2026 – ஜனநாயகத்தை சவக்குழிக்கு தள்ளிய தேர்தல்!
அறம் இணைய இதழ்
பணத்தை தருவதிலும், பெறுவதிலும் காட்டப்படும் சாமார்த்தியம் தான் தேர்தலா? இந்த தேர்தலில் விளையாடிய மிகப் பிரமாண்டமான பணம், பிரதான கட்சிகள் ஜனநாயகத்தை எவ்வளவு கீழ்த்தரமாக மதிப்பீடு செய்து அணுகினார்கள் என அப்பட்டமாக தெரிய வந்துவிட்டது. அதே சமயம் சில நம்பிக்கை கீற்றுகளையும் காண முடிந்தது;
முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதை தீர்மானிக்க முடியாத தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தந்தக் கட்சிக்காரர்களும், அவர்களது தீவிர அபிமானிகளும் தங்கள் கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை அடித்துச் சொன்னாலும், பொதுத் தளத்தில், ”ஒன்னுமே கணிக்க முடியலையே சார்’’ என்ற குரல்களைத் தான் பரவலாகக் கேட்க முடிகிறது.
பெரும்பாலான ஊடகங்களும், பத்திரிகையாளர்களும்..மற்றும் சில அறிவு ஜீவிகளும் திமுக ஆட்சியை விதந்தோதி, ”இந்த நல்லாட்சியே மீண்டும் வரும்” என்ற கருத்தாக்கத்தை வலுவாக கட்டமைத்தார்கள். இதற்காக திமுக தலைமை பணத்தை அள்ளி இறைத்திருந்தது. ஆனால், தேர்தல் நெருங்கும் தருவாயிலும், தேர்தலன்றும் அந்த பிம்பம் நொறுங்கிப் போனதை பல இடங்களில் கண்கூடாக காண முடிந்தது.
எங்கே தொடர்பு கொண்டு கேட்டாலும், ”விசில் சத்தம் பலமாக இருக்கிறதே…சார்” என்றார்கள்.
திமுக அமைச்சர்கள் மற்றும் செல்வந்த வேட்பாளர்கள் அவரவர் தொகுதியில் உள்ள தவெக நிர்வாகிகளை பெரும் பணம் தந்து, ‘சைலண்டாக்கிய’ வேலைகளை மிகத் திறம்பட செய்தனர். இதனால், தவெக வேட்பாளர்கள் நிலைமை பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானது. ஒரு சில இடங்களில் தவெக வேட்பாளர்களே திமுக, அதிமுகவிடம் விலை போனார்கள். எடப்பாடி தொகுதியில் இது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. மற்றவற்றில் மறைமுகமாக அரங்கேறியது.
திமுகவின் பணபலத்தின் முன்பு அதிமுகவால் போட்டி போட முடியாத நிலைமை பல இடங்களில் வெளிப்பட்டது. தொகுதிக்கு தக்க ஒரு வேட்பாளருக்கு ரூ1,000 முதல் 10,000 வரை திமுக தரப்பில் வழங்கப்பட்டது. இதில் 10,000 தந்த திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜியும், ஒ.பிஎஸ்ஸும்! கரூரில் அரைகிராம் தங்கத்தை தந்து ஓட்டு கேட்டுள்ளனர் திமுகவினர். பொதுவாக திமுக அமைச்சர்கள் பலரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வித்தியாசமான பரிசு பொருட்களையும், பணத்தையும் வாக்காளர்களுக்கு சலிக்காமல் அள்ளி இறைத்த வண்ணம் இருந்தனர்.
திமுக, அதிமுக இரண்டிலும் தலைமையிடம் இருந்து பெற்ற பணத்தை பாதி விநியோகம் செய்து விட்டு மீதிப் பாதியை சுருட்டிக் கொள்வது தான் பிழைக்கும் சாமார்த்தியம் என்பதாக கட்சி நிர்வாகிகள் சிலர் நடந்து கொணடனர்.
தேர்தல் கமிஷன் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையை அமைத்து சாதாரண மக்கள் கையில் இருந்த பணத்தை சந்தேகப்பட்டு பிடுங்கியதே தவிர, அரசியல்வாதிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க தவறியதன் மூலம் மக்களை முட்டாளாக்கி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியது.
செந்தில் பாலாஜியின் அதீத பணப்பட்டுவாடா காரணமாக கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுன், ”இந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும்” என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதே போல் சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியும், ‘பணப்பட்டுவாடா அதி பயங்கரமாக நடப்பதாக’ போராட்டம் செய்தார்.
இப்படி போராடியவர்களும் பணப்பட்டுவாடா செய்பவர்களே. திமுகவினர் ஒரு வாக்கிற்கு ஐநூறோ, ஆயிரமோ தந்திருந்தால் இவர்களும் போட்டிக்கு அதை தந்து சமாளித்திருப்பார்கள். ஆனால், திமுக வேட்பாளர்களின் அதிகமான பணப்பட்டுவாடாவிற்கு இணையாக தங்களால் ஈடுகொடுக்க முடியாமல் போனதே இவர்களின் போராட்டத்திற்கு காரணம்.
சில பகுதிகளில் பணம் வரவில்லை என மக்கள் புகார் செய்து, அது ஏதோ ஒரு உரிமைத் தொகையை போல நடந்து கொண்டார்கள். இதனால் வாக்குகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் வேட்பாளரும் எப்பாடுபட்டேனும் அவர்களுக்கு பணத்தை தந்துவிடுகிறார்.
”இப்படி டிமாண்ட் வைத்து பணம் பெறுகிறீர்களே நாளை அவர் லஞ்சம் கேட்டாலோ அல்லது தொகுதியை கவனிக்காமல் போனாலோ உங்களால் தட்டிக் கேட்க முடியுமா..?’’ என்று கேட்டதற்கு, ”அவரை இப்பவிட்டால் எப்பவும் பார்க்க முடியாது. பணம் வாங்கலன்னா கூட இவங்களை கேள்வி கேட்கவும் முடியாது. எப்படியும் சம்பாதிக்கத் தான் போறார். தரட்டுமே” என்றனர்.
இந்த அளவுகோலை மக்கள் விஜய் மற்றும் சீமான் வேட்பாளர்களிடம் காட்டவில்லை. குறிப்பாக புதிய தவெக வேட்பாளர்களால் பணம் தர முடியாது.. என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தனர்…என்றே தெரிகிறது.
ஒரு திமுக நிர்வாகியிடம் பேசிய போது, ”நாங்கள் பணப்பட்டுவாடா சரியாக செய்தாலும், அவங்க எங்களுக்கு தான் போடுவாங்க என்பதை உறுதிபடுத்த முடியலை. ஒரு வீட்டில் ஆறு ஓட்டுக்கு தலா இரண்டாயிரம் தந்தோம். ஆனால், ஆறு ஓட்டும் தவெகவிற்கு போனதாக அறிய வந்தது. நாங்க மட்டுமில்லை, அதிமுகவும் தலா ஆயிரம் தந்துள்ளார்கள். அந்த தரப்பிற்கும் அவங்க போடலை. இரண்டு தரப்புலயும் பணத்தை வாங்கிக் கொண்டு, அவங்க விருப்பட்டவங்களுக்கு ஓட்டுப் போட்டு விடுகிறார்கள்…” என்றார்.
இன்னொரு தரப்பில் கிடைத்த தகவல்படி வேட்பாளரின் ஆட்கள் தேடி வந்து சேலை, பாத்திரங்கள் தந்த போது மக்கள், ”அங்க வச்சிட்டு போங்க” என்று அலட்சியமாக ‘ரெஸ்பான்ஸ்’ தந்துள்ளனர்.
பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களுக்கு தேர்தலில் ஓட்டு போட பணம் தராதவர் என்ற பெயர் இருந்தது. ஆனால், மதுரை மத்திய தொகுதி வேட்பாளர்கள் பிடிஆர் தரப்பில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் முதலில் ஒரு பிளாஷ்டிக் சேரும், பிறகு ஒரு சில்வர் அண்டாவும் தந்ததாக சொன்னார்கள்.
திருவெற்றியூர் மற்றும் கிழ்வேளூர் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சுந்தரராஜ், லதா ஆகியோர் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு ஓட்டிற்கும் தலா ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளது. ஆக, காசு கொடுத்து ஜனநாயகத்தை விலை பேசும் கூட்டத்தோடு கம்யுனிஸ்டுகளும் கைகோர்த்து விட்டனர்.
ஆளும் ஆட்சியாளரான முதல்வர் ஸ்டாலின் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ரூ 4,000மும், பிப்ரவரி மாதம் ரூ5,000 பெண்களின் வங்கி கணக்கில் போட்டார். அப்படியும் இருப்பு கொள்ளாமல் தேர்தலின் போதும் பணப்பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்தார். அதிக கட்சிகளை – அதுவும் எதிரணியில் இருந்த கட்சியை – எல்லாம் கூட்டணி சேர்த்தார். அப்படியும் திருப்தி இல்லாமல் அதிகார துஷ்பிரயோங்கள், அத்துமீறல்களில் ஈடுபட்டார். இவ்வளவு செய்த பிறகும் தான் வெற்றி பெற முடியுமா? என்ற கலக்கத்தில் உள்ளார்.
இது என்ன ஜனநாயகம்? முழுக்க, முழுக்க ஆட்சியாளர்கள் பணநாயகத்தை தான் நம்பினார்கள். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையிலுமே கூட பணம் தருவது, இலவசங்கள் தருவதைக் கொண்டு தான் மக்கள் வாக்கை வாங்க நினைக்கிறார்கள்!
அப்படி என்றால் இவர்கள் பேசிய ‘சமூக நீதி கொள்கை, பாசிச பாஜகவை எதிர்ப்பதற்கு என்னை விட்டால் ஆளில்லை.. என்பதற்கெல்லாம் மக்கள் தங்களை நம்பத் தயார் இல்லை’ என்பதை இவர்களே உணர்ந்துள்ளனர் போலும்.
ஏதோ தேனும், பாலும் ஓடக் கூடிய நல்லாட்சியை தந்தது போல, கோடிக்கணக்காய் செலவழித்து விளம்பரம் செய்தார், திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், அதை அவரே நம்பவில்லை என்பது தான் இந்த பணப்பட்டுவாடா உணர்த்தும் உண்மை.
இத்தனைக்கு இடையிலும் பணத்தை பொருட்படுத்தாமல் நல்லாட்சி வேண்டும் என்ற தேடலில் வாக்கை செலுத்திய வாக்காளர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் வாங்கிய வாக்குகளும், தவெக வாங்கிய வாக்குகளும் மற்றும் சில சுயேட்சைகள் வாங்கிய வாக்குகளும், நோட்டாவிற்கு விழுந்த வாக்குகளும் நமக்கு உணர்த்துகின்றன.
உண்மையில் இந்த வாக்காளர்களே புதைந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை மீட்க வல்லவர்கள். பணத்தை பொருட்படுத்தாத வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தான் உண்மையான ஜனநாயகம் சாத்தியம்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/24511/tamilnadu-election-2026/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு