புலிகள் - முஸ்லீம்கள் முரண்பாடு - உருவாக்கியது யார்? ஏன் புலிகளை அவதூறு செய்கிறார்கள்?

திருமுருகன் காந்தி

புலிகள் - முஸ்லீம்கள் முரண்பாடு - உருவாக்கியது யார்? ஏன் புலிகளை அவதூறு செய்கிறார்கள்?
இலங்கையின் இசுலாமிய அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலால் விளைந்த சூழலை ஆய்வில்கொள்ளாமல் புலிகள்-முஸ்லீம்கள் சிக்கலை விவாதிப்பதை இந்திய சந்தர்ப்பவாத அறிவுசீவிகள் நீண்டகாலமாக செய்துவருகின்றனர்.
அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர் போன்ற மதிப்புறு ஆய்வாளர்களாக அறியப்பட்டவர்கள், இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராகவே புலிகள் செயல்பட்டதாக சித்தரித்து நகர்வதை இதுகாறும் செய்துவருகின்றனர். இலங்கையில் பேரினவாதத்தால் தாக்குதலுக்குள்ளான முதன்மை மக்களாக முஸ்லீம் மக்கள் இருந்தார்கள். இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர், இங்கிலாந்தின் மறைமுக காலனிய ராணுவ தேசமாக மாற்றப்பட்ட பின்னர், சிங்களப்பேரினவாதிகளோடு கைகோர்த்து இயங்கிய இசுலாமிய அரசியல் கட்சியின் தலைமை ஆய்விற்குரியதாக இந்த அறிஞர்கள் முன்வைக்கவில்லை.
சிங்களப் பேரினவாதத்தோடு சமரசம் செய்து பதவி அரசியலுக்காக அரசியல் கட்சி தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழர் இசுலாமியர் ஒற்றுமைக்கு பங்கம் கொண்டு வந்த வரலாறு மிக நீண்டது. சிங்கள பேரினவாத கட்சிகளோடு கைகோர்த்து நின்றவர்கள் இசுலாமிய மக்கள் மீதான ஆரம்பகால தாக்குதலை பாராளுமன்றத்தில் கண்டிக்காமல் கள்ளமெளனம் காத்த இசுலாமிய பிரதிநிதிகள் வரலாறுகள் தமிழகத்தில் சொல்லப்பட்டதில்லை. தம் பதவி அரசியலுக்காக சிங்கள பேரினவாத இனப்படுகொலஒ அரசியலை எதிர்த்த தமிழர் முற்போக்கு அரசியலையும், போராட்ட அரசியலையும் விட்டு வெளியேறியதும், சிங்கள இராணுவத்தோடு கைகோர்த்ததும் என பதவி அரசியலுக்காக அவர்கள் நடத்திய பேரங்களில் நடந்த அவலங்களோடு இணைத்தே தமிழர்-இசுலாமியர், புலிகள்-இசுலாமியர் அரசியலை விவாதிக்க இயலும்.
சிங்கள ஆளும்வர்க்கத்தோடு, இலங்கை முஸ்லீம்களின் ஆளும்வர்க்கம் கைகோர்த்து தமது பிழைப்புவாதத்திற்காக சாமானிய இசுலாமியர்களை சிங்கள பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு பலிகொடுத்தது. UNP, SLFP எனும் சிங்கள கட்சிகளில் பதவிகளுக்காக நடத்திய பேரங்கள் முக்கியமானவை. சிங்களம் எதிர் தமிழர் என இருந்ததை, சிங்களம் எதிர் தமிழர் எதிர் இசுலாமியர் என மாற்றிபோட்டதில் சிங்களத்தோடு கைகோர்த்து இயங்கினர். இது நீண்ட ஆய்விற்கும், விவாதத்திற்கும் உரியவை. ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தி இசுலாமிய மக்களை அரசியல் பலிகொடுக்க ராஜபக்சே தயாரானதுவரை அக்கும்பலோடு கூட்டணி அமைத்து பதவி சுகம் கண்டனர். இஸ்லாமியர்-தமிழர் முரண்களை வளர்த்தெடுத்த இச்சந்தர்ப்பவாத கூட்டத்தை குறித்து இதுகாறும் அ.மார்க்ஸ் உள்ளிட்ட அறிஞர்கள் குறிப்பிட்டு விளக்க ஆய்வுரை வெளிப்படுத்தியதுமில்லை. 1990ல் இச்சிக்கல் வானிலிருந்து தோன்றியது போல அ.மார்க்ஸ் போன்றோரின் எழுத்துகளும், இந்துத்துவ அரசியலை போன்று புலிகள் இயங்கினார்கள் என எஸ்.வி.ஆரும் அங்கலாய்த்தார்கள். தராகி சிவராம் இசுலாமிய அரசியல் தலைமைகள் குறித்து எழுதிய குறிப்புகள் அழமானவை. தராகி இயங்கிய ப்ளாட் அமைப்பும் தமிழர்-இசுலாமியர் சிக்கல் குறித்து ஆய்வுகளை வெளிப்படுத்தியது.
இசுலாமியர்-தமிழர் முரண்பாடுகளை வளர்த்து குளிர்காய்ந்த சிங்கள பேரினவாதிகளை குறித்து பேசாமலும், இந்த முரண்களை கூர்மைப்படுத்திய இந்திய உளவு நிறுவனம், இந்திய அமைதிகாப்புப்படை, ஊர்க்காவல்படை, இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய இசுலாமிய தளபதிகள், இசுரேலின் தலையீடு, பாகிஸ்தான் உருவாக்கிய ஆயுதக்குழுக்கள் என நீண்ட பின்புலத்தை மறைத்துவிட்டே புலிகள் மீது குற்றச்சாட்டுகள் எனும்பெயரில் அவதூறுகள் கட்டவிழ்க்கப்பட்டன.
தமிழக முஸ்லீம்களிடம் மறைக்கப்பட்ட இலங்கை முஸ்லீம் அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத வரலாறை திட்டமிட்டு அ.மார்க்ஸ் போன்றோர் பரப்பியதன் தொடர்ச்சியை வழக்கறிஞர் லஜபதிராய் போன்றோரை வைத்து மருதையன் போன்றோர் தொடர்கின்றனர். நீலத்தால் வெளியிடப்பட்ட இவரது நூல் அபத்தத்தின் உச்சம். தற்போது இல்லுமினாட்டி பேய்க்கதைகளை மிஞ்சும் கதைகளை மருதையனின் சிஷ்யகோடிகள் இயக்கி வெளியிட்டு வருகின்றனர். இவற்றின் நோக்கம் என்ன? இவற்றால் எந்த அரசியல் விளைவை எதிர்பார்க்கிறார்கள்? திமுகவின் கழுத்திலிருக்கும் பாம்பாக மருதையன் கும்பல் தம்மை காத்துக்கொண்டு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை எதிர்க்க திமுகவை பாதுகாக்க, இது போன்ற அபத்தங்களை நாம் நம்பியாக வேண்டுமென்கிறார்கள். திமுகவை காக்க புலி எதிர்ப்பு அவசியமென்று பார்ப்பன பூசை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஈ...ழத்திற்காக அமைப்பு துவங்கினோம். அது வேறுதேசத்தின் சிக்கல் என்பதாக அல்ல, இந்திய பார்ப்பனியம் உண்டாக்கும் அழிவின் நீட்சி என்பதை எடுத்துரைக்கும் பெரியாரிஸ்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறோம். தமிழரின் சுயநிர்ணய உரிமையை, போராட்ட வரலாறை இழிவு செய்யும் பார்ப்பன சதிகளை முறியடிப்பதில் மே17 இயக்கம் சமரசம் கொள்ளாது.
இசுலாமியர்-தமிழர்களுக்கிடையே உருவாக்கப்பட்ட முரண்களுக்கு புலிகள் ஒருகட்டத்தில் தீர்வுகண்டனர். இவை வரலாற்று நிகழ்வுகள். இவை அனைத்தும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நிகழ்ந்தவை. இவற்றை திட்டமிட்டு மறைத்து இந்தியாவிற்குள் புலிகள் இசுலாமியர்களுக்கு எதிரானவர்கள் எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இப்பிரச்சாரம் பார்ப்பனிய- பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின் தேவையை நிறைவேற்றும் நோக்கம் கொண்டது. தமிழகத்தின் முஸ்லீம் அரசியல் தலைவர்களைப் போல சனநாயக, மதவெறி எதிர்ப்பு, திராவிட-தமிழர் அரசியல் ஆதரவு, தமிழ்மொழி நேசம் எனும் அரசியலை கைக்கொண்டு மதவெறி-இனவெறிக்கு எதிரான அரசியலை இலங்கையின் முஸ்லீம் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. அறிஞர்.காயிதேமில்லத் துவங்கி திருமிகு அப்துல்சமது, லத்தீப், பேரா. காதர்மைதீன், பேரா.ஜவாஹிருல்லா என நீளும் பட்டியல் தமிழகத்தின் நலனை, தமிழர் நலனை முன்னிறுத்தி செய்த அரசியலை போன்றதொறு (முற்போக்கு சனநாயக) அரசியல் ஆளுமைகளை இலங்கை முஸ்லீம் கட்சிகள் கொண்டிருந்தால் இலங்கையின் அரசியல்களம் வேறுமாதிரியாகி இருக்குமென்பது வரலாறு. தமிழகத்தின் இசுலாமியர்கள் வலிமைப்படுத்திய சமூகநீதி அரசியல் அளப்பரியது. இதுபோல இலங்கையில் நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் முஸ்லீம்-திராவிடர் இயக்கம், முஸ்லீம்-தமிழ்த்தேசிய மரபு, முஸ்லீம்- திமுக, அதிமுக உறவென்பது உருவாக்கிய சனநாயக அடித்தளத்தை முறிக்க நடக்கும் நிகழ்ச்சி நிரலே முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் இயங்கினர் எனும் பிரச்சாரம். பெரியாரிய இயக்கத்தவர்கள், தமிழ்த்தேசிய இயக்கத்தவர்கள் வி.பு.லிகளுக்கும், தமிழக முஸ்லீம் நலன்களுக்கும் துணையாக நின்றார்கள். இன்றும் இந்துத்துவமதவெறிக்கு எதிராக இயங்குகிறார்கள். புலிகளை இசுலாமியர் எதிர்ப்பாக சித்தரிப்பதன் வழியாக ஈ..ழ ஆதரவாளர்களிடமிருந்து தமிழக முஸ்லீம்களை பிரிக்கும் நகர்வு சூழ்ச்சிகரமாக நடத்தப்படுகிறது. இதை நீண்டகாலமாகவே அம்பலப்படுத்தி வருகிறது மே17 இயக்கம். அவ்வகையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் புலிகள் எதிர்ப்பு அவதூறுகளின் பின்புலத்தையும், இதனோடு தொடர்புடைய அரசியலையும் பேட்டியாக, கட்டுரையாக மே17 இயக்கம் பதிவு செய்துவருகிறது. இதற்கான முதல்கட்ட விளக்க காணொளி இணைப்பை பதிவு செய்கிறேன். 
தமிழர்-இசுலாமியர் பிளவை உருவாக்க முயலும் திரிபுவாதிகளின் அயோக்கிய பிரச்சாரத்தை தோலுரிக்க எங்களோடு கைகோர்ப்பீர்கள் என நம்புகிறேன்.
தமிழ்வினை சேனலில் வெளியிட்ட இக்காணொளியை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதை உங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன்.
- திருமுருகன் காந்தி
(முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு