டிரில்லியன் டாலர் கனவு: அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியங்களின் செயற்கைகோள் ஏவுதளமாக மாறும் இந்திய விண்வெளித்துறை

தமிழில்: விஜயன்

டிரில்லியன் டாலர் கனவு: அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியங்களின் செயற்கைகோள் ஏவுதளமாக மாறும் இந்திய விண்வெளித்துறை

விண்வெளித் துறையில் சாதனைகள் பல புரிவதற்கான பெரிய பெரிய கனவுகளை இந்தியா ஏற்றுள்ளது. உலக நாடுகளுக்கெல்லாம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான சேவையை துவங்க விரும்புகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட குறைந்த செலவில் இதை செய்ய வேண்டும் என்பதே இந்தக கனவுத் திட்டத்தின் மையமான அம்சமாக விளங்குகிறது.

இந்தியா தனது முதல் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளது. இது வெற்றியடைந்ததென்றால் விண்வெளித் துறையில் இந்நிறுவனங்களுக்கான  வணிக வாய்ப்புகள் கைமேல் வந்து குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள்வரை ரஷ்யாதான் இத்துறையில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தது. எனினும், உக்ரைன் போருக்கு பிறகு உலக நாடுகளுக்கு செயற்கைகோள்களை ஏவுவதற்கான சேவை அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்திய விண்வெளித் துறைக்கு நுழைவது வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (SpaceX) என்பது ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களை உருவாக்கும் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். விண்வெளிக்கு ராக்கெட்களை அனுப்பியதோடு மட்டுமல்லாது அவை மீண்டும் பூமிக்கு வந்து சேரும் வகையில் ராக்கெட்டுகளை வடிவமைத்த முதல் தனியார் நிறுவனம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மக்களை அனுப்புவதற்கான திட்டத்தையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளித்துறையில் செயல்பட முனையும் தனியார் நிறுவனங்களுக்கு வேண்டிய அதிகப்படியான நிதியுதவி மட்டுமல்லாது தொழில்நுட்ப உதவியையும் பெறுவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நுழைவு பாதையமைத்து தந்துள்ளது. இந்திய விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் இப்போதுதான் துளிர்விட ஆரம்பித்துள்ளன என்றாலும் அவை சிறப்பாக வளர்ந்து வருகின்றன.

இந்திய அரசு விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டை அனுமதித்தைத் தொடர்ந்து 100 புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது உருவாகியுள்ளன. 2040ல் இந்திய விண்வெளித் துறையின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் என்ற முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் ஆய்வின்படியும்(Ernst and Young), இந்திய விண்வெளி சங்கத்தின் அறிக்கையின்படியும், இந்திய விண்வெளித் துறையின் பொருளாதார மதிப்பு வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் 12.8466 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் மட்டுமல்லாது, அதைத் தொடர்ந்து செயற்கைக்கோள்களை தயாரிப்பதன் மூலமும் அதிக வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள நாசா(NASA) விண்வெளியில் ஆராய்ச்சி பணிகளை மட்டும் மேற்கொள்கிறது, மற்றபடி அங்குள்ள தனியார் நிறுவனங்களே விண்வெளிக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்து பொருள்களையும், மனிதர்களையும் அனுப்புகின்றன.

சென்ற வருடத்தில் மட்டும SpaceX  நிறுவனம் 60 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இது விண்வெளிக்கு செல்வதற்கான செலவை கணிசமானளவிற்கு குறைத்துள்ளது. இதற்கு முன், அமெரிக்காவும்கூட ரஷ்யாவின் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியே அனைத்து பொருட்களையும், மனிதர்களையும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது.

இந்தியாவில், விண்வெளித் துறையில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனமே முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இது ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. 2018 இல் ISRO வின் முன்னாள் பொறியாளர்களால் தொடங்கப்பட்டது. ISRO என்பது இந்திய விண்வெளி திட்டத்தை இயக்கும் ஓர் அரசு நிறுவனமாகும்.

நவம்பர் 2022 இல், இந்திய தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்வெளியில் ஏவியது. இப்போது ஒரு தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் முதல் நிறுவனம் என்ற பெயரையும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் பெறவிருக்கிறது.

“இந்திய தனியார் நிறுவனத்தால் புவியின் சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை ஏவக்கூடிய  முதல் தனியார் விண்வெளித் திட்டமாக விக்ரம் 1 விண்வெளித் திட்டம் அமையவிருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் சில முக்கியமான சோதனைகளைச் செய்த பிறகு அதைத் தொடங்குவோம்,” என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பவன் குமார் சந்தனா EurAsian Times பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

"விக்ரம் 1 திட்டத்தின் வெற்றியே இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவுக்கு ஒரு பெரும் உந்துசக்தியாக அமைவதோடு ஸ்கைரூட் நிறுவனத்தின் மகத்தான சாதனையை பறைசாற்றுவதாகவும் அமைகிறது" என்று சந்தனா கூறினார்.

விக்ரம் 1 விண்வெளித் திட்டத்தை பொறுத்தமட்டில் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது, ராக்கெட் பறப்பதற்கு திடநிலையிலுள்ள எரிபொருளும், திரவ நிலையிலுள்ள எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றன. இது 480 கிலோகிராம் எடையிலான பொருட்களை எந்திச் சென்று பூமிக்கு அருகிலுள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் பெற்றிருக்கிறது. 3டி பிரிண்டர் மூலம் தயாரிக்கப்பட்ட திரவ எரிபொருளைக் கொண்டு இயங்கக்கூடிய என்ஜீனும், கார்பன் கூட்டுபொருட்களால் செய்யப்பட்ட உடல் பாகங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. குறைந்த செலவில், அசாத்தியமான பணிகளைச் செய்துகாட்டிய இஸ்ரோவை முன்மாதிரியாக கொண்டு செயல்படப்போவதாக கூறுகின்றனர். அவ்வகையில் இந்திய நிறுவனங்களும் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்திய விண்வெளித்துறையில் நுழைவது அனைவருக்குமே நல்லதுதான் என்று சந்தனா கூறினார். “சர்வதேச அளவிலான வணிக வாய்ப்புகள் குவிந்தருக்கக்கூடிய துறையாக விண்வெளித் துறை கருதப்படுகிறது. இதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வணிகத்தை வளர்க்க வேண்டுமெனில் உலக நாடுகளின் சந்கைளில் தங்களது கால்தடங்களை விரிவுபடுத்துவதே சரியானதாக இருக்கும்” என்றார் அவர்.

ப்ரோமேதி(Promethee)  என்ற பிரான்ஸ் நிறுவனத்துடனும் ஸ்கைரூட் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். புவியை பல்வேறு கோணங்களில் படம்பிடிக்கக்கூடிய JAPETUS என்ற செயற்கைக்கோள் தொகுப்பு ஒன்றும் ப்ரோமேதி நிறுவனத்திடம் உள்ளது.

ஸ்கைரூட் நிறுவனம் மூன்று வகையான விக்ரம் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. 480 கிலோகிராம் எடையுள்ள பொருட்களை பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுவத்துவதற்கான விக்ரம்-I ராக்கெட்டையும், 595 கிலோகிராம் எடையை ஏந்திச் செல்ல விக்ரம்-II  என்ற ராக்கெட்டையும், 815 கிலோகிராம் எடையை ஏந்திச் செல்வதற்கான விக்ரம்-III என்ற ராக்கெட்டையும் தயாரித்து வருகிறது.

சமீப ஆண்டுகளில், விண்வெளித்துறையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மார்ச் 2023 இல், விண்வெளியில் இருந்து இணைய சேவையை வழங்க விரும்பும் பிரிட்டிஷ் நிறுவனமான OneWeb க்காக NSIL என்று சுருக்கமாக அறியப்படும் இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருந்தது. ரஷ்யா தனது ஏவுதல் சேவைகளை நிறுத்திய காரணத்தால் OneWeb  நிறுவனம் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைகோள்களின் தொகுப்பு விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து OneWeb நிறுவனம் தனது செயற்கைக்கோள்கள் மூலம் உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்குவதற்கான திறனை பெற்றுவிடுகிறது. மேலும், இந்தியாவும் சிறந்த இணைய சேவையைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. தொகுப்பிலுள்ள செயற்கைக்கோள்களை ஒன்றுடன் ஒன்று மோதாமல் சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கு இந்திய ராக்கெட் சாதுரியமான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2020-ல் இந்திய விண்வெளித் துறை தனியார் நிறுவனங்களின் நுழைவுக்கு திறந்துவிடப்பட்டதும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தத் துறைக்கு $62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி முதலீடுகள் கிடைத்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகமாகும்.

ஆர்தர் டி. லிட்டில் என்ற பன்னாட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனம், இந்தியாவின் தற்போதைய விண்வெளி சந்தையின் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறுகிறது. இது உலக சராசரியை விட வேகமாக வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

"தனியார் துறையில், அடுத்த சில ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் வெற்றிகரமாக அதனதன் இலக்கை அடைந்துவிட்டது என்ற செய்திகளை நாம் கேட்கக்கூடும், இது இந்தத் துறை வலுவாக இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது" என்று சந்தனா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: “புவியைப் படம் எடுப்பதற்கும் செய்திகளை அனுப்புவதற்கும் பல நிறுவனங்கள் சிறந்த செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்குவதை நாம் காணலாம். இடர்களை சமாளித்தல், பயிர்களுக்கு காப்பீடு செய்தல், விவசாயம் செய்தல் மற்றும் பேரிடர்களின் போது உதவுதல் போன்றவற்றிற்காக செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி மேலும் பல சேவைகள் தனியார் நிறுவனங்களால் துவங்கப்படுவதைப் பார்க்கமுடியும்.”

இந்திய விண்வெளித் துறையில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து வருகின்றன. அக்னிகுல் காஸ்மோஸ்(Agnikul Cosmos) என்ற தனியார் நிறுவனம் ஒரு விண்வெளித் திட்டக் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கவிருக்கிறது; விரைவில் தனது சொந்த ராக்கெட்டையும் விண்ணில் செலுத்தவிருக்கிறது; இதை செய்யும் இரண்டாவது தனியார் இந்திய நிறுவனம் என்ற பெயரையும் பெறவிருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் பூமியின் பல்வேறு படங்களை எடுக்கக்கூடிய நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பெங்களூருவை சேர்ந்த SatSure என்ற விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.

Pixxel என்பது மற்றொரு இந்திய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமாகும். இது அமெரிக்காவைச் சேர்ந்த NRO நிறுவனத்துடன் ஐந்தாண்டிற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. NRO என்பது அமெரிக்காவுக்கான உளவு செயற்கைக்கோள்களை உருவாக்கும் நிறுவனமாகும். கூடுதல் விவரங்களைக் காட்டக்கூடிய HIS(Hyperspectral Imaging) எனப்படும் கலப்பு நிலை படத்தை(டிஜிட்டல் திறன் கொண்ட படத்தையும், பல நிற படத்தையும் இணைக்கும் தொழில்நுட்பம்) எடுத்துத் தருவதன் மூலம் Pixxel நிறுவனம் NRO நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட உள்ளது.

பெங்களூரிலுள்ள மற்றொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமான திகந்தாரா(Digantara), விண்வெளியில் காணப்படும் குப்பைக் கழிவுகள் எங்கெல்லாம் காணப்படுகின்றன என்பது குறித்தான வரைபடத்தை உலகிற்கு உருவாக்கித் தருவிருக்கிறது. விண்வெளியில் ஏவப்பட்ட பழைய, உடைந்த பொருட்களையே  விண்வெளி குப்பைக் கழிவுகள் என்கின்றனர். இவை ஆபத்தை விளைவிப்பனவாகவும் இருக்கின்றன. துருவா மற்றும் பெல்லாட்ரிக்ஸ் போன்ற பிற நிறுவனங்களும் தங்கள் முத்திரையைப் பதிப்பதற்கான முயற்சியில் முனைப்புக் காட்டி வருகின்றன.

விஜயன் 
(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.eurasiantimes.com/india-entering-the-space-age-could-soon-beco/