காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசமில்லை!

அறம் இணைய இதழ்

காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசமில்லை!

சித்தராமையா ஆட்சியிலும் ஊழல்கள் தொடர்கின்றன. தொழிலாளர் விரோத சட்டம் வருகிறது. ’தொழிற்சங்கத்தில் வெளியாட்கள் தலைவராகக் கூடாது’ என்பதை பிரச்சினை ஆக்காமல் தீர்வு காணலாம்.. ‘அறிவியல் பூர்வமான குறைந்த பட்ச ஊதியம்’ என்பது இது தான்… – கர்நாடக ஏஐடியுசி செயலாளர் விஜயபாஸ்கர் AD நேர்காணல்;

ஒரு கருத்தரங்கில்  பங்கேற்க மதுரை வந்திருந்தார் கர்நாடக ஏஐடியுசி செயலாளர் விஜயபாஸ்கர். கர்நாடக அரசு, சித்தராமையா, பாஜகவின் பழிவாங்கும் போக்கு  போன்றவை குறித்து இந்த நேர்காணலில் பேசுகிறார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

சித்தராமையா மனைவிக்கு அவரது சகோதரர் 3.16 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக தந்தார். அந்த நிலத்தை மைசூர் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் எடுத்துக்கொண்டது. அவரிடமிருந்து எடுத்த நிலத்திற்கு ஈடாக சில வீட்டுமனைகள் வழங்கியது. இது நடந்த போது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக பாஜக நபர்தான் இருந்தார். முதலமைச்சராக பாஜகவின் பசவராஜ் பொம்மை இருந்தார்.

இவையெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு  நடந்தவை. அப்போது அவர் பதவியிலேயே இல்லை. காலையில் கொடுத்த புகாருக்கு,  சித்தராமையாவிடம் மாலையில் விளக்கம் கேட்டு அடுத்த 15 நாட்களில் வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி அளிக்கிறார்.

இதைப்பற்றி உயர்நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை. குமாரசாமி மீது விசாரணை முடிந்து, குற்றச்சாட்டு பதிவாகியும், இதுவரை வழக்குக் தொடுக்க  ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. சுரங்க வியாபாரி ஜனார்தன் ரெட்டி வழக்கிற்கு அனுமதி அளிக்கவில்லை. முட்டையில்  பல கோடி ஊழல் செய்த, பாஜக அமைச்சர்  சசிகலா ஜெல்லி மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. பாஜக,  சித்தராமையாவை குறி வைக்கிறது. அவரை நீக்கிவிட்டால் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று நம்புகிறது.

இதைப்பற்றியெல்லாம் ஊடகங்கள் எழுதுவதில்லையா?

முதலமைச்சர் சித்தராமையா பதவிவிலக வேண்டும் என்று மைசூர்வரை பாஜக பாதயாத்திரை நடத்தியது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைப்பற்றியே பேசுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்புக் கொடுத்தால் தான் அமைச்சரையே சந்திக்க முடிகிறது.  மாநில காங்கிரஸ் அரசாங்கத்தை செயல்பட  பாஜக அனுமதிக்கவில்லை. பாஜக அரசில் ஓராண்டாக அங்கன்வாடி மையங்களுக்கு கொடுத்த முட்டைகளுக்கு பணம் தரவில்லை. அங்கன்வாடி மையங்களுக்கு அதன் பொறுப்பாளர்கள்  வாடகையை  தரவில்லை. இதையெல்லாம் ஊடகங்கள் பேசுவதில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு கர்நாடகத்தில் கூடி உள்ளதே?

ஆம்! பெங்களூரின் நான்கு பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசு அரசு இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 2000 தருகிறது,  பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வழங்குகிறது, வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலசவச மின்சாரம் தருகிறது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு (இரண்டு வருடங்களுக்கு) மாதம் ரூ 3000  கொடுக்கிறது. ஆனாலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரின் வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வேலைகள் முன்பு போல அதிகமாக வரவில்லை. ஒரு நிறுவன வேலையை விட்டுவிட்டு இன்னொரு நிறுவனத்திற்கு செல்வது நின்றுவிட்டது. செயற்கை நுண்ணறிவு தகவல்தொழில்நுட்பம் பல துறையில் வேலைவாய்ப்பை பாதித்து வருகிறது.

கர்நாடகத்தில் விவசாயிகள் நிலமை எப்படி உள்ளது?

விளை நிலங்கள் விலை நிலங்களாகி வருகின்றன. விவசாயிகளில் 85 % சிறு விவசாயிகள் தான். பெங்களூரைச் சுற்றி 100 கி.மீ தூரத்திற்கு விவசாய வேலைகள் நடைபெறுவதில்லை. எந்த தாலுகா மையத்தைச் சுற்றியும் 5 – 6 கி.மீ. தூரத்தி்ற்கு விவசாய வேலைகள் நடைபெறுவதில்லை. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை விற்றவண்ணம் உள்ளனர். கர்நாடகாத்தின் வட பகுதியில் பெருமளவில் இடப் பெயர்வு நடக்கிறது.கோவா மும்பை போன்ற இடங்களுக்கு மக்கள் செல்கிறார்கள்.

பாஜக ஆட்சி முடிந்து காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று உள்ளது. இப்போது அரசின் கொள்கைகள் எப்படி உள்ளன?

பாஜக அப்பட்டமாக பெருநிறுவனங்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் அப்பட்டமாக ஆதரிக்கவில்லை அவ்வளவே! பிரியங்கா கூறியதற்கேற்ப அங்கன்வாடி, மதிய உணவுத் திட்டம், ஆஷா திட்டம் போன்றவற்றின் பணியாளர்களுக்கு  ஊதியம் உயர்த்தி தரப்படவில்லை. பணிக்கொடை ரூ.5 இலட்சம்; ஆனால், ஓய்வுத்தொகை குறித்து காங்கிரஸ் அரசு பேசவே மறுக்கிறது.

சித்தராமையா தன்னை சோசலிச சிந்தனை உள்ளவராக சொல்லிக் கொள்கிறார். ஆனால் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரமாக்கும் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துள்ளது.  இந்த சட்டத்தை அமலாக்க முடியாது என்று சித்தாராமையா சொல்லவில்லை.

கட்டட தொழிலாளர்களின் வாரியத்தில் 15,000 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. அப்போதைய பாஜக தொழிலாளர் அமைச்சர்  கட்டிடத் தொழிலாளர்களுக்கு tools box தருகிறேன் என BOSHCH போன்ற பெரு  நிறுவனங்களிடமிருந்து அதிக கமிஷனில் வாங்கி வாரியத்தை காலி செய்தார். தனக்கு சாமான் பெட்டி வேண்டுமென எந்தத் தொழிலாளியும் கேட்கவில்லை.  ஆனால், கல்வித்தொகை, திருமணத் தொகை உயர்த்தித் தர வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. கட்டட தொழிலாளர்களுக்கான நிதியை பாஜக விரயம் செய்தது. அதுவே இந்த ஆட்சியிலும் தொடர்கிறது.

கடந்த வாரம்  பியூசிஎல் தலைமையில் சில அரசு சாரா குழுக்கள் இஸ்ரேலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தன. இவர்களை காங்கிரஸ் அரசு துரத்தி ,துரத்தி அடித்தது. இறுதியில் கூட்டத்தை எங்கள் ஏஐடியுசி அலுவலகத்தில் நடத்தினோம். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்பது நமது நீண்ட கால கொள்கை. ஆனால், மா நில காங்கிரஸ் அரசு பாஜக அரசைப் போல நடந்து கொண்டது. இது பற்றி காங்கிரஸ் தலைமைக்கும் தெரியப்படுத்தினோம்.

கிக் (gig workers) தொழிலாளர்களுக்கான சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வருகிறதே அது என்ன?

நிரந்தர வேலை இல்லாத ஸ்விகி, ஓலோ, ஊபர் போன்றவைகளை சார்ந்து பணியாற்றுவோர்களின் பாதுகாப்புக்கு ஒரு சட்டம் வர உள்ளது. இவர்களுக்கு  சம்பளம், விடுமுறை, பணிக்கொடை போன்றவை இல்லை.பணியிட பாதுகாப்பும் அவசியமாகும். ராஜஸ்தான் காங்கிரசின் அசோக் கெலாட் அரசு கொண்டு வந்த சட்டத்தை விட நல்ல சட்டம் இது.  இந்த கிக் தொழிலாளர்களுக்கு (gig Workers) வேலை தருவதும், நிறுத்துவதும், கட்டுப்பாடுகளை விதிப்பதும் இந்த நிறுவனங்கள் தான் (platform). நுகர்வோருக்கு பெரிய பங்கில்லை. தேசிய சட்டப் பள்ளியுடன் ஆலோசித்து, ஆலோசனைகளை தெரிவித்துள்ளோம்.

தொழிற்சங்க சட்டப்படி வெளியாட்கள் தலைவர்களாக இருக்கலாம். ஆனால், சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகிறதே?

ஒரு சில நிறுவனங்கள் வெளியாட்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.  நான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தலைவராக இருக்கிறேன். ஆனால் நான் போக்குவரத்து தொழிலாளி அல்ல. எழுபதுகளில்,  ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம் ஏஐடியுசியை ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதில் தொழிலாளியாக இருந்த எச்.மகாதேவனுக்கு ஏஐடியுசி பயிற்சி கொடுத்தது. பின்னாளில் அவர் ஏஐடியுசியின் தலைவராகவும்,  உலக தொழிற்சங்க சம்மேளனப் பொறுப்புக்கும் உயர்ந்தார்.

இதை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல் அங்கு சங்கம் நிலைபெற என்ன செய்வது என்று தான் பார்க்க வேண்டும். தொழிலாளர்கள் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள். ஆலோசனை கொடுங்கள். கட்சி உறுப்பினர்களாக்குங்கள்.

“சங்கம் என்பது தொழிலாளர்களின் கோட்டை, தலைவர்களின் சிற்றரசு அல்ல“ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி.டி.ரணதிவே கூறுவார். தலைவர்களுக்காக தொழிற்சங்கம் இல்லை. தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம். பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் இது போன்றவை தடைகளாக இருக்கக் கூடாது.

விஜயபாஸ்கர் -ஏஐடியுசி

நானே ஒரு மைனிங் ஆலை தொழிற்சங்கத்திற்கு தலைவராக இருந்த போது, அந்த ஆலை நிர்வாகம் அங்கேயே பணியாற்றிய என்னை ஏற்க மறுத்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு தொழிலாளியை நானே அடையாளம் கண்டு தலைமை ஏற்க வைத்தேன். பிறகு ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் இருந்த போது நான் அழைக்கப்பட்டு தீர்வு எட்டப்பட்டது.

குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி நீங்கள் தொடுத்த வழக்கு பற்றி…?

கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் குறைந்த பட்ச ஊதியம் அதிகம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்த பட்ச ஊதியம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யாமல் ஏற்கனவே இருக்கும் ஊதியத்தில் 10 % உயர்வு என மாநில அரசு ஆணை பிறப்பித்தது. நாங்கள் மாநில, மாவட்ட, தாலுகா நகரங்களில் அரிசி, எண்ணெய், இறைச்சி, துணி போன்றவைகளை அரசாங்க, கூட்டுறவு கடைகளில் விலைக்கு வாங்கி அதற்கேற்ப ஒருவரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.31, 500 இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தோம்.

’அறிவியல்பூர்வமான குறைந்தபட்ச ஊதியம்’ நூல் வெளியீட்டில் விஜயபாஸ்கர், சுப்பராயன் ( மதுரை சோகோ அறக்கட்டளை)

ஏற்கனவே ரப்டகாஸ் பிரெட் வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்படி இதனைக் கணக்கிட்டோம்.  இதன் அடிப்படையில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். எங்கள் வாதங்களை ஏற்றுக் கொண்டு குறைந்த பட்ச ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து முதலாளிகள் மேல் முறையீட்டுக்குச் சென்றுள்ளனர். களத்தில் தொழிலாளர்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தி பொதுக் கருத்தை உருவாக்கியுள்ளோம்.

கர்நாடகாவில் குறைந்த பட்ச ஊதியம் ரூ 31,000 என்று முடிவு செய்தால், இரண்டு பேர் வேலை செய்யும் போது ஒரு குடும்ப வருமானம் ரூ 62,000 ஆகும். இப்படி ஒரு கோடி குடும்பங்கள் வரலாம். இவர்கள் தங்கள் சம்பளத்தை செலவழிப்பார்கள். இது சந்தையை விரிவுபடுத்தும். இந்தப் பணம் மேல்நாட்டு வங்கிகளுக்கு செல்லாது. குறைந்த பட்ச ஊதியத்தை அதிகப்படுத்துவதால் பொருளாதாரம் செழிக்கும். இது முதலாளிகளுக்கும் நல்லது. தவிர, இதனால் பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டியாக கிடைக்கும். ஊதியத்தை உயர்த்தினால் தொழில்கள் மற்ற மாநிலங்களுக்கு போகும் என்பது தவறு. அடுத்த மாதம் குறைந்த பட்ச ஊதியத்தை எப்படி கணக்கிடுவது, குறைந்த பட்ச ஊதிய ஆலோசனைக் குழுக்களில் எப்படி முறையிடுவது என்பதற்காக பெங்களூருவில் நவம்பர் 7,8 தேதிகளில், தேசிய அளவில் ஏஐடியுசி பயிலரங்கு ஒன்றை நடத்த இருக்கிறது.

நேர்காணல் & எழுத்தாக்கம்; பீட்டர் துரைராஜ்

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/19491/karnataka-congress-labours-act/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு