அந்நிய ரஃபேல் நிறுவனத்தின் பிச்சையில் தேசபக்தி பேசும் அண்ணாமலை
Shahjahan R
அண்ணாமலையின் அதிசய தேசபக்தி அல்லது ரஃபேல் வாட்சில் ஓடும் தேசபக்தி
ரஃபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை அளித்த விளக்கத்தை வீடியோவில் பார்த்தபோது, “என்னமா கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றான் பாருங்க” என்றுதான் முதலில் தோன்றியது.
துரதிருஷ்டம் என்னவென்றால், எல்லாப் பிரச்சினைகளையும் இப்படி மீம்களாலும், சொலவடைகளாலும் சிரித்துவிட்டுக் கடந்து செல்லப் பழகி விட்டோம்.
அந்தப் பேட்டியின்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களிலும் ஒருவனும் புத்திசாலித்தனமாக ஒரு கேள்வியும் கேட்டதாகத் தெரியவில்லை. அத்தனையும் நக்கித்தின்னிகள் அல்லது மண்ணாந்தைகள். (வீடியோ இணைப்பு முதல் கமென்ட்டில்)
ஒரு வருத்தமான விஷயம் நிகழ்ந்து விட்டது. தோழர் Shahjahan R அவர்கள் அண்ணாமலையின் வாட்ச் பற்றி எழுதியிருந்த பதிவை cut and paste செய்து இருந்தேன். பதிவில் இருந்த அறிவு கூர்மையான வாதத்தில் மயங்கி பத்திரிக்கையாளர் பற்றி அவர் பயன் படுத்திருந்த கடுமையான சொற்களை கவனிக்கவில்லை. ஸ்குரோல் செய்து கொண்டே இருப்பதில் உள்ள சிக்கல் இது. இந்த சம்பவம் கோவை பத்திரிக்கையாளர் நடுவே நடந்தது. எனவே இந்த பதிவில் இருந்த சொற்கள் பத்திரிக்கையாளர் நண்பர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டன. தோழர் ஷாஜஹான் அவர்களிடம் இது பற்றி பேசியிருக்கலாம். அல்லது அவர் அனுமதி பெற்று பதிவை எடிட் செய்து இருக்கலாம். தவறு என்னுடையது தான். எனக்கு கோவை பத்திரிக்கையாளர் நண்பர்களை புண்படுத்தும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. ஒரு சந்திப்பில் பேசப் படும் அனைத்து விஷயங்கள் குறித்த பின்புலத்தை அப்போதே தெரிந்து கொள்வது சாத்தியம் இல்லை என்பது புரிகிறது. பின்பு தேடியே தெரிந்து கொள்ள இயலும். நண்பர்களுக்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன். - இரா.முருகவேள் |
அந்த கடிகாரம் விமான பார்ட்களால் செய்யப்பட்டதாம்!
கேக்கறவன் கேனையா இருந்தா கேப்பையில் நெய் ஒழுதுகும்பானாம் என்பதுபோலத்தான் இதுவும்.
ஒரு மருந்துக் கம்பெனி காம்ப்ளிமென்டாக பேனாக்களைத் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். அது மருந்துகளைக் கொண்டா பேனா தயாரிக்கும்? பிளாஸ்டிக் மற்றும் இன்னபிற பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கும். அதுவும் வேறொரு நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து, தன் பெயரை அச்சிட்டுத் தருமாறு கேட்கும்.
அந்த ரஃபேல் வாட்சும் அப்படித்தான். ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு.
ஸ்விட்சர்லாந்து கடிகாரம் தயாரிப்பதில் புகழ்பெற்ற நாடு என்பது நமக்கெல்லாம் தெரியும். அதே ஸ்விஸ் நாட்டின் Bell & Ross என்கிற நிறுவனம், மிகப் புகழ்பெற்ற கடிகார நிறுவனம். அது,ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் தஸால்ட் நிறுவனத்தின் ஐம்பதாண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், 2013இல் Bell & Ross Vintage Sport Heritage என்ற பெயரில் ஒரு மாடல் தயாரித்து வெளியிட்டது.
2015இல் இன்னொரு வாட்ச் வெளியிட்டது. அதன் பெயர்தான் BR-03-94. அண்ணாமலை வாங்கியதாகச் சொல்லும் வாட்ச் இதுதான்.
இந்தியா ரஃபேலிடம் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது 2016இல். மேற்கண்ட வாட்ச் தயாரானது 2015இல். ஆக, இதற்கும் இந்தியாவுக்கு ரபேல் விமானம் வந்தது என்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
ரபேல் விமானத்தின் ஸ்பேர்களால் செய்யப்பட்ட வாட்ச், இதை நான் அணிவது தேசபக்தியின் காரணமாக என்பதெல்லாம் அபத்தம் மட்டுமல்ல. மக்களை முட்டாள்களாக்கும் முயற்சி.
சரி, அப்படி தேசபக்தியின் காரணமாக ரபேல் வாட்ச் வாங்கினார் என்றால், அதே தஸால்ட் நிறுவனம் ஆடைகள், ஜாக்கெட்டுகள், டி-ஷர்ட்டுகள், தொப்பிகள், டைகள், குடைகள், முதுகுப்பைகள், பைகள், வாசனை திரவியங்கள், ஸ்டேஷனரிகள் என இன்னும் பல பொருட்களையும் விற்கிறது. அதை ஏன் வாங்கவில்லையாம்? ஏனென்றால், அதையெல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டும்.
2015இல் வெளியிட்ட லிமிடெட் எடிஷன் கடிகாரம் 2021 வரை விற்பனையில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்தியாவுக்கு ரஃபேல் விமானங்களை விற்க ஒப்பந்தம் கிடைத்த காரணத்தால், ரபேல் நிறுவனம் Bell & Ross நிறுவனத்திடம் இந்த வாட்சுகளை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்கும். விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தவர்களை திருப்தி செய்வதற்காகக் கொடுத்திருக்கும். ஆர்டர் கொடுத்தது பாஜக அரசு. பாஜக ஆட்களுக்குக் கிடைத்த வாட்சுகளை தமக்குள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி நடந்திருக்கும் சாத்தியங்களே அதிகம்.
நம் நாட்டில் தயாரான ஒரு பொருளை மட்டுமே நான் வாங்குகிறேன் என்று சொன்னாலாவது அதை தேசபக்தி கணக்கில் சேர்க்கலாம். வேறு ஏதோவொரு நாட்டில் தயாரான - அதுவும் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கிக்கொண்டு, அதை தேசபக்தி என்று கதை விடுகிறார் என்றால் - இதற்கு ஒரே பொருள்தான் இருக்க முடியும்
"Patriotism is the last refuge of the scoundrel."
- Samuel Johnson
Shahjahan R அவர்களது பதிவு. மிக முக்கியமான விஷயங்களை விவாதிக்கிறது.
- இரா. முருகவேள்
___________________________________________________
ரஃபேலும் தேசபக்தியும்
ரபேல் வாட்ச் எப்படி வந்தது என்று கேட்டால், கேட்டதற்கு பதில் சொல்லாமல், வார் ரூல்ஸ் மாறி விட்டது, ஹை ஆல்டிடியூட் வார், சீனா, பிரிவினைவாதம், தேசபக்தி என்றெல்லாம் உளறியதைக் கண்டதும் இந்தக் கும்பலின் தேசபக்தி பற்றி சில விவரங்களை விளக்க வேண்டும் என்று தோன்றியது.
(விவரம் தெரியாதவர்கள் முந்தைய பதிவைப் பார்க்கவும்)
ரபேல் ஊழல் குறித்து அந்த சர்ச்சையின் துவக்கத்திலிருந்தே மிக அதிகமான பதிவுகளை ஆதாரங்களுடன் பேஸ்புக்கில் எழுதியவன் நான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள முடியும். (முதல் கமென்ட் பார்க்கவும்.)
தஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் விமானங்களை வாங்குவது குறித்து மோடி அரசு திடீர் முடிவு செய்த நேரத்தில் நான் எழுப்பிய முக்கியமான கேள்விகளில் ஒன்று உள்நாட்டில் விமானம் தயாரிப்பது பற்றியது.
முந்தைய காங்கிரஸ் அரசு அதே ரபேல் விமானத்துக்காகப் பேரம் பேசியபோது நடந்தது என்ன?
126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் நிறுவனம் அதற்கான தொழில்நுட்பத்தை வழங்கும், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) இந்தியாவிலேயே விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. (ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை.)
HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.
2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது.
மோடி அரசு செய்த ஒப்பந்தம் என்ன?
2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார். 36 விமானங்களும் தஸால்ட் நிறுவனமே தயாரித்து வழங்கும்.
அதாவது,
— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
— மோடி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும்.
அதாவது,
மேக் இன் இந்தியா, தேசபக்தி என்கிற கோஷங்கள் எல்லாம் வெறும் விளம்பரத்துக்காகவும், வாக்குகளைப் பெறுவதற்காகவும் மட்டுமே.
* * *
அதுமட்டுமல்ல.
2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் என்று ஒரு கம்பெனியே கிடையாது. ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி.
அதாவது, மோடி பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி. வழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார். இதுதான் அவரது தேசபக்தி.
(இந்திய அரசுதான் ரிலையன்ஸ் கம்பெனியை சிபாரிசு செஞ்சுது. எங்களுக்கு வேற வழி இருக்கவில்லை என்று பிரான்ஸ் அதிபராக இருந்த ஹாலண்டே-யே சொல்லி விட்டார் என்பது தனிக்கதை.)
* * *
குருமூர்த்தி என்று சாவர்க்கர் வழிவந்த ஒரு மானஸ்தர் இருக்கிறார். ஆடிட்டர். அதனால் பொருளாதார மேதை என்று தானே நினைத்துக் கொள்பவர். பாஜகவினருக்கும் அவர் ஒரு குரு. 2000 ரூபாய் நோட்டில் சிப் வைத்திருப்பதாக நம்பி புல்லரித்துப்போன புத்திசாலி. அதனால்தான் ரிசர்வ் பேங்கில் டைரக்டராகக்கூட நியமித்திருக்கிறார் மோடி.
அந்த குருமூர்த்தி ஓர் இயக்கத்தில் இருக்கிறார் - சுதேசி ஜாக்ரண் மஞ்ச். அதாவது, வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது. அந்நிய முதலீடு கூடாது. இந்தியப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசை வலியுறுத்தவும் ஆரம்பிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி போய், பாஜக ஆட்சி வந்ததும் இந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ரஃபேல் விமானங்களை இந்தியாவே தயாரிக்கும் என்பதை மாற்றி, வெளிநாட்டிலேயே தயாரித்து வாங்குவதை எதிர்த்து, சுதேசி கோஷமிடும் குருமூர்த்தி வாயே திறக்கவில்லை.
* * *
மேக் இன் இந்தியா என்று சொல்லிக் கொண்டே பிரான்ஸ்க்காக, அம்பானி அதானிகளுக்காக வேலை பார்ப்பது மோடியின் தேசபக்தி.
ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் நடத்திக்கொண்டே அந்நிய முதலீட்டை வரவேற்கும் பாஜக ஆட்சியை ஆதரிப்பது குருமூர்த்தியின் தேசபக்தி.
ஐந்து லட்ச ரூபாய்க்கு ஸ்விஸ் நாட்டு கடிகாரம் கட்டுவது அண்ணாமலையின் தேசபக்தி.
தேச பக்தி என்றுதானே சொன்னார்கள். எந்த தேசம் என்று சொல்லவில்லை அல்லவா? :)
- Shahjahan R
____________________________________________________
ரஃபேல் ஊழல்
இந்தியாவில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் என்றால் அது ரஃபேல் ஊழல்தான். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
2018 செப்டம்பர் 23ஆம் தேதி, பல்வேறு ஆவணங்களை சரிபார்த்து நான் எழுதிய இந்தக் கட்டுரை ரஃபேல் ஊழல் குறித்து தமிழில் தெளிவான விவரங்களை அளித்த முதன்மையான கட்டுரை என்பதைப் பெருமையுடன் சொல்லுவேன். அதை அப்படியே மீள்பதிவு செய்கிறேன்.
வரலாற்றை மறக்க விரும்பாதவர்கள் கட்டுரையை வாசிக்கலாம்.
o 0 o
ரஃபேல் ஊழல் : எளிய விளக்கம்
--------------------- முன்கதை -------------------
இந்தியா கடைசியாக போர் விமானங்களை வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கிய அதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை.
உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலகு ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்-21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது.
2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன.
பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) இந்தியாவிலேயே விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை.
HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.
2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது.
புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.
------------- பின் கதை --------------
2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார்.
126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் மனோகர் பரிக்கர்.
பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இதில் ஊழல் எங்கிருந்து வந்தது? விவரமாகப் பார்க்கலாம்.
1. விலை
— முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில்.
— மோடி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்!
2. உற்பத்தி
— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
— மோடி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பி!
3. தொழில்நுட்பம்
— காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும்
— மோடி அரசு ஒப்பந்தப்படி, “சில தனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் ரிலையன்ஸ்.
4. தனியாருக்கு?
— காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை நிறுவனம்தான் கூட்டாளி.
— மோடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் கூட்டாளி!
5. அனுபவம்
— எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ள நிறுவனம். ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது.
— மோடி அரசில் முடிவு செய்யப்பட்ட ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை.
6. மோடியின் ஊழல்
— 2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது.
— பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை.
— ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா. ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா! விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம்.
— இதுபோன்ற விஷயங்களில் போர்விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலை ரகசியமாக வைக்கத் தேவையில்லை. ஆனால் மோடி அரசு விலையைக்கூட ரகசியம் என்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசு விலையை ரகசியமாக வைக்கவில்லை.
— ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும்
— ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்.
— மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை நிறுவனம் எச்ஏஎல் எப்படிப் போனால் என்ன, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் மோடி.
— 2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்? எச்ஏஎல்தானே இருந்திருக்க வேண்டும்?
— எச்ஏஎல் நிறுவனத்துக்கு தகுதி கிடையாது, அது சீரழிந்து விட்டது என்று திருவாய் மலர்ந்தார் நிர்மலா சீதாராமன். அதே எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து விமானப்படைக்கு அளித்தபோது பிரதமர் வாழ்த்தியது இப்படி - Induction of indigenously made Tejas fighter jet into the Air Force fills our hearts with unparalleled pride and happiness. I laud HAL & ADA on the induction of Tejas fighter jet. This illustrates our skills & strengths to enhance indigenous defence manufacturing. (1 July 2016)
— 2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல், இரண்டு ஆண்டுகளுக்குள், 2018இல் சீரழிந்து விட்டதா? அப்படியானால் அதற்குக் காரணம் இதே மோடி சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்?
— இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது? மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். கம்பெனி ரெஜிஸ்டிராரிடம் பதிவு செய்த விவரம் கீழே படத்தில் உள்ளது.
— வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோடி சர்க்காரில் மட்டுமே சாத்தியம்.
— கடைசியாக முக்கியமான ஒரு விஷயம் : 2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது. ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி.
வழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார்.
o 0 o
மேற்கண்ட பதிவு தமிழ்நாட்டையே கலக்கியது. தமிழ் ஹிண்டு நாளிதழிலும் கட்டுரையாக வந்த்து. வாட்ஸ்அப்பில் தீயாகப் பரவியது. அடுத்த இரண்டு நாட்களும் எனக்கு வந்த பாராட்டுகளும், தொலைபேசி அழைப்புகளும், கமென்ட்களும், வசவுகளும், மின்னஞ்சல்களும் கணக்கில்லாதவை.
பதிலளிக்கவே முடியாத தெளிவான கேள்விகளால் திணறிப்போன பாஜக பக்தர்கள் புதிய பொய்களை அவிழ்த்துவிடத் துவங்கினார்கள். அந்தப் பொய்களுக்கும் பதிலளித்து, அவை எவ்வளவு அபத்தமானவை என்று விளக்கி, 2018இல் இதே நாளில் இன்னொரு கட்டுரை எழுதினேன். அது கீழே.
o 0 o
ரஃபேல் ஊழல் - பின்னிணைப்பு
ரஃபேல் ஊழல் குறித்து நேற்று கட்டுரை எழுதியதிலிருந்து ஏகப்பட்ட இன்பாக்ஸ் கேள்விகள், கமென்ட்கள், தொலைபேசி அழைப்புகள். நாளில் 36 மணி நேரம் இருந்தாலும்கூட போதாதுபோல பதில் சொல்லி மாளவில்லை. சுருக்கமாக மூன்று கேள்விகளுக்கான பதில்களை சொல்லி விடுகிறேன்.
1. ரிலையன்ஸ் ஏற்கெனவே பாதுகாப்புத் துறையில் இருக்கிறது. அது ஒன்றும் புதிதாக நேற்று முளைத்த கம்பெனி அல்ல.
— இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் உதாரணம் காட்டுவது Pipavav Shipyard அல்லது Reliance Naval and Engineering Ltd.
—இந்த பிபாவாவ் என்பது குஜராத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகம் - ஷிப்யார்டு. போர்க்கப்பல்களும் கட்டக்கூடிய நிறுவனம். 1997முதலாகவே இயங்கி வருவது. இது போர் விமானங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்ல.
—ரிலையன்ஸ் 2015இல் இதன் பங்குகளை விலைக்கு வாங்கி ரிலையன்ஸ் நேவல் என பெயர் மாற்றம் செய்து கொண்டது. அதாவது, பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு திட்டமிட்டு இந்தக் கம்பெனியை வாங்கியிருக்கிறது. இதன் வலைதளத் தகவலின்படி, The centre has recently submitted designs for OPVs, Cadet Training Ships and Fast Patrol Boats to the Indian Coast Guard, and Survey Training Vessels and Floating Dock to the Indian Navy. ஆக, 2015க்குப் பிறகு இதற்கு என்னென்ன ஒப்பந்தங்கள் கிடைத்தன என்று தோண்டிப்பார்த்தால் மேலும் சில ஊழல்கள் வெளிவரக்கூடும்.
2. தஸால்ட் நிறுவனத்துடன் 2012இலேயே ரிலையன்ஸ் கூட்டு சேர்ந்து விட்டதாக ஒரு செய்தி இருக்கிறதே...? 2015இல்தான் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி உருவானது என்று சொல்வது பொய்க் குற்றச்சாட்டு.
— 2012இலேயே தஸால்ட்-ரிலையன்ஸ் கூட்டு ஒன்று உருவானது உண்மைதான். ஆனால் அது இந்த ரிலையன்ஸ் அல்ல. அது முகேஷ் அம்பானி துவக்கிய ஆர்ஏடிஎல் என்னும் நிறுவனம். அவர் ஒரு கம்பெனியைத் துவக்கி தஸால்ட் கூட்டு வைத்து ஆழம் பார்த்தார். ஆனால் ஏதோ காரணத்தால் சரிவராது என்று தோன்றியதால், அந்த ஒப்பந்தத்தை காலாவதி ஆகும்படி விட்டு விட்டார். அதற்கும் இந்த ரிலையன்ஸ் டிபென்சுக்கும் சம்பந்தமும் இல்லை.
—இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் என்பது அனில் அம்பானியுடையது. 2015 மார்ச் 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதாவது, மோடியுடன் அம்பானி பிரான்ஸ் சென்று டீல் பேசுவதற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்னால்தான் பதிவு செய்யப்பட்டது. அதுவும் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட லெட்டர்பேடு கம்பேனி.
3. எச்ஏஎல்லுக்கு இவ்வளவு பெரிய முதலீடு எல்லாம் செய்ய முடியாது. ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் செய்தால் என்ன தவறு?
— ரிலையன்ஸ் கம்பெனியே தாளம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ரிலையன்ஸ் முதலீடு செய்வதாக இருந்தாலும் அதுவும் நம்முடைய வரிப்பணத்திலிருந்து - நம்முடைய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கித்தான் செய்யும். அதில் வருகிற லாபத்தை மட்டுமல்ல, கொஞ்ச காலத்தில் முதலையும் சுருட்டிக் கொண்டு போகும். வங்கிக்குத் திருப்பித்தராமலும் போகும். இப்படி பல கம்பெனிகள் செய்து வருவது நமக்கெல்லாம் தெரியாததல்ல. ஆனால் எச்ஏஎல் பொதுத்துறை நிறுவனம். அதற்குக் கிடைக்கிற லாபமோ வருவாயோ எதுவாக இருந்தாலும் அது நாட்டுக்குச் சொந்தமாகும். தனி நபருக்கு அல்ல.
—126 போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான இடவசதி உள்ளிட்ட முன்னேற்பாட்டு வேலைகளை இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் செய்து வந்தது. ரபேல் போர் விமான வேலையின் மூலம் இந்தியாவுக்கு தொழில்நுட்ப அறிவும் மேம்படும், முதலீடு செய்த பணத்தில் பெரும்பகுதி இங்கேயே திரும்பி வரும், துணைத் தொழில்கள் பெருகும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும், என்றெல்லாம் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால்....
—பிரதமர் மோடி பிரான்சுக்குச் சென்று 36 ரபேல் விமானங்களை வாங்குவதென அறிவித்தது 2015 ஏப்ரல் 10ஆம் தேதி. அதற்கு 17 நாட்களுக்கு முன்னால், தஸ்ஸால்ட் நிறுவனத் செயல் தலைவர் எரிக், இந்திய விமானப்படை மற்றும் எச்ஏஎல் அதிகாரிகள் முன்னால் உரையாற்றும்போது எச்ஏஎல் நிறுவனத்துடன் கூட்டாகச் செயல்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார். ரபேல் ஒப்பந்தத்தை மோடி அறிவிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஏப்ரல் 8ஆம் தேதி, பழைய ஒப்பந்தமும் எச்ஏஎல் நிறுவனமும் இப்போதும் களத்தில் உள்ளன என்று தெளிவாகப் பேட்டி அளித்திருக்கிறார் வெளியுறவுத்துறைச் செயலாளர்.
—இடைப்பட்ட இரண்டே நாட்களில் போர்விமான உற்பத்தியில் அனுபவம் மிக்க எச்ஏஎல்லை கழட்டி விட்டுவிட்டு, பிரதமர் பிரான்ஸ் செல்வதற்கு வெறும் பத்து நாட்களுக்கு முன்பு துவக்கப்பட்ட, விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத, லெட்டர்பேடு கம்பெனியான ரிலையன்ஸ் டிபென்ஸ் எப்படி இதில் நுழைந்தது?
நீங்களே யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
- Shahjahan R
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு