வணிகமய அரசியலும் வாங்கும் கடன்களால் வளரும் ஊழல்களும்!

அறம் இணைய இதழ்

வணிகமய அரசியலும் வாங்கும் கடன்களால் வளரும் ஊழல்களும்!

உலக வங்கிக் கடன், ஐ.எம்.எப் ஜப்பான் அரசு (JICA) தரும் கடன் என வெளிநாட்டு  நிறுவனங்கள் நமக்குத் தரும் கடன்கள் நம் வளர்ச்சிக்கானது என பொதுபுத்தியில் கட்டமைக்கப்படுகிறது. ஆம், அது யாருக்கான வளர்ச்சி? அது எப்படி இந்த நாட்டில் ஊழலை ஊக்குவிக்கிறது? அதில் அரசியல்வாதிகள் எப்படி மறைமுக ஆதாயம் அடைகிறார்கள்..? ஒரு அலசல்;

தமிழகத்தின் கடன் சுமை ₹10 லட்சம் கோடியைக் கடந்து நிற்கிறது இந்திய அரசின் கடன் சுமார் 200 லட்சம் கோடிகளை தொட்டு நிற்கிறது. இந்தச் சூழலில் அதன் வேர் முதல் நுனி வரை நாம் ஆழமாக அலச வேண்டிய தருணம் இது. இன்று அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களாக மட்டும் இல்லாமல், தாங்களே ஒரு மறைமுகத் தொழில் முனைவோராகவும் (Shadow Entrepreneurs) உருவெடுத்திருக்கிறார்கள். அரசியல் மற்றும் வணிகம் ஆகிய இரண்டு நிலைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒரு பிரம்மாண்டமான வணிகக் கட்டமைப்பாக மாறியுள்ள இந்த ‘நிழல் கூட்டணி

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எப்படிச் சிதைக்கிறது என்பதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

​அரசியல் என்பது ஒரு சேவையாக இருந்த காலம் மாறி, அது இன்று மிக லாபகரமான ஒரு பெரு நிறுவன வணிகமாக (Corporate Business) உருமாறியிருக்கிறது. அரசு அறிவிக்கும் பல திட்டங்கள் மக்களின் உண்மையான தேவையை விட, நிதியைச் சுழற்றுவதை நோக்கமாகக் கொண்டே பெரும்பாலும் வடிவமைக்கப்படுகின்றன. ‘மக்கள் நலன்’ என்ற போர்வையில் அறிவிக்கப்படும் இத் திட்டங்களுக்காக அரசு வாங்கும் கடன்கள் அனைத்தும், மக்களின் வரிப் பணத்தைப் பிணையமாக வைத்தே பெறப்படுகின்றன.

​அரசாங்கம் ஜப்பான் (JICA), உலக வங்கி போன்றவற்றிடம் கடன் வாங்குவதை ஒரு சாதனையாகச் சொல்கிறது. ஆனால், இதில் உள்ள ‘நிபந்தனை அரசியல்’ மிகக் கொடியது.

இந்த கடன்கள் அமெரிக்க டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களில் தான் பெருமளவு பெறப்படுவதினாலும், வட்டி மற்றும் அசல் தொகையை, கடன் வாங்கிய வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பிலேயே திருப்பிச் செலுத்த வேண்டி இருப்பதாலும் திருப்பித் தரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால், வட்டி 1% ஆக இருந்தாலும், நாம் செலுத்தும் மொத்தத் தொகை அசலை விட 30% அதிகமாகும்.

இது ஒரு ‘நிழல் வட்டி’. மேலும், கடன் கொடுக்கும் நாடுகள், அந்தத் திட்டத்திற்குத் தேவையான இயந்திரங்களையும், தொழில் நுட்பத்தையும் எங்களிடமே வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் போது, நம் நாட்டுப் பணம் மீண்டும் அவர்களிடமே சென்று சேருகிறது.

பினாமி கலாச்சாரத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி;

​அரசு கடன் வாங்கித் திட்டங்களை அறிவித்தவுடன், அடுத்த கட்டமாக அந்தத் திட்டங்களுக்கான டெண்டர்கள் (ஒப்பந்தங்கள்) விடப்படுகின்றன. இங்கு தான் ‘பினாமி’ கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசியல்வாதிகள் நேரடியாகத் தொழில் செய்யச் சட்டரீதியான தடைகள் இருப்பதால், தங்களுக்கு நெருக்கமானவர்களை முன்னிறுத்தித் தொடங்கப்படும் பினாமி நிறுவனங்கள்,  அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தங்களைக் கைப்பற்றுகின்றன.

​இந்தச் சுழற்சியின் மிக நுட்பமான பகுதி ‘செங்குத்து ஒருங்கிணைப்பு’ (Vertical Integration) ஆகும். ஒரு திட்டத்தை எடுப்பதோடு, இவர்களது லாபம் நின்று விடுவதில்லை. அந்தத் திட்டத்திற்குத் தேவையான அடிப்படை மூலப் பொருட்களான மணல், ஜல்லி, செங்கல் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் என அனைத்தும் இந்த அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

அடகு வைக்கப்படும் இயற்கை வளங்கள்;

ஊழல் மலிந்த சூழலில் இது ஒரு மூடிய பொருளாதாரச் சுழற்சியாகவே (Closed Loop Economy) செயல்படுகிறது. இதற்குக் கைமாறாக நம் நாட்டின் இயற்கை வளங்கள் அடகு வைக்கப்படுகின்றன (Resource-Backed Loans). அரசாங்கத்திற்கு டாலர் தேவைப்படும் போது, நம் நாட்டின் முதல் தரமான (Grade-A) ஏற்றுமதிப் பொருட்கள் – அது கடல் உணவாகட்டும், அரிசியாகட்டும், நறுமணப் பொருட்களாகட்டும் – அனைத்தையும் ஏற்றுமதி செய்ய அரசு முனைப்புக் காட்டும். இதனால் உள்நாட்டுச் சந்தையில் தரம் குறைந்த இரண்டாம் ரகப் பொருட்களே மிஞ்சும்.

இதைத் தான் நாம் ‘உணவுப் பொருள் வட்டி’ என்கிறோம்.

வட்டியைக் கட்ட டாலர் வேண்டும் என்ற நெருக்கடியில், நம் ஆரோக்கியத்தையும் தரமான உணவையும் விட்டுக் கொடுப்பதன் மூலம் அந்தப் பசியை ஏற்றுமதி செய்கிறோம். தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலை போட ஆகும் செலவு, அண்டை மாநிலங்களைவிட அதிகமாக இருப்பதற்கு ‘உயர்த்தப்பட்ட மதிப்பீடு’ (Over-Invoicing) மற்றும் ‘ஆலோசனை கட்டணங்கள்’ (Consultancy Fees) தான் காரணம். ஒரு வேலையை ₹100 கோடியில் செய்ய முடியும் என்றால், அது ₹140 கோடியாக நிர்ணயிக்கப்படும்.

வெளிநாட்டு நிறுவனங்களை ஆலோசகர்களாக நியமித்து அவர்களுக்குத் தரப்படும் பல கோடி ரூபாய் கட்டணத்தில் ஒரு பகுதி மீண்டும் ‘கருப்புப் பணமாக’ அதிகார மையங்களுக்குத் திரும்புகிறது.

​இத்தகைய கூட்டணியால் கட்டுமானப் பணிகள் தரமற்றுப் போகின்றன. இது எதிர் காலத்தில் விபத்துகளுக்கு வழி வகுப்பதோடு, மீண்டும் மக்களின் வரிப் பணத்திலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரப்படும் அவல நிலைக்கு இட்டுச் செல்கிறது. மேலும், அரசியல் செல்வாக்கு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும் போது, நேர்மையான இளைஞர்களும் உண்மையான திறமையாளர்களும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இது நாட்டின் எதிர்காலத் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ1.50 லட்சம் கடன்:

​அரசாங்கம் தன் கடன் வட்டியை மக்கள் பாக்கெட்டில் இருந்து தான் எடுக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம், சொத்து வரி மற்றும் முத்திரைத் தாள் கட்டணம் ஆகியவற்றின் அண்மைக் கால உயர்வு என்பது, மக்கள் அரசாங்கத்தின் கடனுக்காகக் கட்டும் ‘அபராதம்’ தான். தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் இன்று சராசரியாக ₹1.20 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

​தமிழகத்தின் உற்பத்தித் திறன் அதிகம் என்பதால், ‘இவர்கள் எப்படியும் உழைத்துக் கட்டி விடுவார்கள்’ என்ற நம்பிக்கையில் தான் பன்னாட்டு நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. அதாவது, நம் இன்றைய உழைப்பு மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் நாளைய சுதந்திரமும் இங்கே அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது.

ஊழல் தவிர்த்த நிர்வாகமும், நம் வளங்களைக் காக்கும் மனதுறுதியும், முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்ட டிஜிட்டல் முறைகளும் மட்டுமே இந்தச் சுரண்டல் சுழற்சியை உடைப்பதற்கான தொடக்கப் புள்ளிகளாக அமையும். விழிப்புணர்வுடன் கேள்வி கேட்பது மட்டுமே நம் எதிர்காலத்தைக் காக்கும் ஒரே கேடயம்.

​கட்டுரையாளர்; சீனு ராமசாமி, திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், கவிஞர்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24676/foreign-currency-loan-affect-people/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு