கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடா இந்தியா?

அறம் இணைய இதழ்

கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடா இந்தியா?

சுற்றுச் சூழலை சூறையாடும் தொழிற்சாலைகளை துவங்கிய பிறகு, சுற்றுச் சூழல் அனுமதியை முன் தேதியிட்டு வழங்கலாமாம்!  மக்கள் நலன், இயற்கை வளம் ஆகியவற்றை விடவும், பெரு நிறுவனங்களின் வர்த்தக நலன்களே பெரிது என மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், ஒரு சேர முடிவெடுத்துள்ளதன் பின்னணியை  குறித்த ஒரு அலசல்;

நம் நாட்டில் ஏற்கனவே உள்ள சுற்றுச் சூழல் சட்டங்களை துச்சமாக மதித்து  நச்சுப் புகை மற்றும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளை வெளியிடும் தொழிற்சாலைகளையும், இயற்கையை அழித்து, நீர் நிலைகளை அபகரித்து, மக்கள் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் தொழிற்சாலைகளையும் எதிர்த்து எளிய மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கின்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும் இல்லாமலாக்கி புதிய சட்டம் ஒன்றை பிடிவாதமாகக் கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு. அதை உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு அங்கீகரித்துள்ளது.

முறையான சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் இருக்கும் போதே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிய நிலையில் அந்த கொஞ்ச, நஞ்ச பாதுகாப்பை தரும் சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, ”சுற்றுச் சூழல் அனுமதியெல்லாம் தேவையில்லை. தொழிற்சாலைகள் எதுவானாலும் சுற்றுச் சூழல் அனுமதிக்கு விண்ணப்பிக்காமலே ஆரம்பிக்கலாம். பிறகு சாவகாசமாக அனுமதி கோரி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தால் என்ன சுற்றுச் சூழல் பாதிப்பு என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஒரு அபராதம் விதித்துவிட்டு, சுற்றுச் சூழல் அனுமதியை முன் தேதியிட்டு அவர்களுக்கு தந்துவிடுங்கள்” என்கிறது புதிய சட்டம்.

மிக ஆபத்தான மீத்தேன் திட்டம்

எந்த அளவுக்கு கார்பரேட்களின் காதலர்களாகவும், பெரு முதலாளி நலன்களை பேணுபவர்களாகவும்  பாஜகவினர் இருக்கிறார்கள் என்றால், 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பெறுப்பேற்றவுடனே செய்த முதல் வேலை  டி.எஸ்.ஆர்.சுப்பரமணியன் தலைமையில் இந்திய சுற்றுச்சூழல் சட்டங்களை வர்த்தக வளர்ச்சிற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதிலேயே விளங்கிக் கொள்ளலாம். இந்த குழுவினரின் ஆபத்தான வழிகாட்டுதல்களை பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் எதிர்த்தனர்.

ஆயினும், அந்த குழுவினர் தந்த வழிகாட்டுதல்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  2017 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை வெளியிட்டது. அது பொதுத் திட்டங்களை தொடங்கிய பின் அந்தத் திட்டங்களுக்கு முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க வழிவகுத்தது. இதை சட்டமாக்க திட்டமிட்ட மத்திய பாஜக அரசு கொரோனா பாதிப்பு காலத்தில் புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ அதிரடியாக வெளியிட்டது.

சுற்றுச்சூழல் அனுமதியை முன்கூட்டியே பெறாமல் கட்டுமானம் தொடங்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை அபராதம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான சட்ட அங்கீகாரமே அது. இதை இந்தியா முழுமையும் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

கடும் எதிர்ப்புகள் உண்டானால், பொதுமக்கள் கருத்துக் கேட்பு என்பதை வெறும் சடங்காக நடத்தி சமரசத்திற்கு அவர்களை இணங்க வைக்க திட்டமிடுகின்றனர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை சர்வதேச நாடுகள் சேர்ந்து விவாதித்து உருவானவை. 1972-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு பிரகடனத்தின் அடிப்படையில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அடிப்படைக் கடமை (Fundamental Duty) என வலியுறுத்தப்பட்டது.  இதுவே நமது அன்றைய அரசாங்கம் 1976-ல் கொண்டு வரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம்  நடைமுறைக்கு வந்தது. இதற்கு பிறகு நடந்த போபால் பெருந்துயரத்திற்குப் பிறகு, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்  ஒன்று வலுவாக உருவாக்கப்பட்டு , அது 1986 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதை 2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மேலும் வலுப்படுத்தி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தாக்கல் செய்தது.

இதையெல்லாம் காலி பண்ணி, நாட்டை பெரு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்கும் முயற்சியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ. எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு, திட்டங்களை தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம் என்று கூறி, 2006 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கு எதிராக  கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு தடை விதித்தனர்.

இது சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொழிற்சாலைகள் கொண்டு வருவதை தடுத்ததோடு, ”திட்டங்களை தொடங்குவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம்” என உத்தரவிட்டது.

நேர்மையான அரசு என்றால், இந்த நியாயமான தீர்ப்புக்கு தலை வணங்கி இருக்க வேண்டும். ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய பாஜக அரசு மேல் முறையீடு செய்தது. அரசுக்கு ஆதரவாக பல பெரு நிறுவனங்களும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்தனர்.

இதையடுத்து தற்போது இதை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து புதுப் புது நியாயங்களை அரசுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் ஆதரவாக கண்டுபிடித்து, சுற்றுச் சூழல்கள் சூறையாடப்படுவதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிவிட்டது.

இந்த மூன்று நீதிபதிகளில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகிய இருவரும் கடந்த மே மாதம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெறுவதாக கூறியதோடு, இரு நீதிபதிகளால் வழங்கப்பட்ட  அந்தத் தீர்ப்பால், பல பொது திட்டங்களை இழக்க நேரிடும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

“மத்திய அரசின் 8,293 கோடி ரூபாய் மற்றும் மாநில அரசுகளின் 11,168 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் சுற்றுச் சூழல் அனுமதியின்மையால் முடிவு பெறாமல் உள்ளன. இவற்றில் ஒடிசா எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கர்நாடகா பசுமை விமான நிலையம் உள்ளிட்டவையும் அடங்கும்.  இந்த திட்டங்களை  தகர்ப்பது அல்லது நிறுத்தி வைப்பதன் மூலம் அரசு கருவூலத்திலிருந்து செலவிடப்பட்ட பணத்தை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு சமம். இது பொதுநலனுக்கு உகந்ததா? என்ற கேள்வியும் எழுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இயற்கை அழிவு மக்களின் உடல் நல பாதிப்பு மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஆகியவை புறந்தள்ளப்பட்டு, பேராசை நோக்கோடு செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணத்திற்கு பெரு மதிப்பை நீதி மன்றம் தருவது மிகவும் வருத்தமளிக்கிறது.

அதே சமயம் இந்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி உஜ்ஜல் புயான் மனசாட்சியுடன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார்!

சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்வதற்கு தகுதியானது. சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டுமானங்களை இடித்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்ற வாதங்களை ஏற்க முடியாது. அந்த தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட்டால் அதைவிட மாசு அதிகம் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன் தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதை சட்ட பூர்வமாக்குவது என்பது சுற்றுச்சூழல் சட்டத்துக்கு விரோதமானது. இது, நீடித்த வளர்ச்சிக்கான தேவை, சுற்றுச்சூழலை காப்பதற்கான முன்னெச்சரிக்கை கொள்கை ஆகியவற்றுக்கு முரணாக உள்ளது” என்று தெரிவித்தார். எனினும் மூன்றில் இரு நீதிபதிகள் பெரும்பான்மையாக கருதப்பட்டு, இந்த நீதிபதியின் கருத்து நிராகரிக்கப்பட்டுவிட்டது.

சுற்றுப்புறச் சூழல் விதிகள் பெரு நிறுனங்களுக்கு தேவையற்ற சுமையாகும். ஆபத்தான தொழிற்சாலைகளை துவங்கிய பிறகு முன் தேதியிட்டுத் திட்டங்களுக்கு அனுமதியளிக்கலாம் என்ற சட்டபூர்வமான சலுகை என்பது மக்கள் நலன்களின் மீதும், இயற்கை  வளங்களின் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு போராகும். மீத்தேன் திட்டம், பரந்தூர் விமான நிலையம், பசுமை வழிச்சாலை, கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குவாரிகள்..என இனி இயற்கை வளங்கள் சூறையாடப்படவுள்ளன. மக்கள் நலனை வெறும் மயிரைப் போல துச்சமாக நினைக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்து நிராயுதபாணியாக நிற்கும் மக்களை நீதிமன்றமாவது காப்பாற்றும் என்ற கடைசி நம்பிக்கையும் தற்போது பொய்த்துவிட்டது. இனி இந்தியாவை அந்த இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலைமைக்கு மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கொண்டு போய் விட்டன.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23303/environment-protection-act/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு