விஜய்யை வைத்து ஸ்டாலின் நிகழ்த்தும் அரசியல் விளையாட்டு!

அறம் இணைய இதழ்

விஜய்யை வைத்து ஸ்டாலின் நிகழ்த்தும் அரசியல் விளையாட்டு!

கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்களேன்..!

விஜய்க்கு ஏன் இவ்வளவு ‘அட்டென்சன்’ தர்றீங்க..!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைம்பாங்க.

அதைப் போல விஜய் சும்மா இருந்தாலும், மீது நாளும் பொழுதும் ஆளாளுக்கு பாய்ந்து, பாய்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து தாக்கித் தள்ளுகிறார்கள்…!

நடந்துவிட்டது ஒரு அசம்பாவிதம்!

அதில் இருந்து  தற்போது மீண்டாரா விஜய் …? என்பதே தெரியவில்லை. அநியாயத்துக்கு அரண்டு கிடக்கிறார். மூன்றாவது நாள் ஒரு வீடியோ போட்டதோட சரி. அதுக்கு பிறகு பேச்சு, மூச்சே இல்லை.

ஆனால், நாள் தோறும் என்று சொல்வதைவிட நாளும், பொழுதும் விஜய் தான் இங்கு பேசுபடு பொருளாக உள்ளார். இதற்கு உபயம் அதிகாரத்தில் இருப்பவர்களே..! அவங்க ஐ.டி விங்க் ஒரு பக்கம் ரெக்கை கட்டிப் பறக்குது. முக்கிய மெயின்ஸ்டீர்ம் மீடியாக்கள் கூட விஜய்யை வறுத்தெடுக்கின்றன. இது பத்தாது என்று எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அறுவுஜீவிகள் என அனுமார் வாள் நீளத்தை விட அதிகமான அளவில் கூட்டறிக்கை வெளியிட்டு விஜய்யை வெளுத்து வாங்குகிறார்கள்!

போதாக்குறைக்கு போலீஸ்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகள் வேறு விலாவாரியாக பேட்டி தந்து விஜய் மீது தான் தவறுள்ளது என ‘எஸ்டாபிளீஸ்மெண்ட்’ செய்கிறார்கள்.

திமுக கூட்டணிக் கட்சிகளோ.., தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி உறவை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக விஜய்யை விளாசித் தள்ளுகிறார்கள்.

இதுல திருமாவளவன் தான் ஸ்டாலினே வியக்கிறா மாதிரி பேசி அதிகமாக ஸ்கோர் பண்ணிட்டாருன்னு சொல்லலாம். ஒரு வகையில் ஸ்டாலினின் மனசாட்சியாக அவர் தன் விசுவாசத்தை காட்ட நினைத்தாரோ என்னவோ..?

இதுல நான் முற்றிலும் எதிபாக்காதவர் ஐயா வீரமணி. அவர் வயதுக்கும், அனுபவத்திற்கும் அவர் விஜய்யைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், ஏதோ ஒரு பெரிய எதிரியிடம் மோதுவதைப் போல உணர்ச்சிவசப்பட்டு பேசறார். பெரியாரைப் பற்றி சீமான் பேசிய போது கூட இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருப்பாரா? தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல  நீதிபதியே நிதானமின்றி இவ்வளவு நீட்டி முழக்கி விஜய்யை தாக்குகிறார். அவர் வகிக்கும் மிக உயர்ந்த பொறுப்புக்கு முன் விஜய் ஒன்னுமே இல்லை. வழக்கில் விசாரணையை நடத்தி சொல்லும் தீர்ப்பின் வாசகத்தில் நீதியை நிலை நாட்டி நீதிபதி பிரகாசிக்க வேண்டுமேயன்றி, வரம்பு மீறி கருத்துக்கள், அபிப்ராயங்களை அள்ளி வீசுவது அவரது மாண்புக்கு அழகல்ல.

விஜய்க்கு இளைய தலைமுறையின் மிகப் பெரிய ஆதரவு வட்டம் இருந்தாலும், இது வரைக்குமான விஜய் அரசியலை நான் அனுமானித்த வகையில் அவர் பொது வாழ்க்கைக்கான மனிதராக உருவாகலை. ஒரு தேர்தலுக்கு பிறகு, விஜய் அரசியலில் தொடர்வாரா? என்பதும் என்னை போன்றோருக்கு சந்தேகமாகவே உள்ளது.

அவர் ஒரு நிழல் ஹீரோ மட்டும் தானேயன்றி, நிஜ ஹீரோவல்ல. உண்மையில் நிஜ ஹீரோவாக இருந்திருந்தால், நடந்த அசம்பாவித சூழலை நன்கு கையாண்டு தன்னை நிரூபித்து இருப்பார்.

என்னை பொருத்த வரை விஜய் விசயத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போவது ஆட்சியாளர்களுக்கு நல்லது. அவரை அதிகமாக பேசுபடு பொருளாக்கி, பெரிய ஆளாக சித்தரித்து வளர்த்து விடாதீர்கள்..! நீங்கள் செய்வதனைத்தும் அவருக்கு அனுதாப அலையை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

நிகழ்வு நடந்த அன்று இரவே ஒரு  நபர் ஆணையத்தை அறிவித்து நீதிபதி அருணா ஜெகதீசனும் களத்தில் இறங்கிவிட்டார். அடுத்ததாக ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவையும் களத்தில் இறக்கி விட்டீர்கள். உங்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. உண்மைகள் வெளி வரும் வரை ஏன் பொறுமை காட்ட முடியவில்லை…?

கரூரில் நிகழ்வு நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் அஸ்ரா கர்க் ஐ.ஜி

எதையும் பேசவும் துணிவின்றி  மிக பலவீனமாக இருக்கும் ஒருவரை தொடர்ந்து கேரக்டர் அசாசினேஷன் செய்கிறீர்கள். அந்தக் கட்சியின் முதல் நிலைத் தலைவர்களே தலைமறைவாகி அஞ்சி அரசியல் நடத்தும் அவல நிலையில் தொடர்ந்து கடுமையான ஏவுகணைகள் வீசப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது..? தொடர்ந்து ஒரு தரப்பை விரட்டி, விரட்டி அடித்தால், அவர்களுக்கும் வேறு வழியின்றி துணிவு பெற்று கடும் எதிர் அரசியல் செய்யும் நிலைக்கு தயாராகிவிடுவார்கள்!

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து சட்டைக்குள் போட்ட கதையாகிவிடும்.

இப்படித்தான் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் என்ற ஒரு கடிதத்தை ஜெயலலிதா எழுதி பத்திரிக்கைகளுக்கு தந்தார். அதை மோப்பம் பிடித்து நடராஜன் அந்த கடிதத்தை வழியிலேயே கொண்டு சென்றவரிடமிருந்து கைப்பற்றி ரகசியமாக ஒளித்து வைத்தார். இதை உளவுத் துறை மூலம் கேள்விப்பட்ட கலைஞர் காவல்துறையை அனுப்பி, அதை நடராஜன் வீட்டில் கைப்பற்றி ஊடகங்களில் வெளிப்படுத்தினார். விளைவு, எதிர்பாராத வகையில் மீண்டும் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டது.

அதைப் போலத் தான் விஜய் விவகாரத்தில் பதற்றப்பட்டு தன்னை சுற்றிலும் உள்ளவர்களை ‘அலர்ட்’ செய்து, ‘ஓவர் ரியாக்‌ஷன்’ செய்ய வைக்கிறார், ஸ்டாலின். தான் எதுவும் பேசாமல் கமுக்கமாக இருந்து கொண்டு, இப்படி சுற்றிலும் உள்ளவர்களை வைத்து விளையாடும் அரசியல் விளையாட்டைத் தான், தொடக்கம் முதல் முதலமைச்சர் ஸ்டாலின், தன் அதிகார ஹோதாவில் நிகழ்த்திக் கொண்டுள்ளார்.

நிகழ்வதை அதன் போக்கில் இயல்பாக அணுகாமல், வலிந்து விஜய்யை பலவீனப்படுத்தும் ‘நேரசனை செட்’ செய்து கொண்டே இருந்தால்.., அது இயற்கையின் விதிப்படி  எதிர்வினையாற்றிவிடும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/22967/stalin-politics-about-vijay/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு