

==================================================

33
ஏன் இப்போது ஒன்றிய அரசு சைவப் புலியாக மாறிவிட்டதா

திமுகவை இப்போது விமர்சிக்க கூடாது தோழர்! பாசிச எதிர்ப்பு பலவீனம் ஆகிவிடும்! என்று சொல்லிக் கொண்டே எதற்கெடுத்தாலும் ஒன்றிய அரசே! என்று பேசிக் கொண்டிருந்தவர்கள். 

இப்போது ஒரே நாளில் த.வெ.க அரசே என முழங்க ஆரம்பித்து விட்டார்கள். ஏன் இப்போது ஒன்றிய அரசு சைவப் புலியாக மாறிவிட்டதா? பாசிச பாஜக தானே மாநிலத்தின் மீது ஆதிக்கமும் புறக்கணிப்பும் செய்கிறது என்றீர்கள்! இப்போதும் முதன்மை இலக்கைதானே நீங்கள் பேச வேண்டும்?

பேசமாட்டார்கள்! 

அது மட்டுமல்ல ஆட்சி அமைக்க அண்டர் கிரவுண்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டு வைத்து அது அம்பலமானாலும் கூட 

வாயைத் திறக்காமல் கடந்து போவார்கள்.

காரணம் அரசு என்பதைப் பற்றிய அதன் வர்க்கத் தன்மையிலிருந்து அணுகுவதற்கு பதிலாக எப்போதும் அதிமுக திமுக என இருமுனை அரசியல் செய்து பழக்கப்பட்ட இவர்களுக்கு

இடையில் புகுந்து கொண்டு 

திராவிட ஆரிய வர்க்க குழுக்களுக்குள் வாழ்வதே 

வசதியாகி போனது. 

இதை முற்போக்கு அரசியலாக நிலை நிறுத்தியவர்கள் இனி த.வெ.க எதிர் திமுக எனும் தேர்தல் அரசியலின் மரபுப்படிதான் மக்கள் அரசியலையும் கட்டமைக்க விரும்புகிறார்கள்.

ஆனால் பாட்டாளி வர்க்க அரசியல் இயக்கத்திற்கு தேவை 

முதலாளி வர்க்கத்தின் எடுபிடிகளாக பணியாற்றுவதில் இடம்பெறும் திமுகவாக இருந்தாலும் சரி 

த.வெ.கவாக இருந்தாலும் சரி 

இவர்களுக்கு மாற்றாக கம்யூனிச அரசியலை அரங்கத்தில் வைப்பதுதான் சரியான நிலைப்பாடு.

பதிலாக ஒவ்வொரு முறையும் நிலவும் அரசை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ ஏதாவது ஒரு தரப்புக்கு வால் பிடித்து செல்வது இடதுசாரி அரசியல் அல்ல. 

இன்னும் சொல்லப்போனால் முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது மட்டும் போதாது 

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு குறுக்கீடு செய்வது அதற்கு எது பயன் என்பதையும் அறிய வேண்டும். 

அந்த வகையில் திராவிடமாடல் சமூக நீதி என்று மூடி மறைக்கப்பட்ட முதலாளித்து அமுக்கு பிசாசு வழக்கொழிந்ததை நினைத்து வருந்துவது முற்போக்காளர்களுக்கு தேவையற்றது.  

முதலாளித்துவம் ஏவும் புதிய பேய்களை எதிர்கொள்ள நமக்கு எந்த தயக்கமும் தேவையில்லை.

 இப்போதும் நாம் உழைக்கின்ற வர்க்கம் குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான அனைத்து போக்குகளையும் முறியடிப்பதுடன் தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்கான மாற்று ஆற்றலாக கம்யூனிச அரசியலை முன்னிறுத்தி வேலை செய்வதுதான் தேவை.

மீண்டும் திமுக உடன் தேன் நிலவுக்கு ஏங்கும் பாழ் சிந்தனை கெடுக!

       - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1012028594837270/?rdid=CAzdaLeoglvISZzh

=========================================================

34
தலித்துகளுக்கு அதிகாரம்’ என்ற அஸ்திரத்தை தேவைப்பட்டால் பாஜகவே பயன்படுத்தும்..! 

எந்தத் தலைவர் சனாதனத்தோடு இடையறாது சமர் புரிபவராக தன்னை அடையாளப்படுத்தி வந்தாரோ, அவரை வைத்தே தன் அரசியல் சித்து விளையாட்டை நிகழ்த்தத் துடிக்கும்..!

என்பதெல்லாம் விஜய் முதல்வராவதை தடுப்பதற்கு செய்யப்பட்ட வினோத முயற்சிகளில் வெளிப்பட்டுள்ளது;

அரசியல் அதிகாரத்தின் முதன்மை நோக்கமாக பொருளாதார ஆதாயத்தையே பிரதானமாகக் கருதும் கட்சிகள், அதன் தலைவர்கள் அத்தனை பேரும் ஒரே ரகம் தான்! 

புத்தம் புதிதாக ஒருவர் முளைத்து வருகிறார். அவர் நம் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறார் எனும் போது, இவர்கள் அனைவரும் தாங்கள் பாசாங்குத்தனமாக வெளிப்படுத்திய பகை அரசியலை மூட்டை கட்டி வைத்து ஒன்றுபடத் தயார் ஆனது என்பது சுலபத்தில் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல.

கொள்கை, சித்தாந்தம், உன்னத குறிக்கோள் இவற்றை வைத்து பின்னப்பட்டு உணர்ச்சியும், எழுச்சியும் கொள்ள வைக்கும் இந்தக் கட்சிகள் சந்தர்ப்பவாத சகதியில் எப்படி மூழ்கி இன்று அம்பலப்பட்டுள்ளார்கள் என்பது பரவலாக வெளிப்பட்டுவிட்டது. இது ஏதோ நான் மட்டும் வெளிப்படுத்தப் போகிற ரகசியமும் அல்ல.

பாஜக ஒரு பாசிச கட்சி என்ற கருத்தாக்கத்தை வைத்து தான் திமுக தன் ஆதரவு தளத்தை உறுதிபடுத்தி இந்த அளவுக்கேனும் வாக்குகள் பெற்றது. அப்படி இருந்தும் பாஜகவின் யோசனைப்படி எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க திமுக தலைமை முயன்றது இடதுசாரிகளின் ஏற்பின்மையால் தடைபட்டது.

இதனால் இன்னொரு மாற்று யோசனையை பாஜக சொல்கிறது.

”சரி, அப்படி என்றால், திருமாவளவனை முதல்வராக முன் மொழியுங்கள். ஓரு தலித் முதல்வராவதை எப்படி இடதுசாரிகள் ஏற்காமல் போக முடியும்?  இதற்கு அன்புமணியையும், தினகரனையும் ஒத்துக் கொள்ள வைத்துவிட்டோம் பாஜகவின் ஒரு எம்.எல்.ஏவும் ஆதரிப்பார்…’’என்கிறார்கள்.

உடனே, திமுக தலைமை விசிக தலைவர் திருமாவளவனுக்கு தகவல் தருகிறது. இதையடுத்து தான் வன்னியரசு ‘திருமா அவர்களுக்கு முதல்வராகும் தகுதி உண்டு’ ‘இனி வரும் காலம் திருமா காலம்’ என்றெல்லாம் டிவிட் போடுகிறார். விசிகவில் ஒரு பிரிவினர் திருமா முதல்வராகிறார் என உற்சாக பெருக்கோடு விசிக அலுவலகத்தை சூழ்ந்தனர்.

ஆனால், இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராவோம் என ஆசைப்பட்டு சிவி சண்முகம் உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் தவிர்த்த – அதிமுக எம்.எல்.ஏக்களை – பாண்டிச்சேரியில் வைத்து காபந்து செய்து வந்தார். இந்த தகவலால் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைகிறார். ”அவர் முதல்வரென்றால் நான் அவருக்கு கீழே துணை முதல்வராக இருக்க முடியாது. அவரை துணை முதல்வராக வேண்டுமானால், நான் ஏற்பேன்” என்கிறார்.

அப்போது தான் கட்சிக்குள் கருத்து வேறுபாடு முளைக்கிறது. ”திருமா முதல்வரானால் அந்த அமைச்சரவையில் அதிமுகவினர் 20 அல்லது 25 பேர் அமைச்சராகலாம். இன்னும் ஐந்து வருடம் அதிகாரம் இல்லாமல் எங்களால் தேவிடு காக்க முடியாது” என எடப்பாடிக்கு முன்னாள் அமைச்சர்கள் நெருக்குதல் தருகிறார்கள். ( இந்த அம்சம் வி.சி.சண்முகம் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்பட்டது)

இதற்கிடையே தவெகவின் வேண்டுகோளை பரிசீலித்து இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து விடுகின்றனர். அடுத்த நாள் விஜய் இடதுசாரி கட்சிகளின் அலுவலகம் இரண்டிற்கும் சென்று நன்றி தெரிவித்த நிலையில் விசிக தலைவரை சந்திக்கலாமா? என தவெக தரப்பில் கேட்கப்பட்ட போது  ‘’நாங்கள் இன்னும் அதரவு நிலைபாடு எடுக்கவில்லை’’ என்கிறார்கள்.

