அதிகரிக்கும் ரஷ்யாவுடனான இந்திய வர்த்தகம்
ஏகாதிபத்திய முரண்பாடுகளை பயன்படுத்தி லாபம் அடையும் இந்திய தரகு முதலாளிகள்
இந்திய உர இறக்குமதியில் அதிகரிக்கும் ரஷ்ய பங்கு
ரஷியாவின் மீதான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளையும் மீறி இந்தியா தனது மொத்த உர இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கை கணிசமான அளவு அதிகப்படுத்தியுள்ளது.
இந்திய விவசாயத் துறையில் அதிகளவு பயன்படுத்தப்படும் DAP (டை அம்மோனியம் பாஸ்பேட்) என்னும் உரத்தை ரஷ்யாவின் PhosAgro என்னும் நிறுவனத்திடம் இருந்து 3.5 லட்சம் டன்கள் (ஒரு டன் 920 அமெரிக்க டாலர் என்னும் விலையில்) இறக்குமதி செய்துள்ளது.
சீனா, சவுதி அரேபியா, மொராக்கோ, ஜோர்டான் போன்ற உர ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் மற்ற நாடுகளின் விலைகளை விட மிகவும் குறைவான விலையில் இந்தியா இந்த உரத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் யுவான் நாணயம் மூலம் வர்த்தகம்
இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பாளரான அல்ட்ராடெக் நிறுவனம் ரஷ்யாவுடனான தனது பரிவர்த்தனையை சீனாவின் நாணயமான யுவானில் நிறைவேற்றியுள்ளது.
அல்ட்ராடெக் நிறுவனம் தனது சிமெண்ட் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தேவையான 1,57,000 டன் நிலக்கரியை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது.
உலக நாடுகள் தமக்கிடையேயான பரிவர்த்தனைகளை அமெரிக்க டாலரின் மூலமே செய்கின்றன. இதனாலேயே அமெரிக்க டாலர் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. தற்போது உக்ரைன் போரின் விளைவாக அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுடன் டாலரில் வர்த்தகம் செய்வதை தடுத்தன.
ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இத்தடையையும் மீறி ரஷ்யாவுடனான வர்த்தகத்தை தொடர்ந்த நிலையில் தற்போது அல்ட்ராடெக் நிறுவனம் தனது மொத்த நிலக்கரி கொள்முதலையும் சீனாவின் யுவானில் நடத்தி முடித்துள்ளது. இது அமெரிக்க டாலருக்கு எதிரான மிகப்பெரிய நகர்வாக கருதப்படுகிறது.
- செந்தளம் செய்திப் பிரிவு