கார்ப்பரேட் வாராக்கடன்: தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயங்கள் கலைக்கப்படுமா?
நிதி பொறுப்புக்கூறலுக்கான மையம் (CENFA)
இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ) வெளியிட்டுள்ள நிதி நிலைத்தன்மை குறித்தான ஆய்வறிக்கையில்(Financial Stability Report – FSR) பூகம்பத்தைக் கிளப்பக்கூடிய தகவல்கள் சில வெளிவந்துள்ளன. இந்த அறிக்கைக்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளதோடு வாராக் கடன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆர்.பி.ஐ கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய விசயமாக இருக்கிறது. கார்ப்பரேட் கம்பனிகளின் திவால் நிலையை தீர்ப்பதற்காக கடந்த டிசம்பர் 2016 முதல் 6,571 வழக்குகள் இந்த தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் 4,529 வழக்குகள்(69%) முடித்து வைக்கப்பட்டுள்ளதாம்; முடிக்கப்பட்ட வழக்குகளில் 21% வழக்குகள் மேற்முறையீடு/மறுவிசாரணைக்கு பிறகு முடிக்கப்பட்டுள்ளது, 19% வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன, 45% வழக்குகளில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக, 65% வழக்குகளுக்கு மட்டுமே இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. அவ்வாறு தீர்வு காணப்பட்ட வழக்குகளில் 45% வழக்குகளுக்கு மட்டுமே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரிக்கப்பட்ட மொத்த வழக்குகளில் 30% வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் அர்த்தமாகும். இந்த ஆணைகளும் கூட உண்மையில் அமுல்படுத்தப்பட்டதா என்பதும் நமக்கு தெரியாது. 19% வழக்குகள் ஏன் வாபஸ் பெறப்பட்டன என்பதும் தெரியாது.
கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் திவாலடைந்துவிட்டதாக கூறி வாங்கிய கடனை திரும்பச் செலுத்தப்படாமலிருந்த வாராக் கடனின் அளவு 8,516.16 கோடியாகும். விசாரணையின் முடிவில் வெறுமனே 4.6% மட்டுமே அதாவது 399 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என்ற மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்களும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனில் வெறுமனே 31.8% மட்டுமே வசூலாகியுள்ளது. துவக்கத்தில் 180 நாட்களுக்குள் வழக்குகள் தீர்வுகாணப்பட்டு முடிக்கப்படும் என்று கூறப்பட்டதற்கு மாறாக 350 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக, இப்போது சராசரியாக வழக்கை முடிப்பதற்கு 613 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
8.81 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான கடன்களை வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் திவாலடைந்துவிட்டதாக கூறி தீர்ப்பாயத்திடம் முறையிட்டுள்ளன. இந்தாண்டு மார்ச் வரை மட்டும் 25,106 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அவ்வாறு வந்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தமாலேயே முடித்து வைத்துள்ளனர். ஏன் அவ்வாறு செய்யப்பட்டது? அவை எவ்வாறு முடித்து வைக்கப்பட்டது? கொடுக்கப்பட்ட கடன்கள் ஏதேனும் வசூலிக்கப்பட்டதா?அவ்வாறு வசூலிக்கப்படதெனில் எவ்வளவு வசூலிக்கப்பட்டது? இது தொடர்பான எந்த தகவல்களும் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கொடுக்கப்படவில்லை. இவை பெருத்த சந்தேகத்தையே கிளப்புகிறது.
“8.95 லட்சம் கோடி அளவிற்கு கடனை திருப்பித் தராமல் இருந்த 678 கார்ப்பரேட்களிடமிருந்து 1.69 லட்சம் கோடிகள் மட்டும்தான் பறிமுதல் செய்வதன் மூலம் வசூலிப்பதற்கான வாய்ப்பு (realizable value) இருந்தநிலையில் தேசிய கம்பனி சட்டத் தீர்ப்பாயம் அவர்களிடமிருந்து, வசூலிப்பதற்காக இருந்த மதிப்பை விட 68% அளவிற்கு அதிகமாக அதாவது 2.85 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்கப்பட்டுள்ளது.” என்று மற்றொரு சுவாரஸ்மான தகவல் கூறுகிறது. பறிமுதல் செய்வதற்கு அதிகபட்சமாக இருக்கக்கூடிய வாய்ப்பை முடிந்தளவிற்கு குறைத்து மதிப்பிட்டு காட்டிய பிறகு அதிகமான வாராக்கடன்களை வசூல் செய்துவிட்டதாக காண்பித்துவிடலாம் என்பதே இதன் பொருள். வங்கிகளுக்கு திருப்பித் தரப்பட வேண்டிய மொத்த கடனில், இவ்வழிமுறையைக் கையாண்டும்கூட வெறுமனே 31.8% மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யதக்க மொத்த மதிப்பில் 168% அளவிற்கான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அடிக்கப்பட்ட கொள்ளைக்கு ஆர்பிஐ புகழாரம் சூட்டியுள்ளது. 8.95 லட்சம் கோடி அளவிற்கான வாராக் கடன்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், வசூலிக்கப்பட வேண்டிய தொகை ஏன் குறைக்கப்பட்டது? இவ்வாறு செய்யச் சொன்னது யார்? கார்ப்பரேட் கடன்காரர்களின் ஏமாற்று வேலைகள் மூலமாகவே இவ்வாறு நடந்திருக்க முடியும். இதற்கு உடந்தையாக யாரெல்லாம் இருந்தனர்? எத்தனை பேர் தண்டிக்கபட்டுள்ளனர்? கார்ப்பரேட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலுள்ள, நிதியமைச்சகத்தால் தீர்ப்பாயத்திற்கு நியமிக்கப்பட்ட எத்தனை பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது? உண்மையில் இது போல எதுவுமே நடக்கவில்லை.
நிதியமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 32வது அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த காலத்திற்குள் வாராக் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், முடிந்தளவிற்கு அதிகமான தொகையை வசூலிக்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட புதிய திவால் சட்டத்தின் குறிக்கோள் குறித்து அந்த அறிக்கை கேள்வியெழுப்பியிருந்தது. வருந்தத்தக்க விசயம் என்னவென்றால், இந்த இரண்டு குறிக்கோளையுமே சாதிக்க முடியாமல் இச்சட்டம் தோல்வியடைந்துள்ளது என்பதே மேற்கண்ட ஆய்வறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
“95 சதவீதத்திற்கும் அதிகமான கடன்களை ஹேர்கட் என்ற பெயரில் தள்ளுபடி செய்வதன் மூலம் குறைந்தளவிளான தொகையே வசூலிக்கப்படுகிறது, 180 நாட்களை கடந்தும் கூட 71 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையிலிருப்பதால் வாராக் கடன் பிரச்சனையை தீர்ப்பதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ளது என நிலைக்குழு சார்பாக கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற விசயங்கள் எந்த நோக்கத்திற்காக இச்சட்டம் இயற்றப்பட்டதோ அதை விடுத்து விலகிச் சென்றுவிட்டது என்பதையே தெளிவாக காட்டுகின்றன” என்று நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தது.
கார்ப்பரேட்களின் திவால் வழக்குகளை விசாரிக்கும் நிபுனர்களின்(Insolvency professionals) நீதிவழுவா நிலை மற்றும் நீதி வழங்கும் நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக நிலைக்குழு கண்டறிந்துள்ளது. கார்ப்பரேட்களின் திவால் வழக்குகளை விசாரிக்கும் நிபுணர்களை கட்டுப்படுத்துவது, ஒழுங்குப்படுத்துவதற்கென்று ஒரு முகமையும்(IPA), புதிய திவால் சட்டத்தை மேற்பார்வையிடுவதற்கென்று ஒரு வாரியமும்(IBBI) உள்ளது. இதுநாள்வரை, இந்த ஒழுங்காற்று அமைப்புகள் 203 முறை சோதனை செய்து 123 நிபுணர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளன”. எனவே, நடத்தப்பட்ட சோதனையில் 60 சதவீத நிபுணர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
“கடன் வழங்கியோர் குழுவில் உள்ள நிபுணர்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்க வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது என்பதையே இதுவரை நடந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது”. ஹேர்கட் வழியில் கடன் தள்ளுபடி செய்வதற்கான உச்சவரம்பு விதிக்கப்பட வேண்டும் என்பதையும் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தேசிய கம்பனி சட்டத் தீர்ப்பாயம் கலைக்கப்பட வேண்டும் என்பதையே அதன் தற்போதைய நிலைமை எடுத்துக் காட்டுகிறது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் நிலுவையிலுள்ள வாராக் கடனில் 65 சதவீதத்தை மட்டுமே திருப்பித் தரப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. குற்ற வழக்குகள் கூட தொடுக்கப்படுவதற்கான வாய்ப்பிருந்தும் ஏன் பல ஆண்டுகளாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? உண்மையில், தீர்ப்பாயத்தில் மட்டுமே இந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
கம்பனி சட்டத் தீர்ப்பாயத்தின் மூலமாகவும், சமரச பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் வேண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பித் தராதவர்களும் ஏமாற்றுப்பேர்வழிகளும் வாங்கிய கடனை வரவு செலவு கணக்கிலிருந்து நீக்குகிறோம் (write-off) என்ற பெயரில் கடன் தள்ளுபடி செய்யப்படுவது மென்மேலும் அதிகரிக்கவே செய்யும். வாராக் கடன்களை முழுமையாக வசூலிப்பதன் மூலம் இப்பிரச்சினை தீர்ப்பதற்கு மாறாக ரைட்-ஆஃப் என்ற பெயரில் குறைக்கப்படுகிறது. மீண்டும் இதேபோல வாராக் கடன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போதும் ரைட்-ஆஃப் செய்வார்கள். மக்கள் சேமிப்பை சூறையாடுவதன் மூலம் வீழ்ச்சிப் பாதையில் வங்கிகள் சென்று கொண்டிருக்கின்றன.
வாராக் கடன் பிரச்சினை கூடிய விரைவில் மீண்டும் தலைதூக்கும்; பிறகு வங்கியமைப்பின் மீதிருக்கும் நம்பிக்கை மறையும். ஐசிஐசிஐ வங்கி நெருக்கடியில் சிக்கியபோது இவ்வாறுதான் நடந்தது. ஆர்பிஐயும், மத்திய அரசாங்கமும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஐசிஐசிஐ வங்கிக்கு வேண்டிய பணத்தை எஸ்பிஐ வங்கி கொடுத்து கைதூக்கிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பது மற்றும் வைப்புத் தொகை காப்பீடு தொடர்பான சட்ட முன்வரைவு மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போதே, வங்கியில் பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் பெருமளவில் போட்ட பணத்தை திருப்பி எடுக்கத் துவங்கியதால் இந்த மசோதா அன்றே வாபஸ் பெறப்பட்டது.
ரைட்-ஆஃப் முறையில் நடக்கும் கொள்ளையை தடுக்கவில்லையெனில் இதுபோன்றதொரு நிலைமைதான் ஏற்படக்கூடும். வங்கியமைப்பு முறை அதிக ஏற்ற இறக்கங்களை கண்டுவருகிறது. வங்கியமைப்பு நிலைகுலைந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்கும். மேற்கண்டதுபோல, இவ்வளவு அதிகமாக ரைட்-ஆஃப்களை செய்த பிறகும், வங்கிகளுக்கு உண்மையில் லாபமென்று ஏதாவது கிடைக்கிறதா? வல்லுநர்களின் விரிவான ஆய்விற்கு பிறகே இதற்கான பதில் கிடைக்கும்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 10,000 கோடிக்கு மேல் கடன் வழங்கக்கூடாது என முன்பு ஆர்பிஐ’யால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ரைட்-ஆஃப் போன்றவற்றால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச்சுமை குறையும்.
இந்திய வங்கிகளின் உண்மையான இலாபமீட்டும் திறனை ஆராய்வதற்கென நாடாளுமன்றம் தனிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
தேசிய கம்பனி சட்டத் தீர்ப்பாயத்தை கலைக்க வேண்டும். வேண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பித் தர மறுப்பவர்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளின் தனிப்பட்ட சொத்துக்களை மட்டுமல்லாது குடும்பச் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, கொடுத்த கடனை வசூல் செய்வதற்கு வழிசெய்யும் வகையில் கடுமையான சட்டத்திட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். வாராக்கடன் பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. இந்த அரசாங்கம் இதை செய்ய மறுத்தாலும், அடுத்து வரவிருக்கும் அரசாங்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
(தாமஸ் பிராங்கோ – அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். சர்வதேச தொழிலாளர் பல்கலைக்கழகத்தின் வழிநடத்தும் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.)
- விஜயன்
(தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.cenfa.org/time-to-wind-up-national-company-law-tribunals/