திருமாவளவன் தான் முதல்வராவதற்கு இத்தனை முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதைக் கருதி மெளனிகிறார். 

முன்னதாக இடதுசாரிகள் முடிவெடுத்து ஆதரவு கடிதம் தந்த போது ‘தானும் இடதுசாரிகள் வழியில் தான் முடிவெடுப்பேன்’ என்றவர் திமுகவின் அழுத்தத்தால் தாமதிக்கிறார். தான் முதல்வர் ஆக முன் மொழியப்பட்டு இருப்பது தொடர்பாக கட்சியில் உள்ள தன்னுடைய மிக நெருங்கிய சகாக்களோடு அதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கிறார். இதனால்  முடிவெடுக்க முடியாமல் இரு நாட்கள் நகர்ந்தன.

இதற்கிடையே  விஜய் கம்யூனிஸ்ட் ஆதரவை பெற்றதைத் தொடர்ந்து கவர்னரை மீண்டும், மீண்டும் பார்த்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் வைத்தது ஆகியவற்றில் பின்னடைவை சந்தித்து வந்தார்.

இதனால், மக்களிடையே விவாதங்கள் எழுந்தன;

”விஜய்யின் பதவி ஏற்பு தாமதமாவதற்கு விசிகவே காரணம்”

”திருமா ஏன் தடுமாறுகிறார்?”

”அவருக்கு என்ன அரசியல் அழுத்தங்கள்?”

போன்ற குற்றசாட்டுகளும், கேள்விகளும் பொதுத் தளத்தில் வலுப்பட்டன…!

மீண்டும், மீண்டும் திமுகவும், பாஜகவும் தந்த அழுத்தத்தின் காரணமாக இறுதியில் பழனிச்சாமி திருமாவளவன் முதல்வராவதை ஒத்துக் கொள்கிறார்.

எனவே, திருமாவளவனை அழைத்து திமுகவின் தலைமை குடும்பம் பேசுகிறது. அழுத்தம் தருகிறது, மன்றாடுகிறது.

இந்த நிலையில் இடதுசாரிகள் விஜய்க்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதும், விஜய் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு வந்து நன்றி தெரிவித்த பிறகான ஒரு மாறிய சூழலும் கம்யூனிஸ்ட்களுக்கு திருமாவை ஆதரிப்பதில் தர்மசங்கடத்தை தரும். திருமாவளவன் முதல்வராவது கம்யூனிஸ்ட்களுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் ஆதரவில் அவர் முதல்வராக்கப்படுவதை அவர்கள் எப்படி ஏற்பார்கள்?

திருமாவளவனை முதல்வராக்கினால் அதிமுக அமைச்சர் பட்டாளத்துடன் கூடிய ஒரு அமைச்சரவையை அவர் கட்டுப்படுத்த முடியுமா? இங்கே எடப்பாடி பழனிசாமி என்ற தனி நபர் மட்டுமே விடுபட்டுள்ளார். மற்றபடி அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பாஜகவிற்கு கட்டுப்பட்டவர்களே.

இந்தச் சூழலில் திருமாவளவனை அதிமுக, திமுக, பாஜக மூன்று பெரிய கட்சிகளும் பின்னிருந்து இயக்கும். இதில் அவர் சுதந்திரமாக செயல்படவோ, முடிவெடுக்கவோ முடியாது. அவர் ஒரு பொம்மை முதல்வராகவே இருக்க முடியும். 

விஜய் முதல்வராவதை தடுக்க திருமாவளவனை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது என்பதைக் கடந்து ஒரு தலித் தலைவரை முதல்வராக்கி பெருமைப் படுத்த வேண்டும், சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்தியல் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தக் கட்சிக்கும் கிடையாது.

மேலும் வெறும் இரண்டு எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சியில் இருந்து ஒருவர் முதல்வராவதை மக்கள் ஏற்பார்களா? திருமாவளவனை முதல்வராக முன் நிறுத்தி இந்த தேர்தல் அணுகப்படவில்லை. அவரே எம்.எல்.ஏவாக நிற்க ஆசைப்பட்டத்தைக் கூட திமுக தலைமை அனுமதிக்கவில்லை. தடுத்து விட்டது. ஆனால், தற்போது ஆதிக்க சக்திகளின் அபிலாஷைகளுக்கு அவர் இரையாக்கப்படுவதாகவே இதனை கம்யூனிஸ்ட்கள் அணுகுவார்கள் என்பதும் விசிகவில் விவாதிக்கப்பட்டது.

108 இடங்களை வென்ற விஜய் முதல்வராவதை தடுக்க திருமாவை ஒரு கருவியாக்கினால் இதன் மூலம் மக்களிடையே உருவாகும் கோபம், கொந்தளிப்பை எல்லாம் விசிகவும், திருமாவும் தானே எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், பழங்குடியினர் உள்ளிட்ட 28 நபர்களை விஜய் எம்.எல்.ஏக்களாக்கி உள்ளார். இதில் நால்வர் பொதுத் தொகுதியில் வென்றுள்ளனர். ஆக, தலித் மக்களின் பேராதரவு இயல்பிலேயே விஜய்க்கு உள்ளது. அதே போல 13 சிறுபான்மையினர் தவெகவில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த நிலையில் தன்னை விஜய்க்கு எதிராக நிறுத்தி ‘பொலிடிகல் கேம்’ செய்தால் மக்களில் கணிசமானோர் தன் மீது அதிருப்தி அடைவார்கள். இது விடுதலை சிறுத்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும். இவர்களின் அரசியல் சூதாட்டத்திற்கு நாம் பலியாகக் கூடாது என திருமாவளவன் சுதாரித்துக் கொண்டார். 

அதன் பிறகு அவர் தாமதிக்காமல் ஆதவ் அர்ஜுனாவை அழைத்து தவெக ஆட்சி அமைப்பதை ஆதரித்து கடிதம் தந்து விட்டார். இதன் மூலம் தனக்கு நேரவிருந்த ஒரு பேராபத்தையும், அவப்பெயரையும் தடுத்து விட்டார்.

இதன் பிறகு விஜய் மரியாதை நிமித்தமாக விசிக அலுவலகம் வந்து திருமாவளவனை சந்தித்து பேசியது அந்தக் கட்சித் தொண்டர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நம் தலைவர் ஆதரவுடன் விஜய் முதல்வர் ஆக்கப்பட்டார் என்ற பெருமித உணர்வும், சந்தோஷமும் தலித் மக்களிடையே கரைபுரண்டு ஓடியதோடு, திருமாவளவனின் இமேஜும் உயர்ந்தது.

சாவித்திரி கண்ணன், ஆசிரியர், அறம் இணைய இதழ்

https://www.facebook.com/share/p/18Y4YJYpCF/

================================

35

கட்டமைக்கப்பட்ட மாய பிம்பங்கள் நொறுங்குகின்றன!

'கொத்தடிமை கூட்டம் எது?' என்பதில் தற்போது தமிழக மக்களுக்கு புதிய புரிதல் கிடைத்துள்ளது.

அந்தக் கட்சியைத் தான் கொத்தடிமைக் கட்சி என்று அம்பலப்படுத்தினார்கள்!

ஆனால், அந்தக் கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் திமுகவுடன் கைக் கோர்க்கத் துடித்த தங்கள் கட்சித் தலைமைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை துணிச்சலாக பொது வெளியில் சொல்லி உள்ளனர்.

''எந்த திமுகவை நாங்கள் எதிர்த்தோமோ, அந்த திமுகவினுடைய ஆதரவோடு என்னை முதலமைச்சராக தேர்வு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னபோது, பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் இரண்டு, மூன்று தலைமுறையாக திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கிறோம். அப்படிப்பட்ட திமுகவின் தயவில் ஆட்சி அதிகாரம் பெறுவதை எதிர்த்தோம். அப்படி ஒரு முடிவு எடுத்தால் அதிமுகவே அழிந்துவிடும் என்றோம்…'' என்றதாக விசி.சண்முகம் – வேலுமணி அணியினர் தெரிவித்துள்ளனர்.

'கட்சித் தலைமை பாஜக அறிவுரையால் திமுகவுன் கைகோர்க்க நிர்பந்தித்த காரணத்தால், பாஜகவுடனான தேர்தல் கூட்டணியை நாங்கள் முறித்துக் கொள்கிறோம்' என்ற நிலைபட்டுக்கும் அதிமுகவின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

ஆக, அதிமுகவில் சுயமரியாதைக்காரர்கள் உள்ளனர். 

அவர்கள் தங்கள் கட்சித் தலைமை தவறான முடிவெடுத்தால் தட்டிக் கேட்பார்கள். 

கலகக் குரலை வெளிப்படுத்துவார்கள் என்பது நிருபணமாகியுள்ளது.

'சமூகநீதி' என்றும், 'திராவிட மாடல்' என்றும், ''பாஜகவை எதிர்ப்பதில் தாங்கள் தான் சாம்பியன்'' என்றும் சொல்லி வந்த திரு ஸ்டாலின் அவர்களிடம் திமுகவுக்குள் இப்படிப் பேசுவதற்கு ஒருவர் கூட இல்லாத நிலைமை ஆச்சரியமளிக்கிறது. 

இந்த அளவுக்கு திமுகவில் கொள்கையாளர்களே இல்லாமல் போய்விட்டார்களா? என்று ஆச்சரியமாக இருக்கிறது....!

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ”நான் எந்த முடிவு எடுத்தாலும், நீங்க எல்லாம் கட்டுபட்டு நடக்கனும்.. வர்ற 10-ந் தேதி வரைக்கும் சென்னையில் தான் இருக்கனும்” அவசரகால முடிவுகளை கட்சி தலைமை எடுக்கும் போது அதனை அங்கீகரிக்க வேண்டும்…’’ என்று ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு போட்ட போது கூட யாரும் எதிர்த்தக தகவல்கள் கசியவில்லை.

“நிலையான ஆட்சி அமைய, அவசரமான எந்த முடிவையும் எடுக்க” ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி, திமுகவின் உயர் நிலை கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக சூசமாகச் சொல்லப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பில், ''அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் நிலையை தலைவர் எடுத்தால் அதற்கு எம்.எல்.ஏக்கள் கட்டுப்பாடுவார்கள்'' என்றார் டி.கே.எஸ் இளங்கோவன்.

''பாஜகவின் முகமுடியோடு வரும் அதிமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.'' ''கொத்தடிமைத் தலைவர் பழனிச்சாமி'' என்று கூறி அவரது எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்து கொண்டு அவரை முதல்வராக்க எப்படி துணிந்தீர்கள்?'' எனக் கேட்கும் தைரியம் திமுகவில் யாருக்கும் இல்லாமல் போய்விடுமா? என்ன?

இந்தக் கேள்வி எழாவிட்டால் திமுகவை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்வது என்பதே இயலாததாகிவிடும்.

ஏனென்றால், அடிப்படை சித்தாந்தத்திற்கே எதிராக தலைமை செயல்பட்டாலும் கூட, அந்தக் கட்சியில் எதிர்ப்புக் குரல் எழாமல் மயான அமைதி தான் நிலவும் என்றால், அந்தக் கட்சியின் அழிவு குறித்து கூட அங்கு அக்கறை காட்ட யாருமில்லை என்று தான் பொருள்.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/share/p/18UhkNvpJV/

=================================

36

அமைச்சர் பிரபுவும் கனிமவளத்துறையும்

அமைச்சர் பிரபுவுக்கு இயற்கை மற்றும் கனிம வளங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம்.

சுகாதாரத்துறை என்று பரவலான பேச்சு இருந்தது. ஆனால் மிகவும் முக்கியமான கனிமவளத் துறை வழங்கப்பட்டுள்ளது.

மூன்று தகவல்களைச் சொல்கிறேன்.

1. விஜய் வெற்றி பெறவும் இரண்டு கார்ப்பரேட் ஹவுசுகளிடமிருந்து வெளிப்படையாக வாழ்த்துகள் வந்தது. ஒன்று Zoho வேம்புவிடம் இருந்து வந்தது. இன்னொன்று வேதாந்தா அனில் அகர்வால்.

2. பெரும் சுரங்க நிறுவனமான வேதாந்தா  நிறுவனத்தின் சுரங்கத் தொழில் இந்தியாவில் ஒடிசாவிலும் அருகில் சட்டீஸ்கரிலும் நடைபெறுகிறது.

3. அமைச்சர் பிரபுவின் மனைவி ஒடிசாவில் அரசியல் மற்றும் அதிகாரமட்டத்தில் செல்வாக்குடைய  குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அறிய வருகிறது.

புள்ளிகளை இணைத்துப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

சு.பா. திருப்பத்தூர்

https://www.facebook.com/share/1CCZfCYmBM/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு